சேரமான் அரண்மனை பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.
“வசு எல்லாம் எடுத்தாச்சா? ஒரு முறை சரிபார்த்துடு. வசந்தா மருமகப் பொண்ணை இப்படி உட்கார வை. அம்மா தேவகி கவலைப்படாத. எல்லாம் நல்லபடியா நடக்கும். ஏங்க பிள்ளைக்கு திருநீறு வைக்கணும் வாங்க” அனைவரையும் ஏவிக் கொண்டிருந்தார் கோப்பெருந்தேவி.
“ஆச்சு ஆச்சும்மா….நீங்க வாங்க” என்ற வசுந்தரா பூஜை அறையில் விளக்கு ஏற்றி இறைவனை வழிபட்டார்.
தாத்தாவும் பாட்டியும் பிரசவத்திற்குச் செல்லும் நித்திலாவுக்கு ஆசிகள் வழங்கி திருநீறு பூசி விட, பிறகு குடும்பம் மொத்தம் தனித்தனி கார்களில் மருத்துவமனை நோக்கி பயணப்பட்டனர்.
மனைவியின் கைகளைப் பிடித்துக் கொண்டு அருகிலேயே அமர்ந்திருந்தான் ஆதேஷ்.
நித்திலா பிரசவ அறையில் தன் பிஞ்சை இப்பூவுலகத்துக்குக் கொண்டு வரும் முயற்சியில் களைத்து சோர்ந்து இருந்தாள்.
“இன்னும் எவ்வளவு நேரம் ஆன்ட்டி ஆகும்?” கடந்த எட்டு மணி நேரத்தில் நூறு முறையாவது இந்தக் கேள்வியைக் கேட்டிருப்பான்.
“ஆதி கண்ணா…இது முதல் பிரசவம், குறைந்தது பனிரெண்டில் இருந்து சில பேருக்கு ஒரு முழு நாள் கூட ஆகும். அவள் அமைதியாகத்தான் இருக்கா, நீ தான் டென்ஷன் பண்ற” கடிந்து கொண்டார் சகாதேவனின் மனைவி மருத்துவர் சந்திரா.
ஆம், சகாதேவனின் மனைவிதான் மகப்பேறு மருத்துவர் சந்திரா. குடும்பத்துக்கு நித்திலாவின் விஷயம் தெரிய வந்த பிறகு, இவன் கோபக்கனல் பொருந்திய கண்களோடு அடுத்து நின்றது சகாவின் முன்தான். நம்பி வந்த எங்களை மோசம் செய்யலாமா என இவன் சாட, சம்பந்தப்பட்ட நர்ஸை அழைத்தவர், ‘எப்படி நீ வெளியில் சொல்லலாம், மருத்துவ தர்மம் காக்கப்பட வேண்டாமா’ என்று எகிறி விட்டார். வம்பு பேசும் செவிலியர் ஒருவரால் அரைகுறை செய்தி பரப்பப்பட்டு, பிறகு தன் காதுகளுக்கு வந்ததாகவும், அதன் பிறகுதான் தனக்குத் தெரிய வந்ததும் என்று ஒத்துக் கொண்டார். தவறான எண்ணத்தில் கேட்கவில்லை, ஆதேஷின் சித்தி குடும்பம் தனக்கு நன்கு தெரிந்தவர்கள், அதனால் நித்திலாவின் மனநலம் அறியும் பொருட்டு கேட்டுவிட்டேன் என்று அவர் அழுகையில் முடித்தார். வெகு நாட்களாக சதாவின் மருத்துவமனையில் வேலை செய்யும் நர்ஸ் என்ற போதிலும், தான் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இது பிற்காலத்தில் தொடரலாம் என்று நினைத்த டாக்டர் சதா, அந்த நர்ஸை பணி நீக்கம் செய்வதாக அறிவித்தார்.
