நித்திலப் பேரொளி-16

வெள்ளியன்று காலையில் ஆதேஷ் விரைவாகவே குடிலுக்கு வந்திருந்தான். இவன் வந்த அடுத்த பத்து நிமிடத்தில் அறையின் கதவு தட்டப்பட, “வா டா உள்ள” என்றவன் தன் வேலையில் கவனமானான்.

“பாஸ், நித்திக்கா வரல இன்னைக்கு, கடை போடலையே, என்னாச்சுன்னு தெரியுமா, உங்களுக்கு போன் எதுவும் பண்ணினாங்களா?” உள்ளே வந்த சலீம் கேட்க

“ம்ம்… நிலா இன்னைக்கு வர மாட்டா, இன்னைக்கு சிறுதானிய உணவு இல்லைன்னு ஒரு அறிவிப்பு போர்டு வச்சுரு” கணினியில் பார்வை இருக்க பதில் மட்டும் சொன்னான்.

“நிலா வா.. அது யாரு?” சலீம் புரியாமல் பார்க்க

“நீ அவ பேரில் இருக்கும் பின்னாடி ஒரு எழுத்தைக் கட் பண்ணலாம், நான் நடுவில் ரெண்டெழுத்தைக் கட் பண்ண கூடாதா?, எந்த ஊரு நியாயம் டா இது” நிமிர்ந்து புன்முறுவலோடு ஆதேஷ் கேட்டான்.

“ம்ம் அது சரி, எப்போதும் மிஸ். நித்திலான்னு நீட்டி முழக்குவீங்க, இப்ப என்ன திடீர்னு நிலா?”

“இந்திய அரசு சட்டம் போட்டிருக்கு, நித்திலா என்ற பேரை இனி நிலான்னு தான் கூப்பிடனும்னு நான் சொன்னா நீ நம்பவா போற?” அத்தனை நையாண்டி இவனின் வார்த்தைகளில்

“நீங்க சரியில்லை பாஸ், இன்னைக்கு வம்பை வாரிக் குடிச்சிட்டு வந்திருக்கீங்க போல, நான் போறேன், வேலை இருக்கு” என்றவன் தலையைச் சொறிந்து கொண்டு வெளியேறினான்.

“ஹாஹாஹா..” சிரித்துக் கொண்டான் வம்பன்.

மாலை நான்கு மணி வாக்கில் கிளம்பி தயாராகி தன் அறையை விட்டு வெளியே வந்த ஆதேஷ், சலீம் இருக்கும் அலுவல் அறைக்குள் நுழைந்தான்.

“சலீமா, வா டா வெளியில் போகணும்” என அழைக்க

“எங்க பாஸ்?”

“பாஸ் சொன்னா கேள்வி கேட்காமல் வரப் பழகுடா இடியட்” என்றவன் முன்னே நடக்க

சலீம் வந்து காரில் அமர்ந்து கொண்டதும், விசில் அடித்துக் கொண்டே காரை ஓட்டினான் ஆதேஷ்.

“பாஸ் ரொம்ப ஜாலி மூடில் இருக்கீங்க போல, ஆமா எங்க போறோம்?”

“ம்ம் உனக்கு பொண்ணு பார்க்கத் தான்” என்றான் தீவிரமான முகபாவனையோடு.

“எதே… பொண்ணு பார்க்கவா? எனக்கா? எனக்கு இருபத்து நாலு வயசு தான் ஆகுது. முதல்ல முப்பது வயதைத் தொட்டு முரட்டு சிங்கிளா சுத்திட்டு இருக்க நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணுங்க” சலீம் ஆதேஷ் மற்றும் லிங்காவை குறிப்பிட்டுச் சொல்ல

“பட், சமூக சேவையெல்லாம் நீ தானடா பண்ணுவ, ஒரு மாதமா தஞ்சை மழை இல்லாமல் காய்ஞ்சு கிடக்கு. கழுதைக் கல்யாணம் பண்ண பொண்ணு ரெடி, மாப்பிள்ளை வேணும்னு கேட்டாங்க, சரி நம்ம பய சலீம் சமூக சேவகன் ஆச்சே, கூட்டிட்டு வரேன்னு வாக்குக் கொடுத்திருக்கிறேன். அது தான் போய்ட்டு இருக்கோம்” சிரிக்காது ஆதேஷ் வம்பு செய்தான்.

