நித்திலப் பேரொளி-12

மறுநாள் காலை முதலே ஒரு அலைப்புறுதலுடன் காணப்பட்டாள் நித்திலா.  வேலை என்று வரும் போது மிகுந்த சிரத்தையுடன் செயல்படுபவள் அன்று கவனம் சிதறி உணவுகளை மாற்றி இரு முறை இருவருக்குக் கொடுத்து அவர்கள் சுட்டிக் காட்டிய பிறகு சரியானதைக் கொடுத்தாள்.

காலையில் குடிலுக்கு வரும்போதே அவளின் வழக்கமான புன்னகையும் காலை வணக்கமும் மிஸ்ஸாகி இருந்ததில் இருந்தே நித்திலா சமநிலையில் இல்லை என்பதைப் புரிந்து கொண்டான் ஆதேஷ்.

ஒரு மணி நேரம் பொறுத்துப் பார்த்தவன், பிறகு சமையல் அறையில் உதவிக்கு இருக்கும் மற்றொரு பணியாளரை அழைத்து நித்திலாவுக்கு உதவியாக நிற்குமாறு பணித்தான்.

நேரம் ஒன்பதரை நெருங்கும் போதே உணவுகள் முடிந்து விட, நித்திலா ஆதேஷின் அறைக்கு வந்தாள்.

” வா..நிலா, சாப்பிடலாமா?” என கேட்டுக் கொண்டே தன் இருக்கையில் இருந்து எழுந்தவன், அந்த அறையின் ஒரு ஓரத்திலிருந்த நீள்விருக்கையை நோக்கி நகர்ந்தான்.

“இல்ல..எனக்கு வேண்டாம் சார், பசிக்கல”  குரலில் ஜீவன் தொலைந்திருந்தது இவளுக்கு.

“ஏனாம்…பசிக்காத வரம் வாங்கிட்டாளா நிலா, நான் எல்லாம் தடி தாண்டவராயன்களின் தலைவன், மூணு வேலையும் மூச்சு முட்ட முமுங்கலையோ தெய்வக்குத்தம் ஆகிடும்” புன்முறுவல் பூத்தான்.

அவன் சொல்லிய விதத்தில் இவளுக்கும் புன்னகை அரும்பியது.

“கம் சிட்” என தனக்கு எதிரில் இருந்த இருக்கையைக் காட்டியவன் ஒரு தட்டில் இரண்டு இட்லிகளும் கொஞ்சம் சட்னியும் வைத்து நீட்டினான்.

அதற்கு மேல் மறுக்காமல் வாங்கி மெதுவாக உண்டவள், உண்டு முடித்து எல்லாவற்றையும் சுத்தப்படுத்தியவுடன், அதே இடத்தில் வந்து கால்களைத் தூக்கி இருக்கையில் வைத்து கட்டிக் கொண்டு அமர்ந்தாள்.

அவளைப் பார்க்கவே ஆதேஷுக்கு மனதைப் பிசைந்தது, “நிலா..இவ்ளோ கஷ்டப்பட்டு பேச வேணாம்மா, ரிலாக்ஸ். நீ போய் ரெஸ்ட் எடுத்துக்க”

“இல்ல..பேசணும் எனக்கு…இன்னைக்கு எல்லாம் சொல்லணும். இப்டியே நினைச்சு நினைச்சு மனசு குழம்பி ஏதாவது ஆகிடுமோன்னு பயமா இருக்கு” சொல்லும் போதே கண்ணீர் வழிந்தது பெண்ணுக்கு

அவளையே நிதானமாகப் பார்த்தவன், அவள் சொல்ல வருவத்தைச் சொல்லிவிட்டால் ஒரு வேளை மனது சமன்படலாம், தான் ஏதாவது ஒரு வகையில் அதற்கு உதவியாகக் கூட இருக்கலாம் என நினைத்தவன் சொல் என்பதாய் அமைதியாக கேட்க தயாரானான்.

தரையை வெறித்த பார்வையோடு  சொல்ல ஆரம்பித்தாள் நித்திலா.

தஞ்சையைப் பூர்வீகமாகக் கொண்ட நித்திலாவின் அப்பா ராஜரத்தினம் ஒரு மத்திய அரசு ஊழியர்.  இந்திய ரயில்வேயில் பணியில் இருந்த காரணத்தினால் நித்திலாவுக்கு  நான்கு வயது இருக்கும் போதே தஞ்சையை விட்டு மூன்று ஊர்களுக்கு மாற்றல் பெற்று இறுதியாக மத்திய பிரதேசத்தில் வசித்து அந்த நேரம் நித்திலாவுக்கு பதினைந்து வயது.

