நித்திலப் பேரொளி-9

ஆதேஷ் நான் சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டேன் என்பதாய் நின்றான்.

முதலில் சுதாரித்த வசந்தா, “பெரியவனே, என்னய்யா சொல்ற? உண்மையாவா?” இன்னும் திகைப்பு மாறாது கேட்க

அன்னையை தோளோடு அணைத்துக் கொண்டவன், “ம்மா, இதிலெல்லாம் விளையாடுவேனா…ம்ம்ம் ?”

“என்டா நினைச்சுட்டு இருக்க?  இந்த குடும்பத்துக்குன்னு ஒரு பாரம்பரியம் இருக்கு, மரியாதை இருக்கு.  நீ நினைச்சதெல்லாம் நடத்திக்க இது ஒன்னும் சாதாரண குடும்பம் இல்லை.  நான் இதுக்கு ஒரு போதும் சம்மதிக்க மாட்டேன்.  தான்தோன்றி…தான்தோன்றி…என் மானம் மரியாதை எல்லாம் குழி தோண்டி புதைக்கவே எனக்கு வந்து பிறந்துருக்க” விக்ரமன் கோபத்தில் கர்ஜிக்க

“ஒரு பொண்ணை விரும்புறது என்ன கொலைக் குற்றமா? நான் என்ன அவளைக் கூட்டிட்டு ஊரா சுத்திட்டு இருக்கேன். பிடிச்சிருக்குன்னு சொல்றேன். இதில் என்ன உங்க மானம் மரியாதை கெட்டு போச்சு?” விக்ரமனின் பேச்சில் தூண்டப்பட்டவனாய் ஆதேஷ் குரல் உயர்த்த

“எதிர்த்துப் பேசறியா?  எல்லாம் நீங்க கொடுக்கற இடம் தான்ப்பா.  ஒரு அரச பரம்பரைப் பையனை வளைச்சுப் போடணும்னா அந்த பொண்ணு எப்டி கேடுகெட்ட தனமான..” விக்ரமன் கோபத்தில் என்ன பேசுகிறோம் எனத் தெரியாமல் வார்த்தைகளை விட

கண்ணாடி சுக்கு நூறாக நொறுங்கிய சத்தம் கேட்டது.   அனைவரும் திடுக்கிட்டுப் பார்க்க ஆதேஷ் தன் அருகிலிருந்த கண்ணாடிக் குவளையை தனது வலது கைப்பிடியில் நொறுக்கி எதிரே இருந்த சுவற்றில் எறிந்து உடைத்திருந்தான்.

அவன் கைகளில் ரத்தம் கொட்டுவது கண்டு வசுந்தரா, வசந்தா மற்றும் சங்கமித்ரா மூவரும் பதறி அவனைச் சூழ்ந்து கொண்டனர்.

வசுந்தரா கண்களில் நீர் கோர்க்க அவன் கைகளைப் பிடித்தவர், “என்ன பண்ணிட்ட பெரியவனே, பாரு இரத்தம் கொட்டுது” தன் முந்தானையை எடுத்து துடைக்கலானார்.

தான் பேசினால் கணவர் ஏதும் மறுபடியும் பேசுவாரா என பயந்த வசந்தா அமைதியாக கண்ணீர் இமை தாண்டி பெருகி வழிய மகனின் நெஞ்சில் தன் கை கொண்டு நீவிக் கொடுத்தார்.

நயனா விரைந்து சென்று எடுத்து வந்த முதலுதவிப் பெட்டி கொண்டு  இரத்தத்தைத் துடைத்தவள் பிறகு ஒரு கட்டைப் போட்டு விட்டாள்.

பெண்களும், தம்பிகளும் ஆதேஷைச் சுற்றி நின்று கொண்டு நடந்து போன நிகழ்வுக்காக வருந்தினார்கள்.

அருண்மொழிக்கு விக்ரமன் பேசிய பேச்சு பிடிக்காமல் இடத்தை காலி செய்திருந்தார்.

தாத்தாவின் பாசத்திற்குரிய பேரன் இவன்,  பொறுமையும் நிதானமுமாக எப்போதும் இருப்பவன் இன்று இப்படி ஆக்ரோஷமாக நடந்து கொண்டது குறித்து மிகுந்த கவலை கொண்டார்.  விக்ரமனிடம் தனியே பேச வேண்டும் என நினைத்துக் கொண்டார்.

