ஒரு கோப்பைத் தேநீரை அரைமணி நேரத்திற்கும் மேலாக ரசித்துக் குடித்தவள், கடைசிச் சொட்டை நுனி நாக்கில் சரித்துச் சுவைக்க
“படுத்தறா என்னை” மெலிதாக முணங்கித் தலை கோதிக் கொண்டான் தலைவன்.
“தேனே…பாவம் டி அந்த டம்ளர் வாயிருந்தா அழுத்திடும்” நக்கல் இவனில்
அச்சோ நாக்கைக் கடித்துக் கொண்டாள் பெண். அத்தனை தடுமாற்றம் இவளில். கணவனைப் பார்ப்பதும் தலையைக் கவிழ்ந்து கொள்வதுமாக இருந்தவள், இனி முடியாது என எழுந்து கொண்டாள்.
மெல்ல அடி மேல் அடி வைத்துச் சென்று அந்த ஹாலின் ஜன்னலில் முகத்தைப் பதித்து நிலவு இருட்டோடு இசைக்கும் கானத்தை தன் காதுகளால் உணர முடியுமா என ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தாள்.
மனைவியின் செயல்பாடுகளை கண்களின் வழியே மனதில் உள்வாங்கியவன், எழுந்து சென்று அவளின் பின்புறம் பட்டும் படாமலும் நின்று கொண்டு, கைகள் இரண்டையும் இவளைச் சுற்றி சுவற்றில் பதித்து வைத்து, இவளின் கழுத்தின் வழியே எட்டி ஜன்னலைப் பார்த்தான்.
“என்னடி தேனே கண்டுபிடிச்சுட்டயா?” என்றான் பூவை போர்த்திக் கொண்ட குரலில்
“என்ன என்ன…கண்டுபிடிக்கணும்…” இவளின் மொழி வலுவிழந்தது
“ம்ம்…இருட்டை இப்படி வெறிச்சுப் பார்த்துட்டு இருக்கயே, புதையல் ஏதாவது கண்டுபிடிச்சீயோன்னு கேட்டேன்” என்றான் இவளின் காது மடலில் முத்தமிட்டு
“பாவா…தூங்கப் போகவா…துக்கம் வருது…” சிணுங்கியது பெண்
“அடி பிச்சுடுவேன் போக்கிரி, சும்மா இருந்தவனை முத்தம் கொடுத்து மயக்கிட்டு, தூங்கிட்டு இருந்தவனை போன் பண்ணி வந்து கூட்டிட்டுப் போடான்னு கிளப்பி விட்டுட்டு, ஏலம் டீ கொடுத்து ஏமாற்றிட்டு இப்போ தூங்கப் போறாளாம்…பாவம் டி உன் பாவா…” குழைந்தது மன்னன் குரல்
“பச்சை பொய்..நீங்க தூங்கிட்டு எல்லாம் இருக்கல, உண்மையைச் சொல்லுங்க நான் எப்போ போன் பண்ணுவேன், வந்து கடத்திட்டு போகலாம்னு தானே வெயிட் பண்ணுனீங்க” மனைவி இவன் கன்னத்தில் செல்லமாக அடி வைக்க
“ஹாஹாஹா….ராட்சசி டி நீ…இப்போ ரட்சிக்கணும் உன் பாவாவை…” என்றவன் நித்திலத்தை தன் பக்கம் திருப்பி முகவடிவை அளக்க, இவனுக்குக் குறைவில்லாத ஒரு மயக்கமும் எதிர்பார்ப்பும் இவள் கண்களிலும் கொட்டிக் கிடந்தது.
கைகளைப் போர்வையாக்கி தூக்கிக் கொண்டான் தன் பொன்நிலாவை.
காடும் காடு சார்ந்த இடமுமான ஆதேஷ் உருவாக்கிய இந்த மருதத்தில், மனம் நிறைத்தவளோடு இணைந்து நிறைந்து வழிந்து தங்களுக்கான குறுந்தொகைப் பாடலை மெல்ல மெல்ல இயற்றலாகினர். பொன் நிலாவை மஞ்சத்தில் பொன்னூஞ்சல் கட்டி தூளியாடினான்.
