நீயில்லாது வாழ்வேதடி – 10

அத்தியாயம் 10.
பாடசாலையிலிருந்து வீட்டுக்கு வந்த சிந்து , சாப்பிட்ட பின், வெளியே செல்லக் கிளம்பிக் கொண்டிருந்தாள்.
ரமேஷ் இந்து காதல் விடயத்தை கணவனிடம் சொன்னதும் , அதனைத் தொடர்ந்து நடந்த பிரச்சனைகளும் இன்று நடந்தவை போலிருந்தாலும் , அவை நடந்து மூன்று கிழமைகளுக்கு மேலாகி விட்டது!
அடுத்தடுத்த நாட்களில் அவ்விடயம் பற்றி எதுவும் பேசாத ரகு, பின், தன் சம்மதத்தைச் சொன்னான்; ஒரு நிபந்தனையோடு!
“ரமேஷ் அந்தளவுக்கு தன்ர விருப்பத்தில உறுதியா இருந்தா எனக்கும் ஆட்சேபனை இல்ல சிந்து; ஆனா ஒரு விசயம்…” கூறி நிதானித்தவன், “இந்த விசயத்தில அப்பாவோட கதைக்கிறதில நிச்சயமா என்ர உதவி ஒண்ணுமே கிடைக்காது.” உறுதியாகவே சொல்லிவிட்டான்.
“ரகு…” என்று ஆரம்பித்த மனைவியைக் கையமர்த்திவிட்டு, “இதை எல்லாம் அப்பா ஏற்றுக் கொள்வார் எண்டோ, பொறுமையாக் கேட்பார் எண்டோ எனக்கு நம்பிக்கை இல்ல சிந்து. அவர் சரியான ரோசக்காரர்; அவ்வளவு கெதியா நடந்த விசயங்கள, நாங்க சந்திச்ச தலைகுனிவ மறந்திருக்க மாட்டார்!” என்றவனை முறைத்தாள் சிந்து.
“உம்மால ஏலும் எண்டு தானே உதவி செய்ய வெளிக்கிட்டீர், நீரே கதைச்சுக் கொள்ளும். என்னை இதுக்குள்ள இழுக்கவேணாம்; நான் வரவும் மாட்டன்; ஒரு பார்வையாளரா ஒதுங்கி இருக்கிறன்.” சிறிதும் இளக்கமின்றிக் கூறிவிட்டான்.
இதற்குமேல் கணவனை வற்புறுத்த விரும்பவில்லை சிந்து. அதில் நியாயமே இல்லை என எண்ணியவள், தன் மாமனாரிடம் பேசும் முன் இந்துவின் பெற்றோரை ஒருதரம் சந்திப்பதற்காக இன்று அவர்கள் வீட்டுக்குச் செல்ல இருக்கிறாள்.
அவர்கள் தரப்பில் எதிர்ப்பு வராது என்பதை அறிந்திருந்தாலும் , ஒருமுறை கதைத்துப் பார்ப்பது நல்லதெனப்பட்டதால் அங்கு செல்லவிருக்கிறாள்.
மாலை நான்கு மணியளவில், அவளை அழைத்துச் செல்வதற்காக வந்த ரமேஷுடன் இந்து வீடு நோக்கிப் புறப்பட்டாள், சிந்து.
காரை ஓட்டிக் கொண்டிருந்த ரமேஷின் முகம் களையிழந்து வாடிக் கிடந்தது. எப்போதும் கலகலப்பாக புன்னகை பூசிய முகமாக வலம் வருபவனின் இந்தக் கோலத்தில் சிந்துவின் மனம் சங்கடம் கொண்டாலும், அதைச் சட்டென்று போக்கிட முனைவதிலுள்ள கஷ்டம் உணர்ந்து பெருமூச்செறிந்தாள்.
அவள் மாமானார் சோமசுந்தரம் மிகவும் கண்டிப்பானவர். மூத்தவன் ரகுவைத் தவிர, ரமேஷும் அவன் அக்காவும் சற்று எட்ட நின்றேதான் தந்தையோடு பழகுவார்கள். எதுவென்றாலும் தாயின் மூலமே நடத்திக்கொள்ளும் பிள்ளைகள் அவர்கள்.
