நீயில்லாது வாழ்வேதடி 1- 2

முடிவாகச் சொன்னவனை முறைத்தாலும், திரும்பவும் திருமணம் வேண்டாமென்று முறுக்கிக் கொள்வானோ எனப் பயந்தார், சாராதா. மகனுடன் மல்லுக் கட்டாது கணவரோடு யாழ் சென்று வந்தவர், கல்யாண ஆடைகள் எடுக்கும் சாக்கில் சிந்துவைக் கொழும்புக்கு வரவைத்து விட்டார்.
முதன் முதல் கோவிலில் வைத்துத்தான் அவளைச் சந்தித்திருந்தான், ரகு. சிறிது தூரத்தில், தன் சித்தியுடன் வாயாடிக் கொண்டிருந்தவளை நோக்கிய சாரதா, “தம்பி, அதுதான்டா பொம்பள!” பெருமையாகச் சுட்டிக் காட்டினார். அந்தளவுக்கு அவருக்குச் சிந்துவைப் பிடித்திருந்தது.
தூரத்திலிருந்து அவளையே பார்த்துக்கொண்டு வந்தவனால், அருகில் சென்றதும் அவளைப் பார்க்க முடியவில்லை. காரணம், அவள் அவனை அப்பப்போ பார்த்த பார்வைகள்! அவள் பார்வையிலிருந்து, ஏதோ கதைப்பதற்கு ஆசைப்படுகிறாள் என்பதைப் புரிந்து கொண்டவன் நினைவில், நீரஜா மௌனமாக இருக்க இருக்க, தான், அவளைக் கதைக்க வைக்க முயன்றதும், நீரஜாவை முதல் முதல் பெண் பார்த்ததும் தான் பளிச்சிட்டது!
நீரஜாவைப் பதிவுத்திருமணம் செய்தபின், வருங்கால மனைவி என்ற முறையிலும் உரிமையிலும் அவளுடன் தானாகவே அழைத்துக் கதைத்துக்கொள்வான், ரகு. தான் நாற்பது சொற்கள் கதைத்தால், அவள் வாயிலிருந்து எண்ணி எண்ணி வார்த்தைகள் வருவதைப் பார்த்ததும், அதை வெட்கம் என்று தப்புக்கணக்கும் போட்டிருந்தான்.
‘‘நீர் சரியான அமைதி நீரஜா!’’ என, தாராளமான மனதுடன் நற்சான்றுப் பத்திரமும் வழங்கியிருந்தான்.
வெளியே அழைத்துச் செல்லக் கேட்கும் போதெல்லாம், அவளோ, தன் உடன் பிறப்புடன் ஒட்டிக்கொண்டு வருவதைப் பார்த்து, இவன் மனம் சுணங்கினால், இவன் தாய் சாரதாவோ பெருமையால் பொங்கிப் பூரித்துப் போனார்.
‘‘இந்தக்காலத்தில இப்பிடி ஒரு பிள்ளையா! நாம குடுத்து வச்ச மனுசர் தம்பி! வீட்டில பிள்ளைய நல்ல அடக்கமாக வளர்த்து வச்சிருக்கீனம்! கூச்ச சுபாவம் போல!’’ மனம் நிறைந்தவரோ, ‘இயற்கைக்கு முரணாக இருக்கின்றதே!’ என, எண்ணாது விட்டு விட்டார்.
அப்படி, நீரஜா விடயத்தில் ஏமாந்திருந்தவனின் உள்ளம், தன் முன்னால் நிற்கும் சிந்துவை அவளுடன் ஒப்பிட்டுப் பார்க்க விளைந்தது யார் துர்ரதிஷ்டம்?
தன் வாழ்வில் கடந்த காலத்தில் ஏற்பட்ட கசப்பான சம்பவங்களின் நினைவுகளின் படையெடுப்பு, அவன் மனதிலிருந்த கொஞ்ச நஞ்ச இளக்கத்தையும் விடை கொடுத்தனுப்பியிருந்தது.
‘இவளுக்கு என்ர கதை எல்லாம் தெரியுமே! என்னை ஒரு இளிச்சவாயன் எண்டு நினைச்சுக் கொள்வாள் போல!’ என நினைத்தவனால், அதன்பின் அங்கு நிற்கவே முடியாமலிருந்தது. ஒரு பெண்ணிடம் நன்றாக வாங்கிக் கட்டிக்கொண்டவன், அந்த வெறுப்பின் எச்சத்துடன் சிந்துவை அளவிட முயன்றான்.
‘ஏற்கனவே எத்தனை பட்டுட்டன்! இனியொருதரம் ஏமாறுவனா?’ அவன் மனம் முறுக்கிக்கொள்ள, ‘அம்மா, இந்தக் கலியாணமே வேணாம்மா!’ வாய்விட்டுச் சொல்ல முயன்றவனுக்கு, தாயின் மகிழ்வையும் தந்தையின் நிறைவையும் பார்த்து வார்த்தைகள் எழவில்லை.
