பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் நபர்களுக்கு ஏற்படும் பொதுவான மற்றும் நீண்டகால விளைவுகளில் ஒன்று மன அதிர்ச்சிக்குப் பிந்தைய மன அழுத்தக் கோளாறு (Post-Traumatic stress disorder PTSD) ஆகும். பாதிக்கப்பட்டவர்கள், அந்தத் தாக்குதல் குறித்த மீள்நினைவுகளால், தொடர்ச்சியான அச்சத்தை அனுபவிக்கக்கூடும். மேலும், அந்த அதிர்ச்சிகரமான நிகழ்வை நினைவூட்டும் சூழ்நிலைகளை அவர்கள் தவிர்ப்பார்கள். இது ஒருவரின் அன்றாட வாழ்வில் நிறைய சிக்கல்களை உருவாக்குகிறது.
உதாரணமாக, பாதிக்கப்பட்டவர்கள் ஒருவரோடு நெருங்கிய உறவை உருவாக்குவதிலும் பேணுவதிலும் சிரமங்களை எதிர் கொள்வார்கள். வன்கொடுமைக்கு உள்ளானவர்களுக்கு ஏற்கனவே ஒரு காதல் உறவு இருந்திருந்தால் அந்தத் துணையிடமிருந்து விலகக்கூடும். இனிமேல் தான் ஒரு காதல் உறவோ அல்லது கல்யாண உறவோ ஏற்படப்போகிறது என்றால், பாதிப்படைந்தவர்களுக்கு தன் துணையிடம் நம்பிக்கை சார்ந்த சிக்கல்கள் அல்லது உடல் ரீதியான நெருக்கம் குறித்த பயம் ஏற்படலாம். இதனால், தன் துணையுடனான ஆரோக்கியமான தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு அதைப் பேணுவது சவாலாக அமையும் என்று பல்வேறு மனநல அறிக்கைகள் பதிவு செய்திருக்கிறது.
ஆதேஷ் தான் சொன்னதைச் சரியாகத் தான் கேட்டானா என்பதில் ஐயம் கொண்ட நித்திலா அவனை விழியகலாது பார்க்க
“என்னவாம் நிலாக்கு, நீ சொல்றது நல்லா புரிஞ்சுது எனக்கு. இந்த மாதிரியான பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களை நான் நேரடியாக சந்திக்கிறது இது தான் முதல் முறை. இந்த விஷயத்தில் என் அறிவு ஜீரோ தான் நிலா. ஆனால் உடல் ரீதியான நெருக்கம் இந்த திருமணத்தில் இருக்காதுன்னு தான் நானும் சொல்றேன். என் கேள்வி பிடித்தம் பற்றியது நிலா” முறுவலித்தான் ஆதேஷ்
“பிடிக்குது பிடிக்கலை என்ற பேச்சுக்கே இங்கே வேலை இல்லைன்னு சொல்றேன். திருமணம்ன்னா இயல்பா ஒரு குடும்ப வாழ்க்கையும் அதன் பிறகு ஒரு குழந்தையும் எதிர்பார்க்கிறது சகஜம் தானே. உங்களுக்கு ஒரு இயல்பான குடும்ப வாழ்க்கை அமையணும். நான் வேண்டாம். உங்க கழுத்தில் ஒரு வேதாளம் மாதிரி தொங்கிட்டு இருக்கணுமா நான்? உங்களுக்கு எதுக்கு தேவையில்லாத கஷ்டம். வேண்டாம். அந்த கஷ்டத்தை நானே உங்களுக்கு தர விரும்பல” கண்ணீர் பொட்டாக துளிர் விட்டது ஆனால் மிகவும் தெளிவாக மறுத்தாள் பெண்.
“ஹாஹாஹா….” சூழ்நிலைக்குப் பொருந்தாது சிரித்தான் எதையோ நினைத்துக் கொண்டு
இவள் என்ன என்பதாய் பார்க்க, “இல்ல நீ வேதாளம்ன்னு சொன்னதும் விக்ரமன் நியாபகம் வந்துட்டாரு” சிரித்தான் இன்னும்
“விக்ரமாதித்தனா…?”
“”ம்ஹும்…இவர் வேற. என் கழுத்தில் எப்போதும் தொங்கிட்டு இருப்பவர். உனக்கு போகப் போக புரியும்” என்றவன்
“நீ சொல்றதெல்லாம் வாஸ்தவமான பேச்சு தான். மறுக்கல நான். என்னோட ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு நிலா, அந்த கஷ்டத்தை நானே உங்களுக்கு தர விரும்பலைன்னு சொல்றயே…ஏன்? ஏன் நீயே எனக்கு தரக்கூடாது? உனக்கு நான் என்ன அப்டி ஒரு ஸ்பெஷல்…ம்ம்ம்? ” புருவம் இரண்டையும் உயர்த்தி இவன் கேட்க
பதில் சொல்ல விரும்பாது தலையைக் குனிந்து கொண்டாள் நித்திலா.
