நித்திலப் பேரொளி-14

ஆதேஷ் தன்னவளைப் பற்றி அறிவித்ததிலிருந்து அவனது பாட்டி கோப்பெருந்தேவி சற்று மௌனமாகவே இருந்தார்.  பெரிய பேரன் தான் எப்போதும் பிரியத்திற்கு முதன்மையானவன் என்றபோதிலும் அரச குடும்பத்தில் பிறந்து தன் வாழ்க்கையை அங்கேயே பிணைத்துக் கொண்டவருக்கு நித்திலாவின் வருகை அவ்வளவு ஏற்புடையதாக இல்லை.

அடுத்த தலைமுறை விக்ரமனே அவ்வாறு இருக்க கோப்பெரும்தேவியைக் கேட்கவா வேண்டும்.  கணவரின் கோப முகத்துக்குப் பயந்து நேரடியாகச் சொல்லவில்லை என்ற போதிலும், நித்திலாவின் புகைப்படம் காட்டப்பட்ட போது பட்டும் படாமலும் பார்த்துக் கொண்டார்.

இதை யார் கவனித்தார்களோ இல்லையோ ஆதேஷ் கண்டுகொண்டான்.

மறுநாள் இரவு உணவுக்குப் பிறகு பாட்டியைத் தேடி வந்தவன் பாட்டி கட்டிலில் சாய்ந்து கொண்டு புத்தகம் படித்துக் கொண்டிருந்தார்.

ஆதேஷ் வந்து அவரின் கைகளில் இருந்த புத்தகத்தை வாங்கி மூடி வைத்துவிட்டு மடியில்  சாய்ந்து படுத்துக் கொண்டான்.

“தூங்கப் போகலையா பெரியவனே” பாட்டி இவனின் தலையில் கை கோர்த்துத் துளாவ

“ம்ஹும்..தூக்கம் வரல…” குரல் சோர்ந்து வந்தது பேரனுக்கு

“என்னாச்சுய்யா…”

“ம்ப்ஸ்…..ஏன் பாட்டி நித்திலா ஒரு ராஜ குடும்பப் பொண்ணா இருந்தால் பிடிக்குமா உங்களுக்கு?” அத்தனை ஆதங்கம் இவன் குரலில்

“பழகிடுச்சு பெரியவனே…..அரச ரத்தம் வராதில்ல? நம்ம வம்சம் கலப்படம் ஆகிடுமேயா” பாட்டி அவரின் ஒவ்வாமையை வெளியிட்டார்

பழங்காலத்திலேயே தங்கி நிற்கும் இவர்களை எல்லாம் எப்படி நிகழ்காலத்திற்கு நகர்த்த என மனதில் சோர்ந்து போனான் ஆதேஷ்.

பாட்டியின் கன்னம் வருடியவன், “அந்த காலத்தில் ஏன் வழி வழியாக அரச உறவுகளுக்குள்ளேயே கல்யாணம் செய்தாங்க தெரியுமா? இரத்தத்தில், மரபணுக்களில் அரச குடும்பங்களுக்குத் தேவையான வீரம், போர்க்குணம் எல்லாம் அடுத்த சந்ததிக்குக் கடத்தப்படும்ன்னு நினைச்சாங்க.  சாதாரண குடும்பங்கள்ல திருமணம் செய்தால் வரும் பிள்ளைகளுக்கு அந்த குணங்கள் இல்லாமல் போய்விடும் ஒரு அச்சம். அதனால் அப்டி செய்தார்கள்.  மேலும் அரசியல் பிரச்சினைகளுக்கு  தீர்வாகவும் இத்தகைய திருமணங்கள் இருந்தது.  ஆனா, இப்போ முதலில் யார் போருக்குப் போறா அந்த குணங்கள் இருக்கணும்னு எதிர்பார்க்க?  இரண்டாவது மரபணுக்கள் மூலம் பெற்றோர்களில் இருந்து அப்படியே எடுத்து குழந்தைகளுக்கு மாற்ற இது என்ன மாயாஜாலமா?  சில உருவ ஒற்றுமைகள் வரலாம், மிக சில குணங்கள் வரலாம்,  எல்லாமே அப்டியே வராது பாட்டி” என்றவன்

