நித்திலப் பேரொளி -2

வனங்களின் நடுவே ஒரு வாழ்க்கை.  ஆதேஷின் கனவு நிலையம் ‘வனக்குடில்’.

நம் பண்டைய கட்டிடக் கலைகளின் மீது தீராத காதல் கொண்டவன், தனது பதினாறு வயதிலிருந்து தென்னிந்தியாவின் கட்டிடக்கலையின் அழகையும், ஆச்சரியங்களையும் தன்னுள்ளே பொத்தி வைத்துக் கொண்டு இருக்கும் அரியலூர் மாவட்டத்திலுள்ள கங்கை கொண்ட சோழபுரம், கும்பகோணத்திற்கு அருகிலுள்ள ஐராவதேஸ்வரர் கோயில், சென்னையிலுள்ள சான் தோம் தேவாயலம், நமது புராதன சின்னங்களுள் ஒன்றான  மாமல்லபுரம் கடற்கரைக் கோயில், மதுரை திருமலை நாயக்கர் மஹால்,  பத்மநாபபுரம் அரண்மனை, செட்டிநாட்டு மாளிகைகள், கர்நாடகத்திலுள்ள கோல்கும்பாஸ், பீதர் கோட்டை இப்படி  பல்வேறு இடங்களுக்குப் பயணித்து தன் முன்னோர்களின் திறமைகளை தன்னுளே பதித்து வைத்துக் கொண்டான்.

அதன் விளைவு பொறியியலில் கட்டிடக்கலையைத் தேர்ந்தெடுத்துப் படித்தான்.   படித்து முடித்துவிட்டு தன் குடும்பத்தினருடன் தனது கனவு நிலையமான வனக்குடில் ஆரம்பிப்பது பற்றி பேச வெடித்தது பிரச்சனை அவனது  தந்தை விக்ரமனிடமிருந்து, ‘தான் தோன்றித்தனமாக முடிவெடுக்காதே, வழிவழியாக நாம் பார்த்து வரும் துணி உற்பத்தி மற்றும் விற்பனைத் தொழில்களை இளைய தலைமுறைகள் நீங்கள் தான் இனி முன்னெடுக்க வேண்டும், மூத்தவன் நீ, நீயே இப்படி இருந்தால் மற்றவர்களும் அவர்களுக்கு தோன்றியதைத் தான் செய்வார்கள்.  உனது இந்த முடிவில் எனக்கு விருப்பமில்லை, அனுமதிக்க முடியாது’ என்று போர்க்கொடி தூக்கினார்

‘நம் பரம்பரை சேர மன்னர்களின் வழி வந்தது, நம் முப்பாட்டன்கள் கட்டியது தான் திருச்சூர் மாவட்டத்திலுள்ள திருவாஞ்சிகுளம் சிவன் கோவில், மசாலா வர்த்தகம் செய்தார்கள், இரும்பு உற்பத்தி செய்தார்கள், அப்போ அவர்கள் பாரம்பரியத் தொழில் என்ன? ஏன் எல்லாம் செய்ய வேண்டும்? நீங்க ஏன் அவர்கள் செய்ததைத் தொடராமல் துணி சார்ந்த தொழில் செய்றீங்க? ஒரு நாட்டின்  வளர்ச்சிக்கு பார்க்க வேண்டும்.  என் எண்ணம், செயல் தான் பெருசுன்னு நினைக்கலாமா’ ஆதேஷ் விடவில்லை தந்தையை

நீண்ட நாட்கள் போராட்டத்திற்குப் பிறகு அவனது தாத்தா சேதுபதி சேரமான், ‘புது முயற்சியை வரவேற்க வேண்டும் விக்ரமா, செய்யட்டும், நீ ஆரம்பி ஐயா, நல்லா வருவாய்’ என ஆதேஷை வாழ்த்தி சொன்ன வாக்கு பின் நாட்களில் பொன்னானது.

