புதன்கிழமை காலை தனது அன்றைய காலை நேர வியாபாரம் நிறைவுற்றவுடன் வனக்குடிலுக்குச் சென்றாள் நித்திலா.
காடுகள் சூழ்ந்த இடத்தில் பண்டைய கால அரண்மனையின் அலங்கார வாயில் போன்றே அமைக்கப்பட்டிருந்த அந்த குடிலின் நுழைவாயில் கண்டு புருவங்கள் உயர்ந்தன இவளில்.
இவள் வருகின்ற நேரம் ஏற்கனவே தெரியுமாதலால் சலீமும் அதேஷும் வாகன தரிப்பிடத்தை அடுத்த நுழைவு வாயிலில் காத்துக் கொண்டிருந்தனர்.
நித்திலா தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு இவர்கள் இருவரையும் நோக்கி வந்தாள்.
கருநீல நிற குர்தாவும், வெள்ளை நிற லெக்கின்ஸும் அணிந்து துப்பட்டாவை ஒற்றைத் தலைப்பாக இருபுறமும் பின் செய்திருந்தாள்.
இவளுக்கு வெண்மை நிறங்கள் பிடிக்கும் போல என நினைத்துக் கொண்டான்.
“ஹலோ நித்திலா, வாம் வெல்கம் டு வனக்குடில்” கரங்கள் இரண்டையும் குவித்து வரவேற்றான் ஆதேஷ்.
“தேங்க்யூ சார், நுழைவு வாயிலே பிரம்மாண்டமாகவும் அழகாவும் இருக்கு” மனது மறையாது புன்னகையுடன் பாராட்டினாள் பெண்.
“ஹாய்க்கா, ஏன்கா ஏன்…உங்களுக்கு வேற நல்ல இடம் கிடைக்கலையா பிசினஸ் பண்ண? இருந்து இருந்தும் எங்க பாஸ் தான் கிடைச்சாரா? இப்பவும் ஒன்னும் கேட்டுப் போகலை, இந்த பின்னங்கால் பிடரியில் ஓடுறதுன்னு கேள்வி பட்டுருக்கீங்களா? இப்போ வேணும்னா டிரை பண்ணுங்க, தப்பிச்சுடலாம்” சிரிக்காது சலீம் சொல்ல
“அது ஒண்ணுமில்லை நித்திலா, இந்த வளர்த்த கிடா மார்பில் பாயுதுன்னு வாங்கல்ல, அது தான் இது” சலீமின் முதுகில் ஒன்று சிரித்துக் கொண்டே வைத்தான் ஆதேஷ்.
“ஹாஹாஹா….” இவள் சிரித்தாள்
“ம்ம்ம் பொழைக்கத் தெரியாத புள்ள இந்த நித்திலாப் பொண்ணு. என்ன செய்ய. விதி யாரை விட்டது” சலீம் மறுபடியும் வம்பிழுக்க
“தனக்கா, இந்த டிஷ்வாஷர் (பாத்திரம் விளக்கும் எந்திரம்) வேலை செய்யல, பாத்திரம் விளக்க ஆள் குறையுதுன்னு சொன்னீங்க தானே? சலீமுக்கு பொழுது போகலையாம், உங்களுக்கு உதவியே ஆவேன்னு ஒத்தக் காலில் நிற்கிறான். இழுத்துட்டு போங்க” இவர்களைக் கடந்து போன தனத்திடம் ஆதேஷ் சொல்ல
“ம்கும்..தம்பி உதவி கேட்டா உபத்திரவத்தை மடியில் கட்டுதீகளே” நொடித்துக் கொண்டு நகர்ந்தார் சமையல் கட்டில் வேலை செய்யும் தனம்.
“எதே..உபத்திரவமா? டோட்டல் டேமேஜ் டா சலீமா, வாயில் சனி, வாயில் சனின்னு சொன்னானே கிளி ஜோசியக்காரன், அது நுழைவு வாயிலா என் வாயிலான்னு சொல்லாம விட்டுட்டான் துரோகி” சலீம் நொந்து கொள்ள
இருவரும் வாய் விட்டு சிரித்தார்கள். பிறகு நித்திலாவை அழைத்துக் கொண்டு முதலில் குடிலின் ஊடே நடக்கலாயினர்.
