நித்திலப் பேரொளி-28

மாதங்கள் மகிழ்ச்சியையும் மலர்ச்சியையும் தன் தோள்களில் சுமந்து நடந்து கடந்தது.

சேரமான் குடும்பத்தின் மக்கள் அனைவரும் அந்த பிரசவ அறையின் முன் கூடி எதிர்பார்ப்புகளை கண்களில் ஏந்தியவாறு இளவட்டம் நின்று கொண்டிருந்தார்கள் என்றால் முதியவர்கள் மற்றும் முதுமைக்கு முன்னுரை எழுதிக் கொண்டிருப்பவர்கள் அங்கு கிடந்த நாற்காலிகளில் மையம் கொண்டிருந்தார்கள்.

“லிங்கா உள்ள போடா, அவளை மட்டும் விட்டுட்டு இங்க நின்னுட்டு இருக்க, அவளே ரொம்ப பயந்துட்டு இருக்கா, நீ போனால் கொஞ்சம் தைரியம் வரும் இல்லையா” தன் இரட்டையை ஊக்கிக் கொண்டிருந்தான் ஆதேஷ்.

“உன் பேச்சைக் கேட்டு அரைமணி நேரம் முன்னே உள்ளே போனேன், அம்மா…அப்பான்னு….கத்திட்டு இருந்தா…ஏன் இப்போ அத்தான்னு கத்துறதுன்னு சும்மா ஒரு ப்ளோல கேட்டுட்டேன். ஷட் யுவர் மவுத் யூ இடியட், எல்லாம் உன்னால வந்தது. என்னென்னமோ கண்டுபிடிக்கிறாங்க, இந்த வலியை கணவன்களுக்கு டிரான்ஸ்பர் பண்றதுக்கு ஏன் யாருமே முயற்சி செய்ய மாட்டேங்கறாங்க, திஸ் வேல்ட் இஸ் பார் மேல்ஸ், ஆல் ஆர் மேஷாவனிஷ்ட்ஸ்..அது இதுன்னு ஃபெமினிசம் பேசுறாடா. சத்தமில்லாமல் ஓடி வந்துட்டேன்” என்றான் சோகமாக லிங்கா.

“ஹாஹாஹா…..” வயிறு குலுங்க சிரித்தான் ஆதேஷ்.

“அது மட்டுமில்ல…பொறக்கப் போற குழந்தையை இந்த ரிசேர்ஸ் பண்ண படிக்க வைக்கப் போறாளாம்… எங்க போய் முட்ட நான்…”

“ஹாஹாஹா…..வாஸ்தவமான பேச்சு. அவள் வலி அவளுக்கு…அதுக்காக ஓடியாடா வருவ” இவன் விட்டுக் கொடுப்பானா தன் வாலுப்பிள்ளையை?

“அவளை கெடுக்கறதே நீ தான். ஆ ஊன்னா என் அத்தான் இப்டியெல்லாம் திட்ட மாட்டாங்க, மனசு வலிக்காம நீ தப்பு பண்றன்னு சொல்ற திறமை உங்களுக்கெல்லாம் சுட்டுப் போட்டாலும் வராதுன்னு வாய் வலிக்க எப்போ பாரு உன் புராணம் தான் பேசுறா” நொடித்தான் தம்பி.

“விடுடா….சின்ன புள்ளடா அவ…” அத்தான் ஒத்தூதினான்.

“ஏதே சின்ன புள்ளையா? அவளா? உனக்கென்ன அண்ணி அத்தனை அமைதி. நீ சொல்ற பேச்சுக்கு மறுபேச்சில்லை அங்க. இங்க அப்படியா, நான் ஒன்னுன்னா இவள் பத்துன்னுவா”

“யாரு…உங்க அண்ணியா…அவள் அமைதியின் அர்த்தம் அடியேன் மட்டுமே அறிவேன்” தன் நிலாவைப் பேசும் போது முகம் மலர்ந்து கிடந்தது இவனுக்கு.

“நம்பிட்டேன்…உன்னை, உன் வாயை வச்சு குப்பை கொட்றாங்களே, அதுக்கே கோவில் கட்டணும் அவங்களுக்கு”

“எனக்கு ஒரே ஒரு உண்மை தான் தெரியணும்…எப்படி சண்டை போட்டுட்டே இதுங்க குழந்தை பெத்துக்குதுங்க…” பிருத்வி தன் இமாலய சந்தேகத்தை இடை புகுந்து கேட்டான்.

“ஹாஹஹா…..மோதல் காதலாகும் டா இடியட்…” ஆதேஷ் சிரித்தான்.

“க்கும்….அப்படி நினைச்சு தான் நானும் ஏமாந்துட்டேன். தினமும் மொத்து தான் விழுது” என்றான் பரிதாபமாக.