கண்கள் இரண்டும் கோவைப் பழமாய் சிவந்திருக்க அமைதியாக அமர்ந்திருந்தான் ஆதேஷ்.

“அண்ணா வாங்க மாடிக்குப் போகலாம்” மெல்லிய குரலில்  பிருத்வி அழைக்க

எழுந்து கொண்ட ஆதேஷ் முன்னே நடந்தான். அவனைப் பின் தொடர்ந்து இளைஞர்கள் கூட்டமும் சென்றது.

இரண்டாம் தளத்திற்கு வந்தவன் அங்கிருந்த ஹாலில் ஒரு சோபாவில் போய் கால் நீட்டிப் படுத்துக் கொண்டு கட்டுப் போட்டிருந்த கையை கண்கள் மேல் வைத்துக் கொண்டான்.

மேலே சென்ற மற்றவர்களுக்கு என்ன செய்வது என்று விளங்காத ஒரு நிலை.

லிங்கா அருகில் சென்று  சகோதரனின்  மற்றொரு கையில் தட்டியவாறு, “ஆதி, இவர் பற்றி தான் உனக்கு தெரியும் தானே, மனசில் வச்சுக்காதடா, ஜஸ்ட் லீவிட் மேன்” என்றான்

பதிலில்லை இவனிடம். அத்தனை இறுக்கம் அவன் உடலில்.

நயனா ஆதேஷின் அருகில் வந்து அவன் தலையைக் கோதியவாறு, “ப்ளீஸ்த்தான், பீல் பண்ணாதீங்க.  யாரு என்ன சொன்னாலும் சரி நான் என் அத்தான் பக்கம் தான். என் அத்தான் ஒரு கழுதையைக் காதலிச்சு கூட்டிட்டு வந்தாலும், நான் தான் அந்த கழுதைப் பெண்ணுக்குத் தோழி” என்றவுடன்

“ஹாஹாஹா…” சிரித்துவிட்டான் அத்தான். எழுந்து அமர்ந்து கொண்டவன் முகம் தெளிவு பெற்றது.

“ஆகா ஒரு கழுதை இன்னொரு கழுதைக்கு தோழியாகிறதே” பிருத்வி கிண்டல் செய்ய

“உன்னை..இருடா வரேன்”  என்ற நயனா அவனை விரட்ட அவன் ஓட என இந்த இடம் கலகலப்பாகியது.

மேலே ஒரு தட்டுடன் வந்த வசுந்தரா, “நயன் என்ன இது சின்ன பிள்ளையாட்டம், போங்க எல்லாரும் கீழே. போய் சாப்பிடுங்க” என அனைவரையும் விரட்ட

“அண்ணா…” எனத் தயங்கினாள் ஜான்வி

“பெரியவனுக்கு நான் இதோ கொண்டு வந்திருக்கேன், போங்க கீழே தாத்தா வெயிட் பண்றாங்க” என அனைவரையும் அனுப்பிவிட்டவர், பிறகு ஆதேஷின் முன் வந்து ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்து கொண்டார்.

எதுவும் பேசாமல் முகம் இறுக்கமாக இருக்க இட்லியைப் பிட்டு  மருமகனுக்கு ஊட்ட அவனும் அமைதியாக இரண்டு வாய் வாங்கிக் கொண்டவன், “கோவமா இருக்கியாத்தை?” என்றான்

பதில் பேசாது மறுபடியும் ஊட்ட முனைய அவரின் கையைப் பிடித்துக் கொண்டவன், “சாரி, நான் இப்டி பண்ணியிருக்கக் கூடாது. ஆனா அவர் பேசினது தப்பு தானே” எனக் கேட்க

“அவர் அப்டித்தான்னு எல்லாருக்கும் தெரியும். என் பிள்ளை பொறுமையானவன், நிதானமானவன், யோசிச்சு செய்றவன்னு நான் தான் தப்பா நினைச்சுட்டு இருந்துட்டேன்” அழுத்தமாகச் சொன்னார் வசுந்தரா

“ம்ப்ஸ்…அத்தே, யாருன்னு தெரியாத ஒரு பெண்ணை தப்பா அவர் பேசலாமா?” இன்னுமும் விக்ரமனின் சொல் சுட்டது இவனை