“புக் படிக்கிறீங்க தானே,  ஐரோப்பாவின் ஹாப்ஸ்பர்க்குகளின் அரச குடும்ப வரலாற்றைப் பற்றி படிச்சுப் பாருங்க. தலைமுறை தலைமுறையா நெருங்கிய உறவுகளுக்குள் திருமணம் பண்ணினதால், “ஹாப்ஸ்பர்க் தாடை” என்னும் மரபணு குறைபாடு தொடர்புடைய  நோய்கள் தோன்றியது. இதுல கீழ்தாடை வெளியே தள்ளிட்டு இருக்கும், இதனால் பேசுறது, உணவை மெல்லுறது இப்டி ரொம்ப  சிரமப்பட்டாங்க, நாட்கள் செல்லச் செல்ல மன ஆரோக்கிய பிரச்சனைகள் அதிகமாச்சு. இந்த வம்சத்தின் கடைசி மன்னர் இரண்டாம் சார்லஸ்  இந்த மரபணு பாதிப்பினால் மிகத் தீவிரமான அவதிப்பட்டார், அதனால் அவருக்கு குழந்தைகள் இல்லை.  அவரோட முப்பத்து எட்டாவது வயதில் காலமானார் அதனால் அந்த ஹாப்ஸ்பர்க் அரச வரிசையை முடிவுக்குக் கொண்டுவந்தது. இப்டி இந்த சமஸ்தானங்களுக்குள்ளேயே கல்யாணம் பண்ணிட்டு இருந்தோம்னா, ஒரு நாள் நம்ம குடும்பங்களுக்கும் இது தான் நிலைமை. புரிஞ்சுக்கோங்க பாட்டி” பேரன் மிகவும் வருத்தத்துடன் சொல்ல

சந்ததி இல்லாது போய்விடும் என்றதில் துணுக்குற்றவர், “ஆமா, பொண்ணு லட்சணமா இருக்காளாமே, உன் தோளுக்கு இருப்பாளா?  குணம் எப்டி?  நல்லா சமைப்பாளாமே? ரொம்ப அமைதியாமே?” பிடிக்கவில்லை என்றாலும் எல்லாத் தகவல்களையும் சேகரித்திருந்தார் பாட்டி

“ஹாஹாஹா…நாட்டி பாட்டி”எனச் சிரித்தவன் தன் அலைபேசியில் நித்திலாவின் புகைப்படத்தை எடுத்துக் காட்டினான்

விழியகலாது  பார்த்தவர், “கொஞ்சம் என் பேரனை விட இந்தா இம்முக்காண்டு செவந்தவளா இருக்கா. ஆனா எம் பேரன் அழகுக்கு கொஞ்சம் மட்டு தான்” கையில் சிட்டியை பிடித்து அளவு காட்டி நீட்டி முழக்கினாள் பெரியவள்

“ஹாஹாஹா….ஆனாலும் ரொம்ப  தான் பேரன் பெருமை  உங்களுக்கு” என்று சிரித்தவன் எழுந்து கொண்டான்

“என் கொள்ளுப் பேரன் இந்த சுருள் முடி வச்சுட்டு செத்தவனா வருவான், நீ வேணும்னா பாரேன்” நித்திலாவின் படத்தை வருடியபடி பாட்டி ஆருடம் சொன்னாள்

ஒரு மௌனப் புன்னகை மட்டுமே இவனில்.