குறுந்தொகையில் காமம் என்பது இயற்கையான மலர்ச்சி, எதிர்பார்ப்பு, பகிர்வு, இணைவு ஆகியவற்றின் வழியே உருகிக் கரையும் உயிர்களின் உன்னத தாகமாகப் பேசப்படுகிறது. இதை வெறும் இச்சை என்னும் வெற்றிடத்தில் கொட்டிவிடாமல், ஆழமான காதலாகவும், ஆன்ம நேயமாகவும் பார்க்கப்படுகிறது.
ஓர் ஆன்ம நேயம் இல்லை என்றால் இங்கே நித்திலத்தை தன் நிலையில் கொள்வது ஆதேஷுக்கு சாத்தியமற்ற ஒன்றாக இருந்திருக்கும்.
ஆழ்ந்த காதல் பெண்ணில் ஆட்சி செய்திருக்கவில்லை என்றால் எத்தனை காலங்கள் ஆனாலும் தன்னவனிடம் ஒப்புக் கொடுத்திருக்க மாட்டாள் என்பது தான் நிதர்சனம்.
சிப்பியில் ஒரு முத்து எப்படி தன்னை உருவாக்கிக் கொள்ள காலங்கள் எடுக்கிறதோ, அதே போல் இந்த நித்திலமும் தன்னிலிருந்து தன்னை ஆதேஷின் உதவியால் மீட்டெடுக்க காலங்கள் செலவு செய்து வெற்றி கண்டு, மீட்டெடுத்ததை அவனிடமே சமர்ப்பித்தாள்.
வானுலக தேவதைகள் வான் வீதிதோறும் கூடி, இவர்களின் இணைவுக்கவிதை முழுமை பெற நட்சத்திரங்களை கைகளில் அள்ளித் தூவி ஆசீர்வதித்தார்கள்.
வெள்ளி வீதியிலிருந்து விழுந்த விண்மீன்கள் காதல் பறவைகள் இருவரையும் சூழ்ந்து கொண்டு வெளிச்ச சூட்சுமம் விளக்கியது.
பிரகாசமான அவ்வொளி அந்த இடத்தை மட்டுமல்ல, இதுவரை இருள் படிந்து கிடந்த மங்கையின் மனதிலும் சென்று விடியல் வகுத்து மலர்த்தோரணங்கள் கட்டியது.
கொடுமையாக தன் நிலவுக்குத் திணிக்கப்பட்ட ஒன்றை கொண்டாட்டமாக மாற்றினான் சேரமன்னன். தன் ஆனந்த யாழை அற்புதங்கள் சூட்டிக் கொள்ள மீட்டினான்.
சில மணி நேரத் துளிகளுக்குப் பிறகு ஆதேஷ் தங்களது படுக்கை அறையிலிருந்த நீள்விருக்கையில் அமர்ந்திருந்தான்.
மனதில் குடி கொண்டிருந்த பயமும் தயக்கமும் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்க, அளவறியாத அத்தனை நிறைவு.
மெல்ல காலடிச் சத்தம் இவன் சிந்தை கலைக்க, நிமிர்ந்து பார்த்தால் நித்திலா பூரித்துப் போன முகத்தோடு நின்றிருந்தாள்.
சட்டென இவனின் கீழே மண்டியிட்டு அமர்ந்து கொண்டு நெஞ்சோடு சாய்ந்து கணவனைக் கட்டிக் கொண்டாள்.
நித்திலாவிடம் தேம்பித் தேம்பி அத்தனை அழுகை, மனையாளின் சிகையில் கை நுழைத்துக் கோதியவனுக்கு கண்கள் இரண்டும் கலங்கிக் கிடந்தது.
“ஐ லவ் யூ, ஐ லவ் யூ சோ மச்…” இவளின் வாய் முணுமுணுத்துக் கொண்டிருந்தது.
கடந்த ஒரு மணி நேரமாக இந்த மந்திரத்தை மட்டும் தான் மனனம் செய்து கொண்டிருக்கிறாள்.
“நிலா….நிலாம்மா….போதும் டி…” இவன் குரல் கரகரத்தது.
“ஐ லவ் யூ…..ம்ம்ம்…” பெருங்குரலெடுத்து அழுதாள் பெண்.
