நித்திலப் பேரொளி-18

பொன்னாய் உருகிய பௌர்ணமி நிலா வானில் உருண்டு தவழ்ந்து நடந்து திரிந்தாள்.

ஆதேஷ் குறிப்பிட்டது போல திருமணத் தம்பதிகள் நால்வரும் பெரியவர்களின் கால்களில் விழுந்து ஆசிகள் பெற்றபின், நித்திலாவை அழைத்துக் கொண்டு படியேறினான் ஆதேஷ்.

உதட்டில் ஒரு குறுநகை வந்து ஒட்டிக் கொள்ள, மெதுவாக முன்னே லிங்கா நடந்து மாடி ஏற, ஒரு தடுமாற்றம் வந்து நயனாவின் நெஞ்சில் தாளமிட பின் தொடர்ந்தாள்.

பூக்கள் பூட்டியது போன்ற அலங்காரத் தோரணையோடு இருந்த தனது அறைக்குள் வந்ததும் லிங்கா கட்டிலில் போய் சம்மணமிட்டு அமர்ந்து கொண்டு கைகள் இரண்டையும் முதுகுக்குப் பின்னே ஊன்றி நயனாவை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

பிறந்ததிலிருந்து பார்த்துப் பழகியவன் தான் என்றாலும், எல்லாவற்றிலும் ஏட்டிக்குப் போட்டியாகவே இவனோடு இதுவரை மல்லுக்கட்டிக் கொண்டிருந்தவள், மனைவி என்னும் ஸ்தானத்தில் லிங்காவை எதிர்கொள்வது பெரும் அவஸ்தையாக இருந்தது.

அறையின் கதவிற்கும் கட்டிலுக்கும் அதிகபட்சம் ஐம்பது அடிகள் இருக்கலாம், கிலோ மீட்டர் தூரத்தைக் கடக்கும் நேரம் எடுத்துக் கொண்டாள் பாவை. இவனுக்கு அத்தனை சிரிப்பு மனதுக்குள்.

பால் சொம்பை கொண்டு வந்து கட்டிலின் வலது புறம் இருந்த சைட் டேபிளில் வைத்தவள் ஒரு குவளையில் பால் வார்த்து இவனிடம் நீட்டினாள், “வா.. உட்காரு முதலில்” என்றவன்

“ஹம்… இது வரை சண்டை போட்டுப் போட்டு எனக்கும் போர் அடிக்குது. ஸோ இன்று முதல் வெள்ளைப் புறா பறக்கட்டும். என்ன சொல்ற?” தாடையைத் தடவியவாறு கேட்டான்

“இல்லல்ல… எனக்கு நோ அப்ஜெக்‌ஷன், நம்ம சண்டையை இந்த ரூமுக்குள்ள கண்டினியூ பண்ணலாம்”

“ஓகோ… நீ போடு, பட் நான் சண்டை போடும் மூடில் இல்லை?” விஷமச் சிரிப்பு இவனிடத்தில்

நிமிர்ந்து பார்த்தவள் கண்களில், ‘ஆத்தி என்ன சொல்ல வாரான் இவன்’ என்ற ஆராய்ச்சி இருந்தது.

“ஓகே, பால் கொடுத்திருக்காங்க இல்ல, லேடீஸ் ஃபர்ஸ்ட், குடி” என்றான்

“இல்லல்ல. எனக்கு பாலே பிடிக்காது” என்றாள் பெண் துணுக்குற்று

“கேடி, என்னடி கலந்த அதில்” இவன் முறைக்க, அமைதியின் சொரூபமாய் அமர்ந்திருந்தாள் பெண்.

“இந்த நயனா யாரு, எப்பேர்ப்பட்ட தில்லாலங்கடின்னு தெரியாமலா கல்யாணம் பண்ணியிருக்கேன். பாலில் தூக்க மாத்திரை கலக்கிற இந்த அதரபழசான ஐடியாவை இந்த தம்மாத்துண்டு மூளைக்குள் எத்தனை நாளா யோசிச்ச?” என்று அவள் தலையில் கொட்டியவன் முகத்தில் புன்சிரிப்பு. பெண் தலை நிமிரவே இல்லை. அவள் ஒரு சங்கடமான சூழ்நிலையைக் கையாள்கிறாள் என்பது புரியாதா இவனுக்கு.

