நித்திலப் பேரொளி -24

ஆதேஷ் பேசிப் பேசியே தேவகியை வனக்குடிலில் குடிமாற்றி, சிறுதானிய உணவுகள் தயாரிப்பதற்கு இருவரை இணைத்து அதில் மேற்பார்வை செய்வதற்கு மட்டும் அவரை அனுமதித்திருந்தான்.

நாள்தோறும் காலை உணவுக்குப் பின், ஆதேஷும் நித்திலாவும் வனக்குடிலுக்குக் கிளம்புவார்கள்.  இவர்கள் சென்று சேர்வதற்குள் சிறுதானிய உணவுக்கடை ஆரம்பித்திருக்கும், நித்திலா வந்து சேர்ந்ததும் அவள் கையில் எடுத்துக் கொள்வாள்.  அன்றைய உணவுக்கான பட்டியல் தயாரிப்பது, உணவின் பக்குவ முறைகளை அதைத் தயாரிப்பவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பது என்பது போன்றவற்றை நித்திலாவும் தேவகியும் பொறுப்பு எடுத்துக் கொண்டார்கள்.

மாலையில்  உணவுக் கடையில் உணவை விற்பனை செய்வதை நித்திலா செய்தாள்.  இப்படியாக இது வழமையாக, ‘நம்ம வீட்டுப் பெண்ணை தெருவில் நிறுத்தி சாப்பாடு விற்க விடுகிறான்’ என விக்ரமன் ஆதேஷிடம் எகிற, ‘ஏன் துணிக்கடையில் நீங்க நின்று வியாபாரம் செய்வதில்லையா? நம் தொழிலை நாம் செய்வதில் என்ன தவறு? நித்திலா செய்தால் மட்டும் என்ன தவறு? இதை ஏன் ஆண் பெண்ணென வேறுபடுத்த வேண்டும்? நித்திலாவின் கனவு இது தான் அதற்கு ஏன் தடை விதிக்கிறார்?  அதுவும் போக குடிலுக்குள் செய்வது எப்படி தெருவானது?’ என இவனும் திருப்ப, பிறகு அமைதியானார். இதுவே குடும்பத்தினர் அனைவரின் பார்வையாக  இருக்க, விக்ரமனால் ஒன்றும் செய்ய இயலாது போனது.

அன்று மாலை நித்திலா உணவு வண்டியில் நின்று கொண்டு உணவை வழங்கிக் கொண்டிருக்க, தன் அறையில் அமர்ந்து சிசிடிவியில் பார்த்துக் கொண்டிருந்த ஆதேஷ், உணவை வாங்கியவர்கள் உணவுக்கூடம் சென்று நாற்காலிகளில் அமர்ந்து கொள்ள, இதை கவனித்தவன், எழுந்து மனைவியை நோக்கிச் சென்றான்.

மனைவியின் அருகில் சென்று அவள் பின்புறம் இருந்த சுவரில் ஒரு காலை மடக்கி ஊன்றி சாய்ந்து நின்று கொண்டு, கைகளை மார்போடு கட்டி அமைதியாக அவளைப் பார்த்து அல்லது ரசித்து நின்றான்.

“என்னவாம்…மன்னருக்கு வேணும்? சேர மன்னருக்கு சோழ நாட்டில் என்ன வேலை?” என இரு பொருள்பட இவனைக் கேட்டாள்.  கேரளத்தை முதன்மை இடமாகக் கொண்ட சேர மன்னர்கள் ஏன் சோழர்களின் இடமான தஞ்சைக்கு வர வேண்டும் என்றும், தனது அறையில் இருக்க வேண்டியவன் ஏன் தள்ளுவண்டிக் கடை அருகில் வந்து நிற்கிறான் என்னும் சிலேடையாக இவள் வினவ

“ஹாஹாஹா….நீரில் இருக்க வேண்டிய நித்திலம் தரையில் இருக்கலாம், சேரன் சோழத்தில் இருக்கக் கூடாதா?” புன்னகை இவனுக்கு

“இருக்கலாம் தப்பென்ன?  ஆமா வருடாந்திரக் கணக்கு முடிக்க ஆடிட்டர் நாளை வராங்க, நான் ரொம்ப பிஸி உன்னோட ஊர் சுற்ற நேரமில்லைன்னு வசும்மா ஈவினிங் ஷாப்பிங் போக கூப்பிட்டதற்கு முடியாதுன்னு சொல்லிட்டு வந்துட்டு, இங்க ஏன் சுவற்றில் முட்டு கொடுத்துட்டு நிற்கணும்?” இவளிலும் புன்சிரிப்பு

“ம்ம்ம் சோழத்திற்கு வந்த மன்னனுக்கு சோளம் கொடுத்து, ஐ மீன் சோள கார கொழுக்கட்டை கொடுத்து கவுத்திட்டா ஒருத்தி. அவளை பார்த்தாலே வேலை ஓட மாட்டேங்குது, கால்கள் தன்னால அவள் பின்னாடி தான் வருது.  என்ன செய்யறதாம்?”

