நித்திலப் பேரொளி-11

நிலவு மகள் தன் பளீர் வண்ண ஒளியைப் பரப்பிக் கொண்டிருந்த ஒரு இரவு வேளை.  ஆதேஷ் தனது அறையின் நீள்விருக்கையில் அமர்ந்து மடிக்கணியில் வேலை செய்து கொண்டிருந்தான்.

கதவு தட்டும் ஓசையில், ‘வா வாலு தூங்கல இன்னும்?” தன் வேலையைத் தொடர்ந்தபடியே கேட்க

“வரது நான் தான்னு எப்டி தெரியும்த்தான் உங்களுக்கு?” நயனா வந்தாள் உள்ளே.

“ம்ம்ம் கதவு தட்டும் ஓசை வச்சுத்தான், அத்தை படபடன்னு தட்டுவாங்க, அம்மா தட்டும் போதே பெரியவனேன்னு கூப்பிட்டுட்டே தட்டுவாங்க, லிங்கா ஒரு விரல்ல தட்டுவான், பிருத்வி தட்டவே மாட்டான், நீ கதவுக்கு வலிக்குமோன்னு தட்டுவ… அப்புறம் ஜான்வி…”

“போதும் போதும்….அப்பா” என அலுத்துக் கொண்டவள் வந்து இவனின் இடது கையின் புறம் அமர்ந்து சாய்ந்து கொண்டாள்.

“என்னவாம் என் பேபிக்கு,  தூங்காம இங்க வந்திருக்கு?” ஆதேஷ் இவளைச் சற்று இடித்துக் கேட்க

“ம்ம்ம்ம்….எல்லாரும் கதவு தட்டுற சத்தம் கண்டுபிடிக்கிறீங்களே, உங்க ஆள் எப்டி தட்டுவாங்க?” இவன் முகத்தைப் பிடித்து தன் பக்கம் திருப்பிக் கேட்க

“ஹாஹாஹா….கேடி ஃபெல்லோ,  எப்டி கண்டுபிடிச்ச?” முகம் மின்னியது மன்னனுக்கு

“ம்ம்…உங்க ஆள் பொறாமையில் பொசுங்கினது வச்சு தான்” சிரித்த நயனா சட்டென யோசனையானாள்

“என்ன சைலண்ட் மோட் போயிட்டா நயனா?”

“இல்ல…. உங்களுக்கு….கல்யாணம் ஆன பின்னாடி நான் உங்ககிட்ட இப்டி பழகறது அவங்களுக்குப் பிடிக்கலைன்னா, நிறுத்திடுவீங்களா அத்தான்?”

“ம்ம்…பொண்டாட்டி சொல்லிட்டா கேட்கணுமில்ல” வம்பன் இவளைச் சீண்ட

மளுக்கென்று ஒரு சொட்டு கண்ணீர் துளிர்த்து விழுந்தது நயனா கன்னத்தில், தலையைக் குனிந்து கொண்டாள்

“ஹேய்….வாலு, என்னதிது…பேபின்னு சொன்னா பேபி மாதிரி அழுவயா?” ஆதேஷ் மடிக்கணியை நகர்த்தி வைத்துவிட்டு நயனாவின் தலையைக் கலைத்தவன்

“நயன், நீ என் அத்தை பொண்ணு, ஆபியஸ்லி உன்னையும் என்னையும் முதலில் பார்க்கிறவங்க ஒன்னும் ஒன்னும் ரெண்டுன்னு தான் முடிச்சுப் போடுவாங்க, ஏன் நம்ம வீட்டில் நம்மை நல்லா தெரிந்த பெரியவங்களே கல்யாணம்ன்னு பேசலையா?  நிலாக்குப் புரிய வச்சுட்டேன்.  அவ புரிஞ்சுப்பா, ஸோ நோ வொரிஸ்” என்றான்

“ஆமா, நிலான்றது உங்களுக்கு மட்டும் ஸ்பெஷலா? நல்ல அழகா இருக்காங்கத்தான்.  ரொம்ப அமைதி.  வெரி ஸ்வீட்.  எனக்குப் ரொம்ப பிடிச்சிருக்கு” பெண் பாராட்டுப் பத்திரம் வாசிக்க