“நிலாகுள்ள ஆதேஷ் வந்து ரொம்ப நாள் ஆச்சு. அது உனக்கும் நல்லாவே தெரியும். இல்லைன்னா நீ எனக்காக யோசிக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கு..ம்ம்ம்? அவளையே கண் அகலாது நோக்க
“வாழ்க்கையில் பிடிக்கிற எல்லாமே நம்மிடம் வந்துடனும் இல்ல நாம் அதையெல்லாம் சொந்தம் கொண்டாடனும் அப்டின்னு நினைக்கிறது புத்திசாலி தன்மை இல்லை இல்லையா” இவள் தவிப்புடன் ஆதேஷைப் பார்த்தாள்.
“அப்போ பிடிச்சிருக்கு” நழுவிய மீனாய் அவள் இருக்க, நழுவ விடாது இவனும் இருந்தான்
ஆதேஷின் பேச்சில் மெல்லிய புன்னகை புரிந்தவள், ” வேணாமே, வேறொரு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் செய்துக்கோங்களேன்” விழிகளைக் கலங்கியது வேதனை இவளில்
“அப்போ ஒன்னு பண்ணு நிலா. நீயே எனக்கு பொண்ணு பாரு. டீடெயில்ஸ் நான் சொல்லிடுறேன். பொண்ணு பேரு நித்திலாவா இருக்கணும். ஐந்து அடி ஆறங்குலம் இருக்கணும். அழகா சுருள் சுருளா அலை மாதிரி முடி இருக்கணும். கத்தி மாதிரி நீண்ட மூக்கு இருக்கணும், மென்மையா வருடுற மாதிரி பேசணும், சிரிக்கும் போது அவள் கண்களும் சிரிக்கணும், தீவிரமா வேலை செய்யும் போது அடிக்கடி அவள் புறங்கையால் நெற்றியில் தட்டிக்கணும்..அப்புறம்..” இவன் அடுக்கிக் கொண்டு போக, பெண் முறைத்தாள் மன்னனை.
“ஹாஹாஹா…இப்டியெல்லாம் என்னை ரசிச்சு பார்த்தியாடா திருடான்னு தானே முறைக்கிற, ஹாஹாஹா..எஸ் எஸ் என் நிலாவை நான் ரசிச்சேன், ரசிப்பேன். கூடாதுன்னு சொல்ல உனக்குக் கூட அதிகாரம் இல்லை” அத்தனை மகிழ்ச்சி இவன் முகத்தில்
அவனையே விழி எடுக்காது பார்த்தவள், பின் முகம் கசங்க, “உங்க குடும்பத்தை நினைச்சு பார்த்தீங்களா. என்னை மாதிரி ஒரு சாதாரண குடும்பத்துப் பொண்ணை ஏத்துப்பாங்களா?”
“ஆங்..இது தான் அழகான கேள்வி. ஸோ நிலா ஒத்துக்கிட்டா, இந்த ஆதேஷ் மேல ஒரு பிடித்தம் இருக்குன்னு ரைட்?” தன் ஒற்றைப் புருவம் உயர்த்தியவன்
“உடனே சரின்னு சொல்வாங்கன்னு பொய் எல்லாம் சொல்ல மாட்டேன் நிலா. கொஞ்சம் போராடனும் தான். பட் அது என் பிரச்சனை. வீட்டின் மூத்த அரசரைக் கவுத்தீட்டா, அவர் பார்த்துப்பார்” என்றவன் அவளது புரியாத பார்வையில்
“புரியாமே பேசிட்டு இருக்கேன் இல்ல, என் தாத்தாவைச் சொன்னேன். அவர் சரின்னு சொல்லிட்டா அப்புறம் யாரும் எதுவும் சொல்ல முடியாது. நான் பேசிட்டு உன் அம்மாட்ட வந்து பேச சொல்றேன். ஆல்ரெடி எனக்கு வீட்டில் கல்யாணத்துக்கு பிரஷர் கொடுத்துட்டு தான் இருக்காங்க. நான் இன்னைக்கு நைட் தாத்தாட்ட பேசுறேன். ஓகே நிலா…நீ வேணும்னா ஈவினிங் ஷெட்யூல் கட் பண்ணிட்டு வீட்டுக்குப் போறயா? நாளைக்கு காலையில் வேணும்னா வா” நிறைய அழுது விட்டாள், இன்னும் தெளிவில்லாமல் தான் இருக்கிறாள் என நினைத்து அவள் சொல்ல
“ம்கூம்…மாட்டேன். வேலை தான் என் ரிலாக்சேஷனே. நான் போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு, அப்புறம் ஆரம்பிக்கிறேன்” என்றவள் தன் புறங்கை கொண்டு நெற்றியில் தட்டப் போனவள் இவன் பார்வையில் முறைத்து விட்டு எழுந்து ஓடிவிட்டாள். வாய்விட்டு மனமெல்லாம் மகிழ்ப்பூ பூக்க சிரித்தான் சேர மன்னன்.