அதுவரை தள்ளுவண்டியில் எதையோ உருட்டிக் கொண்டிருந்தவள், திரும்பி நின்று கணவனின் முகம் பார்த்தாள், என்ன என்றான் இவன் புருவங்களை அசைத்து மனைவியைப் பார்த்து, விழிகள் நான்கும் ஒன்றோடு ஒன்று கலந்து ஒட்டிக் கொண்டு காதலை வாரி தங்களில் கட்டிக் கொள்ள சுற்றுப்புறம் மறந்து அதன் தாக்கத்தில் லயித்து நின்றது ஜோடி புறாக்கள் இரண்டும்.

“நான் எதையுமே பார்க்க சாமி, பொறவு கரடி பொம்மை விற்க சொல்லக் கூடாது” என்று கூறிக் கொண்டு உண்மையில் கரடியாக வந்து நின்றான் சலீம்.

சட்டென மீட்டுக் கொண்டன புறாக்கள், ஆதேஷ் புன்னகையோடு சிகையைக் கோதிக் கொள்ள, நித்திலா நாக்கை கடித்துக் கொண்டு தள்ளுவண்டி புறம் திரும்பி நின்று கொண்டாள்.

“டேய், அந்த கார்பார்க்கிங் எஸ்ட்டெண்ட் பண்ண எஸ்பென்டீச்சர் பைல்ஸ் ரெடி பண்ண சொன்னா இங்க என்னடா பண்ற. ஒழுங்கா வேலை செய்யலைன்னா சீட்டை கிழிக்கப் போறேன் டா” இவன் சலீமை முறைக்க

“முதல்ல அதைச் செய்யங்க பாஸ், ஒரு சின்ன பையனை வச்சுக்கிட்டு பப்ளிக்ல ரொமான்ஸ் பண்றீங்களே, இதல்லாம் நியாயமா”

“என்னடா பெரிய ரொமான்ஸ் பண்ணினேன்? நான் என்ன இவளை இப்படியா கட்டி பிடிச்சேன், இல்லை இப்படி முத்தம் கொடுத்தனா” என கூறிக் கொண்டு நித்திலாவின் பின்புறம் இருந்தவாறு ஒரு கையால் கழுத்தை சுற்றி அணைத்து இவளது காது மடலில் லேசாக முத்தமிட்டுக் காட்ட

“ஆத்தி நான் ஒன்னும் பார்க்கலப்பா” என்று கண்களை மூடிக் கொண்ட சலீம்

“மனுஷன் ரொம்ப கெட்டுப் போயிட்டார், செய்ய நினைச்சதை எல்லாம் என் வாயைப் பிடுங்கி திவ்யமா சாதிச்சுட்டார்,  ஆத்தாடி இது பெரிய மாஸ்டர் பிளான்னாவுல இருக்கு.  நாளைக்கு ஆடிட்டர் வரார் கணக்கு பண்ணுங்கன்னு சொன்னா, கடலை வறுத்து கணக்கு பண்ணிட்டு இருக்கார்” என புலம்பிக் கொண்டு இடத்தை விட்டு அகன்றான்.

“ஹாஹாஹா…” அத்தனை புளங்காகிதம் மன்னனுக்கு

“ச்ச்சூ..கையை எடுங்க..” என விலகி நின்று கொண்ட மனைவி இவனை முறைத்தாள்

“பொண்டாட்டி காதலா பார்க்கணும்டி இப்டி மிளகாய் மாதிரி காந்தலா பார்க்கக் கூடாது” வம்பு செய்தான் தலைவன்

“வர வர உங்க அராஜகம் அதிகமாயிட்டே போகுது.  இப்படியா பொது இடத்தில் செய்வீங்க” இன்னும் முறைத்தாள்

“நான் என்ன லிப்ஸ்லயாடி தேனே கொடுத்தேன்” சிரித்தான் கண்களும் முகம் மலர்ந்து விரிய

“வேணாம் போயிடுங்க” என கரண்டியை காட்டி இவள் மிரட்ட

“இந்த இந்திய தேசத்தில் ஒரு ஆண்மகனை கரண்டி வச்சு சாத்தறா பொண்டாட்டி, கேட்க ஒரு குரல் இல்லையா” என இவன் வேண்டுமென்றே சற்று குரல் உயர்த்தி கத்த

