ஆதவன் நிலவை அணைத்து விடுவித்து தன் கதிர்கள் முழுவதையும் அள்ளித் தெளித்து புது ஆடை கட்டிக் கொண்டு பூமியை ஆட்சி செய்ய ஆரம்பித்திருந்தான்.
சேரமான் குடும்பம் காலை உணவிற்காக கூடியிருந்தார்கள்.
“என்ன இது இட்லி பழுப்பு நிறத்தில் இருக்கு” பிருத்வி தன் தட்டில் இடப்பட்ட இட்லியை கையில் எடுத்து வைத்துக் கொண்டு முன்னும் பின்னும் பார்த்துக் கொண்டிருக்க
“டேய் இது ராகி, குதிரைவாலி சேர்த்த இட்லி, நம்ம பெரியண்ணி ஸ்பெஷல்” ஜான்வி ஒரு வில்லை பிட்டு அதற்கு பொருத்தமாக நித்திலா வைத்திருந்த காரச் சட்னியில் தொட்டு உண்டவள்.
“வாவ்வ்வ் அண்ணி இட்ஸ் அமேசிங், எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு” பாராட்டுப் பத்திரம் வாசித்தாள்.
“வசந்தா எனக்கு ரெண்டு இட்லி வை” விக்ரமன் மனைவியிடம் கேட்டவுடன் இரு இட்லிகள் வைக்கப்பட்டது.
ஒரு வில்லை சாம்பாரிலும் அடுத்ததை காரச் சட்னியிலும் தொட்டுக் கொண்டு உண்ட விக்ரமன், “வசந்தா இனி தினமும் மெனுவை உன் மருமகளிடம் கொடுக்கச் சொல்லு, என்ன தான் இத்தனை வருஷம் செய்து போட்டியோ. எங்க பாட்டி கைப்பக்குவம் கடைசியா இந்த வீட்டுக்கு திரும்பி வந்துடுச்சு” மனைவியிடம் அமர்த்தலாக சொல்லியவர் ரசித்து உண்ணலானார்.
‘ஏன் இவர் மெனு ரெடி பண்றது, தினமும் மருமகள் சமைக்கிறதை வயிறு முட்ட சாப்பிட மட்டும் தெரியுது, கவுரவத்தை விட்டுட்டு ஒரு வார்த்தை அவளை பாராட்ட மனசு வருதா? இதில் என்னை குத்த வேண்டியது’ மனதில் நொடித்தார் வசந்தா
“பெரிம்மா, கேட்டுச்சு, கேட்டுச்சு. இருந்தாலும் இந்த வாங்கு வாங்கக் கூடாது நீங்க” பிருத்வி பத்த வைக்க
“பலத்த அடி போல…” வம்பன் ஆதேஷும் எடுத்துக் கொடுக்க
“ஆத்தி நான் உங்களை ஒரு வார்த்தை சொல்வேனாங்க, இவனுங்களை நம்பாதீங்க” கைகளை உதறிக் கொண்டார் வசந்தா
விக்ரமன் மனைவியை முறைக்க, எதிரெதிர் புறம் அமர்ந்திருந்த சகோதரர்கள் எட்டி ஹை பை கொடுத்துக் கொண்டனர்.
ஆதேஷின் இடது புறம் அமர்ந்திருந்த நித்திலா இவனின் இடுப்பை கிள்ள, “ஹாஹாஹா..” சிரித்தான் கணவன்
இவனது வலது புறம் அமர்ந்திருந்த நயனா சாப்பிட வந்ததிலிருந்தே ஒரு அசௌகரியமாகவே இருந்தாள். திடீரென வயிற்றைப் பிரட்டிக் கொண்டு வர எழுந்து ஓடினாள்.
என்னாச்சு என்னாச்சு.. என பதறிய குடும்பம் மொத்தமும் அவளைச் சூழ்ந்து கொண்டது.
“நயனி என்னாச்சும்மா..” லிங்கா அருகில் வந்து அவளது கையைப் பிடிக்க
அனைவருக்கும் முன் சொல்லத் தயங்கியவள், எல்லோரையும் சங்கடமான ஒரு பார்வை பார்த்தாள்.
நயனாவை நெருங்கிய கோப்பெருந்தேவி விஷயத்தை ஒருவாறு யூகித்துக் கொண்டார்.
“எல்லாம் நல்ல விஷயம் தான், அவளை கொஞ்சம் தனியா விடுங்க, வசு அவளை நாற்காலியில் உட்கார வை. வள்ளி கொஞ்சம் புளிப்பா அவளுக்கு குடிக்கக் கொடு” வரிசையாக கட்டளை பிறப்பித்தவரின் குரலில் துள்ளல் வழிந்தது.