பதறிப் போன நித்திலா, தன்னால் ஒருவரின் வாழ்வாதாரம் கெடுவதில் வருத்தமுற்று, “வேண்டாம் அங்கிள், அவங்க ரொம்ப உண்மையாக இந்த மருத்துவமனையில் நீண்ட நாள் உழைத்திருக்காங்கனு சொல்றீங்க. என் மேல் உள்ள அக்கறையில் செய்துவிட்டார்கள். முதல் முறை என்பதால் மன்னித்து விட்டுவிடுங்கள். உண்மையில் சொல்ல வேண்டுமென்றால், இந்த விஷயம் வெளிவந்த பின்புதான் என் வீட்டு மனிதர்களின் அற்புதமான மனதையும் புரிதலையும் என்னால் கண்டுகொள்ள முடிந்தது. பெருவுடையார் நல்ல உள்ளங்களோடு என் வாழ்க்கையைப் பிணைத்திருப்பதில் ரொம்ப சந்தோஷம் எனக்கு” என்று அந்த நிகழ்வை ஒரு நேர்மறைச் சிந்தனையோடு எடுத்துக் கொண்டாள் பெண்.
ஆதேஷும், ‘மாமா நடந்தது நடந்து விட்டது, மருத்துவத் துறைக்கான தர்மம் காக்கப்பட வேண்டும். இனி இதுமாதிரி உங்கள் பணியாளர்களே புறம் பேசாமல் இருக்கவும், மருத்துவ அறிக்கைகள் எல்லோருக்கும் கையில் கிடைக்காமல் இருக்கவும் என்ன வழிமுறையோ அதைச் செய்யுங்கள் என அறிவுறுத்தினான். பிறகு மருத்துவத் தம்பதிகள் இருவரும் மாறி மாறி மன்னிப்புக் கேட்க, அந்த பிரச்சினை ஒரு முடிவுக்கு வந்தது.
“வலிக்குதாடி…இதுக்குப் பிறகு நமக்கு குழந்தையே வேண்டாம். போதும். நிலா என் கையைப் பிடிச்சுக்கறியா..கொஞ்சம் தைரியம் வரும் இல்ல…” மனைவியின் காதோரம் குனிந்து சொல்ல
வாய்விட்டு அழாமல் வலி வருகின்ற போது கண்ணீர் மட்டும் சிந்திக் கொண்டிருந்தவள், “யாருக்கு தைரியம் வரும்?” என்றாள் வலியில் பல்லைக் கடித்துக் கொண்டு.
“அது…ரெண்டு பேருக்கும் தான்…” உண்மையை உளறினான் கணவன். இந்த அறைக்குள் வந்ததிலிருந்து இவன் அலப்பறைகள் சொல்லி மாளாது.
“ஆன்ட்டி ஒரு நிமிஷம்…” என சந்திராவை அழைத்தவள், “இவரை வெளியில் அனுப்புங்க…ப்ளீஸ். நான் அமைதியாக இருந்தாலும் இவர் விட மாட்டேங்கறார்” புகார் படிக்க.
“கண்ணா..நீ சும்மா இருக்கையா என்ன? இது எல்லா பெண்களுக்கும் வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் வருவதுதான். ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம் பண்ற. நீ வெளியில் இரு, இன்னும் ஐந்து மணிநேரமாவது ஆகும். நான் கூப்பிடுறேன்” என வெளியில் இவனை தள்ளாத குறையாக அனுப்பி வைத்தார்.
“என்ன சிங்கம் சிங்கிளா வருது…?” சலீம் பிருத்வி காது கடிக்க.
“அலப்பறை அதிகமாகி இருக்கும், அண்ணி வெளியில் தொரத்தி இருப்பாங்க” பதிலுக்கு கிசுகிசுத்தான் பிருத்வி.