எட்டி இவன் வாயை மூடியவள், “அச்சோ யாருக்காவது கேட்கப் போகுது, ஏன் இப்டி படுத்துறீங்க” என்றாள் முகம் சுருக்கி உதடுகள் குவித்து பாவமாக அழுதுவிடுபவள் போல்

வாய் பொத்திய மனைவியின் கையில் முத்தமிட்டவன் “ஹாஹாஹா..தேனே இப்போ தான்டி முத்தம் கொடுக்க தோணுது.  வரியா என் ரூமுக்கு” என்றான் கண்ணடித்து

பட்டென கையை விலக்கிக் கொண்டு இடுப்பில் கை வைத்து இவள் முறைக்க, “நானில்லப்பா” சட்டென இவள் கன்னத்தில் முத்தமிட்டு விட்டு ஓடிவிட்டான் கள்ளன்.

மனநல நிபுணர் சகாதேவனிடம் நித்திலா மருத்துவம் ஆரம்பித்து இரு மாதங்கள் ஆகியிருந்தது.

பொதுவாக மாலை குடிலில் வேலை முடிந்ததும், மனைவியை அழைத்துக் கொண்டு மருத்துவமனை வருவான் ஆதேஷ், இவன் காத்திருக்க நித்திலாவுக்கான சிகிச்சை ஒரு மணி நேரம் நடக்கும், பிறகு வீட்டிற்குச் செல்வார்கள்.

இந்த இஎம்டிஆர் சிகிச்சை மூன்று வழிகளில் நடத்தப்படும், ஒன்று பார்வை வழிப் பின்தொடர்தல்: மருத்துவரின் கையையோ அல்லது நகரும் ஒளியையோ சிகிச்சை பெறுபவர்  கண்களால் பின்தொடர்தல் வேண்டும். இரண்டாவது செவிவழி ஒலிகள்: ஹெட்ஃபோன்கள் வழியாக மாறி மாறி வரும் இடது மற்றும் வலது ஒலிகளைக் கேட்பது. மூன்று தொடு உணர்வுத் துடிப்புகள்:  சிகிச்சை பெறுபவரின் ஒவ்வொரு கையிலும் மாறி மாறி அதிர்வுறும் சிறிய பஸர்களைப் பிடித்திருக்க வைப்பது.  நித்திலா முழுமனதோடு ஒன்றி மருத்துவர் அறிவுறுத்தும் அனைத்தையும் செய்தாள்

அன்று நித்திலாவின் சிகிச்சை முடிய, வெளியே அமர்ந்திருந்த ஆதேஷை அழைத்தார் சகா.

“டேய் கண்ணா, நித்திலாவுக்கு நல்ல முன்னேற்றம் தெரியுது, இனி நீயும் கொஞ்சம் முயற்சி எடுக்கணும்” சகா இவனைப் பார்க்க

“சொல்லுங்க மாமா”

“அது…..தள்ளித் தள்ளி இரண்டு பேரும் இருக்காமல், கொஞ்சம் இணைந்து..ஐ மீன் இந்த ஹக்கிங் கிஸ்ஸிங் இதெல்லாம் இருக்கணும். அப்போ தான் ஒரு நெருக்கம் வரும், தேவைகள் தொடங்கும்..புரியுதா நான் சொல்றது”

“க்ஹும்….தேடல் எல்லாம் தொடங்கி ரொம்ப காலம் ஆச்சு, நீங்க ரொம்ம்ம்ம்ம்ப…..லேட்” என்றான் இடக்காக

“அதுதானே, அடுத்தவன் காதலைத் தான் உனக்கு கெடுக்கத் தெரியும்.  உன் காதலை எப்படி வளர்கிற பாரு சுயநலவாதி” சகா பொங்க

“இளவயது காதலைப் பற்றி கிழ வயதில் பேசுறது சரியான்னு பக்கத்து ரூம்ல இருக்க அத்தையிட்ட நியாயம் கேட்போம்” என இவன் அடுத்த அறையில் இருக்கும் சகாவின் மனைவி மருத்துவர் சந்திரா தேவியிடம் செல்ல எழுந்திரிக்க