“அதுக்கு இப்டி போட்டு கையைக் காயப்படுத்தி வைப்பயா?” முறைத்தார் அத்தை

அமைதியாக இருந்தான். “நீ விரும்பற பொண்ணு யாருன்னு எனக்குத் தெரியாது.  ஆனால் நீ தேர்ந்த்தெடுத்துருக்கன்னா கண்டிப்பா நல்ல பொண்ணா தான் இருப்பா. அவள்ட போய் கேளு நீ கண்ணாடியை கை காயம் வரும் அளவு நொறுக்கி உடைச்சன்னு. இது சரின்னு சொல்றாளா பார்க்கலாம்” கோபமாக அவர் பார்க்க

அத்தை நித்திலாவை குறிப்பிட்டதும் ஒரு புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது இவன் உதடுகளில், “சரின்னு கண்டிப்பா சொல்ல மாட்டா” என்றவன்

“ஆமா நான் உன் பொண்ணை கட்டலைன்னு உனக்கு என் மேல் கோபம் இல்லையா?” சீண்டினான் அத்தையை

“நல்லா கன்னத்தில் ஒன்னு கொடுப்பேன்.  என் பிள்ளையைப் பற்றி எனக்குத் தெரியும். அவனுக்கு விரும்பம் இருக்காதுன்னு நான் சொன்னா யாரு கேட்டா, சரி நீ வந்து சொன்னாத்தான் பேசாம இருப்பாங்கன்னு நானும் வேடிக்கை பார்த்தேன்”  என்றவர்

“ஆமா பெரியவனே…அத்தைக்கு மட்டும் சொல்லுவியாம், யாரு பொண்ணு, போட்டோ வெச்சுருக்கியா” ஆர்வமாகக் கேட்க

அவரின் தாடையைப் பிடித்து ஆட்டியவன், “பலே கில்லாடி நீ, ஆனா பாரு வசு, நான் அவள்ட பேசாம உன்ட கூட சொல்லமாட்டேன். பட் ஒன்னு வேணா பண்ணலாம்” குறும்பாக இடையில் நிறுத்தினான்

“என்ன என்ன சொல்லறீயா எனக்கு, என் செல்லம் தானே நீ, சொல்லு கண்ணா” சிறுபிள்ளை போல் இவனிடம் கொஞ்ச

“நீ வேணா என் காதலுக்கு தூது போயேன்.  அவ ரொம்ப அமைதி, அவ வேலை உண்டு அவ உண்டுன்னு இருப்பா. ஒரு வார்த்தை எக்ஸ்ட்ரா வராது. நானே எப்டி அவளை அப்ரோச் பண்றதுன்னு முழிச்சுட்டு இருக்கேன்.  நீ போய் உன் பிள்ளை காதலை அவள்ட எடுத்து சொல்லேன். எபெக்ட் கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கும்” குறும்பன் வம்பைக் கோர்க்க

“போய் நீ ஆச்சு உன் காதலியாச்சு. எனக்கென்ன, சரக்கு முத்தினா சந்தைக்கு வரத்தான் போகுது, இப்போ உனக்கு ஊட்டிட்டுப் போறேன். எனக்கு வேலை இருக்கு” என்றவர் இவனிடம் வாய் பிடுங்க முடியாது என உணர்ந்து தனது வேலையில் கவனமானார்.

மறுநாள் காலை வனக்குடிலுக்கு இவன் போகும் போது நித்திலா ஏற்கனவே வந்து பரபரப்பாக வேலை செய்து கொண்டிருந்தாள்.

இவனைப் பார்த்ததும், “காலை வணக்கம் சார்” என்று புன்னகைத்தவள் தன் வேலையைத் தொடர்ந்தாள்.

இவனும் காலை வணக்கம் சொல்லிவிட்டு தனது அறைக்கு வந்து அமர்ந்து கொண்டான்.

தனக்கு எதிரே இருந்த சிசிடிவி கேமராவைப் பார்த்தவன் உடனே சலீமை அலைபேசியில் அழைத்தான், “இடியட், இன்னைக்கு ஒன்பது மணிக்கு நீச்சல் குளம் மந்திலி சர்வீஸுக்கு ஆள் வராங்க தானே டா. பின்ன ஏன் இப்போ ஆட்களை குளிக்க அனுமதிச்சுருக்க? நேற்றே நான் காலை எட்டிலிருந்து பன்னிரண்டு வரை அனுமதி இல்லைன்னு ஒரு இன்பர்மேஷன் போர்டு வைக்கச் சொன்னேன் தானே வச்சயா?” என திட்டினான்