தன் திருமணம் தடைப்பட்டதில் தன்னைப் போன்றே தன் குடும்பமும் பாதிப்படைந்துள்ளதை நன்றாக அறிந்திருந்தவனால், அதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியவில்லை. அதனால், எவ்வித உணர்வுகளுமின்றி, கடனே என்று தான் கல்யாணம் வரை வந்தான்.
கல்யாணத்தின் பொழுதோ, சிந்துவின் சிறுசிறு சீண்டல்களே அவள் சாதாரணமானவள் இல்லையென்பதை மிக நன்றாக உணர்த்திவிட்டிருந்தது.
“என்ன எப்பப் பார்த்தாலும் அங்கயும் இங்கயும் பார்க்கிறீங்க? என்ர முகத்தப் பார்க்க அந்தளவுக்குக் கேவலமாவா இருக்கு?”
தாலி கட்டிய பின் ஒவ்வொருவராக வந்து வாழ்த்துச் சொல்லிக் கொண்டிருக்கையில், கிடைத்த சிறு இடைவெளியில், அழும் பாவனையில் கேட்டவளை இவன் திகைத்துப் பார்க்க, அவளோ குறும்பாகப் புன்னகைத்தாள்!
“எனக்கு மேக்கப் போட்ட ராகினி அக்கா, அந்தா, அங்க தான் நிற்கிறார்! என்ர மேக்கப் சரியில்ல எண்டு நீங்க சொன்னதாச் சொல்லி, குடுத்த காசத் திருப்பி வேண்டுவமா?” கண் சிமிட்டி இரகசியம் பேசியவளை, முதன் முதல் கொஞ்சம் ஆர்வமாகப் பார்க்க விளைந்தது, அவன் மனம்!
கண்களில் எழுந்த ஆர்வத்தை மெல்ல அடக்கிக்கொண்டு திரும்பியவனை, “ரகு…” அடிக் குரலில் அழைத்தவள், “கலியாணப் பெண் நானே வெட்கப்படேல்ல, நீங்க ஏன் இப்பிடி வெட்கப்படுகிறீங்க?” நேரடியாவே கேட்டு வைத்தாள்.
அப்படிக் கேட்டவளை நன்றாகத் திரும்பி முறைக்க முயன்றவனையும் மீறி, சிறு முறுவல் வந்திருந்தது அவன் முகத்தில்! அதுவே சிந்துவிற்குப் போதுமானதாக இருந்திருக்க வேண்டும். அதன்பின் அவனைப் பேச வைக்க வேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுபவள் போலவே அவள் செயல்கள் ஒவ்வொன்றும் அமைந்திருந்தது.
அன்று, முதன்முதல் மனைவியைத் தனிமையில் சந்திக்கையில், பளிச்சிட்ட நிலாவதனத்தில் செஞ்சாந்துக் கும்குமம் துலங்க, காலையில், தான் அணிவித்திருந்த பொன்தாலி கழுத்தில் மினுமினுங்க, தளிர் மங்கையாக நின்றவளைக் காண்கையில், ‘இவள் என்ர பெஞ்சாதி! எனக்கே எனக்கானவள்!’ என்ற உரிமையுணர்வு தான் அவன் மனதில் எழுந்தது.
அதோடு சேர்ந்து, மன இறுக்கங்களால் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டிருந்த அவன் புலன்களோ மெல்ல மெல்ல விடுபடத் தொடங்கின! அங்கே, மனதிற்கும், அதில் அடைந்திருந்த கடந்தகால கசப்பான நினைவுகளிற்கும், ஐம்புலன்களிற்குமான தொடர்புகள் முற்றாக அறுபட, அவன் தன் மனையாளுடன் இல்லறத்தில் கலந்து விட்டான்.
மாமியாரிடம் இருந்து கணவன் பற்றி முழுமையாக அறிந்திருந்த சிந்துவோ, தன்னை நாடிய கணவனை முழுமனதுடனேயே அரவணைத்துக் கொண்டாள்.
மறுநாள் காலையில், தன் கைவளைக்குள் உறங்கிக் கொண்டிருந்த மனைவியின் வதனத்தையே இமைக்க மறந்து பார்த்திருந்தவனுக்கு, நிச்சயம் வெறுப்பேதும் எழவில்லை; தனக்குச் சொந்தமானவள் என்கின்ற உரிமையுணர்வு அவன் நெஞ்சமெல்லாம் வியாபித்திருந்ததே உண்மை!
ஆனால், அவன் துர்ரதிஷ்டமோ அல்லது அவன் மனையாளின் போதாத காலமோ, சிந்துவின் முகத்தையே பார்த்திருந்தவனின் நினைவில் அழையாமலேயே நீரஜா வந்து எட்டிப் பார்த்துச் சென்றாள். அப்படியே விறைத்துப் போனான், ரகு.