“லிங்காண்ணா….பாவையின் மொத்து பூங்கொத்து ஒற்றல் கேள்விப்பட்டதில்லை”

“நீ வேற ஏன்டா வெந்த புண்ணில் வேலைச் சொருகுற” என்றான் லிங்கா.

“இவனை செக் பண்ணணும்டா, அனுபவப்பட்டவன் மாதிரியே பேசிட்டு இருக்கான்” ஆதேஷ் பிருத்வியை ஆராய்ச்சியாகப் பார்த்தான்.

“தெய்வமே…காலேஜில் பசங்க சொல்றதை சும்மா இங்க வந்து உருட்டிட்டு இருக்கேன்” இளையவன் கைகள் இரண்டையும் தலைக்கு மேல் கும்பிட்டுப் பம்மினான்.

“டேய்….பிருத்வி…ஆறு மணிநேரமா தேவுடு காக்கிறோம்..பொழுது போகல…ம்ம்ம் …விக்ரமன் கிட்ட கொஞ்சம் விளையாட்டிப் பார்ப்போமா” கிசுகிசுத்தான் ஆதேஷ் தாடையைத் தடவிக் கொண்டு.

அப்போது தான் அருகில் வந்து நின்ற நித்திலா கணவனின் தோளில் யாரும் பார்க்காதவண்ணம் அடித்தாள்.

“ஆஆ…ராட்ஷசி ஆதி இடி மாதிரி இருக்கு…” என்று வேண்டுமென்றே கத்தியவன்,

“பாருடா பாரு…என்னமோ உன் அண்ணி அமைதியின் சிகரமுன்னு பீத்திட்டு இருந்த, பார்ட்டி சைலன்ட் கில்லர் தெரியுமோ…” புன்னகை இவனில்.

“ஷ்ஷு….கத்தாதீங்க…எல்லாரும் பார்க்கப் போறாங்க” பெண் பதறி இவன் வாய் மூட,

வசுந்தரா தான் இருந்த இருக்கையில் இருந்து எழுந்து இவர்கள் பக்கம் வந்தார்.

“பொழுது போக ஒரு ஆடு கிக்குச்சு…வசுவை வச்சு செய்யலாம் இப்ப” குவித்த கை கொண்டு வாய் மூடி முணுமுணுப்பாக ஆதேஷ் பிருத்வியிடம் சொல்ல,

“பாவம் பாட்டியாகப் போற சோகத்தில் இருக்கு வசு..விட்டுடலாம்ணா”

“பெரியவனே…என்னைப் பத்தி தானே பேசிட்டு இருக்க” வந்ததும் முறைத்தார்.

“இல்லையே..வேணுன்னா பிருத்விகிட்ட கேளு..டேய் சொல்லேன்டா..” தம்பியைப் பார்த்தான்.

இல்லை என்பதாய் இளையவன் அசட்டையாக தோள் குலுக்க,

“கூட்டுக் களவாணிங்க…பெரியவனே நான் போய் நயனை பார்க்கணும் விடுவாங்களா” மகள் கடந்த ஆறு மணி நேரங்களாக பிரசவப் போராட்டத்தில் இருக்க, இவருக்கு நிலை கொள்ளவில்லை.

அத்தையின் தோளோடு கட்டிக் கொண்டவன், “அத்தே…ரிலாக்ஸ், நயன் சமாளிச்சுடுவா, நீ போய் பார்த்தனா டென்ஷன் தான் ஆவாய்…வா நடந்துட்டு வரலாம்” என மருத்துவமனை வளாகத்தில் இருந்த பூங்காவிற்கு இழுத்துக் கொண்டு போனான்.

இப்படி சேரமான் குடும்பத்தை காத்திருக்க வைத்துவிட்டு நயனா மற்றும் லிங்காவின் புத்திரி பூலோக ஜனனம் கொண்டாள்.

செவிலிப் பெண் குழந்தையைக் கொண்டு வெளியில் வந்தாள், “குழந்தையை வாங்கிக்கோங்க, யார்ட முதலில் தரட்டும்” என கேட்க,

“ஆதி போய் வாங்குடா..” என்றான் லிங்கா தமையனிடம்.

“ஹேய்….வாட்…இல்லல்ல…ஒன்னு நீ வாங்கு இல்லையா பாட்டிட்ட கொடுக்கச் சொல்லு, நான் எதுக்கு” மறுத்தான் ஆதேஷ்.

“நான் காரணமா தான் சொல்றேன் நீ வாங்கு” லிங்கா பிடிவாதமாகப் பார்க்க,

“லிங்கா…என்ன இது…” இத்தனை பேர் இருக்க நான் ஏன் என்று சங்கடமாகப் பார்த்தான்.

