‘கம்போர்ட் சோன்’ அதாவது ‘சௌகரியமான வட்டம்’ என்று கூறுவார்கள். இது மனிதனின் ஒரு உளவியல் நிலையாகும், இதில் ஒரு நபர் எந்தவிதமான விபரீதம் ஏற்படுத்தும் முயற்சியையும் எடுக்காமல், கவலையற்ற நிலையில், நன்கு பரிச்சயமான செயல்களை அல்லது வேலைகளை செய்து கொண்டிருப்பது. சிம்பிளாக சொல்ல வேண்டுமானால் ரிக்ஸ் எடுக்காமல் வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்வது.
வாழ்க்கையில் பெரும் வெற்றி கண்டவர்கள் இந்த கம்போர்ட் சோனை விட்டு வெளிவந்து புதிய முயற்சியைச் செய்தவர்கள் என்று நடைமுறை வரலாறுகள் கூறுகிறது.
ஆனால் பவர் ஆஃப் பாசிட்டிவிட்டியின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கிறிஸ்டன் பட்லர் தனது கம்போர்ட் சோன் புத்தகத்தில் தனது வாழ்க்கையை மேற்கோள்கள் காட்டி எழுதுகிறார்; இந்த கம்போர்ட் சோனிலிருந்து வெளி வந்து சௌகரியமற்ற நிலையில் இருந்து கொண்டு சாதிக்க நாம் முயற்சித்தால் அது நமது உள்ளார்ந்த வளங்களைக் குறைத்து, நாம் ஏற்கனவே எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மேலும் மோசமாக்குகிறது. அதனால் அந்த சௌகரியமான வட்டத்திற்குள்ளேயே இருந்து கொண்டு விடாமுயற்சி செய்யுங்கள் வெற்றி பெறலாம் என்கிறார்.
நித்திலாவின் கம்போர்ட் சோன் எந்த வித கட்டுப்பாடுகளும் அற்ற இந்த தள்ளுவண்டியில் விற்பனை செய்வது தான். அவள் ஆதேஷிடம் கூறியது போல் அவளது ராஜ்யம் இது வரை அவளது கைகளில் மட்டும் இருந்தது. வனக்குடிலுக்கு இடம்பெயர்ந்தால் அவளது சௌகரிய வட்டத்திலிருந்து வெளி வர வேண்டும். இது தேவையா?
ஆதேஷ் சொன்னது போல் செயின் ஆப் ரெஸ்ட்டாரண்ட் கூட பிற்காலத்தில் திறக்க வாய்ப்புகள் அதிகம் தான். ஆனால் அதற்கு அவள் நிறைய உழைக்க வேண்டி இருக்கலாம், உழைப்பதற்கு அஞ்சுபவள் இல்லை என்ற போதிலும், தனக்கும் தாயிக்குமான இந்த வருமானம் போதுமானதாக இருக்கையில் ஏன் இத்தகைய முயற்சியை எடுக்க வேண்டும் என நிறைய யோசித்தாள்.
வீடு திரும்பியதிலிருந்து மகள் யோசனையிலேயே உழன்று கொண்டிருப்பது கண்டு நித்திலாவின் தாய் தேவகி, “நித்திம்மா, என்னடம்மா யோசனை?” சாப்பாட்டு தட்டை வெறித்தவாறு அமர்ந்திருந்த நித்திலாவை தாயின் கேள்வி நிகழ் காலத்திற்கு நகர்த்திக் கொண்டு வர
ஏறிட்டவள், “ஒண்ணுமில்லைம்மா. நான் சொன்னேன் தானே சேரமான் குடும்பத்தின் வாரிசு மிஸ்டர் ஆதேஷ் இரண்டு நாள் முன்ன பார்க்க வந்தாங்கன்னு?”
ஆமாம் என்பதாய் தேவகி தலையாட்ட
“அவங்க ஒரு பிசினஸ் டீல் பேசினாங்க” என்றவள் ஆதேஷ் சொல்லிய அனைத்தையும் தாயிடம் பகிர்ந்தாள்.