நீரஜாவின் நினைவு வந்ததும், அவள் தன்னை துச்சமாக ஒதுக்கியதை நினைத்துக்கொண்டவனுக்குத் தன் மனத்திலிருந்ததை மனைவியிடம் வெளியே கொட்டி விட வேண்டுமென்ற எண்ணம் துளியும் வரவேயில்லை.
அதேவேளை, திருமணத்திற்கு முன் வருங்கால மனைவி என்று கைகாட்டப்பட்ட சிந்துவைத் தவிர்த்தவனால், மணமுடித்து வந்தபின் மனைவியைத் தவிர்க்கவும் முடியவில்லை.
அவளும் ஒன்றும் விலகிச் செல்லவில்லையே! அதிகமாக உரிமை எடுத்து, அப்படியும் சொல்ல முடியாது, தனக்கான உரிமையைக் கைப்பற்றி இவனை உண்டு இல்லை என்றல்லவா பண்ணிக் கொண்டிருக்கிறாள்.
இவனும் சிலநேரங்களில் மனம் விட்டுக் கதைக்க நினைத்துக் கதைக்கவும் செய்வான் தான்; இறுதியில், அவையெல்லாம் பரிதாபகரமாகத் தர்க்கத்துக்கே வழி வகுத்தன. இருவரும் வாய் திறந்தால் பேச்சு சுமுகமாகச் செல்வதைப் போலிருந்தாலும் கடைசியில் அது சண்டையில் தான் முடியும்.
இந்த எட்டுமாதங்களில் மனைவியாகப் பலவேளைகளில் அவனைக் குளிர்விக்கும் சிந்து, அதேயளவிற்கு, வார்த்தைகளால் அவனைச் சாடவும் மறப்பதில்லை.
இப்படியான சந்தர்ப்பங்களில் அவளின் இந்த சீறல்களின் காரணம் என்னவென்று ஆராய நினைக்காது, மனதில் மீண்டும் வலியாய் உணர்வான், அவன்!
‘‘மீண்டும் பிழை விட்டுட்டேனா?’’ கலங்கித் தவிப்பான்.
ரகுவைப் பொறுத்த மட்டில் அவன் மனைவி ஒரு புரியாத புதிர்தான்!
சின்ன சின்ன விடயங்களில் கருத்து வேறுபாடுகள் வந்தாலும் சரி, வாக்குவாதம் என்றாலும் சரி, மனைவியால் கோபத்தை தக்க வைத்திருக்க முடியாது என்பதையும், தன்னுடன் கதைக்காதிருக்க முடியாதென்பதையும் இத்தனை நாட்களில் கண்டுணர்ந்திருந்தான் இவன்.
என்னதான் என்றாலும் சண்டை போட்ட சிறிது நேரத்திலேயே வந்து இயல்பாய்க் கதைக்கும், தன்னை வம்புக்கிழுக்கும் மனைவியை நினைத்தவன், ‘நான் தான் பிழை விடுறனோ?’ என, மனதுள் கேள்வி எழுப்பிக் குழம்பினான்.
‘அவள் என்னோட பழகிறது போல, என்னால அவளோட இயல்பாய்ப் பழக ஏலாமல் இருக்கே!’ தன் இயலாமையை நினைத்துக் கழிவிரக்கத்தில் துடித்தான், அவன். தன் மீதே அவனுக்கு வெறுப்பாக இருந்தது!
‘‘எல்லாம் அந்த நீரஜா புண்ணியம்! ஊமக்கொட்டான் மாதிரி இருந்து என்ர வாழ்கையில விளையாடிட்டாள்!”
வாய்விட்டே புலம்பியவன், ‘‘என்னதான் எண்டாலும், அண்டைக்கு நான் சிந்துவோட அப்பிடிக் கதைச்சது பிழைதான்! அது அவள்ட மனச எவ்வளவு தாக்கியிருந்தா, ஊருக்குப் போறத என்னட்ட சொல்லாமல் அம்மாட்ட மட்டும் சொல்லீட்டுப் போயிருப்பாள்!’’ முணுமுணுத்துக் கொண்டவன், ‘அவளோட கதைச்சுப் பார்த்தா என்ன?’ என நினைத்தபடி கைபேசியை எடுத்தான்.
‘நான் அண்டைக்கு அப்பிடிக் கதைச்சபிறகு என்ர முகம் பார்த்தே கதைக்காதவள், ஊருக்குப் போய்ட்டு வாறன் எண்டு சொல்லிப்போட்டுப் போகாதவள், இப்ப மட்டும் கதைப்பாளா?’ என, மனம் முரண்டினாலும், ‘எப்பவுமே வலிய வந்து கதைக்கிறது அவள் தானே! இந்த முறை சரி நாமே கதைப்பமே!’ எண்ணியவாறே அவளுக்கு அழைத்தான்.

error: Alert: Content selection is disabled!!