அதேஷ் மிகுந்த மன வருத்தமும் கோபமும் கொண்டிருந்தான்.
‘என் மீது நம்பிக்கை இல்லையா? எப்படி நான் வேறொரு பெண்ணை நாடுவேன் என நினைத்தாளோ?, அவ்வளவு கீழானவனா நான்? என் நிலா இப்படி நினைக்கலாமா? என்னை விட்டுட்டு போயிடுவாளா? என்னை விட்டுவிட்டு வாழ்ந்திடுவாளா? நான் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டால் இவளுக்கு அதனால் ஒன்றும் இல்லையா?’ என வேதனையில் வெந்து கொண்டிருந்தான்.
மனத்தை திசைதிருப்பும் வழியறியாது தடுமாறியவன், வீட்டை விட்டு வெளியேறி போட்டிருந்த துணியோடே நீச்சல் குளத்தில் போய் விழுந்து நீந்தலானான்.
அலுவல் அறையில் அமர்ந்து சிசிடிவி கேமராவைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த சலீம், “என்ன… தல இந்த நேரத்தில் போய் தண்ணியில் தாண்டவம் ஆடுறார்” என் கன்னத்தை சொறிந்து கொண்டு யோசித்தவன் எழுந்து ஆதேஷைப் பார்க்கக் கிளம்பினான்.
குளத்தின் அருகில் போய் நின்று கொண்டு, “என்ன தல இந்த நேரத்தில் தீர்த்தமாடிட்டு இருக்கீங்க” சலீம் ஆதேஷைப் பார்த்துக் கேட்க
பிரஸ்ட் ஸ்ட்ரோக் முறையில் நீரில் துழாவிக் கொண்டிருந்தவன், “தீர்த்தம் தான் டா ஆடுறேன், ஜலகீரிடை இல்லையே” என்றான் உக்கிரக் குரலில் தலையை தண்ணீரில் மேலே வைத்தவாறு மூச்சிரைக்க
‘ஆகா, என்ன வில்லங்கமா பேசுறாரு’ என்று யோசித்த சலீம்,
குளத்தின் அருகில் போய் கால்களைக் கட்டிக் கொண்டு அமர்ந்தான்.
“நீ ஏன் டா தேவுடு காக்கற” சலீம் பக்கம் நீந்திக் கொண்டு வந்த ஆதேஷ் கேட்க
“கரெக்ட், எள்ளு எண்ணெய்க்கு காயலாம், எலியின் ப்விசிஸ் (கழிவு) என்னத்துக்கு காயணும், ஆமா வாட் இஸ் தி மேட்டர், அண்ணியை அடிக்க முடியாமல் தண்ணியை அடிச்சிகிட்டு கிடக்கீங்க” சலீம் நக்கல் பார்வை பார்த்தான்.
“என்ன கண்றாவி பழமொழிடா இது அண்ணி தண்ணின்னு” இவன் முறைக்க
“பாஸ், இது சொந்த சரக்கு, சரி வீட்டுக்கு போகலையா? நித்திக்கா எங்க?”
“ம்ம் என் பாக்கெட்குள்ள இருக்கா, இடியட், போடா எழுந்து” என்றவன் “மனசை ரிலாக்ஸ் பண்ணனும் எனக்கு” குரல் கடினமுற கூறியவன் மறுபடியும் நீந்திக் கொண்டு எதிர்புறம் சென்றான்
“என்ன காதல் கிளிகளுக்கு ஊடலா? விரக்தியா பேசிட்டு போறாரு” என்றவனுக்கு ஆதேஷ் என்றுமில்லாமல் ஏதோ குழப்பத்தில் இருக்கிறான் என உணர்ந்தவனுக்கு விட்டுச் செல்ல மனமில்லாது, அங்கேயே அமர்ந்திருந்தான்.
திரும்பி சலீம் புறம் நீந்தி வந்தவன், “டேய் போல..” என்றான் திட்டில் வந்து கைகள் இரண்டையும் மேலே வைத்துக் கொண்டு
சலீம் அமைதியாக இவனைப் பார்க்க, “சரி வா நீந்தலாம்” என்றவன் சலீம் எதிர்பார்க்காத நேரம் பிடித்து தண்ணீருக்குள் தள்ளிவிட்டான்.
