அதேஷும் நித்திலாவும் கோவிலில் இருந்து வீடு திரும்ப, அன்றைய காலை உணவிற்கு அனைவரும் கூடியிருந்தனர், நயனாவை மட்டும் காணவில்லை.
“சின்னவனே நயன் எங்க, தாத்தா வரப் போறாங்க” என வசுந்தரா மருமகனின் முகம் பார்த்தார்.
இவர் கேட்டுக் கொண்டிருக்கும் போது உள்ளே வந்த நயனா வழக்கம் போல், “இங்கி பிங்கி பாங்கி” என ஆரம்பித்து அதேஷில் முடிக்கப் போனவள், அதைச் செய்யாமல் கணவன் முறைக்க அந்தரத்தில் விரலை நீட்டி நிறுத்தினாள்.
“ஹாஹாஹா..கேடி ஃபெல்லோ” முகம் மலர சிரித்தான் ஆதேஷ் நயனாவின் செயலைக் கண்டு.
“போ போய் அவன் பக்கத்தில் உட்கார்ந்துக்கோ, பட் அண்ணி எங்க உட்காருவாங்க” லிங்கா மனைவியை முறைத்துக் கொண்டு சொல்ல.
“நித்தி இடப்பக்கம், நான் வலப்பக்கம்” என்றவள் சொன்னது போல் செய்தாள்.
“ஹேய் வாலு அவனை டீஸ் பண்ணறதை விடலையா நீ?” நயனாவின் தலையைப் பிடித்து அசைத்தான் ஆதேஷ்.
“ம்ஹும்…தொட்டில் பழக்கம்த்தான்” என்றாள் புன்னகைத்து.
சேதுபதி சேரமான் தன் படையோடு வர, பிறகு உணவு பரிமாறும் சத்தம் மட்டும் கேட்டது.
நித்திலாவுக்கு எல்லாமே புதிதாக இருந்தது. சிறிய குடும்பத்தில் பார்த்துப் பார்த்து வளர்க்கப்பட்டவளுக்கு பெரிய குடும்ப அமைப்பு ஒரு தடுமாற்றத்தையும் அதே நேரத்தில் மகிழ்ச்சியையும் தந்தது. சிறிய குடும்பமாக இருந்தால் ஓட்டுதல் அதிகம் இருக்கும், ஏனென்றால் அன்பு அந்த குறுகிய வட்டத்திலேயே பகிரப்பட்டுக் கொண்டிருக்கும் என நினைத்திருந்தாள் நித்திலா, ஆனால் அது அப்படியில்லை, ஒத்த மனமுடைய மனிதர்கள் ஒரு இடத்தில் கூடி விட்டால் அங்கு பேரன்பே ஆட்சி செய்யும் என்பதற்கு சான்றாக ஆதேஷின் குடும்பம் இருந்தது. இந்த குடும்ப அங்கத்தினர்களில் ஒருவர் மீது மற்றவருக்கு இருக்கும் அன்பும், புரிதலும், அக்கறையும் இவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. அன்னையர் மூவரும் எல்லா குழந்தைகளையும் பாரபட்சமின்றி அரவணைக்கும் பாங்கு தாய்மையின் அழகியலை அடிக்கோடிட்டு எழுதியது.
விக்ரமன் தன் பெரிய மருமகளை பார்க்காது பார்த்தார். நித்திலா இவரைக் கண்டு பயந்து ஒடுங்கி நின்ற தோற்றம் மனிதர் மனதை அசைத்திருந்தது.
நித்திலா கர்ம சிரத்தையாக உணவு தன் தட்டில் பணியாளர்கள் பரிமாறுவதைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“வள்ளி, வீட்டுக்கு புதுசா யார் வந்தாலும் இனிப்பு வைக்கணும்ன்னு தெரியும் தானே, முதலில் இனிப்பு வை” விக்ரமன் பட்டும் படாமலும் சொல்ல.
ஆதேஷ் முகத்தில் பளிச்சென்று புன்னகை ஒன்று தோன்றி மறைந்தது. அதை தனது வலது கையைக் குவித்து வாயில் வைத்து மறைத்துக் கொண்டான்.
‘இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை, அந்த பொண்ணு வரதுக்கு முன்னே என்னென்ன பேசினார் இந்த மனுஷன், திடீர்ன்னு எந்த போதி மரத்தில் ஞானம் பெற்றார்’ என மனதில் முணுமுணுத்துக் கொண்டு அமைதியாக இருந்தார் வசந்தா.
“மனசுல பெரியப்பாவைத் திட்றீங்க தானே பெரிம்மா” என்று யாருக்கும் கேட்காமல் கிசுகிசுத்தான் அவர் அருகில் அமர்ந்திருந்த பிருத்வி.