ஒரே செல்ல மகள் அதுவும் ராஜரத்தினத்துக்கு கண்களின் கருவிழி போன்றவள்.  பொதுவாகவே பெண் பிள்ளைகள்  தந்தையின் இளவரசிகள் தான்.  அதில் நித்திலாவும் விதிவிலக்கல்ல. இளவரசியாகவே வளர்த்தார்.  உலக விஷயங்கள் அத்தனையும் மகளுக்கு ஊட்டி ஒரு வயதுக்கு மேல் தோழியாகவே பாவித்தார் தந்தை.

நாட்கள் மிக அழகான கவிதை போல் சென்று கொண்டிருந்தது.  சிறிய குடும்பம் போதிய வருமானம், அன்பும் மகிழ்ச்சியும் அளவில்லாது பெருக சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர் மூவரும்.

ராஜரத்தினத்துக்கு பெற்றோர்கள் நித்திலாவின் சிறு வயதில் இறந்து விட ஒரே ஒரு தம்பி மட்டும் இருந்தார், அவரும் இந்தியாவின் வட மாநிலத்தில் வேலை செய்து வந்தார்.

காதல் தோல்வியால் துவண்டிருந்த ராஜரத்தினத்தின் தம்பி ராஜவேலு பின்பு திருமணம் ஆகாமலே வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தார்.

அமைதியாக சென்று கொண்டிருந்த நித்திலாவின் குடும்பத்தில் கொங்கோல் கொண்டு வந்து சேர்ந்தார் ராஜவேலு.

அண்ணன் வீட்டில் பத்து நாட்கள் தங்கிச் செல்ல வந்திருந்த ராஜவேலின் பார்வையில் பழுது இருந்தது, ஆனால் அது நல்ல மனம் படைத்த  நித்திலாவின் குடும்பத்திற்கு தெரியாமல் போனது தான் கொடுமையிலும் கொடுமை.

சகஜமாகப் பழகுவதாக பெயர் பண்ணிக் கொண்டு நித்திலாவை தொடக்கூடாத இடங்களில் எதேர்ச்சையாகத் தொடுவான் ராஜவேலு, தொட்டது உணரும் முன்பே நகர்த்தும் விடுவான்.  சிறு பெண் அத்தனை விபரம் அறியாதவள் நித்திலா குழம்பிப் போனாள், தொட்டது உண்மையாக இல்லை தான் தான் தவறாக நினைக்கிறோமா? ஒரு சித்தப்பா இப்படியெல்லாம் நடந்து கொள்ள வாய்ப்பில்லை என நினைத்து சில நேரங்களில் அவளே சமாதானம் ஆகிக் கொள்வாள்.

தன் சந்தேகங்களை தாயிடமோ அல்லது தந்தையிடமோ பகிர வேண்டுமா இல்லை தேவையற்றதா என அதில் கூட வளர்த்த குழந்தை குழம்பி நின்றாள்.

குயுக்தி நிறைந்த ராஜவேலு தன் அண்ணன் அண்ணி முன்னிலையில் மிகுந்த பாசமுள்ள சித்தப்பனாக நடித்தவன், அவர்கள் இல்லாத அல்லது பார்க்காத நேரத்தில் தான் இவ்வகையான கேவலங்களை அந்த சிறு பெண்ணுக்கு செய்து கொண்டிருந்தான்.

அன்று தனது பத்தாம் வகுப்பு இறுதித் தேர்வை எழுதிவிட்டு வீடு திரும்பினாள் நித்திலா. அவள் படிக்கும் பள்ளியில் முதலாவதாக அவள் வருவாள் என எதிர்பார்க்கப்படுகிறவள் ஆதலால், நன்றாகவே தேர்வுகளை எழுதி முடித்துவிட்டு மனநிறைவோடு வந்திருந்தாள் அவளது மகிழ்ச்சிக்கும் அந்த குடும்பத்தின் நிம்மதிக்கும் அது தான் கடைசி நாள் என அறியாமல்.

இவள் வீட்டுக்குள் வந்து தாயைத் தேட எப்போதும் உள்ள வழக்கமாக தொலைபேசி இருக்கும் சிறு மேஜையில் ஒரு துண்டுச் சீட்டில் தாயும் தந்தையும் ராஜரத்தினத்தின் நண்பன் திடீர் மாரடைப்பால் காலமாகி விட்டதாகவும்  இறந்தவரின் வீட்டுச் சென்றிருப்பதாகவும் இரண்டு மணி நேரத்தில் வந்து விடுவோம் என எழுதி இருந்தது.

