நித்திலப் பேரொளி-17

சேரமான் அரண்மனை வண்ணத் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு இந்திராபுரி பூவுலகில் இருந்தால் எப்படி இருக்குமோ அப்படி அழகுற கம்பீரமாக நின்றது.

இத்தலைமுறையில் முதல் திருமணம், அதுவும் இரட்டைச் சகோதரர்களின் திருமணம் கேட்கவா வேண்டும், சேதுபதி சேரமான் சீரும் சிறப்புமாக நடைபெற வழிவகை செய்திருந்தார். தமிழ்நாட்டின் முக்கிய பிரமுகர்கள், தொழில்துறை நண்பர்கள், சுற்றத்தார், நட்புகள், வனக்குடிலில் வேலை செய்வோர், சேரமான் குடும்பத் தொழிலாளர்கள் என ஊரை அழைத்து சிறப்பித்திருந்தனர்.

திருமணத்தன்று காலை சூரிய உதயத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில், ராஜராஜேஸ்வரத்தில் குடிகொண்டிருக்கும் பெருவுடையாருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. பிரமாண்டமாய் எழுந்தருளி இருக்கும் சிவலிங்கத்தை மெய்சிலிர்க்கப் பார்த்து நின்றான் மணக்கோலம் பூண்டிருந்த ஆதேஷ்.

ஆதேஷ்-நித்திலாவிற்கு முதலில் திருமணம் செய்து, அடுத்த பத்து நிமிடத்தில் லிங்கா-நயனா ஜோடிக்குச் செய்வது எனத் திட்டமிட்டிருந்தனர்.

சேரமான் குல வழக்கப்படி உடல் முழுவதும் தங்க ஜரிகை பொட்டும் கோடுமாக பின்னி இழையோட, சிவப்பு நிற காஞ்சிபுரம் பட்டுப் புடவையில் மணப்பெண் அலங்காரத்தில் சிவனின் பார்வதி கைலாசத்தில் இருந்து வந்திறங்கியது போல் அத்தனை அழகுடன் ஆதேஷின் அருகில் நின்றாள் நித்திலா.

சேரமான் குடும்பம், தேவகி, சலீம் மற்றும் முக்கிய குடும்ப அங்கத்தினர்கள் மட்டுமே கோவிலுக்கு வந்திருந்தனர். தாலி கட்டியவுடன் திருமண மஹாலுக்கு மணமக்களை அழைத்துச் செல்வதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நமச்சிவாயப் பட்டர், வெள்ளித் தட்டிலிருந்த மஞ்சள் கயிற்றில் கோர்த்த திருமாங்கல்யத்தைப் பெருவுடையானிடம் வைத்து பூஜித்த பின், தனது கைகளில் ஏந்தி வந்தார்.

சேதுபதி சேரமான் மற்றும் கோப்பெருந்தேவியிடம் அந்தத் தட்டைப் பயபக்தியோடு கொடுத்தார் நமச்சிவாயப் பட்டர். கைகளில் வாங்கி கண்களில் ஒற்றிக் கொண்ட தாத்தனும் பாட்டியும் தட்டை உயர்த்தி சிவனை நோக்கி காட்டி விட்டு, ஆதேஷிடம் நீட்ட, மெய் சிலிர்க்க தன் கைகளில் திருமாங்கல்யத்தை எடுத்துக் கொண்டவன், ஒரு நிமிடம் கண்மூடி பேரண்டப் பெரியோனைப் போற்றியவன், நிமிர்ந்து தன் எதிரே நின்ற நித்திலத்தைப் பார்த்தான்.

“பிடிக்குமா நிலாக்கு” மெல்லிய குரலில் அவளின் வதனத்தையே குறுகுறுத்தவாறு கேட்க,

கண்கள் பனிக்க, உதடுகள் துடிக்க, நித்திலம் அசைத்தது பேரானந்தம் நிறைந்த முகத்தை சம்மதமாய்.

அவளில் பொங்கி நிறைந்த பேரானந்தம் இவனில் வழிய, புன்சிரிப்பு ஒன்றைத் தன் முகம் முழுக்கப் பரவவிட்டவன், “இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க” என்றவன், அந்த பஞ்ச பூதங்களுக்குச் சொந்தக்காரனைச் சாட்சியாக வைத்துத் தன் நிலவிற்கு மாங்கல்யம் இட்டு, தன் இதய பீடத்தில் ராணியாய் ஆக்கிக் கொண்டான் சேர மன்னன்.

