நித்திலப் பேரொளி-5

அதேஷும் சலீமும் நித்திலாவின் தள்ளு வண்டிக்கு அருகில் வந்து நிற்க, “ஹலோ சார் வணக்கம், நலமா, நீங்க கேட்ட லிஸ்ட் ரெடி பண்ணிட்டேன்.  ஒரு பத்து நிமிஷம் பொறுங்க சார், தரேன்” இயல்பாக இவர்களைப் பார்த்து சொன்னவள் தனது வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பார்வையிடலானாள்.

ஆதேஷின் கரு விழிகள் இரண்டும் நித்திலத்தின் முகத்தில் நிலைத்து வலம் வந்து கொண்டிருந்தது.

 கி.பி. 8ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இராஜசிம்ம பல்லவ மன்னனால் கட்டப்பட்ட காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலின் திருச்சுற்றுகளில் (பிரகாரம்) பல்லவர்களின் கலையைப் பறைசாற்றும் பொருட்டு கொற்றவையின் பல்வேறு வடிவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

பொதுவாக கொற்றவை உக்கிரமான குணம் கொண்டவள் எனபது அறிந்ததே. சண்டையிட்டு மகிஷாசுரனை வென்றவளை ஒயிலாக சிம்மத்தின் மீது கால் வைத்து தன் படைக்கலன்களைத் தன்னைச் சூழ்ந்த  அழகிய அணிகலன்கள் போல் பாவித்து புன்னகை முகத்துடன் நிற்பது போல் சிற்பங்களை வடிவமைத்துள்ளனர்.

ஆதேஷ் அச்சிற்பங்களைப் பார்த்த போது கொற்றவையின் முகத்தில் கொட்டிக்கிடக்கும் புன்னகையை வெகுவாக ரசித்தான்.   அத்துணை அற்புத அழகுடையவள் அன்னை என நினைத்தான்.

அந்த கொற்றவை தான் நித்திலாவைப் பார்க்கும் போது இவன் மனதில் வந்து நின்றாள்.  இவளுக்குள் ஏதோ ஒரு தேடலும் உக்கிரமும் இருக்கிறது என இவன் உள் மனது சொன்னது.  ஆனால் உதடுகளில் ஒரு புன்னகையை ஒட்டி வைத்திருந்தாள்.  நவீனக் கொற்றவை போலும் என நினைத்தவன், ‘என்னடா இது ஒப்பீடு சேரா, இவளுக்கு மட்டும் தெரிஞ்சது முதுகில் டின் கட்டப் போறா, பார்த்து’ பின் தலையைக் கோதிக் கொண்டவன்

‘என்ன இப்போ குறைஞ்சிடும் , என் முதுகு தானே கட்டலாம் தப்பில்லை’  மௌனப் புன்னகை இவனில்.

தன்னை ஒருவன் மனதில் இத்தனை வர்ணனைகளுக்குள் வந்திருக்கிறான் என்பது அறியாதவள், தன் வேலையின் இடைவெளியில் இவன் புறம் திரும்பியவள், “இந்தாங்க சார், நீங்க கேட்டது.  பாருங்க, ஏதும் மாற்றம் வேணுமா இல்லை வேறு ஏதாவது முக்கியமா சேர்க்கணுமா சொல்லுங்க பண்ணிடலாம்” என்றாள்

கையில் வாங்கிக் கொண்டவன், “மிஸ்.நித்திலா, எனக்கு உங்ககிட்ட கொஞ்சம் பேசணுமே.  எப்போ பிரியாவீங்க” இவன் அவள் முகம் பார்த்து கேட்க

“பேசணுமா…என்ன…” புரியாமல் பார்த்தவள் “ஒரு அரைமணி நேரத்தில் முடிஞ்சுடும் சார்.  பிறகு பேசலாம்” என்றாள்.

