நித்திலப் பேரொளி -23

வெள்ளித் தூறலாய் மழை பெய்து கொண்டிருந்தது. நித்திலா வீட்டின் சிட் அவுட்டில் அமர்ந்து விழுகின்ற துளியையே ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

மண்ணில் துள்ளிச் சிதறும் துளிகள் அதன் அடியில் சென்று வாசத்தைப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்தது. அந்த வாசத்தை நுரையீரல் விரித்து நுகர்ந்து நிறைத்துக் கொண்டாள் பெண்.

மெல்ல மெல்ல இருள் கவிழ்ந்து பொழுதுக்கு பொலிவு சேர்த்தது. ஆதேஷ் இவள் அருகில் கால்கள் நீட்டி அமர்ந்து தனது மடிக்கணினியில் தலையைக் கொடுத்திருந்தான்.

தேன் நிலவு என பெயர் பண்ணிக் கொண்டு இங்கு வந்து இரு வாரங்கள் கடந்திருந்தது.

“நிலா….வீட்டுக்கு போலாமா, என்ன சொல்லு விக்ரமன் கூட வம்பிழுக்காமல் பொழுது போகலடி” மனைவியைச் சீண்டினான்.

இவன் தோளில் அடித்தவள், “வாய் வம்பு இரண்டும் இரட்டை பிறந்திருக்கு உங்களுக்கு” முறைத்தாள் மனைவி.

“ஹாஹாஹா….நீ போய் அவர்ட கேளு, அவரும் என் கூட மல்லுக்கட்டலையினா நாள் நிறையாதுன்னு சொல்வார்”

“உங்க ரெண்டு பேர் நடுவில் மாட்டிகிட்டு அத்தை தான் தவிக்கிறாங்க, எனக்கும் வீட்டுக்குப் போகணும், இப்போ கிளம்பலாமா?” என்றாள் நித்திலா.

இவன் சரி என்று ஒப்புக் கொண்டதும், அடுத்த அரைமணி நேரத்தில் வீட்டில் இருந்தனர்.

இவர்கள் வந்து சேர விக்ரமன் ஜலதோஷம் காய்ச்சலில் படுத்திருந்தார்.

சமையல் அறைக்குள் இருவரும் வர, “மூணு வாரம்ன்னு யாரோ சொன்னாங்க, இரண்டில் ரிட்டன் போட்டுட்டாங்க” இரவு உணவுக்கான சமையல் மேற்பார்வையில் இருந்த வசுந்தரா.

“ஓ அப்போ திரும்பி போடான்னு சொல்ற, பாட்டி வசு என்னைத் தனிக்குடித்தனம் போகச் சொல்லுது” மேஜை அருகில் இருக்கும் நாற்காலியில் அமர்ந்திருந்த கோப்பெருந்தேவியிடம் முறையிட்டான்.

“ஆத்தி…நான் என்ன சொன்னேன் இவன் என்ன திரிச்சுவிடுறான் பாரு” நெஞ்சில் கை வைத்தார் அத்தை.

“ஹாஹாஹா…” அவர் கழுத்தில் கை கொடுத்து கட்டிக் கொண்டவன், “ஸோ சுவீட்” என கொஞ்ச,

“ஷ்ஷு கையை எடுடா, கல்யாணம் ஆகி இந்தா அடுத்த வருஷம் பிள்ளை வரப் போகுது இன்னும் என்னைக் கட்டிட்டு இருக்கான்” இவன் கையில் அடித்தார்.

“இப்போ என்ன, பொண்டாட்டி இருக்க என்னை ஏன் டா என்னை கட்டிப்பிடிக்கிறாய்ன்னு சொல்றயா? சரி போ” என்றவன் நகர்ந்து போய் நித்திலாவின் பின்னே நின்று இரண்டு கைகளையும் முன்னே விட்டு அவள் கழுத்தில் கோர்த்துக் கொள்ள,

“ஆஆ…அடங்காதவன்” என வாய் பிளந்தார் வசுந்தரா.

“ஐயோ விடுங்க” என வெட்கிக் கொண்டு நித்திலா நகர்ந்து கொள்ள, மலர்ந்து சிரித்தான் மன்னன்.