நித்திலாவின் விழிகளில் திரண்ட இரு துளி இமை வெள்ளம் இவன் கைகளில் பட்டுக் கலந்தது.

பத்து வயது சிறுவனாக இங்கு வர ஆரம்பித்த ஆதேஷ் மேல் அளப்பரிய பிரியம் உண்டு நமச்சிவாயப் பட்டருக்கு. ஆதேஷின் அருகில் வந்தவர், மணமக்கள் இருவரின் தலை தொட்டு ஆசிர்வதித்து, ஆனந்தத்தில் இவனை அணைத்துக் கொண்டார்.

“நாழி ஆயிடுத்து, அடுத்த கல்யாணம் பண்ணமோல்லியோ, திருப்பூட்டிக் கொண்டவா இரண்டு பேரும் அப்பனை ஒரு சுற்று சுற்றி வாங்கோ” அருகில் இருந்த இன்னொரு ஐயர் கட்டளை பிறப்பிக்க, ஆதேஷ் முன்னே நடக்க நித்திலா பின் தொடர்ந்தாள்.

மற்றவர்கள் பார்வையில் இருந்து சற்று உள்ளே வந்ததும் ஒரு நிமிடம் தயங்கியவன், தனது வலது கையை மெதுவாக நகர்த்தி நீட்டி, நித்திலாவின் வலது கையோடு அவள் உணரும் முன் கோர்த்துக் கொண்டான்.

மயிரிழையாய் நெய்யப்பட்ட நேச அலையின் சிலிர்ப்பு ஒன்று அவனிலிருந்து அவளுக்குக் கடத்தப்பட்டது. திருமணம் எனப் பேசி விட்ட போதும் இரண்டடி எட்டியே இருந்தது அவர்கள் பழக்கம். நித்திலாவிற்கு பிடிக்குமோ பிடிக்காதோ என்ற ஐயத்தில் பாதியும், அவளை சங்கடப்படுத்த விரும்பாத எண்ணத்தில் மீதியுமாக இவன் தள்ளி இருந்தான். என்ன தோன்றியதோ, திருமணத்தில் நெகிழ்ந்திருந்தானோ ஏதோ ஒன்று மனையாளின் கைத்தலம் பற்ற இவனை உந்தியது.

அவன் இணைத்த கையை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள் பெண். புன்சிரிப்பு இவனில், மறுகையால் தலையைக் கோதிக் கொண்டவன், நடந்து கொண்டே “பிடிக்குமா நிலாக்கு” என்றான் குழைந்த விட்ட குரலில்.

“ம்ம், ரொம்ப” என்றாள் கண்களில் நீர் நிறைய.

ஆண்களைப் பார்க்கவே அஞ்சி வாழ்ந்த பெண்ணின் வாய்மொழி வழியே, உன் சிறு தீண்டல் பிடிக்கிறது என்று கேட்பதற்கு அத்தனை இனித்தது அரசனுக்கு. தன் மீதான ஒரு ஆழ்ந்த நேசம் இவளில் ஆளவில்லை என்றால் இது சாத்தியம் இல்லை என்பதை நன்கு உணர்ந்து கொண்டான்.

“ஹலோ… பிரகாரத்தை என்ன அடிபிரதட்சணமா செய்ய சொன்னாங்க? அளந்து முடிச்சிட்டீங்களா இல்ல ஸ்கேல் எதுவும் வேணுமா? வாங்க பாஸ், கூப்பிடுறாங்க” தேடிக் கொண்டு வந்து விட்டான் சலீம்.

“இவனுக்கு கழுதை ஒத்து வராது, நல்ல பெரிய கரடியா தான் பார்க்கணும்” ஆதேஷ் முறைக்க,

“ஹாஹாஹா” சிரித்தாள் பெண்.

“மொத்தத்தில் வனக்குடிலை விலங்குகள் சரணாலயமா மாத்தப் போறீங்கன்னு சொல்லுங்க” சலீம் பதில் பேச,

“வாங்க வாங்க, அடுத்த மாப்பிள்ளை பொண்ணு ரெடியாகிட்டாங்க” பிருத்வி அழைத்துக் கொண்டு வர, அனைவரும் விரைந்து சென்றனர்.

பொன்னாய் உருகிய பௌர்ணமி நிலா வானில் உருண்டு தவழ்ந்து நடந்து திரிந்தாள்.