“ஓகே யூ கேரி ஆன், நாங்க காரில் வெயிட் பண்றோம்” என்றவன் நகரப் போக

“ஏதாவது சாப்பிடுறீங்களா சார்” இவளின் குரல் நிறுத்தியது

“ஒய் நாட், என்ன ஸ்பெஷல் இன்னைக்கு” ஆர்வமானான் ஆதேஷ்

“கம்பு தான் இன்றைய மூல காரணி” என்று நித்திலா புன்னகைக்க

“ஹாஹாஹா” சலீமும் ஆதேஷும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்.

இவள் புரியாது இருவரையும் மாறி மாறிப் பார்க்க, சுதாரித்த ஆதேஷ், “இரண்டு பேருக்கும் காமனான ஒரு ஜோக் ஞாபகம் வந்தது சிரிச்சோம், சில்லி ஜோக்” சமாளித்தான் கள்ளன்

கம்புக் குழல் புட்டை தேங்காய் துருவல்கள் இருபுறம் சூழ்ந்திருக்க ஒரு தட்டில் வைத்துக் கொடுத்தாள்.

ஆன்டிஸிபேட்டரி சலைவேஷன் அதாவது உணவை கண்டவுடன் உமிழ்நீர் சுரத்தல், இதில்  உணவு வாய்க்குள் நுழைவதற்கு முன்பே, மூளை உமிழ்நீர்ச் சுரப்பிகளைத் தூண்டி கூடுதல் உமிழ்நீரை உற்பத்தி செய்ய வைக்கிறது.  அந்த  ஆன்டிஸிபேட்டரி சலைவேஷன் ஆதேஷில் நிகழ்ந்தது அவள் கொடுத்த தட்டைப் பார்த்த மாத்திரத்தில்.

இருவரும் காருக்குத் திரும்பி அதன் மேல் சாய்ந்து நின்று கொண்டு பேசியபடி சுவைக்கலாயினர்.

நித்திலா எல்லா வேலைகளையும் முடித்து விட்டு இவர்களை நோக்கி வந்தாள்.

“பிடிச்சுருக்கா இருக்கா சார்” ஒரு நேர்கொண்ட பார்வையோடு ஆதேஷைப்  பார்த்து கேட்க

அவளது வதனத்தை கண்கொட்டாது பார்த்தவன், “ரொம்ப…” புன்னகைத்தான்

‘மன்னா என்ன பிடித்திருக்கிறது..கம்பா இல்லை மனம் கவர்ந்தவளா’ இவன் மனசாட்சி உள்ளே இருந்து கூவியது

“தேங்க் யூ சார், சொல்லுங்க என்ன பேசணும்?”  நித்திலா நேரடியாக விஷயத்திற்கு வந்தாள்

சாப்பிட்ட தட்டை தள்ளு வண்டியின் அருகில் வைத்திருந்த குப்பைப் பையில் சென்று போடடவன், அருகே இருந்த வாளியில் கொஞ்சம் நீர் மொண்டு கையை சுத்தப்படுத்திக் கொண்டு நித்திலாவின் எதிர் வந்து நின்றான்

“மிஸ்.நித்திலா, எனக்கு ஒரு ஐடியா இருக்கு, நல்லா யோசிச்சு சொல்லுங்க அவசரமில்லை” என்று பீடிகை போட்டவன்

“நீங்க இங்க உங்க தள்ளுவண்டியைப் வச்சு வியாபாரம் செய்வதற்கு பதில், ஏன் வனக்குடிலில் கொண்டு வந்து போடக்கூடாது?” நித்திலாவின் முகத்தில் உணர்வுகளைப் படிக்க விழைந்தான்.

“நான் வனகுடிலுக்கா, புரியல சார்”  நித்திலா அவன் சொல்ல வருவதை முழுமையாக கிரகிக்க முடியாமல் கேட்டாள்.