அமைதியாக தொங்கிப் போன முகத்தோடு வந்து இவர்கள் அருகில் நின்றான் ஆதேஷ். இளையவர்கள் இவனையே நோக்க “ஏன்டா என் முகத்தையே பார்க்கறீங்க. ஆமா தொரத்தி விட்டுட்டா அதுக்கு என்ன இப்போ? எவ்வளவு நேரம் ஆகும்ன்னு கேட்டது ஒரு குத்தமா?” காய்ந்தான்.
“அதை எத்தனை முறை கேட்டீங்க, அதுதான் மேட்டரு. விடுங்க தலை…” சலீம் கேலி பேச.
மருமகனைக் கண்ட தேவகி இவன் அருகில் வந்து, “எவ்வளவு நேரமாகும்ன்னு ஏதாவது சொன்னாங்களா தம்பி” முகம் படபடப்பை அப்பி இருக்கக் கேட்டார்.
“அத்தை…அது கேட்டுதான் அண்ணி கேட் அவுட் சொல்லிட்டாங்க அண்ணாக்கு” பிருத்வி சிரிக்க.
அடுத்து வசுந்தரா வந்து அதையே கேட்க, “ஹாஹாஹாஹா…” சிரிப்பு இளைய வட்டத்தில்.
“மழை வரத்து மட்க பொறக்குறது மகேசனுக்கே தெரியாது. செத்த எல்லாரும் அமைதியா உட்காருங்க. எந்த நிமிஷமுன்னு அவன் முடிச்சு போட்டிருக்கானோ அப்ப பொறந்துடும்” பாட்டி எதார்த்தம் பேச அமைதியானது இடம்.
தந்தையை இத்தனை பாடுபடுத்தி விட்டு தன் பூப்பாதங்களை இந்தப் புவியில் வைத்தார்கள் இளைய சேரமான்கள். நித்திலா ஆதேஷ் தம்பதிக்கு இரட்டை ஆண்மகன்கள் பிறந்திருந்தார்கள்.
ஐந்து வருடங்களுக்குப் பிறகு, “ஆதிப்பா…நானும் வரேன் பிரகதி பார்க்க” என்றாள் நயனா-லிங்காவின் மகள் நேயா.
“ஸுர் வாங்கடா பட்டு, தம்பிகளையும் கூட்டிட்டு போகலாம்” என்றவன் தனது புதல்வர்களையும் சேர்த்து அழைத்துக் கொண்டு ஆதேஷ் கிளம்ப, “அப்ப நானு, உங்களுக்கு உங்க பிள்ளைகள்தான் முதல்ல…” முகம் சுருக்கினாள் மனைவி.
“ஏன்டி தேனே… உன் பொறாமைக்கு ஒரு அளவில்லையா? கிளம்பு போகலாம்” மனைவியையும் இழுத்துக் கொண்டு போனான்.
“ஆரம்பிட்டாங்க…இவன்தான் இப்படின்னு பார்த்தால் கூட இருக்க வாண்டுகளையும் இவனை மாதிரியே ஆக்கி வச்சிருக்கான்” அலுத்துக் கொண்ட வசுந்தரா காலை உணவுக்குப் பார்க்கப் போனார்.
சேரமான் குடும்பம் பல்கிப் பெருகி இருந்தது. ஜான்விக்கு திருமணம் ஆகி திருச்சியில் குடியேறி இருந்தாள். வீட்டோடு மாப்பிள்ளைதான் வேண்டும் என அடம் பிடித்தவள், கடைசியில் திருச்சியில் மருமகளானாள். இன்றும் கூட தனது அத்தை வசுந்தராவிடம் அடிக்கடி பாய்ந்து கொண்டிருப்பாள். நீ ஒரு மகனைப் பெத்திருந்தால் நான் வீட்டை விட்டுப் போக வேண்டி இருந்திருக்காது, நீங்க எல்லாரும் ஒரே வீட்டில் ஜாலியாக இருக்க என்னை மட்டும் வெளியில் தள்ளுகிறீர்கள் என திருமணம் ஆகும் வரை ஆரம்பித்த புலம்பல் இன்றும் தொடர்கிறது.