“ஆதி..நயனிக்கு இந்த உலகத்தில் அம்மா..அப்பா…அண்ணா..அக்கா…தோழன்..ஏன் அவளோட சாமி கூட நீ தான். ஒரு நாளைக்கு அவள் அதிகம் சொல்ற வார்த்தை அத்தான் தான். உங்க ரெண்டு பேருக்குள்ள உள்ள பந்துக்கு இன்னதுன்னு ஒரு பேர் வைக்க முடியாது. மத்தவங்களுக்கு தெரியாது..பட் என்னால் நல்லாவே புரிஞ்சுக்க முடியும். வாங்குடா…நயனியை நீ தான் வாங்குன..இவளையும் வாங்கு” புன்சிரிப்போடு சொன்னான் லிங்கா.

கைகள் படபடக்க, கண்களில் கண்ணீர் பூக்கள் பூக்க, நெஞ்சம் நடுங்க பூவை கைகளில் வாங்கிக் கொண்டான், “வெல்கம் டா பட்டு” குட்டியின் கால்களில் தலை வைக்க தன் சின்ன இமைகளைத் திறந்து பார்த்தது புதுப்பூ.

புது வரவு சேரமான் குடும்பத்தின் அங்கமாகி இரண்டு மாதங்கள் கடந்திருந்தது.

பெற்றது தான் நயனா, ஆனால் குழந்தைக்கு பசியாற்றும் நேரம் போக, நித்திலா வீட்டில் இருக்கும் நேரங்களில் அவளோடு தான் இருந்தது குழந்தை.

ஆதேஷ் படுக்க வரும் போது தங்கள் அறைக்கு தூக்கி வந்து மகளைச் சீராட்டி விட்டுத் தான் திருப்பிக் கொடுப்பான். சில நேரங்களில் மார்பில் போட்ட படியே தூங்கியும் விடுவதுண்டு மகள் பாலுக்கு அழும் வரை.

அன்றும் குழந்தை நேயாவை தன் நெஞ்சின் மேல் குப்புறப் படுக்க வைத்து கொஞ்சிக் கொண்டிருக்க, அருகில் படுத்திருந்த நித்திலா குழந்தையின் கால்களை வருடிக் கொண்டிருந்தாள்.

“பட்டுடா நீங்க…ஆதிப்பாவோட பட்டு தானடா நீங்க…” என்று கொஞ்சியவன்,

“நிலா..இவ என்ன ஒரு கியூட்டா, சாப்டா இருக்கா..இல்ல…” மனைவியிடம் கேட்டான்.

கணவனையே ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்த நித்திலா, “பாவா நாம டாக்டர்ட்ட போய் பார்க்கலாமா” என்றாள் தயங்கிக் கொண்டு.

“ஏனாம்…” ஒரு கை கொண்டு மனைவியின் சிகை வருடினான்.

“இல்ல…நமக்கு கல்யாணம் பண்ணி ஒரு வருஷத்துக்கு மேல் ஆச்சு…இன்னும் குட்டீஸ் வர வழியைக் காணோம் இல்லையா”

“அறிவே..கல்யாணம் பண்ணி வேணும்னா அவ்ளோ ஆகியிருக்கலாம்..பட் நீ என்ன கிஸ் பண்ணி மயக்குனயே…அது சில மாதம் தான்டி ஆகியிருக்கு” மனைவியின் கன்னம் தடவியது கை.

“ச்சூ..அது என்ன எப்போ பார் முத்தம் தந்து மயக்கிட்டேன்னு பேசிட்டு இருக்கீங்க” இவள் முறைக்க,

“இல்லையா பின்னே…முத்தமிட்டு மயக்கி, தூங்கினவனை எழுப்பி..ஏலடீ கொடுத்து ஏமாற்றி….ஜன்னலோரம் என்னை….” இவன் மனைவியின் காதுக்குள் சொல்ல, வெட்கிச் சிவந்து முகம் மூடிக்கொண்டாள் பெண்.

இவர்கள் அறைக் கதவு தட்டும் ஓசை கேட்க, எழுந்து சென்று கதவைத் திறந்தாள் நித்திலா.

“டேய்…என் பொண்டாட்டி தான் உன் ஜெபம் பாடுறான்னு பார்த்தால், இவளையும் உன் பக்கம் இழுத்துடுவ போல…எனக்கும் குடுடா அவளை….நாளப்பின்ன என்னைப் பார்த்து லிங்கா அங்கிள்ன்னு சொல்ல வச்சுடாத” மகளை வேண்டி தகப்பன் நிற்க,

“ஹாஹாஹா….புவர் பெல்லோ” என்றவன் திரும்பத் திரும்ப நேயாவின் கால்களில் முத்தமிட்டு தம்பியிடம் தந்தான் தன் பட்டுவை.