“நீங்க அங்க வந்துடுங்களேன். இதே தள்ளு வண்டி அமைப்பிலேயே நாம் எல்லாம் செட் பண்ணலாம். எவ்வளவு உணவு தேவைப்படும்ன்னு நான் சொல்லிடுறேன்.  நீங்களே உணவை தயார் பண்ணி கொண்டு வந்துடுங்க.  இப்போ எவ்ளோ சம்பாதிக்கிறீங்களோ  அதுக்கு இரண்டு மடங்கு நான் உங்களுக்கு ஒரு தொகை மாதாமாதம் கொடுக்கறேன்.  உங்க இடம் மாறுதே ஒழிய மற்ற எதுவும் மாறாது” ஆதேஷ் விளக்க

“இல்ல சார், அது ஒத்து வராது, முதல்ல நான் காலை ஏழு மணி முதல்  பத்து வரை கடை திறக்கிறேன், மதியம் வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுத்துட்டு, எல்லாம் தயார் பண்ணிட்டு திரும்ப மூன்று மணிக்கு ஆரம்பித்து ஆறு ஆறரை மணிக்கு முடிச்சுடுவேன்.  மொத்தம் ஆறு இல்ல மேக்ஸிமம் ஆறரை மணி நேரம் தான் வேலை செய்வேன். இந்த வருமானம் எனக்கும் அம்மாக்கும் போதுமானதா இருக்கு.  உங்க குடிலுக்கு வந்தால் இந்த வேலை நேரம் மாறலாம்.  அது தேவையில்லை எனக்கு.  சாரி சார்” என்றாள் தெளிவாக

“அந்த வேலை நேரத்தில் எந்த மாற்றமும் செய்ய வேண்டாம் நித்திலா.  அதே போதுமானது.  இந்த சத்தான உணவுகள் காலையிலோ அல்லது மாலை நேரத்தில் எண்ணெயில் பொறித்த உணவுக்குப் பதில் இருந்தால் போதுமானது.  ஸோ நீங்க கன்சிடர் பண்ணுங்க” ஆதேஷ் விடாமல் வாதாட

“இல்ல சார், மன்னிக்கணும். எனக்கு முடியலன்னா நான் கடை போட கூட மாட்டேன்.  அங்க வந்தால் கட்டாயமா போட வேண்டி வரலாம், ப்ளீஸ் வேணாமே. ஒரு கமிட்மென்ட்குள்ள நான் வர விரும்பல”

‘என்னாது கமிட்மென்ட்டுக்குள் வர விரும்பலையா..தேவுடா’ மானசீகமாக தலையில் கை வைத்துக் கொண்டான் மன்னன்

“நீங்க உங்கள் தொழில் ரகசியத்தை அங்க உள்ள வேற ஒரு செஃப்க்கு சொல்லிக் கொடுங்க, ஒரு அவசரத்திற்கு அவரை யூஸ் பண்ணிக்கலாம்” அதற்கும் வழி சொன்னான்

‘ஒரு முடிவோடு தான் வந்திருக்கார் போல தல’ சலீம் ஆதேஷின் சாமர்த்தியப் பேச்சில் வாய் பிளந்து நின்றான்

“இல்ல சார், சரி வராது. உங்க குடில் ஊருக்கு வெளியில் இருக்கு. என் வீட்டுக்கு தூரமா இருக்கு” என்றாள் மறுப்பாக

“லுக் நித்திலா, உங்களுக்கு வண்டி ஏற்பாடு செய்றேன், தென் என்ன பிரச்சனை?” இவள் முகம் பார்த்தான்

“சார்…அது…ஏன் ரிஸ்க் எல்லாம்.  வேண்டாமே.  நீங்க ஏன் இவ்வளவு மெனக்கெட்டு என்னை அங்க வரவழைக்கணும்? வருமானம் இரண்டு மடங்கு எனக்குன்னு சொல்றீங்க.  தென் உங்களுக்கு அதனால் என்ன லாபம் இருக்க முடியும்?” தான் அறிவாளி என நிரூபித்தாள் பெண்