கீழே போய் மேலே நீந்தி வந்த சலீம் முகத்தில் உள்ள நீரை வழித்து விட்டுக் கொண்டு, “என்ன ஏன் தல தள்ளி விட்டீங்க”
“மனசை ரிலாக்ஸ் பண்ணுடா” என்றவன் மல்லாக்கப் படுத்து மிதக்கலானான்.
“ஏதே…நான் எதுக்கு ரிலாக்ஸ் பண்ணனும், எனக்கென குடும்பமா குட்டியா, யாருக்கு ஊடலோ அவங்க பண்ணலாம், பட் ஒய் மீ?” என நக்கலாகப் பார்க்க
“ரொம்ப பேசாதடா, சரி வா இன்னைக்கு குடிக்கலாமா?” ஆதேஷ் தண்ணீரிலிருந்து மேலே எழுந்து திட்டில் அமர்ந்தவாறு கேட்க
“ஆத்தி என்னாச்சு இருவருக்கு, குடிக்கலாமாவா? குடின்ற வார்த்தையைச் சொன்னாலே வாயில் குத்துற மனுஷன் குடிக்க கூப்பிடுறார், பாஸ் வாங்க பள்ளிவாசலுக்கு போய் மந்திரிச்சுட்டு வந்திடுவோம்” சலீம் கவலையாகப் பார்க்க
“வாயில் போடுவேன் டா இடியட், ஏலம் போட்டு டீ குடிக்கலாமான்னு கேட்டேன்” என்றவன் எழுந்து நீரோடு நடந்து துவாலைகள் வைத்திருக்கும் அறைக்குச் சென்று தனக்கொன்று எடுத்துக் கொண்டு, சலீமிடம் வந்து ஒன்றைத் தந்தான்.
பிறகு தனது வீட்டிற்கு திரும்பி குளித்துவிட்டு சமையல் கூடம் வருவதாகச் சொல்லிவிட்டு ஆதேஷ் வந்துவிட, சலீமும் அவனுக்கான வீட்டிற்குச் சென்றான்.
அடுத்த இருபது நிமிடங்களில் இருவரும் சமையல் கூடத்தில் டீ போட்டுக் கொண்டிருந்தனர்.
“உங்க அக்காக்கு போன் பண்ணி வரச் சொல்லு, அவளுக்கு ஏலம் போட்டா பிடிக்கும்” மனைவியின் நினைவலைகளில் பின்னப்பட்டவனாக ஆதேஷ் சொல்ல
“ஏன் நீங்களே சொல்றது….சொல்லிட்டு கண்ணே மணியேன்னு ரெண்டு எக்ஸ்ட்ரா பிட்டைப் போட்டால் ஊடல் கூடலில் முடிச்சிடும், சிம்பிள்” என்றான் இளையவன்
“ஆஹாங்…அனுபவம் போல ஐயாவுக்கு, ஆமா ஊடலுன்னு நான் சொன்னனா?” இவன் முறைக்க
“ஆத்தி…சும்மா ஒரு ஃப்லோ வந்துடுச்சு பாஸ், கூடலுக்கு ஸ்பெல்லிங் கூட தெரியாது எனக்கு” சலீம் பாவமாகப் பார்த்தான்
“ஷ்ஷு மூஞ்சியை அப்டி வைக்காதடா, போன் பண்ணு” என்றவன் பாலில் டீத்தூள் மற்றும் வெல்லம் கலந்து ஏலம் தட்டிப் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்தான்.
அங்கு ஆதேஷ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு நித்திலா ஸ்தம்பித்துப் போய் அமர்ந்திருந்தாள்.
என்ன நடந்தது என உணர்ந்து கொள்ளவே அவளுக்கு நேரம் பிடித்தது. உன்னை பார்க்கும் போது மட்டும் தான்டி கட்டிப்பிடிக்க முத்தமிட தோணுகிறது என்ற அவனது வார்த்தைகள் சிந்தையில் சிருங்கார நடனமிட்டது.