காலையில் அவசரமாக உண்டதால் பசியெடுக்க சாப்பிடலாம் என சமையல் அறைக்குச் சென்று தட்டில் உணவு எடுத்துக் கொண்டிருந்தாள் பெண். அறையின் வாசலில் நிழலாட திரும்பினாள் தள்ளாடியபடி ராஜவேலு வந்து கொண்டிருந்தான்.

ஏதோ தப்பாக நடக்கப் போகிறது என பெண்ணின் உள்ளுணர்வு சொல்ல விரைந்து இவள் வாசலைக் கடக்கும் முன் கைகளில் தூக்கியது அந்த மிருகம்.  குழந்தை என்றும் பாராமல், தனது மகளானவள் என்றும் பாராமல் சந்தர்ப்பத்திற்கு காத்திருந்த அரக்கன் தன் கீழான கொடும் இச்சையைத் தீர்த்துக் கொண்டான்.

பாஞ்சாலி கதறலுக்கு செவி சாய்த்த கிருஷ்ணன், செவியின் கேட்கும் திறனை இழந்தானா?  இந்த பிஞ்சின் கதறலைக் கேட்டாது போனானே இறைவன்!

பாலியல் குற்றங்களிலிருந்து பதினெட்டு வயதுக்குக் குறைவான அனைத்துக் ( பாலின வித்தியாசமின்றி) குழந்தைகளைப் பாதுகாப்பதற்காக இந்திய அரசு இரண்டாயிரத்து பன்னிரண்டாம் ஆண்டு போக்ஸோ சட்டம் (The Protection of Children from Sexual Offenses (POCSO) Act, 2012) என்னும் சட்டத்தை உருவாக்கியது.

பாலியல் வன்முறை, பாலியல் துன்புறுத்தல் அல்லது சீண்டல், ஆபாசப் படமெடுக்கக் குழந்தைகளைப் பயன்படுத்துதல் போன்றவற்றைக் குற்றங்களாக இச்சட்டம் முன்வைக்கிறது,

தேசிய குற்றப் பதிவுப் பணியகத்தின் (NCRB) தகவலின்படி கடந்த 2025ஆம் ஆண்டு மட்டும் தமிழ்நாட்டில் போக்ஸோ சட்டத்தின் கீழ் 5,319 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால், குழந்தைகளுக்கு நடக்கும் இந்த பாலியல் வன்கொடுமைகளைச் செய்பவர்களில் 97 சதவீதத்திற்கும் அதிகமானோர், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு  தெரிந்த நபர்களாகவே இருகின்றனர், அவர்களில் அண்டை வீட்டுக்காரர்கள், உறவினர்கள் அல்லது குடும்பத்திற்கு அறிமுகமானவர்கள் அடங்குவர்.

நித்திலாவின் பெற்றோர் வீடு திரும்பிய போது பார்த்தது சித்த பிரமை பிடித்து, சுயநினைவு இழந்து குற்றுயிரும் குலையுயிருமாக இருந்த மகளைத் தான்.

ஆற்றுவார் தேற்றுவார் இன்றி கதறிக் கலங்கிய பெற்றோர், மகளை மருத்துவமனையில் சேர்த்து பிறகு காவல் நிலைய உதவியை நாடினார்கள்.

போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட அந்த அரக்கனுக்கு கடுங்காவல் தண்டனை தந்து நீதிமன்றம் உத்தரவிட்டது,   சிறை தண்டனை பெற்று சிறை சென்ற அந்த கொடியவன் மூன்று மாதங்களுக்குப் பிறகு தற்கொலை செய்து கொண்டான் என தகவல் வந்தது. தற்கொலை அவன் செய்து கொண்டானா அல்லது செய்ய வைக்கப்பட்டானா என்பதை இறைவனும் சிறை அதிகாரிகளும் மட்டுமே அறிவர்.

பள்ளியில் மட்டுமல்ல அந்த மாவட்டத்திலேயே முதலாவதாக வந்தாள் நித்திலா. ஆனால் அதை அறிந்து கொள்ளும் மனநிலையில் கூட பெண் இல்லை என்பதுதான் பெரும் துன்பம்.

அந்த கொடுமைக்குப் பிறகு அந்த ஊரில் இருக்கப் பிடிக்காமல் சொந்த ஊரில் மாற்றல் வாங்கிக் கொண்டு தஞ்சை வந்து சேர்ந்தார்கள்.