“எதே கழுதைக்கு தாலி கட்டணுமா? என்ன விளையாடுறீங்களா? கழுத்தைப் பொண்டாட்டி வச்சு நான் என்ன பாஸ் பண்றது? ஆத்தி… இந்த அரச குடும்பத்து ஆளுங்களை நம்பாதடா சலீமான்னு அந்த கேசவன் அன்னைக்கே சொன்னான். நான் தான் கேட்கல” இவன் புலம்பிக் கொண்டு வர

“ஓஒ… கேசவன் வாக்கை நம்புவாய்… என் வாக்கை உதாசீனப்படுத்துவியா? உன்னை இன்னைக்கு கழுதைக்கு தாலி கட்ட வைக்கல நான் சேரன் இல்லடா இடியட்” வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டான் ஆதேஷ்.

ஒரு வீட்டின் முன் வந்து வண்டியை நிறுத்த, கண்ணாடி வழியே பார்த்த சலீம், “இது நிலாக்கா வீடு இல்ல” என தாடையில் தட்டிக் கொண்டு கேட்க

“இல்ல.. நிலாக்கா இல்ல… நித்திக்கா வீடு, சரியா சொல்லுடா” ஆதேஷ் இவன் தலையில் தட்டி விட்டு இறங்கிக் கொண்டான்.

“வாட்… பாஸ் நீங்க தான நிலான்னு சொன்னீங்க” சலீம் இறங்கிக் கொண்டு வர

“அது எனக்கு.. உனக்கு நித்தி தான்” அத்தனை குறும்பு இவனுக்கு.

“அய்யோ இந்த மனுஷன் நல்லாத் தானே இருந்தாரு. எந்த காத்து கருப்பு அடிச்சுச்சுன்னு தெரியலையே” என்று சொன்னவன் “பாஸ் என்ன இத்தனை கார் நிக்குது இங்க” பிற கார்களைக் கவனித்துக் கேட்டான்.

“ம்ம் கல்யாணம்னா சும்மாவா, நிறைய ஆட்கள் வரணுமில்ல” தனது கீழ் உதட்டைக் கடித்துக் கொண்டு ஆதேஷ் சொல்ல

“பாஸ், விளையாடாதீங்க, நான் மாட்டேன். என் வாழ்க்கையை என்ன வனவிலங்கு சரணாலயத்திற்கா எழுதி கொடுத்திருக்கேன். ஆளை விடுங்க நான் போறேன்” என்று சலீம் ஓடப் பார்க்க

“வாடா இடியட்..” என சிரித்தவன் சலீமின் கழுத்தில் கை கோர்த்து இழுத்துக் கொண்டு உள்ளே சென்றான்.

இருவரும் உள்ளே நுழைய அப்போது தான் வந்திருந்த ஆதேஷின் குடும்ப அங்கத்தினர்கள் அந்த ஹாலை நிறைத்து அமர்ந்திருந்தனர்.

“மாப்பிள்ளை வந்தாச்சு…” பிருத்வி கூவ

“ஆஅ ஆத்தி… நான் மாட்டேன் மாட்டேன்… குடும்பமே கூடி என்னை கும்மியடிக்க காத்துட்டு இருக்காங்க” என சலீம் கிசுகிசுக்க

“ஹாஹாஹா…” சிரித்துக் கொண்ட ஆதேஷ் அங்கிருந்த இரட்டை நாற்காலியில் இவனைத் தள்ளி தானும் அமர்ந்து கொண்டான்.

“பெரியவனே.. அவன்ட என்ன வம்பு பண்ணற நீ” வசுந்தரா முறைக்க

“ஹாஹாஹா… சும்மா அத்தே, எனக்கு பொண்ணு பார்க்கப் போகணும் வாடான்னு கூப்பிட்டா, உங்களுக்கு என்ன இப்போ அவசரம், தனியா இருக்க எனக்கு ஒரு பொண்ணைப் பார்த்து கட்டி வைக்கத் தோணுதா உங்களுக்குன்னு எதிர்த்துப் பேசறான்” நமட்டாக சிரித்துக் கொண்டு சொன்னான்.

“ஆத்தாடி… பச்ச பொய் மேடம், நம்பாதீங்க, கழுத்தைப் பொண்ணு பார்த்திருக்கேன் தாலி கட்ட வாடான்னு இழுத்துட்டு வந்திட்டு என்னை கோர்த்து விடுறார்” சலீம் பாவமாய் பார்த்தான்.