அமைதியாக கேட்டுக் கொண்ட தேவகி, “செல்லம், அந்த தம்பி சொல்றது எனக்கு என்னமோ பெட்டர் ஐடியாவா இருக்கு. கால் வலின்னு என்னையும் நீ உன் கூட வர அனுமதிக்க மாட்டேன்ன்னு சொல்ற. ரோட்டில் வயசு பொண்ணு தனியா நின்று வேலை செய்தால், கொஞ்ச நாளைக்கு முன் நடந்ததே… உன்னிடம் தகாத முறையில் நடந்தானே, அது மாதிரி அடிக்கடி நடக்குது தானே, எங்க நம்மால் தவிர்க்க முடியுது. அந்த சேரமான் குடும்பத்தைப் பற்றி நல்ல மாதிரி தான் நான் இதுவரை கேள்விபட்டிருக்கேன். அந்த தம்பியும் ரொம்ப மரியாதையா பேசினார்ன்னு நீயே சொல்ற. அப்புறம் அங்க போறதில் என்ன பிரச்சனை உனக்கு? ஏன் தயங்குற?” மகளின் வலது கையை எடுத்து வருடிக் கொடுத்தவாறு தாய் சொல்ல
“ம்ம்ம் தெரியலம்மா குழப்பமாக இருக்கு. இது ஒரு பெரிய மூவ் இல்லையா. யோசித்து தான் செய்யணும். காசு பணம் தாண்டி, நீங்க சொன்ன சேப்டி தான் நான் முதலில் நினைச்சேன். சரி வரும்ன்னு நினைக்கிறீங்களாம்மா?” நித்திலா தாயைப் பார்க்க
“வரும் கண்டிப்பா வரும். யோசிக்காத செல்லம்” தாய் தைரியம் சொன்னார்
“ம்மா…இப்போ நாம் சமைக்கிறது விட அதிகம் சமைக்க வேண்டி வரலாம். முடியுமா நம்மால்?” மகள் இன்னும் தயங்க
“நித்திம்மா, தேவைப்பட்டால் நம்ம கோதை இருக்கா இல்ல, உதவிக்கு கூப்பிடலாம். அவளுக்கும் ஒரு வருமானமா இருக்கும்” தேவகி அதற்கும் தீர்வு சொல்ல வனக்குடிலுக்கு போவது என முடிவு செய்தாள் நித்திலா
மனம் என்பது ஒரு சிறந்த விளைநிலம் போன்றது, அதில் நாம் என்ன பயிரிடுகிறோமோ அது மட்டுமே நம்மில் அதிக விளைச்சலைக் கொடுக்கும்.
நித்திலா குழப்பத்தை தன்னில் விதைத்து உழன்ற வரை குழப்பத்தை மட்டுமே விளைவித்த மனம், தேவகியின் வனக்குடில் ஒரு பாதுகாப்பு வளையமாக இருக்கும் என்னும் சொல் விடைக்கப்பட்டவுடன், அதைப் பிடித்துக் கொண்டது.
சேரமான் குடும்பத்தின் தொழிலுக்குள் தன் காலடிகள் வைக்க முடிவு செய்தவளை, அந்த குடும்பத்தின் ஒரு அங்கமாகவே மாற்ற ஒருவன் ஒற்றைக்காலில் தவமிருப்பான், அதற்கு தடை போடும் தனது குடும்பத்தை எதிர்த்து விருப்பங்களை நிறைவேற்றுவான் என்று நித்திலா இப்போது அறிந்திருக்க வாய்ப்பில்லை.
காலச்சக்கரம் தன் கைகளில் ரகசியங்கள் சுமந்து கால்களை எட்டிப் போட்டு நடந்தது.
தாய் சொல்லி விட்ட போதும், தான் முடிவு செய்து விட்ட போதும், சிந்தனை நித்திலாவை பிரகாரமாய் நினைத்து சுற்றிச் சுற்றி வந்தது.
மூன்று நாட்கள் திரும்பத் திரும்ப மனதை வலம் வந்து களம் கண்டவள், பிறகு ஆதேஷுக்கு சொல்லிவிடலாம் என நினைத்து அலைபேசியை எடுக்க, “ஐ டோன்ட் வாண்ட் டு டிஸ்டர்ப் யூ, ஜஸ்ட் வாண்ட் டு லெட் யூ நோ தட் ஈகர்லி வெயிட்டிங் ஃபார் யுவர் ரெஸ்பான்ஸ் (நான் உங்களைத் தொந்தரவு செய்ய விரும்பவில்லை, உங்கள் பதிலுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் என்பதை மட்டும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்)” என்று கள்ளன் சூசகமாக ஒரு செய்தியை வாட்ஸ் அப்பில் அனுப்பி இருந்தான்.
பார்த்ததும் வாய்விட்டு சிரித்துக் கொண்டாள் பெண்.
அவனது சுயவிவரப் படத்தைப் (ப்ரொபைல் பிக்சர்) பார்த்ததும் ஒரு ஆச்சரியம் இவளுக்கு, தஞ்சை பெரிய கோயிலின் பிரம்மாண்டமான பிரதான விமானத்தின் பக்கவாட்டுத் தோற்றத்தின் அழகிய படம் இருந்தது.