“ஹுரே….ஐ குட்டி பாப்பா வரப் போகுது” நயனாவின் கன்னத்தில் முத்தமிட்டு துள்ளிக் குதித்தாள் ஜான்வி
கூடியிருந்த அத்தனை பேருக்கும் அளவிட முடியாத மகிழ்ச்சி.
“வாழ்த்துகள் டா” நயனாவின் தலையின் உச்சியில் முத்தமிட்டு ஆதேஷ் தன் மகிழ்ச்சியை தெரிவித்து, தனது இரட்டையை கட்டிக் கொண்டான்.
“ஒரு நிமிஷம்…எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும். வெட்டு குத்துன்னு வேடிக்கை காட்டினதுங்க எப்படி கல்யாணம் ஆகி மூன்றே மாதத்தில் இப்படி” என வயிற்றைத் தடவிக் காட்டினான் பிருத்வி
லிங்கா வெட்கிக் கொண்டு தலை கோத, நயனா பூமியில் தலையைப் புதைப்பது போல் குனிந்து கொண்டாள்.
“ஹாஹாஹா…..காம்ப்ளானில் கொஞ்சம் பூஸ்ட் சேர்த்து கலந்து குடிடா இடியட், வளர்ந்துடுவ” அத்தனை ஆனந்தம் ஆதேஷுக்கு.
“அண்ணா, காதலில் கசிந்துருகி கல்யாணம் பண்ண உங்ககிட்ட தான் முதலில் நான் எதிர்பார்த்தேன். இங்க என்னன்னா, கீரிக்கும் பாம்புக்கும் கங்கிராட்சுலேஷன் சொல்லிட்டு இருக்கோம்” என பிருத்வி நையாண்டி செய்தான்.
அதுவரை ஆனந்தப் பெருங்கடலில் ஆழ்ந்து போயிருந்த நித்திலா, சட்டென யாரோ அதிலிருந்து கையைப் பிடித்திழுத்து தரையில் போட்ட உணர்வில் விழுக்கென நிமிர்ந்தாள்.
அனைவரின் கண்களும் ஆதேஷ்-நித்திலா ஜோடியிடம் ஒரு ஆவலோடு திரும்ப, பெண் கண்களில் பொங்கிய நீரை கட்டுப்படுத்திக் கொண்டு அமைதியாக இருந்தாள்.
“எப்போ பிராப்தம் இருக்கோ அப்ப வரும், வாங்க எல்லாரும் சாப்பிடலாம்” அத்தனை பார்வைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார் பாட்டி.
தனது தட்டிலிருந்த ஒரு இட்லியை கடினப்பட்டு உள்ளே இறக்கினாள் நித்திலா.
மனைவியின் முக மாறுதலை, அலைப்புறுதலை நன்கு உணர்ந்து கொண்ட ஆதேஷுக்கு மனது கனத்துப் போனது.
கால்கள் இரண்டையும் கட்டிக் கொண்டு அதில் முகத்தைப் பதித்தவாறு மாடித் தோட்ட ஊஞ்சலில் அமர்ந்திருந்தாள் நித்திலா.
மனையாளைத் தேடிக் கொண்டு வந்தவனுக்கு நெஞ்சில் ஊசி குத்தும் உணர்வு.
தன் நிலாவின் தலையை வருடியவன், “நிலா…இந்த நித்திலம் எப்படி வருது தெரியுமா?” என்றவன்
“ஒரு நுண்ணிய ஒட்டுண்ணி, ஒரு மெல்லுடலிக்குள் நுழைந்து அதன் ஓட்டிற்குள் குடியேறும், அந்த நுண்ணிய ஒட்டுண்ணியால் எரிச்சலடைந்த மெல்லுடலி, அதன் வெளிப்புற திசு செல்களால் ஒரு முத்துப்பையை உருவாக்கி, எரிச்சலூட்டிய ஒட்டுண்ணியை மூடுவதற்காக கால்சியம் கார்பனேட் மற்றும் கொங்கியோலின் என்ற வேதிப்பொருட்களைச் சுரக்கிறது. இந்தச் சுரப்புச் செயல்முறை பலமுறை மீண்டும் மீண்டும் நடைபெற்று, அதன் மூலம் இறுதியாக ஒரு முத்தை உருவாக்குது.