“பெரியவனே, அப்பாக்கு இரண்டு நாளா முடியல, ரூமில் படுத்திருக்காங்க” அத்தை தகவல் தர,

“ஏன் என்னாச்சு, அது தான் அம்மாவைக் காணோமா?” என கேட்டுக் கொண்டு அவர் இருக்கும் அறைக்கு நடந்தான்.

அறைக்குள் வந்தவன் கட்டிலில் சோர்ந்து போய் படுத்துக் கொண்டிருக்கும் விக்ரமனைப் பார்க்க, இவன் வருவது தெரிந்தும் மனிதர் கண்களை இறுக்க மூடிக் கொண்டிருந்தார். கட்டிலின் அந்தப் புறம் அருகில் வசந்தா அமர்ந்திருக்க, என்ன என்பதாய் கண்களால் வினவினான்.

கழுத்தில் கை வைத்து காய்ச்சல் என சைகை பாஷையில் அன்னை பேச இவனுக்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது.

ஆதேஷோடு பின்னே வந்த நித்திலா இவன் முகத்தைப் படித்து விட்டவள் சத்தமில்லாமல் கையில் கிள்ளி வைத்தாள்.

ஒன்றும் பேசாமல் இவன் அமைதியாக நிற்க, “ஏன் தொரை வாயத் திறந்து எப்படி இருக்கீங்கன்னு கேட்க மாட்டாரோ” என்கிறார் விக்ரமன் இருமலின் ஊடே பொதுப்படையாக.

இவனில் புன்னகை, வம்புக்கு அவரையே பார்த்து கையை கட்டிக் கொண்டு நிற்க, இவனை முறைத்த நித்திலா, “இப்ப ஓகேயா உங்களுக்கு” என்றாள் விக்ரமனைப் பார்த்து.

“ம்ம்…இந்த இருமல் தான் படுத்துது” என்றவர் “வசந்தா, உன் மருமகளுக்கு முறையெல்லாம் சொல்லிக் கொடுக்கலையா நீ, என்ன தான் பண்ணுவியோ வீட்டில், இதெல்லாம் கூடவா சொல்லணும் உனக்கு” மனைவிக்கு ஒரு கொட்டு வைத்தார்.

வசந்தா பாவமாக நித்திலாவைப் பார்க்க, இளையவள் நாக்கைக் கடித்துக் கொண்டாள்.

‘அந்த பொண்ணை என்னென்ன வார்த்தையெல்லாம் திட்டினார், இப்போ முறை ஒன்னு தான் இவருக்குக் குறைச்சல், முறை சொன்னா இந்த மனுஷன் திட்டுவாரோ என்னவோன்னு அவ பயந்திருப்பா, எல்லாத்திலும் அதட்டல் மிரட்டல் தான்’ மனதில் நொடித்துக் கொண்டார் வசந்தா.

அன்னையின் மைண்ட் வாய்ஸைப் படித்துவிட்ட ஆதேஷ், “என்னம்மா யாரையோ போட்டு வறுத்துட்டு இருக்கீங்க போல” என்றான் நமட்டாய் சிரித்துக் கொண்டு.

“ஈஸ்வரா…நான் உங்கள ஒன்னும் திட்டலைங்க… பெரியவன் வம்புன்னு உங்களுக்குத் தெரியாதா” என அப்பாவியாய் உண்மையை விக்ரமனிடம் ஒத்துக் கொள்ள,

“திமிருடி உனக்கு, வெளியில் முடியலைன்னு மனதில் திட்டிட்டு இருக்கியா? தொலைச்சுடுவேன் தொலைச்சு” உறுமினார் விக்ரமன்.

“ஹாஹாஹாஹா…மிஷன் அக்கம்பிலிஸ்ட்” என சிரித்துக் கொண்டு வெளியேறினான் வம்பன்.

பின்னே ஓடி வந்த நிலா, “உங்க அலும்புக்கு ஒரு அளவில்லையா, பாவம் ஏன் அத்தையை கோர்த்து விடறீங்க” இவன் கை பிடித்து நிறுத்தி நித்திலா கேட்க,

“ஹாஹாஹா, நிலா, அம்மா அவர் பக்கத்திலேயே உட்கார்ந்திருக்காங்க கவனிச்சையா? அவர் தும்மினால் கூட அவரை விட்டுட்டு அம்மா எங்கேயும் போகாம பக்கத்திலேயே இருக்கணும் அவருக்கு. அம்மா வெளியில் அலுத்துக்குவாங்க, பட் மனசுக்குள்ள அம்மாக்கும் பிடிக்கும். நான் வம்பு வளர்க்கிறது எப்போவும் நடக்கும், அது அவருக்கும் தெரியும். ப்ரியா விடு” என்றவன் மாடி ஏறினான் அறைக்கு.