“எல்லாம் தொழில் யுக்தி தான், நீங்க அங்க வந்தால், வனக்குடிலுக்கு வரவங்களுக்கு நல்ல ஆரோக்கியமான உணவு கிடைக்கும்,  அது மக்கள் மத்தில் ஒரு வரவேற்பைக் கொடுக்கும்.  எனக்கு லேபர் சார்ஜ் இல்லை. தயாரிப்பதற்கான எந்த செலவும் இல்லை. ஸோ ஒரு வழியில் லாபம் தான்” காரணங்களை அடுக்கினான் திருடன்

“அக்கா ஒரு தடவை குடிலுக்கு வந்து பாருங்க, ஐ மீன் சும்மா விசிட் பண்ணுங்க, உங்களுக்கே பிடிக்கும்”  அதுவரை இருவரையும் வேடிக்கை பார்த்த சலீம் சொல்ல

“அத்தி பூத்த மாதிரி ஒரு ஐடியா எப்பவாவது சொல்வான் எங்க சலீம், சட்டுன்னு கேட்டுடுங்க நித்திலா” ஆதேஷ் சலீமின் தோளில் தட்ட

முதலாளி தொழிலாளி என்ற பந்தாவோ, தான் ஒரு அரச குடும்ப வாரிசு என்ற எண்ணமோ ஆதேஷுக்கு இருந்ததில்லை என்னும் சலீமின் கூற்றை நித்திலா கண் முன்னே கண்டாள். ஆதேஷின் அந்த பண்பு அவனின் ஐடியாவை ஏன் யோசிக்க கூடாது என்னும் ஒரு பொறியை இவளுள் விதைத்தது.

“இங்க நிறைய பேர் வாடிக்கையாளரா இருக்காங்க சார்” என்று இவள் தயங்க

“சாரி நித்திலா, அதுக்கு என்னிடம் பதில் இல்லை” கைகளை விரித்தவன்

“அங்கே சாப்பிடுபவர்களும் பின்பு உங்கள் வாடிக்கையாளர் ஆவாங்க தானே. ஐ மீன் திரும்ப திரும்ப வந்து தங்குறவங்களைச் சொல்றேன், ஒன்னு பண்ணலாம், நீங்க அங்க நிலைத்து விட்ட பிறகு, இந்த செயின் மாதிரி இந்த இடம் என்ன தஞ்சை முழுக்க ஆரம்பிங்களேன்.  உங்கள் நல்ல முயற்சி ஊர் முழுக்க இருந்தால் சிறப்பு தானே.  நீங்க குடிலுக்கு வந்துட்டீங்கனா பணம் கொஞ்சம் அதிகம் வரும், வளர்ச்சி எளிது தான்.  தேவைப்பட்டால் பேங்க் லோனுக்கு நான் உதவறேன்” என்றான்

நித்திலா உண்மையில் குழம்பிப் போனாள்.  முதலில் இது தேவையா, தான் ஒரு சிறு வட்டத்திற்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், அந்த வட்டம் கலைக்கப்பட்டு விடுமா? இது சரி வருமா? பலவாறாக குழம்பினாள்.

இறுதியில் யோசிக்க கால அவகாசம் வேண்டுமென்றாள் பெண்.

நித்திலா இவ்வளவு இறங்கி வந்ததே போதும் என நினைத்த ஆதேஷ் சரி என ஒப்புக் கொண்டான்.  அவளின் முடிவைச் சொல்வதற்கு இவனது தொலைபேசி எண்ணைக் கொடுக்க, அவளும் தனது அலைபேசியின் எண்ணைத் தந்தாள்.

மிஷனில் ஒரு பகுதியை நிறைவேற்றி விட்ட அரசன் விடை பெற்று நகர்ந்தான்.

error: Alert: Content selection is disabled!!