“நயனி.. இங்க பாரு என்னை” என்றான் அவளின் முகம் தொட்டு நிமிர்த்தி.

“நீ என் மேல் காதல் வந்து கசிந்துருகி கல்யாணம் பண்ணினேனு நான் சத்தியமா நம்பல. நீ எதுக்காக என்னை கல்யாணம் பண்ணி இருந்தாலும், இப்போ நீ என் மனைவி, உன் மனசு என்னிடம் நெருங்கும் வரை காத்திருக்கிறேன்னு சொல்ல, நான் அவ்வளவு பெரிய மனசு கொண்டவன் எல்லாம் இல்லை. எனக்கு நயனியை ரொம்ப பிடிச்சு தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்” என்றதும் அவள் கண்களில் ஒரு மின்னல் வந்து போனது.

“சாரி, தூக்க மாத்திரை இல்லை, அவசரத்துக்கு பாட்டி வச்சிருக்கிற கான்ஸ்டிபேஷன் பிரச்சனைக்குப் போடுற மாத்திரை தான் கிடைச்சது” என்றாள் திருட்டு விழியுடன்

“அடிப் பாவி, கொலைகாரி” என்றான் ஜெர்க் ஆகி

“தோடா, ஓவர் சீன் போடாதீங்க, என்ன, நாலு ஐந்து முறை வயிற்றைக் கலக்கி இருக்கும்” என்றாள் அசாதாரணமாக

“அடிங்க” என்றவன் இவள் காதைப் பிடித்துத் திருகினான்

“ஆஆ, வலிக்குதுத்தான்” என்றாள் சிணுங்கிக் கொண்டு மனைவி

முதன் முதலில் அவள் அழைத்த அத்தானில் மதி மயங்கியவன், அவளை இழுத்து மென்மையாக கட்டிக் கொண்டான். இரவும் நிலவும் மெல்ல மெல்ல தம்பதியரை தங்களில் வாரி அணைத்து போர்த்திக் கொண்டது. இனிய இல்லறம் இனிதே ஆரம்பமாகியது.

அந்த இரவுக்கான எந்த அலங்காரங்களும் அன்று நேர்த்தியாக பராமரிப்புடன் சுத்தமாக இருந்தது ஆதேஷின் அறை.

அறைக்குள் நுழைந்ததும் இவள் யோசனையாகப் பார்க்க, “அலங்காரம் பண்ண ஆள் வந்தாங்க, சத்தமில்லாமல் திருப்பி அனுப்பிட்டேன்” என்றான் சிரித்துக் கொண்டு

“வீட்டுக்கு தெரிந்தால் ஒன்னும் சொல்ல மாட்டாங்களா?”

“அத்தைக்குத் தெரியும், வந்து ரெண்டு திட்டு திட்டினாங்க, பட் எனக்கு பிடிக்கலைன்னு புரிஞ்சிடுச்சு, அத்தே யாருக்கும் சொல்லப் போறது இல்லை” என்றான்

இவளுக்குத் தான் ஏதோ குற்ற உணர்வாக இருந்தது.

“வா நிலா” என்று அறையின் பால்கனிக்கு அழைத்துப் போனான்.

பிரெஞ்சு விண்டோவைத் திறக்க ஒரு பெரிய நந்தவனம் போல் இருந்தது அந்த பால்கனி. கண் கொஞ்சும் பூந்தோட்டத்தின் நடுவே ஒரு மர ஊஞ்சல் போடப்பட்டிருந்தது.