எட்மண்ட் கோஸ் எழுதிய “தந்தையும் மகனும்: இரு மனோபாவங்களின் ஓர் ஆய்வு” என்பது 1907-ல் வெளியிடப்பட்ட ஒரு சுயசரிதையாகும்.  டார்வினின் கோட்பாடுகளை நிராகரித்த விலங்கியல் நிபுணரான, ஆழ்ந்த மதப்பற்றுள்ள ஒரு தந்தைக்கும், கிறிஸ்தவ அடிப்படை வாதத்திலிருந்து விலகிக் கொள்ளத் துடிக்கும் ஒரு மகனுக்கும் இடையே நடக்கும் சிந்தனைப் போரை மிக அழகாகச் சொல்கிறது .

தந்தை-மகன் உறவு என்பது ஒரு ஆழமும் அழுத்தமும் நிறைந்தது.  கருத்து ரீதியான வேற்றுமைகள் இந்த உறவில் மிகவும் சாதாரணமானது.  தாய் என் உணர்வுகளை ஒரு முத்தத்தில் தனது மகனுக்கு வெளிப்படுத்தி விடுகிறாள்.  தந்தையின் கண்டிப்பு என்னும் ஆயுதம் அன்பின் வெளிப்பாடு தான் என்பதை மகன் புரிந்து கொள்வதில்லை.
ஆதேஷ் புதிதாக ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்து, வெற்றி பெற முடியாமல் போய்விட்டால் என்னும் ஒரு பயமும் விக்ரமனிடம் இருந்தது. அந்த பயம் அவரை மகனது முயற்சிக்கு தடைக்கற்களை வைக்கச் சொன்னது. கேட்பவனா இவன், எத்தனை மென்மையானவனோ அத்தனை கண்டிப்பும் உறுதியும் கொண்டவன்.  இவனது இந்த முடிவு தந்தை மகனுக்கிடையே ஒரு பனிப்போரை படுக்கை கொண்டு எப்போதும் படுக்க வைத்திருந்தது.

வனக்குடில் என்பது சிறு சிறு வீடுகளை உள்ளடக்கிய ஒரு சுற்றுலாத் தலமாகும்.  ஒவ்வொரு வீடும் நமது பாரம்பரிய கட்டிடக்கலையை தன்னுள்ளே கொண்டு செதுக்கப்பட்டது.

இதனுள் பல்வேறு விளையாட்டு அரங்குகள், நூலகம்; அதில் நம் பண்டைய வரலாறு பேசும் நூல்கள், நீச்சல் குளம் இப்படி சிறியவர் முதல் பெரியவர் வரை வந்து தங்களது விடுமுறைக் காலங்களை கழிக்க எதுவாக அமைக்கப்பட்டிருந்தது.

இதில் பதிவு செய்வதற்கு சில வழிமுனைகளை வகுத்திருந்தான், ஒன்று திங்கள் காலை முதல் வியாழன் காலை வரை தங்கலாம் அல்லது வெள்ளி காலை முதல் திங்கள் காலை வரை தங்கலாம்.

ஒரு குறிப்பிட்ட கட்டணம் கட்டிவிட்டால், தங்கும் வசதியிலிருந்து, உணவு மற்றும் அங்குள்ள அனைத்து வசதிகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.  நடுத்தரவர்க்க குடும்பத்தினரும் பயன்படுத்தும் முறையில் நியாயமான கட்டணம் வசூலிக்கப்பட்டது.

வருடம் இருமுறை ஆசிரமங்களில் இருக்கும் குழந்தைகள், முதியோர் இல்ல தாத்தா பாட்டி அனைவருக்கும் இலவசமாக மூன்று நாட்கள் வந்து தங்க வழிவகை செய்திருந்தான். அந்த நாட்களில் பொது மக்களுக்கு அனுமதி இல்லை.

இங்கு வேளையில் அமர்த்தப்பட்ட வேலையாட்களும் ஒன்று ஆசிரமத்தில் வளர்ந்த பின்னணி கொண்டவர்கள் அல்லது மிகவும் நலிவடைந்த குடும்பத்தை பின்புலமாக கொண்டவர்.

வயது முதிர்ந்தவர்களும் இங்கு  இலகுவான வேலையிடங்களில் பணியில் அமர்த்தப்பட்டனர்.

அதேஷின் வனக்குடில் தன்னுள்ளே பல ஆச்சரியங்களை நிறைத்து வளர்த்து நின்றது என்றால் மிகையாகாது.