இவருக்கு இந்த கோவில் பிடிக்கும் போல என நினைத்துக் கொண்டவள், ‘ராஜ ராஜனின் கலை வடிவத்தை யாருக்குப் பிடிக்காமல் இருக்கும். இது என்ன வழிபாட்டுத்தலம் மட்டுமா? வரலாறு பேசும் பொக்கிஷம் இல்லையா’ என புன்னகைத்துக் கொண்டாள்.
இவள் அழைக்க எதிர்பார்த்துக் கொண்டே இருந்திருப்பான் போல மன்னன், “ஹேய் நித்திலா, எப்டி இருக்கீங்க, அம்மா எப்டி இருக்காங்க?” மிஸ்.நித்திலா காணாமல் போய் வெறும் நித்திலா ஆகி இருந்தாள். ஆதேஷின் பேச்சு இயல்பாக இருந்தது.
“ஹலோ சார், நல்லா இருக்கேன், எனக்கு அம்மா இருக்கிறது உங்களுக்கு எப்டி தெரியும்?” இவள் இந்தப் பக்கம் புன்னகைக்க
“சொன்னீங்க தானே அன்னைக்கு, அதுவும் போக எல்லாருக்கும் அம்மா இருக்கிறது ஆச்சரியமான விஷயமில்லையே” ஆதேஷ் சிரிப்போடு கேட்க
“டன், பிசினஸ் மேன் நீங்க பேச்சில் ஜெயிக்க முடியாது என்னால்” என்றவள்
“நான் முடிவு செய்திட்டேன் சார், வனக்குடிலில் ஜாயின் பண்ணிக்கறேன். பட் எனக்கு ஒரு வாரம் டைம் கொடுங்க, எல்லாம் அரேஞ்ச் பண்ணனும். உங்களுக்கு பிரச்சனை இல்லையே? ஓகே தானே?” நித்திலா கேட்டாள்
“டேக் யுவர் டைம் நித்திலா, எனக்கும் நீங்க தள்ளு வண்டி வைக்க சில அரேஞ்ச்மென்ட்ஸ் செய்யணும், ஸோ எங்களுக்கும் நல்லது தான்” என்றவன்
” பட் உங்களுக்கு எப்போ நேரம் இருக்கோ வாங்களேன் இங்க, பார்த்த மாதிரி இருக்கும் இல்லையா” ஆதேஷ் அழைப்பு விடுக்க
“கண்டிப்பா வரேன் சார், புதன்கிழமை எப்போதும் வியாபாரம் அதிகம் இருக்காது, காலையில் ஒன்பது ஒன்பதரை மணிக்கு பொதுவா முடிச்சுடுவேன். ஸோ வரும் புதன் வரவா?” இவள் அவனது அபிப்பிராயம் கேட்டாள்.
“தாராளமா வாங்க, உங்களுக்கு எதுவும் டிரான்ஸ்போர்ட் அரேஞ்ச் செய்யணுமா?”
“இல்லல்ல… என் டூவீலர்ல வந்துடுவேன் சார். நோ வாரிஸ்” என்க
“குட், தென் சலீம்ட சொல்லிடுறேன் உன் அக்கா வர ஒத்துக்கிட்டாங்கன்னு” புன்சிரிப்பு இவனில்
“எஸ் எஸ்….ஓகே… சார் பார்க்கலாம்” என போனை கட் செய்ய விழைந்தாள்
“நித்திலா…” என் நிறுத்தியவன் “தேங்க் யூ…வெரி மச்” என்றான் நிதானமாக
“நான் தான் சொல்லணும் சார்…”
அவளிடம் பேசும் இப்பொழுதுகள் நீடிக்காதா என்னும் பேராவல் இவனில். ஏதாவது பேச வேண்டும். என்ன பேசுவது? இத்தருணம் இப்படியே உறைந்து விட்டால் கூட அழகாக இருக்கும் என்னும் நினைப்பு இவனில் கிளர்ந்து எழுந்தது.
அவள் மேல் தனக்கிருக்கும் ஈர்ப்பு அவளுக்கு தன் மேல் இல்லை என்பது திண்ணம் தான் அவனுக்கு. அவளுக்கு வேறு யாரையாவது பிடித்திருக்கலாம், அல்லது வீட்டில் யாரையாவது அவளுக்கு பார்த்தும் வைத்திருக்கலாம். நான் ஏன் இப்படி அலைபாய்கிறேன் என அவனை அவனே கேட்டும் கொண்டான். மனது முழுக்க அவள் தன் சிறகை விரித்து அமர்ந்து கொள்வதை மட்டும் ஏனோ அவனால் தவிர்க்க இயலவில்லை.