“பெரியவனே, எனக்குச் சொன்னாய் தானே, உன் அப்பனுக்கும் சொல்லுய்யா. மரபணு அது இது சொன்னா கேட்பான்னு நினைக்கிறேன்” மகனை நினைத்து பாட்டி பேச

“யாரு..உங்க மகன்?  உங்க மகனுக்கு நான் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. அவருக்கே எல்லாம் தெரியும்.  வீம்புக்கு மல்லுக்கு நிற்கிறார், அவர்ட என்ன பேச முடியும்? ச்ச்சூ போங்க பாட்டி.  நான் தூங்கப் போறேன்” என்றவன் போய்விட்டான்.

தனது அறைக்கு வந்தவன் படுக்கையில் தலையணைகளை முதுகுக்கு முட்டுக் கொடுத்துவிட்டு அமர்ந்து கொண்டான்.

மணி இரவு பத்தை நெருங்கிக் கொண்டிருக்க, நித்திலாவுக்கு அழைக்கலாமா வேண்டாமா என இருமனதாக இருந்தவன், வாட்ஸ்அப் திறக்க நித்திலம் காற்றாலையில் இருப்பதாக காட்டியது.  அழைத்துவிட்டான் மன்னன்.

“ஹலோ…ஒரு நிமிஷம்” என்று கிசுகிசுத்தவள் இரண்டு நிமிடம் கழித்து “சொல்லுங்க, நீங்க இன்னும் தூங்கலையா?” என்றாள் பெண்

“அம்மா இருக்காங்களா கூட?  வச்சுட்டட்டுமா?” ஆதேஷ் கேட்க

“இல்லல்ல….முதலில் அம்மா கூடத் தான் படுத்திருந்தேன், இப்போ கூடத்துக்கு வந்துட்டேன்” என்றவள், “பேசிட்டீங்களா?”   என ஆர்வத்தை அடக்கிய குரலில் கேட்க

கள்ளப் புன்னகையை உதடுகளில் தவழ விட்டவன், தன் பின்னந்தலையை கோதிக்கொண்டு, “யார்ட…என்ன பேசணும்?” என்றான் சீரியஸாக

“அது…நான்…இல்ல… நீங்க” என்ன சொல்வதென இவள் தடுமாற

“நீ நிலா நான் சேரன்….அது எது?” வம்பு வளர்க்க

“ஷ்ஷு…நான் வக்கறேன் போங்க” பெண் கட் செய்வதாய் சொல்ல

“ஹேய் நிலா…சில்…ஆமா பேசிட்டேன். தென் என்ன தெரியணும் உனக்கு?” வேண்டுமென்றே அவளைச் சீண்டினான் சேரன்.

நித்திலா இத்தனை உரிமையோடு அவனிடம் பேசுவதை மனது ஆழ்ந்து ரசித்தது.

“ஒன்னும் தெரிய வேண்டாம், எனக்கு தூக்கம் வருது போகணும் நான்”

“ஹாஹாஹா….ஹேய், சும்மா…” என ஒரு நிமிட அமைதிக்குப் பின் “வீட்டில் மத்தவங்களுக்கு பெருசா எதிர்ப்பு இல்லை நிலா, ஆனா அப்பா ஒத்துக்கல. பட் நான் சொன்ன மாதிரி தாத்தா எடுக்கறது தான் முடிவு.  ஸோ எல்லாரும் வெள்ளிக்கிழமை அம்மாவை உன்னைப் பார்க்க வரலாம்ன்னு முடிவு பண்ணியிருக்காங்க.  பாட்டி நாளை மறுநாள் பேசுவாங்க உன் அம்மாட்ட.  ஓகே தானே உனக்கு?” ஆதேஷ் முழுவதும் சொல்லாமல் அதே நேரம் சில தகவல்களை மட்டும் பகிர்ந்தான்

“அப்பாக்கு பிடிக்கலைன்னா ஏன் செய்யறீங்க?  தப்பில்லையா?, இல்ல என்னால் பிரச்சனை வேண்டாம். நீங்க அப்பா சொல்றதைக் கேட்டா என்ன? உங்களைப் பெத்தவருக்கு உங்க வாழ்க்கை யார் கூட இருக்கணும்னு முடிவு செய்ய உரிமை இல்லையா?” நித்திலாவுக்கு மனதுக்கு பிடிக்காமல் இருந்தது.