தன் கருநீல வாகனத்தை வனக்குடிலின் தரிப்பிடத்தில் நிறுத்தியவன் தனது அலுவலக அறைக்கு விரைந்தான்.  சுத்தமாக பராமரிக்கப்பட்டு அழகாக இருந்தது அறை.  எதிலும் எங்கும் நேர்த்தியும், சுத்தமும் பார்க்கின்ற இவனது குணம் அத்தையான வசுந்தராவிடம் கற்றது.

அந்த வீட்டைப் பொறுத்தவரை மூன்று அன்னைகள் மூன்று தந்தைகள், இதில் பிள்ளைகளுக்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

அதிலும் வசுந்தரா இவனது பெட் என்றால் மிகையில்லை. அன்பு காட்டுவதும் வம்பு வளர்ப்பதும் அத்தையிடம் தான். குடும்பத்தில் மூத்த பிள்ளைகள் ஆதேஷ் மற்றும் லிங்கேஷ் என்றாலும் அதேஷின் பக்குவம் இவனை பெரியவனாகவே காட்டியது.

அறைக்குள் வந்து தனது நாற்காலியில் அமர்ந்து கொண்டான்.

கதவு தட்டும் ஓசை கேட்ட, “எஸ், வாங்க கர்ண வள்ளலே, நலமா?” கேலியாக ஆதேஷ் கேட்க

“எப்டி சார்? நான் தான்னு கண்டுபிடிச்சீங்க” உள்ளே வந்த சலீம் வியந்தான்

“ம்ம்ம் டிடெக்டிவ் வச்சிருக்கேன் உன்னை கண்காணிக்க” சிரிக்காமல் சொன்னான் இவன்

“உண்மையாவா? அவ்ளோ பெரிய ஆள் ஆகிட்டானா நான்?”  சலீம் தன் கலரை தூக்கிவிட்டுக் கொள்ள

“டேய் சீனை குறைய்டா, திருடன் கொலைகாரன் இப்டி எல்லோருக்கும்  டிடெக்டிவ் வைக்கலாம், என்ட்ரன்ஸ்ல கேமரா இருந்தால் யார் உள்ளே வந்தாலும் பார்க்க முடியும்”

“ஷ்ஷ் மறந்துட்டேன், மறந்துட்டேன்” இளையவன் அசடு வழிய

“ஆமா, நேற்று வாங்கிய சம்பளத்தை கர்ணன் சார் என்ன செய்தீங்க?”  இவன் குரலில் கண்டிப்பு எட்டிப் பார்த்து

“அது..வந்து சார்…..” சலீம் இழுக்க

“நான் சொல்றேன், அந்த கேசவனுக்குக் கொடுத்திருக்க, அவன் குடிச்சிட்டு காலையிலேயே ரோட்டில் உருண்டுட்டு இருக்கான்” முறைத்தான் ஆதேஷ்

“அப்படியா, அவன் குழந்தைக்கு ஸ்கூல் பிஸ் கட்டணும்னு சொன்னான் சார், பொய் கோழி ஏமாத்திட்டான்” சலீம் பரிதாபமாகச் சொல்ல

“அவன் குழந்தைகளுக்குத் தான் நம்ம டிரஸ்ட்டில் இருந்து கட்டுறோமே, பின்னே எதுக்கு நீ கொடுத்த?” இவன் அழுத்தமாகக் கேட்க

“ஆகா மறந்துட்டேன் சார்…” இழுத்தான் சலீம்

“இடியட் நீயும் உன் ஞாபக மறதியும், உன்னை என் செக்ரட்டரியாக வச்சுருக்கேன் பாரு என்னை சொல்லணும்டா.  எனக்கு ஸ்கெடியூல் நீ நினைவு படுத்துவன்னு உன்னை வேலைக்கு வச்சா, உனக்கு தலையில் இருந்து கால் வரை நான் ஞாபகத்த வேண்டி இருக்கு.  அந்த கேசவனை நான் ஒரு காரணத்தோடு தான் வேலையில் இருந்து தூக்கி இருக்கேன்.  தினமும் குடிச்சுட்டு வந்து சமையல் கட்டுல நிற்கறான்.  ஒரு தொழில் மரியாதை வேண்டாமா? தன்னை விட சிறந்த சமையல்காரன் இல்லைன்னு பெத்த பெருமை வேற அவனுக்கு.  உன் கர்ண புத்தியை பயன்படுத்தி உன்ட காசு பறிக்கிறான்.  நீயும் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறதை  அவனுக்கு தாரை வார்க்கற.  இனி செய்யாதே.  சேர்த்து வைடா, உனக்கில்லாமல் கொடுக்காதே.  தர்மம் பண்ணு ஆனா சரியான நபர்களுக்கு பண்ணு.  ஏமாற்று வேலைக்கு துணை போகாதே” கோப்புகளில் பார்வையைப் படித்துக் கொண்டு கண்டிப்புடன் சொல்ல