“ஹாஹாஹா, வேற யாரிடமும் இப்போ சொல்ல வேண்டாம்டா, முதலில் அவ சரின்னு சொல்லட்டும்” அத்தனை பூரிப்பு அத்தானுக்கு

“நீங்க வேற, அம்மா ஆல்ரெடி, உன்ட சொல்லாம இருக்க மாட்டான் உன் அத்தான், சொல்லேன் சொல்லேன்னு ஒரே தொல்லை. தெரியாதுன்னு சொன்னாலும், கூட்டுக் களவாணிங்கன்னு திட்டிட்டுப் போயிட்டாங்க, நித்திலா இன்னும் சரின்னு சொல்லலையா? ஏன் அவங்களுக்கும் பிடிச்சிருக்கு தானே?”

“ம்ம் தெரியலடா, ஒரு வேளை இந்த அரச குடும்பம் அதுன்னு நினைக்கிறாளோ இல்ல வேற ஏதுமான்னு எனக்கும் ஒன்னும்  புரியல” ஆதேஷ் உதடு பிதுக்கினான்.

“உங்களுக்குப் பொருத்தமாக இருப்பாங்கத்தான், தோற்றத்திலும் குணத்திலும் செம பொருத்தம் ரெண்டு பேருக்கும்.  அவங்க கைப்பக்குவமும் அருமையா இருக்கு. லக்கி ஃபெல்லோத்தான் நீங்க” நயனா மனதிலிருந்து பேசினாள்.

” ஏன் நீ கூடத் தான் லக்கி, இல்லைன்னு  சொல்வயா?”  இவன் புன்சிரிப்பை உதடுகளில் விஷமாகப் பரவ விட்டுக் கொண்டு நயனாவைப் பார்க்க

” எதுக்காம்…” நொடித்தாள் பெண்

அவளது தலையைப் பிடித்து இடது வலமாக ஆட்டியவன், ” பின்ன என் அப்பாவி தம்பியை உனக்கு கட்டித்தர போறோமே, லக்கி தானே நீ?”

“ரொம்பத்தான்..அப்பாவியாம் யாரு உங்க தம்பி? சரி எனக்குத் தூக்கம் வருது, நான் தூங்க போறேன்” நழுவப் பார்க்க

” ஓய்…இரு இரு பேசணும் எனக்கு, டேய் நயன் உண்மையைச் சொல்லு பிடிச்சுத்தான் இந்தக் கல்யாணத்திற்கு சரின்னயா?”  அவளை நேருக்கு நேர் பார்த்துக் கேட்க

“அது…வந்து …மாமா பையனைக் கல்யாணம் பண்ணிக்கிறது சகஜம் தானே, இதில்…பிடிக்குது பிடிக்கல என்…” முடிக்காமல் இவன் பார்வையில் நிறுத்தினாள்

” தப்பு டா நயன், இந்த வீட்டை விட்டு போடக்கூடாதுன்னு இந்த முடிவு எடுத்தையா? இல்ல உன் அத்தான் கூட இப்டி பழக்கறதை லிங்கா தான் புரிஞ்சுப்பான்னு நினைச்சு சரின்னயா?”  இவனது பார்வையின் தீவிரத்தை உணர்ந்தவள்

“ரெண்டும்… பட் கல்யாணம் ஆனால் தன்னால விரும்பம் வரலாம் இல்லையா?”

லிங்கா பற்றி இவனிடம் சில கணிப்பு இருந்தது. லிங்காவுக்குப் பிடிக்காத எதையும் அவனிடம் திணிக்க முடியாது, அதனால் உடன் பிறந்தவனின் மனமும் அறிந்தே இருந்தான்.   பிடித்தம் மட்டுமே ஒரு திருமணத்திற்குக் காரணமாக இருக்க வேண்டும் என நினைப்பவனிடம், நயனாவின் திருமண ஒப்புதலுக்காக காரணங்களும், அவளது அணுகுமுறை இவனுக்கு கவலை அளித்தது.