அரண்மனையின் பின்புறம் சென்ற நித்திலா, கையில் இலைகளைப் பறித்துக் கொண்டு வந்தாள்.

“என்ன நித்திம்மா இது” என வசந்தரா கேட்க

“தூதுவளை வசும்மா, மாமாக்கு இருமல் விடாமல் படுத்துது, ரசம் வைச்சு கொடுக்கலாம்னு எடுத்துட்டு வந்தேன்”

“எனக்கு இதெல்லாம் தெரியாது டா, வா நானும் பார்த்துக்கறேன்” என்றதும் பெண்கள் இருவரும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர்.

தூதுவளை இலைகளை கழுவி எடுத்து வந்த நித்திலா, பின் புளியை வெந்நீர் ஊற்றி கரைத்து எடுத்துக் கொண்டாள். வாணலியை அடுப்பில் வைத்தவள், அதில் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், தூதுவளை இலைகளைப் போட்டு, வதக்கி தனியாக இறக்கி வைத்துக் கொண்டாள். அம்மியில் சீரகம், மிளகு, சோம்பு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து அரைத்து, அதன் பின் வதக்கிய இலைகளையும் போட்டு அரைத்து எடுத்துக் கொண்டாள்.

ஒரு பாத்திரத்தில் புளிச்சாறு, நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள், உப்பு, மற்றும் அரைத்த விழுதை சேர்த்து அடுப்பில் வைத்து, ஒருமுறை நன்கு கொதித்ததும், தீயைக் குறைத்து, குறைவான தீயில் 3 நிமிடம் கொதிக்க விட்டு, பின் அதில் நீரை ஊற்றி, ரசத்தின் மேலே நுரை கட்ட ஆரம்பிக்கும் போது, அடுப்பை அணைத்து விட்டாள். மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், பெருங்காயம், கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து தாளித்து, ரசத்தில் ஊற்றியதும் சுவையான தூதுவளை ரசம் தயாராகியிருந்தது.

ஒரு கோப்பையில் ஊற்றி ஸ்பூன் போட்டு எடுத்துக் கொண்டு, “வசும்மா, மாமாட்ட தரீங்களா?” என்க

“நோ வே, செய்பவர்கள் தான் கொடுக்கணும், வா” என அழைத்துக் கொண்டு விக்ரமன் அறைக்கு வந்தனர்

“மாமா…இது தூதுவளை ரசம், இருமல் கட்டுப்படும், குடிக்கிறீங்களா?” தயங்கித் தயங்கிக் கொண்டு கேட்க

ஒரு பார்வை பார்த்தவர், ம்ம் எனத் தலையாட்டி விட்டு வாங்கிக் கொண்டார்.

ஒரு கரண்டி எடுத்து தயங்கிக் கொண்டு சுவைத்தவர், பிறகு வேகமாக குடித்து முடித்தார்.

நன்றாக இருக்கிறது, இதமாக இருக்கிறது இப்படி ஏதும் சொல்வாரோ என மூத்த பெண்மணிகள் விக்ரமனின் முகத்தையே பார்க்க, மனிதர் வாய் திறக்கவில்லை.

“வசந்தா இனியாவது நீ சமைக்கக் கத்துக்கோ” விக்ரமன் சிலேடை பேசினார்

“நான் சமைச்சுட்டு தானுங்க இருக்கேன்” என்றார் மனைவி, இவரின் நக்கல் விளங்காது

“அப்படின்னு நீ நினைச்சுட்டு இருக்க” என்றார் குரலைச் செருமிக் கொண்டு

‘மனுஷனுக்கு குசும்பப் பாரு, மருமகளை பாராட்ட மனசு வரலை, இதில் என்னை குறை சொல்லணும்னா மட்டும் எட்டு ஊருக்கு பேச்சு நீளும்’ வெளியில் அமைதியாக முகத்தை வைத்துக் கொண்டு மனதில் தாளித்து எடுத்தார்

வசந்தாவின் முக அசைவுகளைப் பார்த்துக் கொண்டிருந்த நித்திலாவுக்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது. காலியான பாத்திரங்களை எடுத்துக்கொண்டு மெதுவாக நழுவி ஓடிவிட்டாள்.