என் நிலா அந்த முத்து மாதிரி. அத்தனை விலைமதிக்க முடியாதவள். அவளோட எத்தனையோ மனப் போராட்டங்களில் இருந்து வெளியே வந்துட்டா. அவள் ஆசைப்பட்ட மாதிரி அந்த முத்து இன்னும் இரண்டு முத்தை இந்த உலகத்துக்கு கொண்டு வரப் போகும் நேரத்தில் இப்படி கப்பல் கவிழ்ந்த மாதிரி உட்காரலாமா…ம்ம்ம்?” இவன் குரலில் அத்தனை பரிவும் நம்பிக்கையும்.
நிமிர்ந்து பார்த்தவள் இவன் கைகளைப் பிடித்து கன்னத்தில் வைத்துக் கொண்டாள்.
“ஐ லவ் யூ சோ மச்” என்றாள் விழிநீர் துளியாகச் சிதற, தன் வயிற்றோடு கட்டிக் கொண்டான் ஆதேஷ்.
தம்பதிகள் இருவரும் கிளம்பி குடிலுக்கு வந்தார்கள். இருவரையும் வேலை இழுத்துக் கொண்டாலும் அன்றைய நாள் கொஞ்சம் மெதுவாகவே நகர்ந்தது.
மனைவியை அவ்வப்போது தனது கேமராவில் பார்த்துக் கொண்டான் அல்லது நேரே சென்று ஏதாவது வம்பு செய்து விட்டு வந்தான்.
மாலை ஆறுமணிக்கு மனைவியிடம் சென்று பிரகதியைப் பார்க்கப் போகலாமா என்க, மருத்துவமனை போக வேண்டுமே என்றாள் மனைவி. சகாதேவனுக்கு போன் செய்தவன் நித்திலா இன்று வரப்போவதில்லை என்று சொல்ல, வழமை போல் அந்தப்பக்கம் அவர் ஏன் எதற்கு என கேள்விகளை அடுக்கினார். ரொமான்ஸ் பண்ணுடான்னு சொல்லுங்க, அப்புறம் கூடவே கூட்டி வைச்சுட்டு உங்க காலாவதியான காதலைப் பத்தி பேசுங்க, தென் எப்படி நான் ரொமான்ஸ் பண்றது என இவனும் வம்பு பேச, போடா போடா என வைத்து விட்டார் மருத்துவர்.
பெருவுடையாரை தரிசித்து விட்டு லிங்கத்தைச் சுற்றி வரும் சுற்றறையில் மனைவியை நிறுத்தியவன், “நிலா, இதில் பாரேன், சோழர்கள் மற்றும் நாயக்கர்கள் வரைந்த ஓவியங்கள் இருக்கு, இதில் நூற்றி எட்டு கர்ணங்கள் இருக்கு, இங்க பாரு எண்பது சிவதாண்டவம் இருக்கு. பட் என்ன காரணம் அப்படின்னு தெரியல, இந்த ஓவியங்கள் முடிக்கப்படாமல் விட்டிருக்காங்க” என்றவன் அவற்றை வருடினான்.
பிரகாரத்தை விட்டு வெளியே வந்து விமானத்தை நோக்கியவன், “நிலா…சோழர் காலத்தில் இந்த விமானம் முழுவதும் தங்க முலாம் பூசப்பட்டு இருந்ததுன்னு சொன்னா நம்ப முடியுதா” என இவளைப் பார்த்தான்.
“உண்மையா? இவ்ளோ பெரிய விமானத்திற்கு தங்க முலாமா?” கண்களை விரித்தாள் பாவை.
“ஆமா, இது எல்லாத்தையும் கல்வெட்டுக்களில் பதிச்சிருக்காங்க” என்றவன் அதற்குண்டான கல்வெட்டின் அருகில் சென்று படித்துக் காண்பித்தான்.
“வாவ் பென்டாஸ்டிக், எப்படி ஒரு அழகாக டாக்குமெண்ட் பண்ணிட்டு போய்ட்டாங்க” வியந்து நோக்கினாள்.
பிறகு விமானத்தின் பின்புறம் அழைத்துச் சென்றவன் விமானத்திற்கு கீழ் உள்ள லிங்கோத்பவர் சிற்பத்தைக் காட்டினான், “நிலா இந்த லிங்கோத்பவர் இருக்காரே, இவருக்கு ஒரு கதை இருக்கு. சிவனின் அடிமுடி காண, விஷ்ணு வராக அவதாரத்தில் பன்றியாக மாறி சிவனின் அடியைக் காணப் போறார், பிரம்மா அன்னப் பறவை வடிவம் எடுத்து, விண்ணுயரப் பறந்து முடியைத் தேடினார். அவரால் முடியைக் காண இயலாத நிலையில், தாழம்பூவைச் சாட்சியாக வைத்து முடியைக் கண்டதாகப் பொய் கூறினார். இருவரின் அகந்தையை அடக்க, நெருப்புத் தூணைப் பிளந்து கொண்டு சிவபெருமான் லிங்கோத்பவராக வெளிப்பட்டார்.