“நயன் அத்தான் சொன்னா கேட்பாய் தானே?, இதுவரை லிங்காவை எல்லாத்துக்கும் டீஸ் பண்ணின ஓகே. பட் இனி அவன்ட எதுனாலும் கலந்து பேசுடா,  இனியாவது ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்க முயற்சி செய்யுங்கள் சரியா, இனி அவன் ஊட்டினால் அவன்கிட்ட தான் வாங்கிக்கணும், நோ இங்கி பிங்கி ஓகே”  தனது குழந்தை போல் பாவித்து இவன் சொல்ல

புன்சிரிப்போடு சரி என்பதாய் தலையசைத்தாள் பெண்.

அந்த இரவுப் பொழுதில் கூடத்தின் மேற்கூரையில் பொருத்தப்பட்டிருந்த கம்பிகளின் ஊடே  நிலவு வெளிச்சம்  உருகி  அங்கு கிடந்த  கயிற்றுக் கட்டிலில்  விழுந்து கொண்டிருந்தது.

கயிற்றுக் கட்டிலில் நித்திலா ஒற்றைத் தலையணை வைத்து அதில் தலை சாய்த்து ஒருக்களித்துப் படுத்திருந்தாள்.

நித்திலா மற்றும் அவளது தாயார் இருவரும் வசிப்பது இரண்டு படுக்கை அறைகள் கொண்ட ஒரு ஓட்டு வீடு.  வீட்டிற்குள் நுழைந்ததும் ஒரு பெரிய தாழ்வாரமும், அதற்கு அடுத்து ஒரு சிறிய கூடமும்  இருந்தது.  அதனை ஒட்டி பெரிய ஹாலும், ஹாலின் இருபுறமும் பத்துக்குப் பத்தில் இரண்டு படுக்கையறைகளும், நடுவே ஒரு சமையல் அறையும், அதனைக் கடந்தால் ஒரு சிறிய தோட்டமும் என நித்திலாவின் தந்தை உயிரோடு இருக்கும் போதே வீட்டை அளவாகவும் அழகாகவும் கட்டி இருந்தார்கள்.

தந்தை இருக்கும் வரை இந்தக் கூடம் தான் இவர்களது ஏகபோக கலந்துரையாடல் செய்யும் இடமாக இருந்தது. அவருக்குப் பிறகு மனது மிகவும் பலவீனமாக உணர்ந்தால் இங்கு வந்து படுத்துக் கொள்வதை வழமையாக வைத்திருந்தாள் நித்திலா.

ஆதேஷின் பால் விழுந்து விட்ட மனதை சமன் செய்ய முடியாது பெண் மறுகிக் கொண்டிருந்தாள்.  அவனது புன்னகை முகமும், இவள் ஒரு சிறு விஷயத்திற்கு முகம் வாடி நின்ற போது அதைப் புரிந்து அழகாக அவன் கையாண்ட விதமும் மனதை விட்டு அகல்வேனா என்றது.

ஆதேஷ் மாதிரி ஒரு மனிதனை வாழ்வில் பெறுவது வரம் தான், ஐயமில்லை, ஆனால் அந்த வரத்தை பெற எனக்கு என்ன தகுதி இருக்கிறது? பத்து வருடங்களுக்குப் பின்னோக்கிச் சென்று தன் வாழ்வில் நடந்த அவலத்தை எல்லாம் கழுவித் துடைத்திட பேராவல் கிளர்ந்தது இவளில், ஆனால் எப்படி முடியும்?

எத்தனை நாட்கள் அவனைத் தவிர்க்க முடியும்?, ஒரு பொய்யான நம்பிக்கையில் அவன் எழுப்பிக் கொண்டிருக்கும் ஒரு கோபுரத்தை என்னால் எப்படி அனுமதிக்க முடியும், என் கதை முழுக்கத் தெரிந்தால் அக்கோபுரம் இடிந்து விழாதா? அந்த பொய் நம்பிக்கையை ஏன் நான் அவனுக்குத் தர வேண்டும்?

அவன் மீது எனக்கு விருப்பம் இருக்கலாம், அதற்கு என்ன செய்ய முடியும்?  மலை உச்சியில் கூடுகட்டி வாழும் தேனீயிலிருக்கும் கொம்புத்தேனை எடுக்கத் திராணி இல்லாதவள்  அந்தத் தேனை சுவைத்து  விட மட்டும் ஆசைப்பட்டால் நடக்குமா?

