நித்திலா வனக்குடிலுக்கு வந்து மூன்று மாதங்கள் கடந்திருந்தது.
காலை ஆறரை மணிக்கு வனக்குடில் வாயிலாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாகனத்தில் அன்றைய நாள் முழுமைக்கும் உரிய சமைத்த உணவுகளோடு வருபவள், காலை பத்து மணிக்கு முதல் உணவுப் படையல் முடிவுற்றதும் அவளுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குள் ஓய்வெடுப்பாள். பிறகு மாலை மூன்று மணிக்கு ஆரம்பித்து ஆறரை மணி வரை இரண்டாம் கட்ட பரிமாறல் நடைபெறும், அது முடிந்த பிறகு வீடு திரும்புவாள். இது அவளது அன்றாட வழக்கமாக இருந்தது.
நித்திலா பொதுவாகவே அதிகம் பேசாத பெண் என்பதால் தான் உண்டு தன் வேலை உண்டு என தனக்குள் ஒரு வட்டம் வரைந்து அதற்குள் மட்டும் இருந்து வந்தாள்.
அவளுக்கு தரப்படும் ஓய்வு நேரங்களில் சோம்பி இருக்காமல் அங்கிருந்த நூலகம் சென்று பொழுதைக் கழித்தாள். எல்லோரிடமும் அமைதியாகவும், பொறுமையோடும் பழகுவதால் அங்கு வேலை செய்யும் பணியாளர்களிடம் ஒரு நன்மதிப்பைப் பெற்றிருந்தாள்.
மதியம் உணவுக்கூடத்திற்கு இவள் உணவு உண்ண வரும் வேளையில் பெரும்பாலும் ஆதேஷும் சலீமும் வந்து கலந்து கொள்வார்கள். அந்த நேரங்களில் அவர்கள் இருவரும் அடிக்கும் லூட்டிகளால் கலகலப்பாக இருக்கும்.
பொதுவாக ஆதேஷின் குடும்ப அங்கத்தினர்களின் அருள்மொழி மற்றும் லிங்கா தவிர ஏனையோர் இங்கு வருவது குறைவு தான் என்பதால் அவர்கள் இருவர் தவிர நித்திலாவுக்கு யாரையும் பார்க்கும் வாய்ப்பு ஏற்படவில்லை.
அன்று இரவு ஏழு மணிக்கு வீடு திரும்பிய ஆதேஷ் குளித்து இரவு உணவுக்கு தயாராகி வர இரண்டாம் மாடியிலிருந்த தனது அறைக்குச் சென்றான்.
அந்த அரண்மனையின் முதல் மாடியில் பெற்றவர்கள் அனைவருக்குமான அறைகள் இருக்க, இளைஞர் சமூகம் இரண்டாம் மாடியில் குடி கொண்டிருந்தது.
ஆதேஷ் குளித்து உடை மாற்றி தனது அறையிலிருந்த நீள்விருக்கையில் அமர்ந்த படி தனது மடிக்கணியைப் புரட்டிக் கொண்டிருந்தான்.
அறையின் கதவு தட்டப்படும் ஓசையில், “எஸ் கம் இன்” என்றவன் தனது வேலையில் ஆழ்ந்திருக்க
வசுந்தரா மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க உள்ளே வந்தார்.
“கூப்டா நானே வரப்போறேன். மூட்டு வலியோட படி ஏறாதன்னு சொன்னா கேட்கறியா அத்தை” இவன் கடிந்து கொள்ள
“இதெல்லாம் ஒரு உடற்பயிற்சி தான் பெரியவனே” என்றவர் வந்து அவன் அருகில் அமர்ந்து கொண்டார்.
அடுத்த ஐந்து நிமிடங்கள் அமைதியில் கழிய, “ஷுட் இட் அவுட், என்ன சொல்லி அனுப்பினார் உன் பெரிய அண்ணா?” தான் கணித்ததைக் கேட்டான்.