“ஹை, ஊஞ்சல்” என்றவள் அது வரை இருந்த மனக்கலக்கம் அகல ஓடிச் சென்று தொப்பென அமர்ந்து கொண்டு முன்னும் பின்னும் கால்கள் உந்தி ஆடினாள்

அவளது ஆனந்தம் இவன் உதடுகளில் வந்து படிய, அருகில் சென்றவன், “நிலா, ஊஞ்சல் பிடிக்குமா உனக்கு?” என்றான் ஊஞ்சலின் பக்கவாட்டில் இருந்த சிறு சிறு வளையங்களாகக் கோர்த்த சங்கிலியைப் பிடித்து ஆட்டியபடி

“ரொம்ப ரொம்ப..” என்றாள் புன்னகை சிந்தியபடி

அதற்கு எதிரே இருந்த மோடா மாதிரியான மரக்கூடையில் பின்னப்பட்ட நாற்காலியில் அமர்ந்து கொண்டான் ஆதேஷ்.

இவன் புறம் அருகே அவளது கால்கள் வந்து செல்ல, அதையே பார்த்துக் கொண்டிருந்தவன், எட்டி இரு பாதங்களையும் பிடித்து தனது மடியில் வைத்துக் கொண்டான்.

ஆதேஷின் இச்செயல் இவளில் சிறு பதட்டத்தையும், ஒரு இளைப்பாறுதலையும் ஒருங்கே கொணர்ந்தது.

நித்திலத்தின் நீண்டு சிவந்த விரல்களை மெதுவே வருடியவன், “கஷ்டமா இருக்காடி தேனே, நான் பிடிச்சுருக்கறது?’ என்றான் மெதுவாக.

ஆம், இல்லை என்று இருவிதமாக தலையாட்டினாள் பெண்.

“ஹாஹா.. ஏதாவது ஒன்னு சொல்லுடி, பிடிக்கலையா விட்டுடவா?” இவள் கண்களை ஊடுருவிப் பார்த்துக் கொண்டு கேட்க,

“இல்ல பரவால்ல… இருக்கட்டும்” என்றாள் பெண் முகம் கனிய.

ஒரு ஆழ்ந்த அமைதி இருவரின் இடையே இழைந்து ஓடி இளைப்பாறல் கொண்டது.

“உங்களுக்கு கஷ்டமா இல்லையா?” என்றாள் திடீரென, என்ன என்பதாய் இவன் நோக்க,

“இல்ல… இது நார்மல் திருமணமா இருந்தா.. இப்போ… என்ன சொல்ல..” இவள் கண்கள் கலங்க இவனை ஏறிட்டாள்.

அவளின் அலைப்புறுதலை உள்வாங்கிக் கொண்டவன், பிடித்திருந்த விரல்களில் மெதுவே சொடுக்கிடலானான். சிறிது நேரம் கழித்து, “இதோ இப்ப கூட உன்னைத் தொட்டுட்டுத் தானடி இருக்கேன், இதில் எனக்கு எந்த சந்தோஷமும் கிடைக்கலன்னு உனக்கு எப்படித் தெரியும்?’ என்றான் கண்களில் தீர்க்கம் நிறைய.

“இந்த தீண்டல் என்பது அவங்கவங்க தேவை, மனநிலையைப் பொறுத்து மாறும். எனக்கு நிலாவோட கையைப் பிடிச்சுக்கிறது, இப்டி கால்களைப் பிடிச்சுக்கிறது போதும்ன்னு தோணுது” என்றான் நிதானமாக.

“வாழ்க்கை முழுவதற்கும் இது போதுமா?” நித்திலாவின் மனம் வருந்தியது.

“ஏற்கனவே பேசியதை திரும்ப ஆரம்பிக்காத நிலா, ஒரு வயசுக்கு மேல் தம்பதிகளின் தேவைகள் மாறிடும் டி. அன்பும் புரிதலும் தான் முதன்மையாக இருக்கும். சிறந்த ஃபார்முலா ஒன் ஓட்டுநர்களில் ஒருவரான மைக்கேல் ஷூமாக்கர் இரண்டாயிரத்து பதின்மூன்றில் ஸ்கீயிங் பண்ணும்போது தலையில் அடிபட்டு கோமாவுக்குப் போய்விட்டார். இந்தப் பதின்மூன்று வருடங்களாக எந்த வெளியுலகத் தொடர்பும் இல்லாமல் காத்து, அவர் மனைவிதான் அவரைப் பார்த்துக்கறாங்க. ஏன் நினைச்சுப் பாரு நிலா. அந்த உறவில் பேரன்பு தவிர வேறு என்ன இருக்க முடியும்ன்னு நினைக்கிற? உடல் தேவை மட்டுமே வாழ்க்கை இல்லைம்மா” அழுத்தமாக வந்தது ஆதேஷின் வார்த்தைகள்.