பிருத்வியோ, அண்ணன் மாதிரி எனக்கான துணையை நானே தேடிக் கொள்வேன் என சபதம் ஏற்று சுற்றிக் கொண்டிருந்தான். ஆதேஷின் வனக்குடில் கேரளா மற்றும் கர்நாடகாவில் கிளைகள் கண்டிருக்கிறது. பிருத்வி படிப்பு முடித்து விட்டு அண்ணனோடு கை கோர்த்துக் கொண்டான். யாருக்குத் தெரியும், ஒரு கேரள மங்கையோ இல்லை கர்நாடகத்தின் கன்னியோ இவன் மனம் கவரலாம்.
நித்திலாவின் ‘தெருவோரம் தேடி உண்’ என்னும் வாசகம் பொருத்திய சிறுதானிய உணவுகளின் தள்ளு வண்டிகள் தஞ்சை முழுக்கப் பரவி இருந்தது. வாழ்க்கையில் பின்தங்கிய நிலையில் உள்ளவர்களை வேலையில் அமர்த்திக் கொண்டு அந்த தள்ளு வண்டி வியாபாரம் நடைபெறுகிறது. இதனால் அவர்களின் பொருளாதாரமும் மேம்பாடு கண்டிருக்கிறது. இந்த வியாபாரத்தை மேற்பார்வை மற்றும் நிர்வாகம் செய்யும் பணியை நித்திலாவோடு சேர்ந்து நயனாவும் செய்கிறாள்.
நித்திலா, வன்கொடுமைக்கு ஆளாகி இருக்கும் பெண்களுக்கு, குழந்தைகளுக்கு கவுன்சிலிங் கொடுத்து, வாழ்க்கையில் நம்பிக்கை ஊட்டும் பொருட்டு ‘நித்திலம்’ என்னும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நிறுவி நடத்திக் கொண்டிருக்கிறாள். இங்கு பல நல்லுள்ளம் கொண்ட தன்னார்வலர்கள், மருத்துவர்கள், மனநல நிபுணர்கள் சிறப்பாகப் பங்காற்றுகிறார்கள். இந்த அமைப்பில் சில நேரங்களில் வன்கொடுமைக்கு ஆளாகி சிறைப்பட்டிருக்கும் சிறார்களையும் காவல்துறையின் உதவியோடு மீட்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அமைப்பில் முதலில் இணைந்த தன்னார்வலர் விக்ரமன்தான்.
தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்த சலீமுக்கும் கால் கட்டு போட்டு விட்டிருந்தார்கள் ஆதேஷ்-நித்திலா தம்பதி.
“ஆதிப்பா அந்த ராஜராஜன் பேர் பார்க்கணும் எனக்கு” இங்கு வரும் போதெல்லாம் நேயா கேட்டுப் பார்த்துக் கொள்வாள்.
“ப்பா…பெருசு……..இவ்வ்ளோ..பெருசு…..” தன் இரட்டையில் ஒன்று கைகளை உயர்த்திக் காட்டியது குதூகலித்தது.
“ஆமாடா கண்ணா……..உள்ள உட்கார்ந்து இருக்கிறவன் பெரியவன், அவனுக்கு இவ்வளவு பெரியது தான் கட்டணும்” பிள்ளைகளுக்கு விளங்கியவன்.
“நம் முப்பாட்டன்கள் அறிவாளிகள், பாரு…என்ன அழகா…கம்பீரமா…அவங்க பேர் சொல்ற மாதிரி கட்டிட்டு போயிட்டாங்க” வழக்கம் போல் தன் முப்பாட்டன் பெருமை பாட.
“ஆரம்பிச்சுட்டாங்கடா உங்க அப்பா…..இனி நாள் முழுக்க கேட்கலாம்” செல்லமாய் அலுத்துக் கொண்டாள் மனைவி.