அப்போ அவன் முதல் காதல் என்று இருந்த போது அந்தப் பெண்ணிடம் தோன்றவில்லையா? இவளுக்கு மனது மத்தாளம் கொண்டு இசைத்தது. உடலில் புது இரத்தம் ஊறிப் பாயும் உணர்வு இவளை ஆட்கொள்ள, மடிந்து தரையில் அமர்ந்து கால்களில் முகத்தைப் புதைத்துக் கொண்டாள். அவங்களோட இத்தனை காதலுக்கு நான் தகுதியானவளா? அவங்களுக்கு என்னை அவ்வளவு பிடிக்குமா? நான் தான் தேவையில்லாமல் குழப்பிக்கறேனா?
அப்போதே சென்று கணவனைக் கட்டிக் கொள்ள வேண்டும் என்னும் பேராவல் எழ திடுக்கிட்டாள் பெண், ‘அவங்க கட்டிப் பிடிச்சுட்டு முத்தமிட்ட போது எனக்கு பயம் வரலையே, பிடிச்சு இருந்ததே, அப்போ என்னில் மாற்றம் இருக்கா, என்னால் குடும்ப வாழ்க்கை வாழ முடியுமா?’ என நினைக்கும் போதே கண்ணீர் கோர்த்தது.
அப்படியே சிந்தித்து, அதில் ஆனந்தித்து, அதைச் சுகித்து அமர்ந்திருந்தாள். மறுபடியும் கணவன் வீடு வந்ததோ, அவனது அறையில் குளித்துக் கிளம்பிச் சென்றதோ கூட தெரியாமல் ஒரு மோன நிலையில் ஆட்பட்டிருந்தாள் மனைவி.
சலீம் போன் செய்து அழைக்க, வருவதாகச் சொல்லி கட் செய்தவள் எழுந்து சென்று முகத்தை அலம்பிக் கொண்டு வந்த பிறகு சற்று திருத்திவிட்டு கணவனைத் தேடிச் சென்றாள்.
இவள் அறைக்குள் நுழைய ஏலம் மணந்து காற்றின் இலையில் கலந்து கவிபாட ஆதேஷ் மூவருக்கும் மூன்று கோப்பைகளில் ஊற்றிக் கொண்டிருந்தான்.
இவளுக்கு ஒரு கோப்பை தரப்பட்டு அதன் வாசத்தை ஆழ்ந்து சுவாசித்து ஆன்மா வரையிலும் இழுத்து நிறைத்து வைத்துக் கொண்டாள்.
மனைவியையே கண்கொட்டாது பார்த்துக் கொண்டிருந்தவன், ‘இவ இருக்காளே’ என மனதில் சிரித்துக் கொண்டான்.
கணவனின் பார்வையைக் கணித்து விட்டவள், நிமிர்ந்து இவனை நோக்கிவிட்டு முகம் சிவக்கக் குனிந்து கொண்டாள்.
மூவரும் வந்து சாப்பிடும் கூடத்தில் ஒரு மேசையைச் சுற்றி அமர்ந்து கொண்டனர்.
கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்ப்பதும் பிறகு தேநீரில் கவனமாக இருப்பதுமாக இருக்க, இதை கவனித்துவிட்ட சலீம், “ஓகே பாஸ் நான் என் ரூமுக்கு போறேன், காலையில் பார்க்கலாம்” என எழுந்து தேநீர் கோப்பையோடு நடக்க
“டேய் குடிச்சுட்டு போடா” என்றான் ஆதேஷ்.
“வேணாம் வேணாம், நான் கரடி பொம்மை வேஷம் போட தயாரா இல்லை” என்று சொல்லிக் கொண்டு போய்விட்டான்
“ஹாஹாஹா..” சிரித்துக் கொண்டான் இவன்
அந்த இடமே நிசப்தமாக இருந்தது. ஆங்காங்கே விளக்குகள் எரிந்து ஒளி பாய்ச்சிக் கொண்டிருக்க, இரவு கிட்டத்தட்ட பனிரெண்டை தொட்டுக் கொண்டிருந்தது.
இவன் மனைவியைப் பார்ப்பதைத் தவிர்த்து, கோப்பையை, அதில் பாதியளவு இருந்த தேநீரை, அதில் மிதந்து திரிந்த குறு குமிழை என அத்தனை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தான்.
“சாரி..ரொம்ப சாரி…” என்றாள் அவனையே விழியகலாது பார்த்திருந்த பெண்.