இந்த லிங்கோத்பவர் சிற்பத்தின் அமைப்பு ரொம்ப விசேஷமானது. இதில் லிங்கத்தின் நடுவில் சிவபெருமான் நின்ற கோலத்தில் காட்சி தருவார். சிவனின் பாதங்கள் பூமியிலும், தலை முடி வானத்திலும் மறைந்திருப்பதாக அதாவது எல்லையற்றவராக இச்சிற்பம் வடிவமைக்கப்பட்டிருக்கும். லிங்கத்தின் அடிப் பகுதியில் பூமியைக் குறியீடாகக் கொண்டு வராகமும், லிங்கத்தின் மேல் பகுதியில் வானைக் குறியீடாகக் கொண்டு அன்னமும் இருக்கும். சோழர்கள் கட்டின கோவில்களில் இந்த சிற்பத்தை நாம் பார்க்கலாம்” என்றவன்
பிறகு காலகாலர் சிற்பத்தைக் காட்டி, “நிலா இது என்ன தெரியுமா?” என கேட்டான்
“காலகாலரா, இந்த மிருகண்டு முனிவரின் மகனான சிவபக்தன் மார்க்கண்டேயனைக் காப்பாற்ற சிவபெருமான் லிங்கத்திலிருந்து கோபத்துடன் வெளிப்பட்டு, எமனைத் தனது காலால் உதைத்து சம்ஹாரம் செய்தாரே. காலனுக்கே காலனாக விளங்கியதால், சிவபெருமானுக்கு இப்பெயர் ஏற்பட்டதுன்னு அப்பா சொல்லி இருக்காங்க” என்றாள் மனைவி
“அறிவு டி நீ” கொஞ்சிக் கொண்டவன்
“இங்க பாரு, இந்த பக்கம் எமன் கயிறோடு நிற்கிறார், நடுவில் சிவன் சூரசம்ஹார ரூபத்தில் இருக்கார், இதோ சிவனின் இடது புறத்தில் மார்க்கண்டேயன் சிவலிங்கத்தைக் கட்டிட்டு நிற்கிறார். இது எல்லாம் சாதாரண சிற்பங்களா, நாம கடந்து போயிட முடியாது. அந்தக் காலத்தில் ஒரு கதையை சிற்பக்கலை வடிவில் எப்படி மக்களுக்குச் சொல்லியிருக்காங்க அப்படின்ற தத்துவார்த்தத்தை புரிஞ்சுக்கணும். எப்பவோ நம் முப்பாட்டன் செய்துட்டு போனாலும் நாம் இன்னும் பேசறோம் பாரு, அது தான் இதன் சிறப்பே” என்றான் குரலில் பெருமை பொங்க
“ஆரம்பிச்சாச்சு முப்பாட்டனுக்கு போற்றல் பா பாட” சிரித்தாள் மனைவி.
“அவ்வளவு பெருமை இருக்குடி, பேசிட்டே தான் இருக்கணும். தப்பென்ன? வெளிநாட்டில் நாலு சுவத்தை கட்டி வச்சு அதுக்கு நடுவில் ஒரு கல்லை நட்டு வச்சாலும், இங்க இருந்து காசு செலவு பண்ணி போய் வாவ்ன்னு சொல்லி, இரண்டு போட்டோ எடுத்து இன்ஸ்டா, பேஸ்புக் இத்தியாதியில் போட்டால் தான் பெருமை நமக்கு. நம் கண் முன்னே ஆச்சரியங்கள் பொதிந்து கிடக்கு, ஆனா பார்க்க மாட்டோம். என்ன இருக்கு… கோவில் கோவிலா கட்டி வச்சுருக்காங்கன்னு இழிவா தான் பேசுவோம். நம் மூத்தோர் சமூகம் இறை நம்பிக்கை கொண்டு வாழ்ந்த சமூகம். ஒவ்வொரு கோவிலும் மக்களை இயற்கை பேரிடரில் இருந்து காக்கவும், அவர்களின் செல்வங்களைப் பாதுகாக்கவும் தான் கட்டினார்கள். இதில் கற்க நிறைய விஷயங்கள் இருக்கு. நமக்குத் தான் அதன் அருமை தெரிவதில்லை” தனது ஆற்றாமையைக் கொட்டினான்.
மாமன்னன் ராஜ ராஜ சோழன் நித்திலாவில் நேரில் வந்து நிதர்சன உண்மைகளைப் பேசிக்கொண்டிருப்பது போல் உணர்ந்தாள் பெண்.