“ஹாஹாஹாஹா…” அனைவரும் சிரிக்க

வம்பு பிடித்தவன், சரி தேவகி பொண்ணைக் கூப்பிடும்மா” பாட்டி சொல்ல

தங்கப் பொட்டுக்களை உடல் முழுவதும் வாரி இறைத்த இளம் லாவண்டர் நிற சில்க் சாரியில் மெல்லிய ஒப்பனைகளோடு இருந்த நித்திலாவை நயனாவும் ஜான்வியும் அழைத்து வந்தார்கள்.

கண்ணெடுக்காது பார்த்திருந்தான் ஆதேஷ். நித்திலாவை கண்டு பழகிய இத்தனை மாதங்களில் புடவையில் காண்பது இதுவே முதல் முறை இவனுக்கு.

புடவையில் அத்தனை பாந்தமாக, செதுக்கி முடித்ததும் எழுந்து வந்துவிட்ட சிற்பம் போலிருந்தாள் பெண்.

ஆட்கள் நிறைய இருந்தால் நித்திலாவுக்கு கஷ்டமாக இருக்குமோ என இவன் பயந்து கொண்டிருந்தது வீண் என்பது போன்று அவள் முகம் ஆனந்தத்தை அள்ளிக் கட்டிக் கொண்டு நின்றது.

அவளையே அளவிட்டுக் கொண்டிருந்தவன் கண்களில் நிம்மதியும் சுவாரஸ்யமும் வந்து அமர்ந்து கொண்டது.

“ஆஹா… இதைச் சொல்லுங்க, கதை அப்படி போகுதா?” சலீம் நித்திலா மற்றும் ஆதேஷை மாறி மாறிப் பார்த்துக் கொண்டு கேட்க

“சலீம் பாய், ஒரு வழியா உங்களுக்கு லைட் எரிஞ்சுடுச்சா?” ஜான்வி நக்கல் செய்தாள்.

“ஆமாம்மா… பெட்ரோமாக்ஸ் இல்ல, ஹை அவுட்புட் நவீன எல்இடி ஃப்ளாஷ் லைட்டே எரிஞ்சுடுச்சு” சிரித்தான் மகிழ்ச்சி பொங்க சலீம்.

குடும்பம் அனைவரும் கூடி இருக்க, விக்ரமன் மட்டும் வரவில்லை. சேதுபதி தனியே எவ்வளவோ பேசிப் பார்த்தும் முடியாது என மறுத்துவிட்டார். வசந்தாவையும் விக்ரமன் போகக் கூடாது என தனியே இருக்கும் போது சத்தமிட்டார். வாழ் நாட்கள் முழுக்க கணவன் சொல்லே மந்திரம் என்று வாயில்லாப்பூச்சியாக வாழ்ந்த வசந்தா, மகனின் நல்ல காரியத்திற்கு போகக் கூடாது என்றதும் கொதித்து எழுந்தார். சேதுபதியிடம் முறையிடுவேன் என்றதும் விக்ரமன் அடங்கிவிட்டார். இருவருக்கும் இடையே இத்திருமணம் குறித்து பூசல் இருந்து கொண்டே இருந்தது, அதை வசந்தா குடும்ப அங்கத்தினர்களுக்குக் காண்பித்துக் கொள்ளாது இருந்து கொண்டார்.

தந்தை வராத வருத்தம் மனது நிறைய வடிந்து கிடந்தாலும், தன்னை தேற்றிக் கொண்டான் ஆதேஷ்.

குடும்ப நபர்கள் அனைவருக்கும் நித்திலாவைப் பார்த்தும் மனதுக்குப் பிடித்துப் போனது. அமைதியான அவளது சுபாவம் குடும்பத்து பெண்களைக் கவர்ந்தது என்றால் மிகையில்லை.

பேரனுக்காக வந்திருந்த கோப்பெருந்தேவி நித்திலாவையும் அவள் அன்னையையும் பார்த்ததும் நிம்மதி கொண்டார். பேரனின் தேர்வு சரியானது தான் என மனதில் ஏற்றுக் கொண்டார்.

நித்திலாவை அழைத்து தன்னருகே அமர்த்திக் கொண்ட வசுந்தரா, “இந்த பெரிய மனுஷன் இருக்கானே, அவனோட அத்தை நான்” என சொல்ல

“நீங்க வசும்மா தானே.. சொன்னாங்க” மெல்லிய புன்னகை நித்திலத்திடம்.