அசையாது கேட்டுக் கொண்டிருந்தவள், “நான் சைக்கார்டிஸ்ட்டிடம் போய்ப் பார்க்கட்டுமா?” என்றாள் மெல்ல.

“ஏன்…?” புரியாது மனைவியைப் பார்த்தான்.

“இல்ல… அவங்க கவுன்சிலிங் ஒருவேளை நம்ம லைஃப்ல மாற்றம் கொண்டு வரலாம், இந்தக் குடும்ப உறவில் பயமில்லாமல் ஒரு பிடித்தத்தைக் கொண்டு வரலாம் இல்லையா?”

“வேண்டாம் நிலா, எனக்கு இதில் உடன்பாடு இல்லை. உன்னை வருத்தித்தான் எனக்கு சந்தோஷம் கிடைக்கும்ன்னா எனக்கு அது வேண்டாம், வா போய்த் தூங்கலாம்” முடித்தவன் இவள் கால்களைத் தரையில் விட்டு எழுந்து கொண்டான்.

மனிதனின் தேவைகள் மனம் சார்ந்து அமைகின்றன. குழந்தை மனம் அம்மாவைத் தேடுகிறது, கோமான் மனம் நாடுகளின் மீது தேடியலைகிறது. மோகித்திருப்பவன் மனம் காமம் தேடித் திரிகிறது, பட்டினியில் வாழ்பவன் மனம் ஒரு பிடி சோற்றுக்குத் தேடுகிறது, இப்படித் தேவைகளும் தேடல்களும் மனிதனுக்கு மனிதன் மாறுபடும்.

அறையினுள் வர, நித்திலா எதையும் நினைக்கக் கூடாது என தனக்குத்தானே வலியுறுத்திக் கொண்ட போதிலும், கணவன் மேல் ஆழ்ந்த காதல் இருந்த போதிலும், ஏதோ ஒரு வெளிச்சொல்ல முடியாத உணர்வுகளின் பிடியில், அச்சத்தின் பிடியில் ஆட்பட்டிருந்தாள். வெளியில் இயல்பாக இருப்பதாகக் காட்டிக் கொண்டவள், உள்ளே அவளைச் சுழற்றி அடிக்கும் எண்ண அலைகளில், புதிதாக இணைந்த குற்ற உணர்ச்சியில் முகம் சோர்ந்து கலையிழந்து போனது.

மனைவியை அவதானித்துக் கொண்டே இருந்தவன், கண்ணில் பார்த்தறியாத அந்தக் கொடூரன் மீது கொடுஞ்சினம் கிளர்ந்தது. வாழ வேண்டிய பெண்ணை, அவள் உடலைச் சூறையாடியது மட்டுமல்லாது, மன நிம்மதியையும் குலைத்து பயத்தின் பிடியில் தள்ளி இருப்பது பார்க்கச் சகிக்காததாக இருந்தது.

ஒரு கணவனுக்கு மனைவி தன் அருகில் இருக்கும்போது அந்த சூழ்நிலையைப் பார்த்தோ அல்லது தன்னைப் பார்த்தோ அச்சமுறுகிறாள் என்பது எத்தனை அசௌகரியங்களை விதைக்கும். நித்திலாவின் முன் எதுவும் காட்டிக் கொள்ளாவிட்டாலும், அவளை வேறு சிந்தனைகளில் புகுத்த இவன் முயற்சி மேற்கொண்டு பேசினாலும் மனதளவில் ஆதேஷும் மிகவும் வருந்தினான். அவளை அணைத்துக் கொண்டு ஆறுதல் அளிக்க முடியாத தன்னிலையை நினைத்து ஆற்றாமையாக இருந்தது கணவனுக்கு.