ஒரு மாதங்களுக்குப் பிறகு குடிலில் ஆதேஷ் நித்திலா தம்பதிகள் முகாமிட்டிருந்தனர்.

மாதத்தில் நான்கைந்து தினங்கள் இங்கேயே தங்குவதை வழமையாக வைத்திருந்தனர். இவர்களுக்கான தனிமை என்பது ஒரு காரணம் என்றால் தேவகியின் பொருட்டும் அதிகம் இருந்தது.

அப்படி இங்கு வரும் நாட்களில் நான் அம்மாவிடம் படுக்கச் சொல்கிறேன் எனக் கூறிக் கொண்டு செல்லும் பெண், பழைய வழக்கமாக பத்து மணிக்கு கணவனை அழைத்து தூக்கம் இல்லை எனச் சொல்ல, அது பிறகு இருப்பானா இவன், கைகளை கால்சராயில் விட்டுக் கொண்டு தேவகியின் குடிலின் முன் நிற்பான்.

அன்று காலையில் இவன் எழுந்து கோவில் சென்று வந்து பார்க்கும் போதும் மனைவி நல்ல உறக்கத்தில் இருந்தாள். இது இவள் வழமை இல்லையே என குழம்பியவன், உடலுக்கு என்னவோ என நினைத்துக் கொண்டு படுக்கையில் நித்திலா அருகில் அமர்ந்து, “நிலா…நிலாம்மா…ஹேய்…என்னடி பண்ணுது…உடம்புக்கு ஏதும் செய்யுதா? ஹாஸ்பிடல் போலாமா?’ மெதுவே தட்டினான்.

சுருண்டு இவன் மடிக்கு வந்தாள் பெண், “நிலா….தேனே…” இவள் முகவடிவை அளந்தான்.

“சோர்வா இருக்கு பாவா…ரெண்டு நாளா….தலை சுற்றுது…குமட்..” பட்டென்று எழுந்து அமர்ந்தாள்.

இவன் கண்கள் பளபளக்க மனைவியையே பார்த்தான், ஒரு புருவம் தூக்கிக் கொண்டு அப்படியா என தலை அசைத்துக் கேட்க,

பொட்டுப் பொட்டுப் பொட்டாக சுரந்த கண்களின் சுரப்பி திரண்டு கொண்டு வந்து இமை தாண்டி ஒழுகியது இவளில்.

தாவி அணைத்துக் கொண்டவன், மனைவியின் முகமெங்கும் முத்தமிட்டான், மகிழ்ச்சி வந்து இவன் மார்பு முட்ட.

சத்தமில்லாமல் சென்று மருத்துவரை அணுக, சில பரிசோதனைகளுக்குப் பிறகு தாய்மை கொண்டிருப்பதை உறுதி செய்தார் மருத்துவர்.

தேவகி மற்றும் குடும்பத்தினருக்கு செய்தி பகிரப்பட எல்லையில்லா பேரானந்தம் அனைவருக்கும். நீண்ட நாள் எதிர்பார்ப்பு நிறைவேறியதில் மன மகிழ்ச்சி அடைந்தனர். திருமணம் ஆகிவிட்டது ஆனால் மகள் மற்றவர்களைப் போல் இயல்பாக வாழ்கிறாளா என்ற சந்தேகம் இருந்துகொண்டே இருந்தது தேவகிக்கு. மகளிடம் திருமணம் ஆன அடுத்த இரண்டு மாதங்களில் மறைமுகமாகக் கேட்டும் பார்த்தார். நித்திலா ஒரு தலையாட்டலோடு முடித்துக்கொள்ள, இவருக்கு இதற்கு என்ன அர்த்தம் என ஒரே குழப்பம். யாரிடம் கேட்பது என அவ்வப்போது குழம்பிக்கொண்டிருந்தவர், தம்பதிகளின் அன்னியோன்னியம் திருப்தி தருவதாக இருக்க, நிம்மதி கொண்டார். சேர்ந்து திருமணம் ஆன ஒரு ஜோடி குழந்தையோடு நிற்க, இவர்களுக்கு எப்போது என்னும் எதிர்பார்ப்பு இருந்துகொண்டு இருந்தது உண்மை, அது இன்று நினைவானது கண்டு மிகுந்த சந்தோஷம்.

நித்திலம் தன் சிப்பி திறந்து வெளிவரும் நாளுக்காக எல்லோரும் ஆவலோடு காத்திருந்தார்கள்.

error: Alert: Content selection is disabled!!