பல வித சிகிச்சைகளுக்குப் பிறகு நித்திலா அந்த கொடுங்கால நினைவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் வர இரண்டு ஆண்டுகள் பிடித்தது.

தங்களது கவனக்குறைவு தான் மகளை படுகுழியில் தள்ளி விட்டது என நினைத்து மனது உடைந்து போனார்கள் பெற்றோர். நித்திலா மட்டுமே  அவர்கள் வாழ்வின் ஒவ்வொரு நொடியும் என வாழ்ந்த பெற்றோர் அவளைத் தேற்றி விடுபட்ட படிப்பைத் தொடர வைத்தனர்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தான் நித்திலா படிப்பை முடித்தாள்.  மகளையே நினைத்து மகளுக்காகவே வாழ்ந்த தந்தை ஒரு இரவு படுத்தவர், மகள் இனி வாழ்ந்து விடுவாள் என நினைத்தாரோ என்னவோ மறுநாள் சூரிய உதயம் பார்க்க உயிரோடு இல்லை.

அத்தனை வருட தந்தையின் போதனை மகளை வழிநடத்த, வாழ்க்கையை தைரியமாக எதிர்கொண்டாள்.  சிறுதானியங்கள் மேல் அதீத ஈர்ப்பு கொண்டவள், ஒரு நவீன ரக தள்ளுவண்டி வாங்கி தன் வாழ்க்கையை ஆரம்பித்தாள்.

நித்திலா சொல்லி முடித்ததும், அந்த அறையில் அசாத்திய அமைதி, கேட்டுக் கொண்டிருந்த ஆதேஷ் கண்கள் சிவக்க தனது வலது கை கொண்டு அமர்ந்திருந்த இருக்கையில் ஓங்கிக் குத்தினான்.

சொல்லி முடித்த நித்திலா ஒட்டி ஒடுங்கி இருக்கையின் ஒரு ஓரத்தில் சுருண்டிருந்தாள்.

தன் இருக்கையில் இருந்து எழுந்த ஆதேஷ் தன் நிலாவைப் பார்க்கும் சக்தியற்று அவளது அருகில் வந்தவன் மண்டியிட்டு அவள் கால் விரல்களில் தனது முகத்தைப் பதித்துக் கொண்டு குலுங்கி குலுங்கி அழுதான்.

இதுவரை தன் வாழ்க்கையில் அழுதே அறியாதவன், சிறு பெண்ணிற்கு தன் ஆண்வர்க்கம் இழைத்து விட்ட கொடுமை நினைத்து, தன் நிலா கடந்த வந்த பாதை நினைத்து, இந்த உலகில் ஒவ்வொரு நாளும் குழந்தைகளுக்கு நடக்கும் வன்முறை நினைத்து என கட்டுப்பாடற்று அழுது கொண்டே இருந்தான்.

அவனது கால்களைக் கட்டிக் கொண்ட போதே பதறிவிட்ட நித்திலா, அவனது மௌன அழுகையில் என்ன செய்வது என அறியாது திகைத்து அமர்ந்திருந்தாள்.

” நான் ஒரு வருஷம் சுயநினைவு இல்லாமல் சித்தம் கலங்கிப் போய் தான் இருந்தேன்.  என்னால் ஒரு திருமண வாழ்க்கை வாழ முடியாது.  முன்ன எல்லாம்..ஏழு வருஷம் முன் வரை ஆண்களைப் பார்த்தாலே பயம், அப்பாவும் எனக்கு சிகிச்சை செய்த மனநல மருத்துவரும் தான் அதிலிருந்து மீட்டாங்க.  இப்போ அப்டி இல்லேன்னாலும் ஒரு கல்யாணம் பண்ணி நான் எப்டி அது…..என்னால் முடியாது” தேம்பி அழுதாள் நித்திலா

முகத்தை நிமிர்த்தி கண்களை புறங்கையில் துடைத்துக் கொண்ட ஆதேஷ், “தாம்பத்தியத்தில்  உடல் சார்ந்த தேடல் மட்டும் இல்ல நிலா, அது மன ரீதியான பிணைப்பு.  எந்த காரணத்திற்காகவும் இனி நிலாவை நான் விட்றதா இல்ல. நிலாக்கு பிடிக்குமா ஆதேஷை…அதுக்கு மட்டும் பதில் சொல்லு”  அவள் முகத்தை ஆழ ஊடுருவிக் கேட்டான்

error: Alert: Content selection is disabled!!