இத்தனை காலங்கள் கடந்து வந்துவிட்ட பின்பும் இத்தனை பய உணர்வு இவளை ஆட்டிப்படைக்கிறதே, அப்போ அந்த நிகழ்வு நடந்த காலங்களில் எத்தனை வேதனை அடைந்திருப்பாள். உடல் ரீதியான கஷ்டங்களும் இருந்திருக்கும், மனரீதியான தொய்வுகளும் இருந்திருக்கும். சில நேர இழிவான சுகத்திற்கு பெண்களையும், குழந்தைகளையும் சிதைப்பவர்களுக்குக் கடுமையான கொடுங்காவல் தண்டனைகள் தரப்பட வேண்டும் என நினைத்துக் கொண்டான்.

“நிலாம்மா, நீ கட்டிலில் படுத்துக்கோ, நான் என் ஸ்டடி ரூமில் கட்டில் இருக்கு, அதில் படுத்துக்கறேன்” என்றான் மனைவியைத் தன் முன் நிறுத்தி.

“கஷ்டப்படுத்தறேனா?” என்றாள் பாவமாக.

“ஏன்டி, எல்லாத்துக்கும் ஏதாவது நினைக்கற? நிறைய நேரம் படிச்சுட்டே நான் அங்கதான் தூங்குவேன், இங்க வா” என்றவன் அவளைப் பக்கவாட்டில் இருந்த அடுத்த அறைக்கு அழைத்துக் கொண்டு போனான்.

படுக்கை அறை அளவுக்குப் பெரிதாக இல்லாவிட்டாலும் அந்த அறையும் சகல வசதிகளுடன் இருந்தது. ஒரு பக்கச் சுவர் முழுவதும் நிறைய புத்தகங்கள் அடுக்கப்பட்ட ரேக் இருந்தது. ஆர்வமிக அதன் அருகில் சென்று பார்த்தாள். தமிழ் இலக்கியம், வரலாறு, கட்டிடக்கலை, தொழில் மேலாண்மை என்று அவனது அறிவுச் சுவைக்கு ஏற்றாற்போல் குவித்து வைத்திருந்தான் மன்னன்.

“இவ்ளோ படிப்பீங்களா?” என்றாள் பெண் கண்கள் விரிய.

“ம்ஹும், தினமும் ஒரு புக்கா எடுத்து தலைக்கு வச்சுட்டு படுத்துப்பேன்” என்றான் இடக்காகத் தன் நாக்கை இடது புறக் கன்னத்தில் முட்டி புன்னகைத்து.

இவள் முறைக்க, “அப்டி படுத்தா நேரடியா புத்தகத்தில் உள்ளது மண்டைக்குள்ள போயிடாது?” என்றான் விஷமமாக.

“ச்ச்சூ, வம்பு பிடிச்சவர் நீங்க” சிணுங்கியது பாவை.

“ஹாஹாஹா… உனக்குப் படிக்கணும்னா ஏதாவது புக் எடுத்துட்டுப் போ நிலா” என்றவன் தனக்கும் ஒன்றை எடுத்துக் கொள்ள,

“ம்ம்ம்…. இது எடுத்துக்கறேன்” என அப்துல் ரகுமான் எழுதிய கவிதைப் புத்தகம் ஒன்றை எடுத்துக் கொண்டாள்.

“ஓகே நிலா, குட் நைட்” என்றவன் படுக்கையில் சாய்ந்து கொண்டான்.

“ம்ம், குட் நைட்” என்றவள் பக்கத்து அறையில் சென்று படுத்துக் கொண்டாள்.

கடல் வாழ் நித்திலத்தை மலர்த்த நிலவொளி தேவை எப்போதும். இந்த நித்திலாவின் மனதில் படிந்துபோன வடுக்களைக் களைந்து இவளை ஆதேஷ் மலர்த்திக் கொள்ளும் நாள் வருமா?!

error: Alert: Content selection is disabled!!