ஒவ்வொரு வீடும் குறைந்தது ஐம்பது அடி இடைவெளியில் அமைக்கப்பட்டிருந்தது.
ஒவ்வொரு வீட்டின் முகப்பும் ஒவ்வொரு சாம்ராஜ்யங்களின் அடையாளங்களை நினைவூட்டும் பொருட்டு மிக அழகாகவும் கலைநயத்துடனும் கட்டப்பட்டிருந்தது. ஒரு அறை கொண்ட வீடு முதல், நான்கு அறைகள் கொண்ட வீடு வரை அந்த குடிலில் இருந்தது. இங்கு வருவோர் அவரவர் வசதிக்கும் தேவைக்கும் ஏற்ப பதிந்து கொள்ளலாம்.
வீடுகள் முற்றிலும் ஃபர்னிஸ் செய்யப்பட்டிருந்தது. ஒரு வீட்டின் கதவின் முன் சென்று நின்ற ஆதேஷ், நித்திலாவை அருகே அழைத்தான், “நித்திலா, இந்த கார்விங் (செதுக்குதல்) பார்த்தால் ஏதாவது உங்களுக்கு நியாபகம் வருதா?” என அவளது முகத்தை ஆர்வத்துடன் பார்த்துக் கேட்டான்.
தெரியாது என்பதாய் தலையாட்டினாள் பெண். இவன் தோண்டித் துருவி இந்திய கட்டிடக்கலையைப் படித்து அந்த நுணுக்கங்களை எல்லாம் தனது கனவு குடில்களில் கொடு வந்து செதுக்கி வைத்திருந்தால் நித்திலாவுக்கு எப்படி அதெல்லாம் தெரியும்.
புன்னகைத்துக் கொண்டவன், “புவனேஸ்வரில் உள்ள 10 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட முக்தேஸ்வரர் கோயில் மிகச் சிறந்த சிற்ப வேலைப்பாடுகளுக்குப் புகழ்பெற்றது. இதை ஒடிசாவின் கோயில் கட்டிடக்கலையின் முத்துன்னு சொல்லுவாங்க. அந்த கலை நுணுக்கங்களை இந்த கதவில் கொண்டு வந்திருக்கோம். ஒடிசாவில் முத்து..ஐ மீன் நித்திலம்” விளக்கினான்
“க்கா..சொன்னேன் தானே தப்பிச்சு ஓடிங்கன்னு. இங்க உள்ள ஒவ்வொரு வீட்டையும் பற்றி எங்க தல தல புராணம் பாடுவார். நான் தான் தெரியாமல் பொறியில் மாட்டினேன், உங்களுக்கு என்ன தலையெழுத்து. நல்லா யோசிச்சுக்கங்க” சலீம் தன் முதலாளியை வாரினான்.
“வாயில் மட்டும் இல்லடா உனக்கு சனி, உடம்பு முழுக்க இருக்கார்” என்ற ஆதேஷ் சலீமின் கழுத்தில் கையைச் சுற்றி நெறிக்க
“கொலை கொலை..” என கத்தினான் இளையவன்
“ஹாஹாஹா…” முகம் விகசிக்க சிரித்தாள் பெண்.
பிறகு நூலகம், விளையாட்டு மைதானங்கள், சமையல் அறை, உணவுக் கூடம் என ஒவ்வொன்றாக காட்டிக் கொண்டு வந்தவன், இறுதில் நித்திலாவின் தள்ளுவண்டி வைப்பதற்கு ஆதேஷின் குழு வடிவமைத்திருந்த இடத்தைப் பார்த்ததும் அத்தனை பிடித்து விட்டது இவளுக்கு.
மர வேலைப்பாடுகள் கொண்ட தூண்கள் நான்கு புறமும் அமைத்து மரத்தால் ஆன மேற்கு வங்காளத்தின் ஜோர்-பங்களா வகை மேற்கூரையுடன் நின்றது அந்த அமைப்பு. இந்த இடத்தில் அவளது தள்ளுவண்டியை கொண்டு வந்து நிரந்தரமாக நிறுத்திக் கொள்ளலாம் என்று ஆதேஷ் சொல்ல, செய்கின்ற வேலையைத் திருந்தச் செய்கின்றவர் போலும் இவர் என நினைத்துக் கொண்டாள் நித்திலா.