“சார்… எனக்கு ஒன்னு கேட்கணுமே, கேட்கட்டுமா?” ஒரு தயக்கத்தோடு நித்தலா நிறுத்த
“என்னவாம் நித்திலாக்கு கேட்கணும்” புன்னகை இவனுக்கு
“இல்ல..உங்க ப்ரொபைல் பிக்சர்ல பிரதான கோபுரம் இருக்கே, கோவில் பிடிக்குமா உங்களுக்கு?”
“தஞ்சை மண்ணுக்கு சொந்தக்காரன் நான், பிடிக்காமல் இருக்குமா? என்றவன்
“நித்திலாவுக்கு பிடிக்குமா? என திரும்பக் கேட்டான்
“தஞ்சை மண்ணுக்குச் சொந்தக்காரி நான், பிடிக்காமல் இருக்குமா?” கேள்வியைத் திருப்பினாள் பெண்
“ஹாஹாஹா…பல்பு வாங்கிட்டான் சேர மன்னன்” ஆதேஷ் மலர்ந்து சிரிக்க
அவன் குறிப்பிட்ட விதத்தில் சிரித்தவள், “கோவில் பிடிக்கும் அவ்ளோ தான், வேற டீப்பா ஒன்னும் தெரியாது”
“நம்ம வரலாறுகள் பற்றி தெரிஞ்சுக்க வேண்டியது ரொம்ப முக்கியம் நித்திலா, வரலாறு நமக்குத் தெரிந்தால் தான் நம் முப்பாட்டன்கள் முப்பாட்டிகள் எவ்வளவு அறிவுசார் சமூகமாக வாழ்ந்திருக்காங்கன்னு உணர முடியும். நம்ம பெரிய கோவிலில் சிவன் இருக்கும் கருவறையின் பிரதான கோபுரத்தையே எடுத்துக்கங்க, இது பதினாறு மாடிக் கோபுரம். அதில் 13 மாடிகள் குறுகிச் செல்லும் சதுரங்களாக இருக்கும். இதன் உயரம் 216 அடி அதில் இருக்கும் கும்பம் அதாவது உச்சிக்கல் அப்டின்னு சொல்வோம் இல்லையா அதன் எடை சுமார் 80 டன். இது 7.7 மீட்டர் சதுர வடிவ ஒற்றைக் கருங்கல் அடித்தளத்தின் மீது அமைச்சுருக்காங்க. இதில் என்ன சிறப்பம்சம் தெரியுமா? கோபுரம் முழுவதும் திடமான கருங்கல்லால் கட்டப்பட்டு இருக்கு. ஆனா, இது கட்டப்பட்ட காலத்தில் தஞ்சாவூரிலிருந்து 100 கிலோமீட்டர் சுற்றளவில் எந்தக் கருங்கல் சுரங்கங்களும் இருக்கவில்லை. அப்போ எங்க இருந்து எப்டி இந்த கருங்கற்களைக் கொண்டு வந்திருப்பாங்க? எப்டி இருநூற்று அடிக்கு அந்த கற்களை தூக்கி இந்த கோபுரத்தை கட்டிருப்பாங்க ஆச்சரியமா இல்ல? அப்போ ஏதோவொரு டெக்னாலஜி இருந்திருக்கு தானே? எப்டி அதையெல்லாம் நாம் மிஸ் பண்ணினோம்” சிலாகித்தான் ஆதேஷ்
எத்தனையோ முறை கோவிலுக்கு சென்றிருந்தாலும் இப்படியெல்லாம் உணர்ந்து நான் பார்த்ததில்லையே, இவன் சொல்வது போல் அத்துணை அறிவுசார் சமூகம் தான் நம் முன்னோர்கள் என்பதில் ஐயமில்லை என நினைத்துக் கொண்டாள் பெண்
“போர் அடிச்சுட்டேனா நித்திலாவை?” இவளின் அமைதியை கலைத்தான் மன்னன்
“இல்லல்ல, வெரி இன்டெரெஸ்ட்டிங், ஓகே சார் நான் வைக்கட்டுமா” என்றாள் நித்திலா
“எஸ், எனக்கும் மீட்டிங் இருக்கும்மா, புதன்கிழமை பார்க்கலாம்” என அலையைத் துண்டித்தான் ஆதேஷ்.