“ஸோ என்ன செய்யலாம் சொல்லு? பொண்ணு பார்க்கறையா?  நான் சொன்ன டீடெயில்ஸ்ஸோட?  இவன் குதர்க்கம் பேசினான்

“ரொம்ப வம்பு பிடிச்சவர் நீங்க.  நான் பேசல போங்க” முறுக்கியது பாவை

“நிலா, உனக்கு எல்லாம் நான் சொல்ல முடியாதும்மா, புரிஞ்சுக்க.  அவர் ரீஸனேபிலா இருந்தால் கண்டிப்பா குடும்பம் அவர் பக்கம் தான் இருப்பாங்க. இதுக்கு மேல் நான் சொல்ல முடியாது.  உனக்கு வெள்ளிக்கிழமை ஓகேவா? நான் பெண் பார்க்க வரட்டுமா?” ஆதேஷ் கேட்க

“நீங்க எதுக்கு பெண் பார்க்க வரணும்? அது தான் தினமும் பார்க்கறீங்க தானே?”

“என்னடா இது கொடுமையா இருக்கு. கட்டிக்கப் போறவன் நான் ஒரு பஜ்ஜி சொஜ்ஜி சாப்பிட எனக்கு உரிமை இல்லையா இந்த நாட்டில்?”

“ஹாஹா…சரி வாங்க. பட் மில்லட் சாப்பாடு தான் கிடைக்கும் பரவாயில்லையா?” பெண் வம்பு பேச

“ஹாஹா..ஒய் நாட், நிலா உனக்கு கம்போர்டபுளா இருக்கும் தானே?” ஆதேஷ் அவளது சூழ்நிலை புரிந்து கேட்க

“பிரச்சனை இல்ல..ஆனா எனக்கு ஒன்னு கேட்கணும்..கேட்கவா?”

“என்னம்மா…”

“என்னைப் பற்றி எல்லார்டையும் எல்லாம் சொல்லிட்டீங்களா?” விழிகள் பளபளக்க கேட்டாள் நித்திலா

“ஏன் சொல்லணும் நிலா? அது நம்ம பர்சனல் நிலா, அதை எல்லாருக்கும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” இவன் தீர்க்கமாகச் சொல்ல

“இல்ல…நாளைக்கு குழந்தை இல்லைன்னு ஏதாவது கேட்டால் என்ன பண்றது?” இவள் தயங்க

“நிலா…நாளைக்கு நடக்கிறது பத்தி இப்ப ஏன் கவலைப்படணும்?  அப்டியே கேட்டால் அப்போ பார்த்துக்கலாம்.  யூ டோன்ட் ஹவ் டு ஒர்ரி அபௌட் இட் நொவ்” என்றவன்

“இன்னும் என்ன கேட்கணும் நிலாக்கு, அமைதியாயிட்டா?” எதற்கோ தயங்குகிறாள் என யூகித்தவன் கேட்டான்

“என்னோட அம்மாட்ட நான் இன்னும் சொல்லல.  ஏதோ தெரியல, மனசு ஒரு மாதிரி படபடன்னு…ம்ப்ஸ் எப்படி சொல்ல” உழன்றாள் பேதை

“நிலா நாளை காலையில் நீ குடிலுக்கு போறதுக்கு முன் நான் வரேன் உன் வீட்டுக்கு.  அம்மாக்கு எல்லாம் சொல்லிட்டு, என் வீட்டில் இருந்து வரது பற்றியும் சொல்லிடலாம் சரியா? என்றவன்

“இப்போ போய் நல்ல பொண்ணா தூங்குவியாம், ஐம் ஆல்சோ டையார்ட் தூங்கப் போறேன்மா”என்றவன் கட் செய்துவிட்டு படுத்துக் கொண்டான்.

error: Alert: Content selection is disabled!!