“ஏன் என் பெரிய அண்ணா தான் ஏதாவது சொல்லி அனுப்பியிருப்பாங்களா? வேற யாராவது சொல்லி இருக்கலாம், ஏன் எனக்கே உன்ட பேச ஏதாவது இருக்கலாம். எப்போ பார் என் அண்ணாவை குறை சொல்லாட்டி உனக்கு பொழுது போகாது. எல்லாத்துக்கும் அவரை ஏன் தோளில் சுமக்கற? அத்தை நொடிக்க
அவரின் கன்னத்தைப் பிடித்து கொஞ்சியவன், “அப்போ உன் அண்ணா ஒரு வேதாளமுன்னு சொல்ற” இவன் வம்பு பேசினான்
“பெரியவனே உதை வாங்கப் போற, நான் எங்க அப்டி சொன்னேன்?” முறைத்தார் வசுந்தரா
“இப்போ சொன்னயே, தோளில் தூக்கி சுமக்கிறேன்ன்னு, பின்ன வேதாளத்தைத் தான் தோளில் சுமக்கணும்” வம்பன் விடாது இருக்க
அவன் கன்னத்தில் செல்லமாக ஒன்று கொடுத்தவர், “வாய் வாய்…உனக்கு என் அண்ணா தான் சரி. ஓகே இப்போ வா, தாத்தா ஏதோ பேசணுமாம்”
“என்னன்னு சொல்லு, உனக்கு தெரியாம இந்த தஞ்சாவூர் ஜில்லாவில் ஏதாவது நடந்திடுமா என்ன” ஆதேஷ் சிரிக்க
“தெரியும், ஆனா சொல்ல முடியாது, வான்னா வா” என்றவர் எழுந்து போய்விட்டார்.
ஆதேஷ் இறங்கி கீழே வர மொத்த குடும்பமும் ஹாலில் கூடி இருந்தார்கள்.
‘ஏதோ பெருசா காத்துட்டுருக்கு போலயே’ என மனதில் நினைத்தவன் வந்து தாத்தாவின் அருகில் அமர்ந்து கொண்டான்.
“ஆதி கண்ணா, உன்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்யா” சேதுபதி சேரமான் ஆரம்பிக்க
“சொல்லுங்க தாத்தா” குரல் மரியாதையாக வந்தது
“உனக்கும் லிங்காவுக்கும் வயது இருபத்து ஒன்பது முடியப் போகுதுய்யா, வீட்டில் நாங்க பெரியவங்க எல்லாரும் உங்க கல்யாணத்தை நடத்திடலான்னு முடிவு செய்திருக்கோம். அதுவும் போக நம்ம நாயனாவும் படிப்பு முடிச்சுட்டா, அவளுக்கும் கல்யாண வயசு ஆயிடுச்சு இல்லையா. லிங்காவுக்கு நம்ம சிவகங்கை சமஸ்தானத்தில் பொண்ணு ரெடியா இருக்கு. இரண்டு கல்யாணத்தையும் ஒன்னா நடத்திடலாம்ன்னு நினைக்கிறோம். நீ என்ன சொல்ற?” தாத்தா ஆதேஷைப் பார்க்க
இவனுக்கு என்ன சொல்கிறார் தாத்தா என ஒன்றும் புரியவில்லை. குழப்பமாக அவரை ஏறிட்டவன், “தாத்தா, எனக்கு புரியல, லிங்காக்கு பொண்ணு பார்த்திருக்கீங்க சரி, பட் எனக்கு பொண்ணு பார்க்காமல் எப்டி இரண்டு கல்யாணத்தை நடத்து…..” முடிக்காமல் சட்டென நிறுத்தியவன்
“ஹாஹாஹா..இவளா இந்த வாண்டு எனக்கு பொண்ணா?” என சிரித்தவன் எழுந்து முகம் கலங்கிப் போய் நின்று கொண்டிருக்கும் நாயனாவின் அருகில் சென்று அவளது கழுத்தில் ஒரு கையிட்டு அணைத்துக் கொண்டவன்
“நயன் முகத்தை பாருங்க, விட்டா உலகத்தின் கடைக் கோடிக்கு ஓடிடுவா. உங்க எல்லாருக்கும் எப்டி இப்டி ஒரு ஐடியா வந்தது….?” என கண்களைச் சுழற்றியவனின் பார்வை அவன் பாட்டி கோப்பெருங்தேவியிடம் வந்து நிலைத்தது.