அவளின் தலையை இறுக்கி அணைத்துக் கொண்டவன் கண்களில் நீர்த்துளி சிந்தியது
“பாவா…நான்…. நான்….நீங்க….சந்தோஷமா இருக்கு… தேங்க்ஸ்…எல்லாத்துக்கும்….என் வாழ்க்கையில் நீங்க ஒரு வரம்….யாருக்கும் கிடைக்காத வரம்…பெருவுடையான் கொடுத்துட்டான்….ஆமா…வரம் தான் கொடுத்துட்டான்” அழுகையினூடே பிதற்றினாள் பேதை.
வாழ்க்கை எல்லோருக்கும் வாழ்க்கைத்துணையை சரியாக அமைப்பதில்லை. அப்படி சரியாக அமையப் பெற்றவர்கள் அதன் அருமை உணர்ந்து தன் துணையை ஆராதிப்பதில்லை. நித்திலாவிற்கு கொடுமைகள் செய்து ஒரு கதவை மூடிய இறைவன், அவளைத் தன்னுள் பொத்தி வைத்து போற்றிக் கொள்ளும் மனிதனை வரமாக மற்றொரு கதவின் வழியாக அனுப்பி வைத்தான்.
மறுநாள் பொழுது மிக அழகான பொன்விடியல் பொட்டிட்டுத் தொடங்கியது.
தனது மார்பில் தஞ்சம் கொண்டு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த வாதுகையை தன் மூக்கின் நுனி கொண்டு அவளின் கன்னம் தேய்த்தான் ஆதேஷ்.
“ம்ம்…ச்சூ பாவா…தூங்க விடுங்க ப்ளீஸ்” சிணுங்கல் சிதறியது பெண்ணில்
“எழுந்துக்கோடி தேனே…..நான் பிரகதியைப் பார்க்கப் போகணும்” கன்னத்தில் முத்தமிட்டான்
“இன்னைக்கா….வேண்டாம்….எனக்கு இந்த குஷன் தான் தூங்க நல்லா இருக்கு. இவ்ளோ நாள் மிஸ் பண்ணிட்டேன்” தலையை வாகாய் வைத்துப் படுத்துக் கொண்டாள்
“கொழுப்பு பிடிச்சவ, டைவர்ட் பண்ணாதடி ராட்சசி….ப்ளீஸ்…தலையணையில் படுத்துக்கோ. நான் போகலைன்னா…பிரகதி கோபமாகிடப் போறான்”
“ம்ஹும்….முடியாது…ஆமா…உங்களுக்கு உங்க பிரகதி பிடிக்குமா இல்ல நிலாவா? யாருக்கு முதலிடம்” கண்கள் மூடியவாறு கேட்டாள்.
“ஹாஹாஹா….. ஆட்டைக் கடிச்சு, மாட்டைக் கடிச்சு, மனுஷனைக் கடிச்ச கதையா….இப்போ என்னடி பிரகதிட வந்துட்ட?” மலர்ந்த சிரிப்பு இவனுக்கு
“ஷ்ஷு….பேச்சு மாற்றக் கூடாது, சொல்லுங்க”
“ம்ம்ம் சந்தேகமே வேண்டாம்…பிரகதி தான்…” நமட்டுச் சிரிப்பு மன்னனில்
பட்டென கண் திறந்தவள், “போங்க…நான் இனி உங்க பக்கத்தில் வந்தேன்னா என்னன்னு கேளுங்க” அவனிலிருந்து சரிந்து தலையணையில் குப்புறப் படுத்துக் கொண்டாள்.
“ஹாஹாஹா…..காரணம் கேளு டி தேனே….அவன் தலையில் நிலா வச்சுருக்கான், அதனால் பிடிக்கும்” ஆதேஷ் மனைவியை இழுத்து தன்னில் போட்டுக் கொண்டான்.
“லிங்கம் தான் இருக்கு அங்க….பொய்…முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியாது மன்னா”
“சரி…என் கூட வா…உண்மையா பொய்யான்னு பார்த்துடலாம்” என்றவன் எழுந்து குளித்துத் தயாராகி, இவளையும் இழுத்துக் கொண்டு போனான்.