“ஆத்தி…நான் ஒன்னும் உங்களைத் திட்டலங்க, இவன் சும்மா கோர்த்து விடுறான்” என்றார் அப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் பாவமாய் தனது கணவனைப் பார்த்து.
“போச்சு..” பிருத்வி தலையில் கை வைத்துக் கொள்ள.
“ஹாஹாஹாஹா…ஸோ சுவீட்மா நீங்க” கலகலத்துச் சிரித்தான் ஆதேஷ்.
தேனிலவு செல்வது பற்றி பேச்சு எழ, லிங்கா நாளை தாங்கள் இருவரும் மாலத்தீவு செல்லப் போவதாகச் சொல்ல, “வெயிட், எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும், தலை முடியைப் பிச்சுக் கொள்ளாத குறையா ரெண்டு பேரும் சண்டை போட்டீங்க, இந்த ஹனிமூன் பிளான் எப்படி, எப்போ நடந்தது? எந்த புத்துக்குள்ள என்ன பாம்புன்னு ஒன்னும் புரியலையே ஈஸ்வரா” என பிருத்வி கைகள் இரண்டையும் வானைப் பார்த்து தூக்கிக் கொண்டு முறையிட.
“ஹாஹாஹா…காம்ப்ளான் குடிச்சு வளருடா பிருத்து” ஆதேஷ் சிரிக்க.
தலையைச் சொறிந்து கொண்ட லிங்கா “டேய் விடுங்கடா சில்லி பாய்ஸ், எங்களை கலாய்கிறது இருக்கட்டும், நீ அண்ணியைக் கூட்டிட்டு எங்க போகப் போற” என கேட்க, அனைவரின் பார்வையும் ஆதேஷ் மற்றும் நித்திலாவை முற்றுகையிட்டது.
இதுவரை இது பற்றி யோசித்துக் கூட இருக்காதவன், மனைவியைத் திரும்பி பார்த்துவிட்டு, “நானே சுற்றுலாத்தலம் வச்சு நடத்துறேன், தென் குடிலுக்குப் போகாமல் எங்க போக, நாங்க மூன்று வாரம் குடிலில் போய் தங்கப் போறோம்” என்றான் ஆதேஷ்.
“என்னண்ணா நீங்க சுவிஸ் இல்ல பாரிஸ் இப்படி கூட்டிட்டு போய் அண்ணியை சர்ப்ரைஸ் செய்வீங்கன்னு பார்த்தால், வனக்குடில்ன்னு சப்புன்னு முடிச்சிட்டீங்க” ஜான்வி குறைபட.
“இது உங்க அண்ணியோட ஐடியா தான், என்ன நிலா” மனைவியைப் பார்க்க.
மெல்லிய புன்னகையால் கணவனின் சொல்லை வழிமொழிந்தாள் மனையாட்டி.
உணவை முடித்து ஆதேஷ் தனது மாமா அருள்மொழியுடன் தொழில் பற்றி பேசிக் கொண்டிருக்க, அறைக்குத் திரும்பியதும் நித்திலா கார்டனில் உள்ள ஊஞ்சலில் போய் அமர்ந்து கொண்டாள்.
நித்திலாவின் மனம் பாறாங்கல்லாய் கனத்தது. லிங்கா மற்றும் நயனாவை பார்த்ததுமே அவர்களின் அன்னியோன்னியம் பல கதைகளை பெரியவர்களுக்கு உணர்த்தி விட்டது. இவளும் புரிந்து கொண்டாள். அவர்கள் தேனிலவு பற்றி பேசியதும் இவள் மனம் தடதடக்கத் துவங்கி விட்டது.
வேறு பெண்ணைத் திருமணம் செய்திருந்தால், ஆதேஷும் தேனிலவுக்குக் கண்டிப்பாக கிளம்பி இருப்பான் தான். தன்னால் கணவனுக்கு எந்த வித பயனும் இல்லை என நினைத்து நினைத்து வருந்தினாள்.
பிறரைப் பற்றி நாம் நினைப்பது மட்டுமே உண்மை என்றும், அப்படித்தான் அவர்கள் என்றும் ஒரு அனுமானத்திற்கு நாமே வந்து விடுகிறோம். ஆனால் நாம் யாரைப் பற்றி நினைக்கிறோமோ அவர்கள் நாம் நினைத்துப் பார்க்காத ஒன்றைச் செய்யலாம் என்னும் நிதர்சனத்தை நினைக்கத் தவறிவிடுகிறோம்.
நித்திலாவும், வேறு பெண்ணாக இருந்தால் தன் கணவனின் எதிர்பார்ப்புகள் வேறாக இருந்திருக்கும் என தவறாகக் கணித்தது மட்டுமல்லாது அதிலேயே உழன்று தன் நிம்மதி இழந்தாள்.