ஆதேஷ் குறிப்பிட்டது போல திருமணத் தம்பதிகள் நால்வரும் பெரியவர்கள் கால்களில் விழுந்து ஆசிகள் பெற்ற பின், நித்திலாவை அழைத்துக் கொண்டு படியேறினான் ஆதேஷ்.

உதட்டில் ஒரு குறுநகை வந்து ஒட்டிக் கொள்ள, மெதுவாக முன்னே லிங்கா நடந்து மாடி ஏற, ஒரு தடுமாற்றம் வந்து நயனாவில் தாளமிட, பின் தொடர்ந்தாள்.

பூக்கள் பூட்டியது போன்ற அலங்காரத் தோரணையோடு இருந்த தனது அறைக்குள் வந்ததும், லிங்கா கட்டிலில் போய் சம்மணமிட்டு அமர்ந்து கொண்டு, கைகள் இரண்டையும் முதுகுக்குப் பின்னே ஊன்றி நயனாவை விழியகலாது பார்த்துக் கொண்டிருந்தான்.

பிறந்ததிலிருந்து பார்த்துப் பழகியவன் தான் என்றாலும், எல்லாவற்றிலும் ஏட்டிக்குப் போட்டியாகவே இவனோடு இதுவரை மல்லுக்கட்டிக் கொண்டிருந்தவள், மனைவி என்னும் ஸ்தானத்தில் லிங்காவை எதிர்கொள்வது பெரும் அவஸ்தையாக இருந்தது.

அறையின் கதவிற்கும் கட்டிலுக்கும் அதிகபட்சம் ஐம்பது அடிகள் இருக்கலாம், கிலோ மீட்டர் தூரத்தைக் கடக்கும் நேரம் எடுத்துக் கொண்டாள் பாவை. இவனுக்கு அத்தனை சிரிப்பு மனதுக்குள்.

பால் சொம்பை கொண்டு வந்து கட்டிலின் வலது புறம் இருந்த சைட் டேபிளில் வைத்தவள், ஒரு குவளையில் பால் வார்த்து இவனிடம் நீட்ட, “வா… உட்காரு முதலில்” என்றவன்,

“ஹம்… இது வரை சண்டை போட்டுப் போட்டு எனக்கும் போர் அடிக்குது. ஸோ, இன்று முதல் வெள்ளைப் புறா பறக்கட்டும். என்னங்கற?” தாடையைத் தடவியவாறு கேட்டான்.

“இல்லல்ல… எனக்கு நோ அப்ஜக்ஷன், நம்ம சண்டையை இந்த ரூமுக்குள்ள கண்டினியூ பண்ணலாம்”

“ஓகோ… நீ போடு, பட், நான் சண்டை போடும் மூடில் இல்லை?” விஷமச் சிரிப்பு இவனில்.

நிமிர்ந்து பார்த்தவள் கண்களில், ‘ஆத்தி, என்ன சொல்ல வாரான் இவன்’ என்ற ஆராய்ச்சி இருந்தது.

“ஓகே, பால் கொடுத்திருக்காங்க இல்ல, லேடிஸ் பஸ்ட், குடி” என்றான்.

“இல்லல்ல. எனக்கு பாலே பிடிக்காது” என்றாள் பெண் துணுக்குற்று.

“கேடி, என்னடி கலந்த அதில்” இவன் முறைக்க, அமைதியின் சொரூபமாய் அமர்ந்திருந்தாள் பெண்.

“இந்த நயனா யாரு, எப்பேர்பட்ட தில்லாலங்கடின்னு தெரியாமலா கல்யாணம் பண்ணியிருக்கேன். பாலில் தூக்க மாத்திரை கலக்கிற இந்த அதர பழைய ஐடியாவை இந்த தம்மாத்துண்டு மூளைக்குள் எத்தனை நாளா யோசிச்ச?” என்று அவள் தலையில் கொட்டியவன் முகத்தில் புன்சிரிப்பு. பெண் தலை நிமிரவே இல்லை. அவள் ஒரு சங்கடமான சூழ்நிலையைக் கையாள்கிறாள் என்பது இவனுக்குப் புரியாதா என்ன.

“நயனி.. இங்க பாரு என்னை” என்றான் அவளின் முகம் தொட்டு நிமிர்த்தி.