திருமணம் என்ற ஒன்று என் வாழ்வில் சாத்தியம் இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிந்த விட்ட பிறகு அவனுக்கு எல்லாம் சொல்லிவிடுவதே மேல்.  நடந்து முடிந்த அனைத்தையும் சொல்லி விட வேண்டும்.  இதை வளர விடக் கூடாது. உண்மை தெரிந்து விட்ட பிறகாவது அவன் தன் மனதை மாற்றிக் கொண்டு வேறு ஒரு நல்ல பெண்ணை மணந்து கொள்ள வேண்டும் என பலவாறாக சிந்தித்துக் கொண்டு படுத்திருந்தாள் நித்திலா.

வேறு ஒரு பெண்ணை அவன் திருமணம் செய்தால் உன்னால் தாங்கவியலுமா? நினைப்பே கண்ணீர் கோர்த்தது பெண்ணில்.  மௌனமாக அழுதாள் பேதை.

ஒரு முடிவுக்கு வந்தவள் தனது கைபேசியை எடுத்து, ‘நாளை உங்களிடம் பேச வேண்டும், முடியுமா’ என  ரத்தினச் சுருக்கமாக குருந்தகவல் ஒன்று அனுப்பினாள்

உடனடியாக பார்த்து விட்டதற்கான இரண்டு  நீலக் குறியீடு வந்தது.

இரு நிமிடத்தில் அழைத்து விட்டான்.

“நிலா..மணி பன்னிரண்டாகுது தூங்கலையா என்ன?”  அவனின் குரலில் அக்கறை வழிந்தது.

“இல்ல..தூங்கணும்..” நைந்து ஒலித்தது இவள் குரல்

“வாட்ஸ் ஈட்டிங் யூ (உன்னை எது தின்று கொண்டிருக்கிறது)? நிலா இந்த லோகத்தில் தீர்க்க முடியாத பிரச்சனைன்னு ஒண்ணுமில்லம்மா, ரிலாக்ஸ்…நாளை காலை உணவு நேரம் கடந்ததும் பேசலாம், சரியா?” என்றவன்

“நிலா… உனக்கு ஒரு கதை சொல்லவா? நான் சொல்றதை நீ கற்பனை பண்ணிட்டே வரணும் சரியா?  அந்தி சாயும் பொன்மாலை, நான்கு புறமும் மலைகள் சூழ்ந்த ஒரு பெரிய நிலம் நடுவே இருக்கு, அதில் முழுக்க முழுக்க தானியங்களை வரிசையாகப் பயிரிட்டு நெரஞ்சு  போய் இருக்கு. அந்த தானியத்தின் செடி எப்படி இருக்குன்னா, அதன் இலைகள் கத்தி மாதிரி பச்சைப் பசேல்ன்னு நீண்டு இரண்டு பக்கமும் சாய்ந்து வளைந்து இருக்கு. கத்தி இலைகளுக்கு நடுவே வளர்ந்திருக்கும் தானியங்களின் கொத்து எப்படி இருக்குன்னா, தங்கத்தை உருக்கி அதை குட்டிக் குட்டி உருண்டையா உருட்டி, அதில் பச்சை மையை தூவி அடுக்கி வச்சது மாதிரி இருக்கு. அதில் இந்த அந்தி வெய்யில் பட்டு அப்படி ஒரு ஜொலிப்பா ஜொலிக்குது, அந்த அழகான வயல்வெளியில் ஊடே சந்தோஷமா வாய் கொள்ளாத சிரிப்போட என் நிலா துள்ளிக் குதித்து ஓடுறா… ரொம்ப அழகா இருக்குல்ல…ம்ம்?”  அத்தனை அற்புதமாக அவள் மனது எதை யோசித்தால் அமைதியுறுமோ அதை வார்த்தைகளில் வடித்து அவளுக்கு வார்த்தான் மன்னன்

“இப்படி வயல்வெளியில் ஓடும் நிலா சமத்தா அங்க ஒரு கயிற்றுக் கட்டில் கிடக்காம், அதில் இப்போ அமைதியா தூங்கறாளாம். குட் நைட்” வைத்து விட்டான்.

அவனை அத்தனை பிடித்தது இவளுக்கு.  மனது நிறைந்து கிடந்தது பெண்ணில். நிம்மதியாய் தூங்கிப் போனாள் ஆதேஷின் நிலா.

error: Alert: Content selection is disabled!!