காதலின் அழகியல் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது தான், ஒரு அழகான புரிதல் இங்கே ஆரம்பம் ஆனது.
நித்திலாவிடம் இலகுவாக கேலியாகப் பேசி அவன் அனுப்பிவிட்டாலும், ஆதேஷின் மனம் கனத்துக் கிடந்தது.
குழந்தைகளைக் குழந்தைகளாகப் பார்க்காத சமூகம் எப்படி ஒரு ஆரோக்கியமான சமூகமாக இருக்க முடியும். பெண்ணை தன் போல சரி நிகர் சமமான எதிர்-பாலினம் என்பதை மட்டும் பார்க்காமல் அவளை எப்போதும் போதை வஸ்துவாகப் பார்க்கும் இந்த இழி நிலை என்று மாறும். சொந்தங்கள், நட்புகள், ஆசிரியர்கள், தெரிந்தவர்கள் என நம்பும் குழந்தைகளைச் சீரழிக்க எப்படி மனம் வருகிறது இந்த கொடியர்களுக்கு. இரண்டு வயது குழந்தைகளைக் கூட சீரழிக்கும் மனிதர்கள் கொடுமையான மனநோய் கொண்டவர்கள் என்று நினைத்தான்.
நித்திலாவுக்காக மிகவும் வருந்தினான் ஆதேஷ். அவள் வார்த்தைகளுக்கு அவள் அனுபவித்த கொடுமைகளையும் வலிகளையும் கடத்தும் சக்தி இல்லை என்று உணர்ந்தான். அவள் அறையை விட்டு சென்றுவிட்ட பின்பும் வெகு நேரம் மனம் அலைப்புற கைகள் இரண்டையும் கோர்த்துக் கொண்டு அதில் படுத்திருந்தான்.
இதுவரை தன் நிலாவின் வாழ்வு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் இனி அவளை என் நெஞ்சில் பொத்தி வைத்துப் பார்த்துக் கொள்வேன் என உறுதி எடுத்தவன் அடுத்து நின்றது தாத்தனிடத்தில்.
தாத்தாவும் பேரனும் ஒரு மணி நேரம் கலந்தாலோசித்த பின் வீட்டினர் அனைவருக்கும் சேதுபதி சேரமான் தன்னை வந்து பார்க்கும் படி அழைப்பு விடுத்தார்.
முதலில் அவருடைய அறைக்குள் வந்த வசந்தா, தன் மகன் இருப்பதை அறிந்து ஏதோ பெரிதாக வரப் போகிறது என உணர்ந்தவர் மெதுவே வந்து மகனின் வலது பக்கத்தில் அமர்ந்து கொண்டார். அடுத்து வந்த வசுந்தரா விறுவிறுவென்று வந்து இவனின் இடப்புறத்தில் அமர, “ஹாஹாஹா…..” வாய்விட்டுச் சிரித்தான் இருவரையும் பார்த்து
அவன் கன்னத்தில் செல்லமாக அடித்த வசுந்தரா, “என்னத்த பெரியவனே இழுத்து வச்சிருக்க” என பதைப்புடன் கேட்டார்
“ஹாஹாஹா…என்ன இரண்டு பேரும் எனக்குக் காவலா.. உங்க அண்ணட்ட இருந்து காப்பாற்ற போறீங்களா? இப்டி பயந்துட்டு இருக்கிறதுக்கு அவரை இரண்டு கேள்வி கேளுங்களேன்” இவன் கண்சிமிட்டிச் சிரிக்க
“வாய்ல போடுவேன் போக்கிரி. பேசாம இருக்கமாட்ட” அத்தை இவனை முறைத்தார்.
அனைவரும் ஒருவர் பின் ஒருவராக வர கடைசியில் விக்ரமனும் அருள்மொழியும் வந்தனர்.
“எல்லோருக்கும் ஒரு முக்கியமான விஷயம் சொல்லப் போறேன். ஐயா ஆதி..உன் போனில் இருக்கும் போட்டோவை எல்லாருக்கும் காட்டு” என தாத்தா பேரனைப் பணித்தார்
தனது மொபைலை எடுத்து நித்திலாவின் புகைப்படத்தை தனது தாய் மற்றும் அத்தையிடம் காட்டிட, “பொண்ணு லட்சணமா இருக்காடா பெரியவனே” கிசுகிசுத்தார் அத்தை
கணவனை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்த வசந்தா விக்ரமனின் கவனம் இங்கில்லை என தெரிந்து கொண்டு, மகனின் கையோடு கை வைத்துக் கொண்டு கட்டை விரலை உயர்த்திக் காட்டினார்
“ம்மா உங்க மன்னன் மேல் இருப்பது காதலா இல்லை பயமா” வம்பன் கிசுகிசுத்தான்
யாரும் பார்க்காதவண்ணம் வசுந்தரா இவன் காதுமடலைத் திருக. “ஷ் ஆ..வசு…” வேண்டுமென்றே கத்தினான் ஆதேஷ்
இந்த களேபரங்களைக் கண்டும் காணாது உட்கார்ந்திருந்தார் விக்ரமன்.