நித்திலா சேரமான் குடும்பத்தோடு ஒரு அங்கமாகப் பொருந்திப் போனாள். விக்ரமன் மகனிடம் முறைத்துக் கொண்டு திரிந்தாலும், மருமகளிடம் மறைமுகமாக அன்பைக் காட்டினார்.

நித்திலாவுக்கும் நாயனாவுக்குமிடையே ஒரு நல்ல தோழமை வந்து ஒட்டிக் கொண்டது.


ஆதேஷ், நித்திலா படுக்கும் கட்டிலில் படுத்திருக்க, உள்ளே வந்த பெண் என்ன புதுசா என முழித்துக் கொண்டு நின்றாள். இங்க தான் படுக்கப் போறாங்களா? ஏன் திடீர்னு? எப்படி கேட்க? தடுமாற்றம் தலை சுற்றிக் கொண்டு ஆடியது இவளில்

மனையாளைப் படித்து விட்டவன், “வாடி தேனே, என்னை கண்ணாலேயே கபளீகரம் செய்துடாத” என்றவன் இவளின் தடுமாற்றத்தை வெகுவாக ரசித்தான்

மெதுவாக வந்து அவன் அருகில் அமர, இழுத்து நெஞ்சில் சாய்த்துக் கொண்டான். “நிலா, பயந்துட்டயா? சும்மா கொஞ்ச நேரம் போய்டுவேன்….” அவளது சிகையை வருடினான். தலைவனின் கை பிறகு கன்னம் வருடியது. உணர்வுகள் அவனிலிருந்து நழுவி வெளிவரத் துடித்தது. சிரமப்பட்டு தன்னுள் அடக்கிக் கொண்டான்.

“இப்ப ஏதும் பாட்டு வரலையா?” என்றாள் பெண் புன்னகைத்து

“உன் பக்கத்தில் வந்தாலே நம் பாட்டன்கள் ஓலைச்சுவடி எடுத்துட்டு ஓடி வந்துடுறாங்க” என்றான் குரல் இழைந்து தழைய

“ஹாஹாஹாஹா…குறுந்தொகைச் சுவடியா?” சிரித்தாள் பாவை

“கண்டிப்பா,

யாயும் ஞாயும் யாயும் ஞாயும் யாரா கியரோ,

எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்,

யானும் நீயும் எவ்வழி யறிதும்,

செம்புலப் பெயனீர் போல,

அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே” என்றான் மயக்கும் கண்களோடு

“என்னவாம் இந்த செம்புலப் பெயல் நீரார் சொல்றாரு?” என்றாள் இவளும் கிறங்கி

“நம் தாய் தந்தை ஒருவரை ஒருவர் அறியாதவர்கள், எவ்வகையிலும் உறவினர்கள் இல்லை. நீயும் நானும் கூட இதற்கு முன்பு அறிமுகமானவர்கள் இல்லை. ஆனாலும் நாம் ஒருவரை ஒருவர் கண்ட கணத்தில், வானத்திலிருந்து பொழியும் மழை நீர், சிவந்த செம்மண் நிலத்தோடு கலக்கும் போது, மண்ணின் நிறத்தையும் தன்மையையும் பெற்று அதோடு பிரிக்க முடியாதபடி ஒன்றிப் போவதைப் போல நாமிருவர் நெஞ்சங்களும் தானாகவே ஒன்றோடொன்று கலந்துவிட்டன” இவள் கன்னத்தில் முத்தமிட்டான்

“பார்த்தவுடனேயே அப்படியெல்லாம் ஒன்னும் கலக்கல, மன்னர் பொய் உரைக்கிறார்” குரல் மயக்கம் கொண்டிருந்தது மங்கைக்கு

“நீ இல்லைடி, நான் கலந்துட்டேன், காரக் கொழுக்கட்டை கொடுத்து கலக்க வச்சுட்டா ஒருத்தி” கரைந்து போனான் சேர மாமன்னன்.

 

 

error: Alert: Content selection is disabled!!