“அத்தை பொண்ணை கட்டுறது உலக வழக்கம் தானே பெரியவனே, என்னை ஏன் பார்க்கற” பாட்டி முறைக்க
“நினைச்சேன் உங்க வேலையாகத் தான் இருக்கும்ன்னு. இதோ நிற்கறாளே ஜான்வி அவளுக்கும் நாயனாவுக்கும் என்னைப் பொறுத்தவரை எந்த வித்தியாசமும் இல்லை. அவ சித்தப்பா பொண்ணுன்னா இவ அத்தை பொண்ணு அவ்வளவு தான். சாரி என்னை விட்டுடுங்க. நான் மட்டுமில்லை நயனும் இதுக்கு சம்மதிக்க மாட்டாள்” ஆதேஷ் முடிக்க
“உன் சம்மதத்தை யாரும் இங்க கேட்கல, இது எங்கள் முடிவு கட்டுப்பட தான் வேண்டும். ஏதோ தொழில்ல விட்டுட்டோம்றதுக்காக எல்லாம் உன் இஷ்டம் இல்லை. பெரியவங்க சொல்றது தான் இறுதி” உச்சகட்ட கோபத்தில் கத்தினார் விக்ரமன்
“என்னை தாத்தா கேட்டாங்க, நான் பதில் சொல்லிட்டேன். அதுவும் இறுதி தான்” இவன் குரலும் அமைதியாக வந்த போதும் கடினப்பட்டு இருந்தது.
“என்டா திமிரா, பெரியவங்கன்ற மரியாதை இல்லை” இருக்கையில் அமர்ந்திருந்த விக்ரமன் சிலிர்த்துக் கொண்டு எழுந்தார்
வசுந்தராவும் வசந்தாவும் ஆதேஷின் அருகே வந்து காப்பது போல் சூழ்ந்து கொள்ள ஒரு கலக்கமான சூழ்நிலை உருவானது
கைகள் இரண்டையும் கட்டிக் கொண்டு முகம் கோபத்தின் சாயலைப் பூசி இருக்க இறுகி நின்றான் ஆதேஷ்.
“விக்கிரமா, என்ன இது, பிள்ளைகளைச் சொல்றதுக்கு முன்னாடி முதலில் நீ மரியாதையா பேசு. தலைக்கு மேல் வளர்ந்த பிள்ளையை வாடா போடான்னு பேசுவயா. தப்புப்பா. நாம் கேட்டோம் அவன் தெளிவாக நாயனாவும் தனக்கு தங்கை தான்ன்னு சொல்லிட்டான். அதில் தப்பு என்ன இருக்கு. இனி என்ன செய்யணுமோ அதைப் பேசலாம்” கண்டிப்போடு சேதுபதி சொல்ல, விக்ரமன் அமைதியாக மறுபடியும் அமர்ந்து கொண்டார்.
“சரி, அப்ப நம்ம புதுக்கோட்டை சமஸ்தானத்தில் இரட்டை பிறந்த பெண்கள் இருக்கிறதா நம்ம சோஷியர் சொன்னார், நாளைக்கு நான் உரியவங்களுக்கு லெட்டர் எழுதி கேட்கச் சொல்றேன். நாம் கேட்டால் மறுக்க மாட்டாங்க. ஒரே வீட்டில் இரண்டு பேருக்கும் எடுத்த மாதிரி இருக்கும்” தாத்தன் முடிக்க
“பெரியவன் வேணாம்ன்னு சொன்னா, சின்னவனும் வேணாம்ன்னு சொல்வான்னு நீங்களே முடிவு பண்றீங்கப்பா, சின்னவன் என் பேச்சை மீற மாட்டான், என்னய்யா சின்னவனே” என்ற விக்ரமன் லிங்காவைப் பார்க்க
அதுவரை தலையைக் குனிந்து கொண்டு தரையின் வடிவத்தை அளந்து கொண்டிருந்த லிங்கா தன் பார்வையை நாயனாவின் புறம் திருப்பினான், அவளும் இவனை நிமிர்ந்து பார்க்க இருவரின் பார்வையும் அனலைக் கக்கிக் கொண்டது.