திருமணம் ஆகி ஒரு வாரம் கடந்திருந்தது. குடிலில் தனது பயன்பாட்டிற்கு உள்ள வீட்டிற்கு மனைவியை அழைத்துக் கொண்டு வந்திருந்தான் ஆதேஷ்.
திருமண பரபரப்புகள் இருந்த போது இவளது சிறுதானிய உணவு வண்டியை நித்திலா மூலம் பயிற்றுவிக்கப்பட்ட குடிலின் பணியாளர்கள் கவனித்துக் கொண்டார்கள்.
தம்பதியர் வந்து இரண்டு நாட்களில் தான் செய்வதாக நித்திலா சொல்ல, இது ஹனிமூன் தேனே என மறுத்துவிட்டார் மன்னர்.
ஏதாவது வேலை பார்த்தாலாவது இவள் சிந்தனை அதில் செல்லும், சும்மா இருக்கும் மனம் சாத்தானின் உலைக்களம் என்பார்கள். மனைவி வேலை செய்யாமல் ஜாலியாக படித்துக் கொண்டோ அல்லது அவளுக்குப் பிடித்த ஏதோ ஒன்றை செய்து கொண்டோ ஓய்வுற்று சில நாட்கள் இருக்கட்டும் என நினைத்துத் தான் ஆதேஷ் இவளை வேலை செய்ய வேண்டாம் என்றது.
மனைவியின் உடல் ஓய்வுற்றது, ஆனால் மனம் விண்வெளி கலத்தின் வேகத்தைத் தாண்டி பறந்து திரிந்து வேலை செய்தது.
ஆதேஷ் மனைவியைக் கண்டு சிரித்தால் அமைதியுற்ற இவளது மனம், அவன் ஏதோ வேலையின் பொருட்டு சிந்தனையில் ஆழ்ந்து எதார்த்தமாக சிரிக்காது இருந்தாலும் இவள் தன்னோடு இணைத்துப் பார்த்து, தங்கள் வாழ்க்கை நினைத்து, தன் பொருட்டு அவன் இழந்துவிட்ட சுகங்கள் நினைத்து என பற்பல சிந்தனையின் குத்தீட்டியால் குத்தப்பட்டு காயமுற்றாள்.
அன்று ஆதேஷ் தன் அலுவல் அறையில் வேலையில் இருக்க, உள்ளே சென்றாள் நித்திலா.
சரியாக அதே நேரம் சலீமிடமிருந்து இவனுக்கு அழைப்பு வர, “நிலா கரெக்ட் டைமுக்கு வந்திருக்க, ப்ரீயா இருந்தா சிறுதானிய உணவுகள் நம்ம குடிலில் இணைத்தது பற்றி அட்வெர்டைஸ்மென்ட் ஒன்னு லோக்கல் டிவியில் கொடுக்கலாம்னு பேசினோம் தானே, அதோட வீடியோ ஒன்னு வந்திருக்கு பாக்கறயா? இந்த இடியட் கூப்பிடுறான், இப்ப வந்துடுறேன்” என்றவன் இவள் பதிலை எதிர்பார்க்காது வெளியேறி விட்டான்.
நித்திலா இவன் கணினியின் மௌஸைத் தொட விண்டோஸில் உள்ள ஏற்கனவே பார்த்துக்கொண்டிருந்த வாட்ஸ்அப் திறந்தது.
‘ஹலோ ஆதி, எப்படி இருக்க? நான் ரொம்ப தப்பு பண்ணிட்டேன். உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன். இப்போ எல்லாம் புரியுது, என் பெற்றோர்கள் என்னை கல்யாணம் பண்ண சொல்லி கடந்த நாலு வருஷமா வற்புறுத்துறாங்க, பட் உன்னை மறக்க முடியல ஆதி, உன்னைப் பார்க்கணும், உன் ஊருக்கு நான் வரலாமா?” என்று ஆங்கிலத்தில் ஆதேஷின் முன்னாள் காதலி சுஜிதாவிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது, அதை இவன் பார்த்துக் கொண்டு இருந்திருக்கிறான் என்று புரிந்து கொண்டாள் பெண்.
கண்கள் முட்டிக் கொண்டு வந்தது இவளுக்கு, இதயம் படபடக்க, கைகால்கள் வலுவிழக்க அமர முடியாமல் வர சட்டென கணினியை லாக் செய்தவள் விடுவிடுவென தங்களின் வீட்டிற்குச் சென்று விட்டாள்.
ஆதேஷ் திரும்பி வந்தவன் மனைவியைக் காணாது யோசனையானவன், கழிவறையை நோக்க கதவு பூட்டி இருந்தது.