வழக்கம் போல் சென்று ஓதுவார்கள் பாடல் கேட்டு, நமச்சிவாயரிடம் குசலம் விசாரித்து, பிரகதியைத் தரிசித்து விட்டு விமானத்தின் சுற்றுப் பகுதிக்கு வந்தார்கள்.
“இங்க பாருடி தேனே, சந்திரசேகரர் இருக்கார் பாரு. இவர் தான் சிவபெருமானின் அறுபத்து நான்கு மூர்த்தங்களில், பத்தாவது வடிவமாகப் போற்றப்படுபவர். சந்திரன் அதாவது பிறையை தனது தலையில் சூடியிருப்பதால் இந்தப் பெயர் இவருக்கு. இதற்குப் பின்னாடியும் ஒரு புராணக் கதை இருக்கு நிலா. தட்சனின் சாபத்தால் தனது பதினாறு கலைகளையும் இழந்து தேய்ந்து கொண்டிருந்த சந்திரன், சிவபெருமானைச் சரணடைந்தார். சிவபெருமான் சந்திரனின் ஒரு கலையை மட்டும் தனது தலையில் சூடி, அவருக்கு மீண்டும் பொலிவையும் நிலையான வாழ்வையும் தந்து அருளினார். அதுக்காகத் தான் பிறையை தலையில் வச்சுருக்கார். அதாவது நான் நிலாவை என் தலையில் வச்சுருக்க மாதிரி” புன்னகைத்து கண் சிமிட்டினான்.
“காணலையே…தலையில்” மனைவியும் புன்னகைத்தாள்.
“மூளை உள்ளே நீ தானடி இருக்க…அதைச் சொன்னேன்”
“ஆமா…இது என்ன அந்த கோபுரத்துக்கு சம்பந்தம் இல்லாமல் யாரோ வெள்ளைக்காரர் மாதிரி” என்று ஒரு தொப்பி அணிந்த வெள்ளைக்காரர் சிலையைக் காட்டிக் கேட்க
“இதுக்கு ஒரு வரலாறு இருக்கு, தொப்பி அணிந்திருக்கும் அந்த மனிதர், டச்சு மற்றும் டேனிஷ் கிழக்கிந்திய கம்பெனியில் பணியாற்றிய டச்சு காலனித்துவ அதிகாரியான ரோலண்ட் கிராப்பேவாக இருக்கலாம்ன்னு நம்பப்படுகிறது. அவர் தரங்கம்பாடியின் தலைமைத் தளபதியாகவும் அதன் பின்பு ஆளுநராகவும் ஆனபோது, ரகுநாத நாயக்கருடன் இணைந்து டேனிஷ் வர்த்தகம் மிகச் சிறப்பாக நடைபெற காரணமாக இருந்தார் அப்டின்னு ஒரு வரலாற்றுக் கதை இருக்கு. இந்தக் குறிப்பிட்ட சிலை சோழர் காலத்தைச் சேர்ந்தது அல்ல, ஆனால் இது நாயக்கர்கள் ரோலண்ட் கிராப்பேக்கு வச்சிருக்கலாம் அப்டின்னு வரலாற்று ஆய்வாளர்கள் சொல்றாங்க” விளக்கினான் மனைவிக்கு
“இன்ட்ரஸ்டிங் இல்ல…..எத்தனை விஷயம் இருக்கு இங்க..” ஆச்சரியப்பட்டாள் பெண்
“இன்னும் நிறைய இருக்கு நிலா, இந்த விமானம் அடியில் பார் அத்தனையும் கல்வெட்டுகள் தான் இருக்கு. அதில் அவ்வளவு விஷயம் எழுதி இருக்காங்க. அதெல்லாம் ஒரு நாள் படிக்கலாம். இப்ப வா…வீடு போய் சேரலாம். காலை சாப்பாட்டுக்கு போனால் கொஞ்சம் நேரம் விக்ரமன் கூட விளையாடிப் பார்க்கலாம்” வம்பு வந்து வாகை சூடியது இவனில்.
கணவனின் புறங்கையைக் கிள்ளி முறைத்துக் கொண்டாள் மனைவி.
கைகளைக் கட்டிக் கொண்டு விமானச் சுவற்றில் சாய்ந்து நின்று கொண்டிருந்த மாமன்னன் ராஜ ராஜன், “நல்ல ஜோடி..” என சிரித்தானோ?!