இவர்கள் இருவரையும் புன்சிரிப்போடு அளவிட்டுக் கொண்டிருந்தான் ஆதேஷ்
“உங்க இஷ்டம்ப்பா, நான் சொல்ல என்ன இருக்கு” லிங்கா வாய் திறந்திட
‘கேடி பெலொவ்’ மனதில் சிரித்துக் கொண்டான் ஆதேஷ்
“நயனாம்மா, நீ என்னடா சொல்ற” தாத்தா பேத்தியை ஏறிட
“பெரியவங்க உங்க முடிவு தான் தாத்தா” மிக மிக மெல்லிதாக வந்தது பெண்ணிடமிருந்து வார்த்தை
“ஹாஹாஹா….” வாய் விட்டு சிரித்தான் ஆதேஷ் சேரமான்
“ஆஆ….எப்போ பார்த்தாலும் இரண்டும் எலியும் பூனையுமா அடிச்சிட்டு திரியுங்க, இப்போ இரண்டும் கல்யாணத்துக்கு சரின்னு சொல்லுதுங்க. தேவுடா நான் சரியா தான் கேட்டனா?” தன் நெஞ்சில் கை வைத்தான் பிருத்வி
“ஹாஹாஹா….டோன்ட் ஜட்ஜ் எ புக் பை இட்ஸ் கவர் (ஒரு புத்தகத்தை அதன் அட்டைப்படத்தைக் கொண்டு மதிப்பிடாதீர்கள்) கேள்வி பட்டதில்லை” சூசகமாகச் சொல்லிச் சிரித்தான் ஆதேஷ்
“சரியா சொன்னீங்கண்ணா, பெரிய தில்லாலங்கடிங்க” பிருத்வியும் சிரித்தான்
“ரொம்ப சந்தோஷம். சின்னவன் ரூட் கிளியர் ஆயிடுச்சு, அப்போ பெரியவனுக்கு கேட்போம்” தாத்தா முடிக்கப் பார்க்க
“ஒரு நிமிஷம் தாத்தா, நானும் இப்பவே சொல்லிடுறேன், எனக்கு ஒரு பொண்ணைப் பிடிச்சுருக்கு. முக்கியமான விஷயம் நான் மட்டும் தான் விரும்பறேன். அவளுக்கு இது ஏதும் தெரியாது. இன்பேக்ட் என் மேல் அவளுக்கு அப்டி ஒரு எண்ணம் கூட இல்லை . ரொம்ப முக்கியமான விஷயம் அவள் அரச குடும்பத்தைச் சார்ந்தவள் இல்லை. சாதாரண குடும்பப் பொண்ணு தான். ஆனால் தனக்குன்னு ஒரு கொள்கையோட வாழறவ. நீங்க எல்லாரும் சம்மதித்து நடத்தினால் இந்த கல்யாணம் நடக்கும், இல்லை நான் கல்யாணம் பண்ணிக்கப் போறதில்லை” அழுத்தமாக இது என் முடிவு என அறிவித்தான் இளைய சேரமான் ஆதேஷ்.
பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் உறைந்து போய் இருந்தார்கள், செய்தியை அறிவித்த அவனைத் தவிர.
மன்னர் பரம்பரைகள் வெகுவாக குறைந்து விட்ட இன்றைய காலகட்டத்திலும், பரம்பரை, பாரம்பரியம் என்று அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வாழ்பவர்கள் சேரமான் குடும்பத்தினர். இதுவரை அவர்கள் குடும்பத்தில் நடக்காத ஒன்றை, அரச குடும்பங்களைத் தாண்டி சம்பந்தம் செய்வதற்கு யோசித்துக் கூடப் பார்க்காத அவர்களிடம் நான் ஒருத்தியைக் காதலிக்கிறேன், அவள் சாதாரண குடும்பத்தைச் சார்ந்தவள் என்றதற்கே உறைந்து போய் இருக்கிறார்களே, அந்தப் பெண் இவனிடம் வேலை செய்கின்றவள் என்று தெரிய வந்ததால் என்ன செய்யவார்களோ!