“பாஸ்… பாஸ்…மணி ஏழு தான் ஆகுது. பொதுவா காலையில் ஒன்பது மணிக்கு வர நீங்க, இப்பெல்லாம் உங்க ப்ரகதியைப் பார்த்த கையோடு இங்க தான் வர்றீங்க.  இதில் என் வேலையை நான் செய்யலைன்னு புகார் பூம்புகார் வரை வாசிக்கறீங்க” இளையவன் நொடிக்க

சலீம் சொல்வதில் உண்மை இருப்பதை உணர்ந்து கொண்டவன் லேசாகச் சிரித்து, “பாஸ் பாஸ்ன்னு சொல்லாதடா இடியட், கொள்ளை அடிக்கிற பீல் வருது”

“அதுக்கெல்லாம் திறமை வேணும் பாஸ், நீங்க அதுக்கு சரிப்பட்டு வர மாட்டீங்க” சலீம் இவனை வாற

“உன் சீட்டை கிழிச்சுட்டு தான் மறுவேலை எனக்கு” என்று சிரித்துக் கொண்டு கட் செய்தான்

தினமும் அதிகாலையில் எழுந்து தன் உடற்பயிற்சி முடித்து குளித்து தயாராகி சிவனைப் பார்க்க போகிறவன், பிறகு சலீம் சொன்னது போல் நேரே இங்கு வந்து நித்திலாவிடம் ஒரு அட்டனஸ் போட்டு விட்டு காலை உணவுக்கு வீட்டுச் செல்வான்.  பிறகு ஒன்பதரை வாக்கில் மறுபடியும் வருவான். கடந்த மூன்று மாதங்களாக இது தான் வழக்கமாக இருந்து கொண்டு இருக்கிறது.

நித்திலாவிடம் பேச வேண்டும் என ஏற்கனவே முடிவு செய்திருந்தான். எப்படி ஆரம்பிப்பது? தவறாக நினைத்துக் கொள்வாளா? நீயும் வேண்டாம் உன் வேலையும் வேண்டாம் என எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு போய்விடுவாளா? குழம்பினான் மன்னன்

சரி என்ன வந்தாலும் சந்தித்துத் தான் ஆக வேண்டும் என முடிவு செய்தவன். காலை வேலை முடிந்ததும் தன்னை வந்து பார்க்க முடியுமா என  ஒரு குறுஞ்செய்தி அனுப்பினான்.

வேலையை முடித்துக் கொண்ட நித்திலா இவனது அறைக்கு வந்தாள்.

“வாங்க நித்திலா, ப்ளீஸ் பீ சீட்டட்” என்றவன்

நகர்ந்து சென்று ஜன்னலோரம் நின்று கைகள் இரண்டையும் கட்டிக் கொண்டு இவளைப் பார்த்தவன், “நித்திலாக்கு பிடிக்குமா?” என்றான் பூடகமாக

“என்ன….எது சார்” என்றாள் புரியாது பார்த்து

இது வரை தான் செய்த எந்தக் காரியமும் இது போல் கடினமாக இருந்ததில்லை என நினைத்தவனின் மனதில் அத்தனை கனம் கூடியது. காதலில் இத்தனை கனம் சேர்க்கும் கணமும் வரும் என்று ஆதேஷ் நினைத்ததே இல்லை.

ம்கும் தொண்டையைச் செருமிக் கொண்டவன், “இல்ல….நான்… நித்திலாவைக் கல்யாணம் பண்ணிக்க கேட்டால்,  உங்களுக்குப் பிடிக்குமா?” மிகவும் நிதானமாக ஆழ்ந்து அவளைப் பார்த்தவாறு கேட்டான்

திகைப்புச் சாயத்தை ஊற்றினால் எப்படி ஆகுமோ அப்டி இருந்தது நித்திலாவின் முகம்.

அடுத்த ஐந்து நிமிடங்களுக்கு அங்கு அமைதி மட்டுமே நிலவியது.

ஒருவாறு தன்னை சமன் செய்து கொண்ட நித்திலா தன் கைகள் இரண்டையும் கோர்த்து மேசை மேல் வைத்துக் கொண்டு அதைப் பார்த்தவாறே, “சாரி சார்,  நித்திலாவுக்குப் பிடிக்காது.  எனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை, இந்த கேள்வியை யார் கேட்டிருந்தாலும் என் பதில் இதுவாகத் தான் இருந்திருக்கும். நான் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை” அமைதியாக அதே நேரத்தில் அழுத்தமாக உரைத்தாள் பாவை, அவள் கண்கள் கலங்கிக் கிடந்தது.

error: Alert: Content selection is disabled!!