எல்லா இடங்களையும் பொறுமையாக சுற்றிக் காட்டி விலக்கிவிட்டு இறுதியாக ஆதேஷின் அறைக்கு நித்திலாவை அழைத்து வந்தான்.
சலீம் தனக்கு வேலையா இருப்பதாக சென்று விட, அவளை தனது இருக்கைக்கு எதிரே இருந்த இருக்கையில் அமரப் பணித்தான்.
“என்ன சாப்பிடுறீங்க நித்திலா” இவன் கேட்க
“இல்ல சார், வேண்டாம். குடிக்க தண்ணீர் மட்டும் போதும்” என்றாள்
இன்டர்காமில் ஆரஞ்சுப் பழரசம் கொண்டு வரப் பணித்தவன்
பிறகு ஒரு கோப்பை எடுத்து இவள் பக்கம் நகர்த்தி, “இது உங்களுக்கான அக்ரிமென்ட் நித்திலா. அவசரம் இல்லை, வீட்டுக்கு கூட எடுத்துட்டுப் போய் படிச்சு பார்த்துட்டு கையெழுத்துப் போடுங்க. நாம் என்ன பேசினோமோ அதை மட்டும் தான் எழுதி இருக்கேன். இன் கேஸ், உங்களுக்கு ஏதாவது மாற்றம் செய்யணும்னா கூட சொல்லுங்க செய்யலாம்” ஆதேஷ் சொல்ல
“எதுக்கு சார் இதெல்லாம்? உங்க மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. அக்ரிமென்ட் போடுக்கற அளவு அவ்வளவு பெரிய தொழிலா நான் செய்யறது” அமைதியாக முறுவலித்தாள்
“தப்பு நித்திலா, ஒரு இளம் பெண் தெருவில் தள்ளுவண்டி போட்டு வியாபாரம் செய்வதற்கு ஒரு தைரியம் இருக்கணும், ஒரு டிகிரி முடிச்சுட்டு இப்படி ஒரு தொழில் தொடங்க இந்த காலத்தில் எத்தனை பெண்கள் முன் வருவாங்க? உங்களுக்கு வேற வேலை கண்டிப்பா கிடைச்சிருக்கும். பட், இந்த சிறுதானிய உணவை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கணும் அப்டின்ற எண்ணம் தான் உங்களை உந்தித் தள்ளி இந்த தொழில் தொடங்க வைத்திருக்கும் இல்லையா? இது ஒரு நல்ல ஐடியா, நிறைய பேர் யோசிக்கிறதில்லை. நீங்க யோசிச்சு இருக்கீங்க, அப்போ உங்க சிந்தனைக்கும் உழைப்புக்கும் நான் மரியாதை தரணும். இது என்னைப் பொறுத்தவரை ஒரு பெரிய பிசினஸ் டீல் தான். யூ ஷுட் பீ ப்ரௌட் ஆப் யுவர்செல்ப் (நீங்கள் உங்களைப் பற்றி பெருமைப்பட வேண்டும்)” அழுத்தமாக இருந்தது ஆதேஷின் சொற்கள்.
தன்னை தன் எண்ணங்களை துல்லியமாக உணர்ந்து கொண்ட சேர மன்னன் மீது மிகுந்த மரியாதை எழுந்தது நித்திலாவுக்கு, “தேங்க் யூ சோ மச் சார்” என்றவள் அந்த கோப்புகளை புரட்டலானாள்
ஆதேஷ் கேட்ட பானம் வந்துவிட நித்திலாவுக்கு ஒன்றைக் கொடுத்து தனக்கும் ஒன்றை எடுத்துக் கொண்டான்.
“நித்திலா, நீங்க அந்த பைல்ல வீட்டுக்கு எடுத்துட்டுப் போங்க” என்றவன் பானத்தை அருந்தினான்.
“உங்களுக்கு கட்டிக்கலையில் நிறைய ஆர்வம் இருக்கு தென் ஏன் சார் கன்ஸ்டிரக்ஷன் பக்கம் போகல” நித்திலா மனதில் உறுத்திக் கொண்டிருந்ததைக் கேட்டாள்.