“போடி பேசாதடி என் கூட” இவன் சிலுப்பினான்
அவனது குரலில் உடல் மொழியில் புன்னகைத்தவள், “என்னைப் பார்க்க பாவமா இல்லையா” என்றாள்
“இல்ல போடி…. டிவோர்ஸ் பண்ணிட்டுப் போடி, பெரிய அழகி இவ, அப்டியே அழகா அலையலையாய் முடி வச்சுருந்தா நான் மயங்கிடுவேனா? இல்ல சிரிக்கும் போது இந்த கண் ரெண்டும் சிரிக்குதே அதைப் பார்த்து மயங்கிடுவேனா? கட்டிப் பிடிக்கும் போது பஞ்சு போதியை அணைச்சுகிட்ட மாதிரி இருந்ததே இதெல்லாம் என்னை மயக்கிடுமா? மாட்டேன்டி நெவர்” கைகள் இரண்டையும் தூக்கி தலையின் பின்னே கட்டிக் கொண்டு மனைவியைப் பார்த்துச் சொல்ல
“ஹாஹாஹா….அப்போ மயங்கிட்டார் மன்னர் இல்லையா?” முதன்முதலாக ஒரு மனம் திறந்த பேச்சு இவளில்
தன் நிலாவைப் பார்த்துக் கொண்டிருந்த மன்னன், “தூங்கப் போலாமாடி தேனே” என்றான்.
இருவரும் வீடு திரும்பி இவள் தனது அறை நோக்கி ஒரு எட்டு வைக்க, “தேனு…” என்றவன்
“உனக்கு பிடிச்சிருக்குதானே” என்றான் திடீரென
அவன் எதைச் சொல்கிறான் என புரியாது இவள் பார்க்க, அருகில் வந்தவன், “அது… நான் நீ அப்போ…” சேர மன்னர் வார்த்தை கோக்க இயலாது தடுமாறினார் முகம் பொலிந்து கன்ற
“ஹாஹாஹா…அழகா இருக்கு…பிடிச்சிருக்கு” என்றாள் பெண்
புரியாது பார்ப்பது இவன் முறையானது, “மன்னர் வெட்கப்படுவது” என்றாள் புன்னகை பூக்க
“போடி” என்றவன் மனைவியை எட்டி அணைத்துக் கொண்டான்
அவனின் நெஞ்சோடு புதைந்து போனவள், தனது முகம் நிமிர்த்தி, “பாவா….எனக்கு இது பிடிக்குது…இன்பேக்ட் ரொம்ப பாதுகாப்பா உணர்ந்தேன் …நான் டாக்டர்கிட்ட கவுன்சிலிங் போகணும், எனக்கு மத்தவங்க மாதிரி வாழணும், என் பாவா மாதிரி,,ரெண்டு ரெட்டை பெத்துக்கணும், அவங்க வசு பாட்டிகிட்ட அப்பா மாதிரி வம்பு பேசணும், அப்பா மாதிரி எல்லாருக்கும் பிடிச்சவங்களா இருக்கணும்” சொல்லிக் கொண்டிருக்கும் போதே கண்ணீர் பொழிந்தது பெண்ணுக்கு
இவனும் கலங்கிவிட்டான், ஒரு சாதாரணமாக வாழ்க்கையைக் கூட அவளது லட்சியம் போல் சொல்ல வைத்துவிட்ட விதியின் மேல் ஆற்றாமை கிளர்ந்தது.
அவளை இறுக்கி அணைத்துக் கொண்டான் எதிலிருந்தோ காத்துக் கொள்பவன் போல்.
பெண்ணென்பவள் போதைக்கானவள் இல்லை, அவள் ஒரு பேராற்றல் என்பதை இந்த சமூகம் என்று கற்கும்? தன்னை விட உடல் வலிமை குறைந்தவளை சூறையாடி அவளைச் சிதைக்கின்ற இழிவான எண்ணங்கள் என்று மாறும்? தன் கண்களில் மரியாதை மட்டும் வைத்து என்று இந்த ஆண்கள் சமூகம் பெண்களைப் பார்க்கிறதோ, அன்று தான் இந்திய நாடு சுதந்திரம் கொள்ளும், வெல்லும்.