“வசு.. நீ டெஸ்ட் பண்ண தேவையில்லை, அவளுக்கு நான் கிளாஸ் எடுத்துட்டேன், அவளுக்கு நம்ம ஃபேமிலில எல்லாரையும் தெரியும், சிலரை முதலேயே பார்த்திருக்கா” நாக்கை இடது கன்னத்தில் முட்டிக் கொண்டு சிரித்தான் ஆதேஷ்.

“வாய்ல போடுவேன் போக்கிரி, என்னமோ இவன் தான் பேரு வச்சவன் மாதிரி வசு வசுன்னு, ஏங்க ஒரு புருஷனா எதுக்கு இருக்கீங்க? இதையெல்லாம் ஏன்னு கேட்க மாட்டீங்களா?” தனது கணவர் அருள்மொழியிடம் வசுந்தரா பாய்ந்தார்.

“ஏன்?” என்ற ஒற்றை வார்த்தையை சிரிக்காது மருமகனிடம் கேட்டார் அருள்மொழி.

“ஹாஹாஹா… வசுக்கு டெபாசிட் போச்சு” பிருத்வியும் ஆதேஷும் ஹைஃபை கொடுத்துக் கொண்டு சிரித்தார்கள்.

இந்த கலகலப்பினூடே இரு சகோதரர்களுக்கும் அடுத்த மாதம் வருகின்ற முகூர்த்தத்தில் ஒரே மேடையில் திருமணம் செய்வது என்று முடிவானது.

ஆதேஷ் திருமணச் சடங்கை மட்டும் பெருவுடையார் சன்னதியில் வைக்க முடியுமா எனக் கேட்க, அவனின் பிரகதிப் பிரியம் அறிந்த பெரியவர்கள், திருப்பூட்டும் சடங்கை கோவிலில் வைத்து மற்றவற்றை திருமண மஹாலில் வைத்துக் கொள்ளலாம் என ஒருமனதாக தீர்மானித்தனர்.

கல்யாணக் கனவுகள் சுமந்து ஒரு ஜோடி இருந்தது என்றால், லிங்கா மற்றும் நயனா இருவரும் திருமணத்தை எதிர்நோக்கி இருக்கிறார்களா என்றால் ஆம் இல்லை என்று பதில்கள் தான் அவர்களிடம் இருந்து வரும்.

இந்த பேச்சுக்களுக்கு இடையே நயனாவை நோட்டமிட்டுக் கொண்டிருந்த லிங்கா, ‘எப்போ பார் அத்தான் அத்தான் அத்தான் தான் இவளுக்கு, இவனும் இவளை தொட்டில் போட்டு தாலாட்டாத குறை தான். ஹும்… இந்த வீட்டோட செட்டிலாக இவ போட்டுருக்க மாஸ்டர் பிளான் எனக்குத் தெரியாதுன்னு நினைச்சுட்டு இருக்கா, வாடி… கல்யாணம் ஆகட்டும், இந்த லிங்கா ஜபம் பாட வைக்கல நான் உன் புருஷன் இல்ல” லிங்கா மனதில் நயனாவை வறுக்க

“அண்ணாத்தே…. மைண்ட் வாய்ஸ்ன்னு நினைச்சு நயன்க்காவை கழுவி ஊத்துறதெல்லாம் வெளியில் சொல்லிட்டு இருக்கீங்க” லிங்கா நயனாவையே தீவிரமாகப் பார்த்துக் கொண்டு இருக்க, ஒரு அனுமானத்தில் பக்கத்தில் அமர்ந்திருந்த பிருத்வி அடித்து விட்டான்.

“நோ வே… பொய் சொல்லாதடா” பிருத்வி அருகில் குனிந்து லிங்கா கிசுகிசுக்க

“நம்பிக்கை இல்லனா, உங்க மேல சத்தியம் பண்ணவா” வம்பாய் சிரித்துக் கொண்டு பிருத்வியும் கிசுகிசுத்தான்.

ஒரு பெரு மூச்சு ஒன்றை வெளியேற்றிய லிங்கா, ‘இவளை நினைச்சா கூட தடா போடுறாங்கனுங்க தடியன்ஸ்’ நொந்து கொண்டு மௌனமானார் லிங்கேஸ்வரர்.

error: Alert: Content selection is disabled!!