“அடேய் அடேய்…நான் ஒன்னும் சொல்ல சாமி உட்காரு” என இவர் பதற

“ஹாஹாஹா…அது அந்த பயம் இருக்கட்டும்” அத்தனை அலப்பறை செய்தான்

“இவனை எப்படிம்மா சமாளிக்கற?” நித்திலாவைப் பார்த்தார்

“விதி விளையாடிடுச்சு” என்றாள் பெருவிரல் கொண்டு நெற்றியில் கிறீக் காட்டி நித்திலா

இவன் மனைவியை முறைக்க, நமட்டுச் சிரிப்பு மனைவிக்கு

“சரி, ஆல்ரெடி நீங்க நெருங்கிட்டதால் நல்ல முன்னேற்றம் தான்.  அப்போ அடுத்த கட்டத்துக்கு முயற்சி செய்து பாருங்க. ஐ மீன் அணைச்சுட்டு தூங்கறது இந்த மாதிரி.  அப்படி செய்தால் நித்திலாவுக்கு ஒரு பாதுகாப்பு உணர்வு உன்ட வரும், வரும் நாட்களில் அது இயல்பான குடும்ப உறவுக்கு ஒரு அழைப்பை ஏற்படுத்தும்” என சகா குறிப்பிட

தாடையைத் தடவிக் கொண்டு தன்னவளை நோக்கினான் ஆதேஷ்.

“என்னாச்சு அமைதியாகிட்டிங்க இரண்டு பேரும்?” இருவரையும் பார்த்தார் மருத்துவர்

“நாங்க…… தனித்தனி ரூமில் படுக்கறோம் மாமா” இவன் தயங்கிக் கொண்டே சொன்னான்.

“ஏன் தனி வீட்டில் போய் படுத்துக்கயேன்” வாயை வைத்துக் கொண்டு சும்மா இராமல் இவர் ஆரம்பிக்க

“சரி…நீங்க வாங்க கட்டிட்டு தூங்கலாம்” வாயாடி சும்மாவா இருப்பான் திருப்பினான்

“ஆள விடுடா சாமி, அம்மா நித்திலா உன் புருஷன்ட சொல்லி வை.  வரம்பு மீறி போயிட்டு இருக்கான்” இவனை விட்டு விட்டு நித்திலாவிடம் புகார் படிக்க

“இப்டி தான் வசும்மா அடிக்கடி உன் புருஷன்ட சொல்லி வையின்னு பேசுவாங்க” நித்திலா எதார்த்தமாகச் சொன்னாள்

“ஹாஹாஹா…என்ன பொருத்தம் ரெண்டு பேருக்கும்” இவன் சொல்ல, மருத்துவர் முறைக்க, மனைவி அச்சோ என நுனி நாக்கை கடித்துக் கொள்ள, வெடித்துச் சிரித்தான் வம்பன்.

வீடு திரும்பி இரவு உணவுக்குப் பிறகு இருவரும் அறைக்குள் வர அத்தனை தயக்கமும் பயமும் நித்திலாவுக்கு.  கைகளை பின்னி பின்னி கொண்டு நிற்க, “நிலா…பிரஷர் எடுக்காதே, மாமா சொல்றதுனால எல்லாம் செய்ய வேண்டாம், நீ போய் தூங்கு.  குட் நைட்” மனைவியின் நெற்றியில் முத்தமிட்டு விட்டு இவன் நகரப் போனான்

அவன் சடடையைப் பிடித்திழுத்து நிறுத்தியவள், “இல்ல இங்க படுங்க…ஐம் ஆல்ரைட்” கணவனின் முகம் பார்த்தாள்

அவள் கண்களில் என்ன கண்டானோ, வா என்று அழைத்துக் கொண்டு போனவன் கட்டிலில் ஒரு புறம் அவளை படுக்க வைத்து தானும் மறுபுறம் வந்து இவளுக்கு முதுகு காட்டி படுத்துக் கொண்டான்.

பத்து நிமிட அலைப்புறுதலுக்குப் பின் முடிவெடுத்தவள், மெல்ல மெல்ல நகர்ந்து கணவனின் முதுகில் கன்னம் வைத்து அழுத்திக் கொண்டாள் நித்திலா.

கையை பின்புறம் நீட்டி மனைவியின் சிகையைக் கலைத்தவன், “எதையும் நினைக்காமல் தூங்குடி தேனு…எவரிதிங் வில் பி ஆல்ரைட் (எல்லாம் சரியாகி விடும்)” என்றான் நம்பிக்கையின் கையைப் பிடித்துக் கொண்டு மனைவியின் கைகளையும் அதில் வைத்து.

error: Alert: Content selection is disabled!!