“எங்க மார்க்கம் தர்மத்தை போதிக்கிறது சார்.  அது தான் செய்றேன்.  தங்க வீடு, சாப்பாடு எல்லாம் இங்கே தரீங்க. தென் எனக்கு என்ன தேவை இருக்கு.  அதுவும் போக சேர்த்து வைத்து கொடுக்க எனக்கு யார் இருக்கா உங்களை விட்டா” மெலிதாகச் சொன்னான் சலீம்

சட்டென நிமிர்ந்து பார்த்தான் ஆதேஷ், சலீம் ஒரு ஆசிரமத்தில் வளர்ந்தவன். தனது இளங்கலை படிப்பிற்குப் பின் இங்கு வந்து சேர்ந்தான்.  தனது சம்பாத்தியம் முழுவதும் மாதந்தோறும் யாருக்காவது தாரை வார்த்து விட்டு ஆதேஷிடம் திட்டு வாங்குவது வழமை தான். சலீம் ஈகைக் குணம் இவனுக்குப் பிடித்த ஒன்று தான் என்ற போதிலும், தகுதியற்ற கூட்டத்திற்கு இவன் உதவி செய்வது தான் ஆதேஷுக்கு வருத்தமளித்தது.

“நம்மைச் சுற்றி ஒரு சமூகம் இருக்கும் வரை இந்த உலகத்தில் யாரும் தனியில்லை.  போடா இடியட் போய் வேலையைப் பாரு” என்றவன் தன் அலுவலில் ஆழ்ந்து போனான்.

சலீம் வெளியேறிய பிறகு ஆதேஷின் மனம் சலீம் விதைத்தது விட்டு போன ‘எனக்கு யார் இருக்கா’ என்னும் சொல்லையே நினைத்து உழன்று கொண்டிருந்தது.

ஒரு பெரிய குடும்பத்தில் பிறந்து மூன்று தாய்மார்களால் வளர்க்கப்பட்டவனுக்கு சலீமின் இந்த வார்த்தைகளில் வலிகள் பொதிந்து கிடப்பதாக உணர்ந்தான்.

நம் வாழ்வில் நடக்கும் விஷயங்கள் மீது நமக்குக் கட்டுப்பாடு இல்லை, குழந்தைகள் இந்த உலகில் பிறப்பிக்கப்படும் போது அவர்கள் ஆசிரமங்களுக்கு அனுப்பப்படுவார்கள் என்பதை யார் அறியக்கூடும்? அவர்கள் அதைத் திட்டமிடவில்லை. அது யாருக்கு வேண்டுமானாலும் நடந்திருக்கலாம்.

இப்படி வாழ்க்கையில் குறைந்த சலுகைகள் பெற்ற மக்களை நாம் சந்தித்து அவர்களுக்கு உதவ ஆரம்பித்துவிட்டால் அவர்களை விட நம் வாழ்க்கை அதிக அர்த்தமுள்ளதாகிறது.

வாழ்க்கை நமக்கு நியாயமாக அமைந்திருந்தால், அது இல்லாதவர்களுக்கு நாம்  திருப்பிக் கொடுப்பதில் தான் இறைமை வாழ்கிறது.

யாரும் தற்செயலாகப் படைக்கப்படவில்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு வாழ்க்கை வாழ உரிமை உண்டு.  அந்த உரிமையை என்னால் முடிந்த அளவு அவர்களுக்கு மீட்டுக் கொடுக்க வேண்டும் என ஆதேஷ் நினைத்துக் கொண்டான்.

“நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால், மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக இருங்கள்,” – பில் கேம்ப்பெல்.

error: Alert: Content selection is disabled!!