“ம்ம்ம்…பிடிக்கும் தான், பட் இந்த மாதிரி நுணுக்கங்கள் நிறைந்த கட்டிடங்கள் எங்க இப்போ கட்றோம்? நான் மாஸ்டர்ஸ்ல மேனேஜ்மென்டும் படிச்சேன். நான் நினைக்கிற மாதிரி வீடுகள் கட்டி அதை எப்டி வியாபாரமாக்கலாம்ன்னு யோசிச்சப்போ இந்த ஐடியா வந்தது. வெளிநாடுகளில் இந்த வெகேஷன் ஹவுஸ் ரொம்ப பிரபலம். சரி முயற்சிக்கலாம்னு ஆரம்பிச்சேன். இந்த மாதிரி இந்தியா முழுக்க குடில்கள் திறக்கணும் அது தான் என் எண்ணம்” வரும் காலத்தின் கனவையும் பகிர்ந்தான்.
அமைதியாக தலையசைத்து கேட்டுக் கொண்டவள் அடுத்து என்ன பேச என்று தடுமாறினாள்.
அவளையே ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தவன், “பிடிச்சுருக்கா நித்திலா” என்றான்
தனது பழரச குவளையை ஆராய்ந்து கொண்டிருந்த பெண் சட்டென நிமிர்ந்து புரியாது பார்க்க
“இல்ல நித்திலாக்கு வனக்குடில் பிடிச்சுருக்கான்னு கேட்டேன்” கள்ளின் கேள்வி ஒன்று தான் கேட்ட தோனியை மாற்றினான்
“ம்ம்ம் ரொம்ப அழகா இருக்கு சார், ஏதோ மன்னர்கள் வாழும் அரண்மனைக்குள் வந்த மாதிரி” என்றவள் “பட் மன்னரும் வாழ்கிறார் தான்” என்று சொல்லிப் புன்னகைக்க
“ஆமா உங்களுக்கு எப்படி இந்த சிறுதானியக் காதல்?” உதடுகளில் புன்னகை வந்து ஒட்டிக் கொள்ள கேட்டான்
“நம்முடைய பாரம்பரிய உணவுகள் இந்த சிறுதானியங்கள் தானே சார். என் பாட்டி உயிரோட இருக்கும் போது சொல்லுவாங்க, அரிசி சோறு பொங்கறதுன்னா அது ஏதாவது விஷேசமாக இல்லை பண்டிகையா இருக்கணும் அப்டின்னு. நம் முன்னோர்களின் அன்றாட வாழ்க்கை முறையில் அரிசி குறைவாகத் தான் இருந்திருக்கு. இந்த சிறுதானியங்களைத் தான் பிரதானமா சாப்பிட்டு இருக்காங்க. அப்படி சாப்பிட்ட வரை நோய்களும் குறைவாக தான இருந்திருக்கு. இன்னைக்கு நம் உணவு பழக்கம் ரொம்பவே மாறிடுச்சு. புது புதுசா நோய்களும் வந்துடுச்சு. நான் படிக்கும் போதே மனதில் இருந்தது தான், வாய்ப்பு கிடைத்ததும் பயன்படுத்திக் கொண்டேன்” மனம் சிறகு பிரிக்க விவரித்தாள் பாவை
“அமேஸிங்…. ” என்றவன் மேசை மேலிருந்த பேப்பர் வெயிட்டை உருட்டிக் கொண்டிருந்தான்
“நான் கிளம்பறேன் சார், இந்த டாக்குமெண்ட் எப்போ திருப்பி தரணும்?” தன கையிலிருந்த கோப்பைக் காட்டிக் கேட்க
“நீங்க அடுத்த திங்கள் ஆரம்பிக்கறீங்க தானே, அப்போ கொண்டு வாங்க போதும்” என்றவன்
“வாங்க நான் உங்க வண்டி வரை வரேன்” என எழுந்து கொண்டான்
பேசிய படியே இருவரும் வண்டி நிற்கும் இடத்திற்கு வர, “ஓகே சார், பார்க்கலாம்” விடை பெற்றாள் நாயகி
நேசம் துளிர்த்த விழிகளைச் சுமந்த முகத்தை அசைத்து விடை கொடுத்தான் நாயகன்
இருவரையும் இறுக்க கட்டி உருக வைக்கக் காத்திருந்த காலம் ஆடை கட்டி தன்னை அழகு படுத்திக் கொண்டது.