‘என்னாச்சு சொல்லாம எங்க போனா, சொல்லாம போக மாட்டாளே’ மனைவிக்கு அழைத்துக் கேட்க, தலைவலி வீடு திரும்பி விட்டேன் என தகவல் கிடைக்க இவன் தனது வேலையில் கவனமானான்.
இரவு தன் அலுவல் முடித்து வீடு திரும்ப, எப்போதும் வாசலில் காத்திருப்பவள் அங்கில்லை.
வீடும் இருளில் மூழ்கிக் கிடந்தது, தடையைத் தடவிக் கொண்டு யோசித்தவன் அவளது அறையின் கதவை இரு முறை தட்ட பதிலில்லை.
கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே சென்றவன் கண்டது இருளில் கட்டில் குறுகிக் கொண்டு படுத்திருந்த மனையாளை.
விளக்கை எரிய விட்டவன், “நிலா” என்றான் அருகில் அமர்ந்து இவள் தலையைத் தொட்டு
படக்கென விழித்தவள் முகம் வாடிக் கிடந்தது, நிறைய அழுதிருப்பாள் போலும், கண்கள் வீங்கி இருக்க துணுக்குற்றவன், “நிலா என்னாச்சும்மா? ஏன் அழுதிருக்க? உடம்புக்கு ஏதாவதா?” என்றான்
பதில் சொல்லாது எழுந்து சென்று முகம் கழுவி வந்தவள் ஜன்னலோரம் போய் நின்று கொண்டாள்.
அவளையே விழியாகலாது பார்த்தவன், “நிலா அம்மாவை நினைச்சு வருத்தப்படுறயா? நம்ம வீட்டுக்கு நம்மளோட வந்துட கூப்பிட்டத்துக்கு, பெண் கொடுத்த வீட்டிற்கு வரக் கூடாதுய்யான்னு சொல்லிட்டாங்க. ஸோ ஒரு ஐடியா வச்சிருக்கேன், நம்ம குடிலில் ஒரு வீட்டை கொடுத்துடலாம், இங்க சிறுதானிய உணவு செய்யும் போது மேற்பார்வை பார்க்கட்டும், அவங்களுக்கு பொழுதும் போகும். இப்ப தான் உங்க வீட்டில் செய்வதில்லையே, ஸோ அப்பப்ப வீட்டுக்கு போகணும்னா போய்ட்டு வரட்டும். நம் கண் பார்வையில் இருப்பாங்க, நாமளும் பார்த்துக்கலாம். என்ன சொல்ற?” மனைவியை ஆர்வமாகப் பார்த்து இவன் கேட்க
“இல்ல நான் திரும்பி அம்மாட்ட போயிடறேன்” என்றாள் கண்களில் நீர் வடிய
“நிலா….வாட் யூ மீன் பை தட்?” என்றான் குழப்பமாக
“எனக்கு டிவோர்ஸ் கொடுத்துடுங்க, நான் போயிடுறேன்” மெல்லிய விசும்பல் இவளில்
“ஏன்..”
“நான் போயிட்டா சுஜிதாவை கல்யாணம் செய்வீங்க தானே, நான்…என்னால் என்ன பிரயோசனம்?”
“வாட்ஸ்அப் பார்த்தயா?” என்றான் கோபம் மேல் எழும்ப, இவள் அமைதியாக கண்ணீர் உகுக்க
“ஸோ,,, நீ இல்லைன்னா அவள், அவளும் இல்லைன்னா வேற ஒருத்தியா?”
“பட் நான் உங்க வாழ்க்கையில் வரலைன்னா அந்த பெண்ணை இப்ப ஏத்துக்கிட்டு இருப்பீங்க தானே?”
வேதனை கண்களில் படிய அவளையே பார்த்தவன், அருகில் சென்று மனைவியை இழுத்து அணைத்துக் கொண்டான்.
இவள் அவன் நெஞ்சில் புதைந்து கொள்ள, அவளது அழுது சிவந்த முகத்தை நிமிர்த்தி ஒரு நிமிடம் ஆழ்ந்து பார்த்தவன் அவள் இதழ்களை சிறையிட்டுக் கொண்டான்.
ஒரு நிமிட நேரம் நீடித்தது அந்த இதழ் ஒற்றல். பெண் இழைந்து தன்னை இழந்து போனாள் அதில்.
தன்னை மீட்டுக் கொண்டு, அவளை விட்டு விலகி திரும்பி நின்று கொண்டு, “உன்னைப் பார்க்கும் போதெல்லாம் இப்டி கட்டிக்கிட்டு முத்தம் கொடுக்கணும்ன்னு தோணுதுடி. உன்னை பார்த்தால் மட்டும் தான் தோணுது. போ டி நீ என்னைப் புரிஞ்சுக்க போறதில்லை” என்று கரகரத்த குரலில் கூறியவன் விருட்டென்று வெளியேறினான்.