இதற்கிடையில் ஆதேஷிடமிருந்து போனைப் பறித்த பிருத்வி, “ஹேய் மிஸ் மில்லட்” என சத்தமில்லாது கூவினான்
“ஏதே நித்திக்காவா…” ஆச்சரியமாக ஆதேஷை ஜான்வி பார்க்க புன்சிரிப்பு இவனில்
இப்படி அனைவரும் பார்த்த பின் இறுதியாக விக்ரமனின் கையில் கொடுக்கப்பட போனைப் பார்க்காமலேயே, “எனக்கு இதில் விருப்பமில்லை. நம்ம அரச குடும்பங்களைத் தாண்டி பெண்ணெடுத்தால் நம்ம இரத்தத்தில் சாக்கடை…”
“விக்ரமா…” கர்ஜித்தார் சேதுபதி
ஆதேஷின் கைகளை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டார்கள் அன்னையும் அத்தையும். முகம் சினமேறிக் கிடந்தது இவனில்.
“விக்ரமா…இதில் உன் விருப்பத்தை நான் கேட்கல, பெரியவன் ஆசைப்பட்டுட்டான், அவன் விரும்பத்தை நிறைவேற்றித் தான் கொடுக்கணும். வாழப் போறது அவன். அவன் விருப்பம் தான் இதில் முக்கியம். புடிக்குதோ புடிக்கலையோ கேட்டுக்க, பொண்ணு பேரு நித்திலா, அம்மா மட்டும் தான் இருக்காங்க. நம்ம வனக்குடிலில் தான் இந்த சிறுதானிய உணவுக் கடை போட்டு வேலை செய்றா. அவ்வளவு தான் விஷயம். காலம் மாறுது நாமளும் மாறத்தான் வேணும். வர வெள்ளிக்கிழமை நாள் நல்லா இருக்கு, போய் பேசிட்டு வரலாம். இரண்டு கல்யாணத்தையும் ஒன்னா நடத்திடலாம்” தாத்தா முடிவாகச் சொல்ல
“நீங்க உங்க பேரன் விருப்பம்ன்னு சொல்லீட்டிங்க, என் முடிவையும் கேட்டுக்கோங்க, நானோ என் மனைவியோ அந்த பொண்ணு வீட்டுக்கு வந்து எந்தக் காரியத்திலும் கலந்துக்க மாட்டோம்” விக்ரமன் அக்கினிஜுவாலை கண்களில் வழிய கர்ஜித்தார்
“உங்களுக்கு மட்டும் பேசுங்க, என் அம்மாவை ஏன் இதில் இழுக்கிறீங்க” நீ பேசக்கூடாது என்னும் தாத்தாவின் கட்டளையை மீறி ஆதேஷ் வெடிக்க
“அவ முதலில் எனக்குப் பொண்டாட்டிடா, எனக்கு பொண்டாட்டி ஆனதால் தான் உனக்கு அம்மா” விக்ரமன் கோபத்தில் வார்த்தைகளைச் சிதற விட்டார்.
ஆதேஷ் கைகளை முறுக்கிக் கொண்டு ஏதோ சொல்லப் போக, “பெரியவனே அம்மாக்காக அமைதியா இரேன்” வசந்தா அழுதார் கையறு நிலையில் நின்று கொண்டு
தன் பலம் பலவீனம் ரெண்டுமே தன் மேல் அன்பு கொண்டவர்கள் தான் என நினைத்து அமைதி கொண்டான் ஆதேஷ்.
“விக்ரமா…உனக்கு வர விருப்பமில்லையா, யாரும் கட்டாயப்படுத்தல, பெரியவன் சொல்றது மாதிரி அவனுக்கு வசந்தா அம்மா, அந்த உரிமையை நீ பறிக்காதே” கடுமையாக பேசினார் தாத்தா
“என்னமோ செய்யுங்க, இவனும் சரி இவனைக் கட்டபோறவளும் சரி என் முகத்தில் முழிக்கக் கூடாது” என கத்தி விட்டு எழுந்து போய்விட்டார் விக்ரமன்.
குடும்பம் முழுவதும் திருமணம் வரை இனி என்னென்ன நடக்குமோ என வருந்தினார்கள்.