ஒரு பக்தர் இவர்கள் பக்கம் வந்தவர், “சார் இங்க நல்ல கைடு கிடைப்பாங்களா? வட மாநிலத்தில் இருந்து கொஞ்சம் ஆட்கள் வந்திருக்காங்க, கோவில் வரலாறு சொல்லணும்” என விசாரிக்க.
மனைவி இவனை நமட்டாகப் பார்த்துச் சிரித்தாள். புன் சிரிப்பை உதிர்த்து தலையைக் கோதிக் கொண்ட ஆதேஷ், “வாங்க அடுத்த அரை மணி நேரம் பிரீதான், நான் சொல்றேன்” எனக் கூட்டிக் கொண்டு போனான். ஆதேஷை விட ஒரு சிறந்த வழிகாட்டி இருக்க முடியுமா என்ன? என்பதாய் சிரித்துக் கொண்டு பார்த்திருந்தாள் நித்திலா.
நம் பண்டைய வரலாற்றுப் பொக்கிஷங்கள் ஆங்காங்கே உருவாக்கப்பட்டு மூத்தோர்களின் வாழ்வியலை அழகாகச் சொல்லிக் கொண்டு நிற்கிறது. அதை உணர்ந்து உள்வாங்கி பார்த்து ரசித்துப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது நம் கடமை.
நமது பண்டைய பாரம்பரியத்தைப் புரிந்துகொள்வதற்கு வரலாற்றுச் சின்னங்கள் இன்றியமையாதவை. அவை கடந்த கால நாகரிகங்கள், கட்டிடக்கலையின் பாணிகள் மற்றும் கலைச் சிற்பங்கள் குறித்த ஆழ்ந்த பார்வைகளை வழங்கி, வரலாற்றுடன் ஒரு உறுதியான தொடர்பை எத்தனை காலம் ஆனாலும் நமக்கு ஏற்படுத்துகின்றன.
மேலும், வரலாற்றுச் சின்னங்கள் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன, இது உள்ளூர் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும். இச்சின்னங்களைப் பராமரித்துப் பாதுகாப்பதன் மூலம், எதிர்கால சந்ததியினர் அவற்றின் வரலாற்று மற்றும் பண்பாட்டு முக்கியத்துவத்தைக் கற்றுக்கொண்டு போற்றுவதற்கு வழிவகை செய்கிறது.
வேர்கள் மண்ணில் விரிந்து பரந்து ஆழமாக ஊன்றி இருந்தால் மட்டுமே அதிலிருந்து வெளிவரும் விருட்சம் வலுவுள்ளதாக இருக்கும். ஆகையால் நம் வேர்களான நம் பாரம்பரியங்களை, நம் வரலாற்றைப் பழுதுபடுத்திடாமல் பார்த்துக் கொள்வோம்.
இந்த நாவலைப் படித்த பிறகு யாரேனும் பெருவுடையானின் வீட்டிற்கு விஜயம் செய்தால், நம்மை தமிழன் என்கிற புள்ளியில் தலை நிமிர வைத்த அந்த ராஜராஜனுக்கு மானசீகமாக ஒரு வணக்கம் வையுங்கள். குழந்தைகளுக்கு சோழனை அறிமுகம் செய்யுங்கள்.
கோவிலைச் சுற்றிக் காட்டிட வழிகாட்டி வேண்டுமென்றால் ஆதேஷைக் கேளுங்கள், நாள் தவறாமல் தன் பிரகதியைப் பார்க்க காலை நேரங்களில் கண்டிப்பாக வருவான் தன் நிலாவோடு! பிறவிப்பயன் எய்தியதாய் நினைத்து கண்டிப்பாகஉங்களுக்கு முப்பாட்டன் பெருமைகளைச் சொல்லுவான்.
மகிழ்ந்திருங்கள்
அன்பும் நன்றியும்,
சாந்தி உடையப்பன்.