“நீ என் மேல் காதல் வந்து கசிந்துருகி கல்யாணம் பண்ணினேனு நான் சத்தியமா நம்பல. நீ எதுக்காக என்னை கல்யாணம் பண்ணி இருந்தாலும், இப்போ நீ என் மனைவி. உன் மனசு என்னிடம் நெருங்கும் வரை காத்திருக்கிறேன்னு சொல்ல, நான் அவ்வளவு பெரிய மனசு கொண்டவன் எல்லாம் இல்லை. எனக்கு நயனியை ரொம்ப பிடிச்சு தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்” என்றதும் அவள் கண்களில் ஒரு மின்னல் வந்து போனது.

“சாரி, தூக்க மாத்திரை இல்லை, அவசரத்துக்கு பாட்டி வச்சிருக்கிற கான்ஸ்டிபேஷன் இஸ்யூஸ்க்குப் போடுற மாத்திரை தான் கிடைச்சது” என்றாள் திருட்டு விழியுடன்.

“அடிப் பாவி, கொலைகாரி” என்றான் ஜெர்க் ஆகி.

“தோடா, ஓவர் சீன் போடாதீங்க, என்ன, நாலு ஐந்து முறை வயிற்றைக் கலக்கி இருக்கும்” என்றாள் அசாதாரணமாக.

“அடிங்க” என்றவன் இவள் காதைப் பிடித்துத் திருகினான்.

“ஆஆ, வலிக்குதுத்தான்” என்றாள் சிணுங்கிக் கொண்டு மனைவி.

முதன்முதலில் அவள் அழைத்த அத்தானில் மதி மயங்கியவன், அவளை இழுத்து மென்மையாக கட்டிக் கொண்டான். இரவும் நிலவும் மெல்ல மெல்ல தம்பதியரைத் தங்களில் வாரி அணைத்துப் போர்த்திக் கொண்டது. இனிய இல்லறம் இனிதே ஆரம்பமாகியது.

அந்த இரவுக்கான எந்த அலங்காரங்களும் அன்று நேர்த்தியாக பராமரிப்புடன் சுத்தமாக இருந்தது ஆதேஷின் அறை.

அறைக்குள் நுழைந்ததும் இவள் யோசனையாகப் பார்க்க, “அலங்காரம் பண்ண ஆள் வந்தாங்க, சத்தமில்லாமல் திருப்பி அனுப்பிட்டேன்” என்றான் சிரித்துக் கொண்டு.

“வீட்டுக்கு தெரிந்தால் ஒன்னும் சொல்ல மாட்டாங்களா?”

“அத்தைக்குத் தெரியும், வந்து ரெண்டு திட்டு திட்டினாங்க, பட், எனக்கு பிடிக்கலைன்னு புரிஞ்சிடுச்சு, அத்தே யாருக்கும் சொல்லப் போறது இல்லை” என்றான்.

இவளுக்குத் தான் ஏதோ குற்ற உணர்வாக இருந்தது.

“வா நிலா” என்று அறையின் பால்கனிக்கு அழைத்துப் போனான்.

பிரெஞ்சு விண்டோவைத் திறக்க, ஒரு பெரிய நந்தவனம் போல் இருந்தது அந்த பால்கனி. கண் கொஞ்சும் பூந்தோட்டத்தின் நடுவே ஒரு மர ஊஞ்சல் போடப்பட்டிருந்தது.

“ஹை, ஊஞ்சல்” என்றவள், அது வரை இருந்த மனக்கலக்கம் அகல ஓடிச் சென்று தொப்பென அமர்ந்து கொண்டு, முன்னும் பின்னும் கால்கள் உந்தி ஆடினாள்.

அவளது ஆனந்தம் இவன் உதடுகளில் வந்து படிய, அருகில் சென்றவன், “நிலா, ஊஞ்சல் பிடிக்குமா உனக்கு?” என்றான், ஊஞ்சலின் பக்கவாட்டில் இருந்த சிறு சிறு வளையங்களாகக் கோர்த்த சங்கிலியைப் பிடித்து ஆட்டியபடி.

“ரொம்ப ரொம்ப..” என்றாள் புன்னகை சிந்தியபடி.

அதற்கு எதிரே இருந்த மோடா மாதிரியான மரக்கூடையில் பின்னப்பட்ட நாற்காலியில் அமர்ந்து கொண்டான் ஆதேஷ்.

error: Alert: Content selection is disabled!!