சாரதாவும் கணவர் முடிவுகளில் மூக்கை நுழைக்க முனைவதில்லை. அப்படியிருக்க, அவர் மனதில் நினைத்துள்ள திருமணத்தை நிறுத்தும் வகையில் இந்த விடயம் சொல்வது, அதுவும், ஏற்கனவே ‘கழுத்தறுத்த குடும்பம்’ என்கின்ற வெறுப்பில் உள்ள குடும்பத்தில் சம்பந்தம் என்று கூறுவது இலகுவா என்ன?
மாமனாருக்குச் சிந்து மீது கொள்ளைப் பிரியம் என்பதில் ஐயமில்லைதான். தலை நிமிர்ந்து நின்ற குடும்பத்தில் ஏற்பட்ட மனக்கசப்பான சம்பவத்தின் பின், “இழந்திருந்த , மறந்திருந்த சந்தோசத்தத் திரும்பவும் கொண்டு வந்தது என்ர செல்ல மருமகள் தான்!” வாய்விட்டுப் பெருமையாகப் பாராட்டுவார், சோமசுந்தரம்.
சிந்துவின் மாமி சாரதாவோ, இவளுக்கு அன்னையில்லை என்ற குறை தீர்க்க வந்தவர் போல மருமகளில் உயிரானவர். இதனால் தான் அண்ணி மூலம் அனைத்தையும் சாதிக்க நினைத்தான் ரமேஷ்.
என்னதான் மாமனாரின் பாசத்துக்குரிய மருமகள் என்றாலும், மாமனாரை நினைக்கையில் சிந்துவினுள் குளிர் பரவியது என்பதுதான் உண்மை. அதை விரட்டி நிமிர்வாய் தன்னைக் காட்டிக்கொள்ள வெகுவாக முயன்றாள், அவள்.
காரினுள் தவழ்ந்த மெல்லிய திரையிசையைத் தவிர ரமேஷும் சிந்துவும் எதுவும் கதைத்துக் கொள்ளவில்லை. தம் பாட்டில் மனதில் பல பல நினைவுகளோடு உழன்றவர்களில் முதலில் சுதாகரித்தவள், ”அப்பப் புது மாப்பிள்ளை, என்ன யோசினை பலமா இருக்கு! ” கேலியாக பேச்சை ஆரம்பித்தாள்.
” ப்ச் …நீங்க வேற அண்ணி; கலியாணமும் வேணாம் ஒரு மண்ணும் வேணாம் எண்டு இருக்கு!” சட்டென்று அலுத்துக் கொண்டவனின் கவலைக்கு இன்னொரு முக்கிய காரணமும் உண்டே!
அவன் அண்ணாதான் அவனோடு முகம் கொடுத்துக் கதைக்க மறுக்கிறானே!
அதையறிந்து, “ஏன்பா இப்பிடிச் செய்யிறீங்க?” கணவனைக் கடிந்து கொண்டாள், சிந்து.
“முதல் அப்பா சம்மதம் சொல்லட்டும் சிந்து; அதுக்கு முதல் அவனோட கதைச்சு எந்தவிதத்திலும் நம்பிக்கை குடுக்க நான் தயார் இல்லை!” முடிவாகச் சொல்லிவிட்டான், ரகு.
‘அப்ப, மாமா முடியவே முடியாது எண்டு சொல்லி விடுவாரோ!’ நாக்கு நுனியில் வந்து நின்ற வார்த்தைகளை ஒருவகை நம்பிக்கையில் விழுங்கியிருந்தாள் இவள்.
‘எப்பிடியும் சம்மதம் சொல்ல வச்சிரலாம்; இவரச் சமாதானம் செய்தது போல மாமாவையும் சமாதானம் செய்திரலாம்!’ என்றே, நினைத்துக் கொண்டாள்.
“அதுக்குள்ள இப்பிடிச் சலிச்சுக்கொண்டா எப்பிடி மாப்பிள்ள!” மீண்டும் கேலி செய்தாள், சிந்து.
“பச் போங்கண்ணி!” மீண்டும் சலிப்பு.
“என்ன இவ்வளவு நம்பிக்கையா மாப்பிள்ள எண்டு சொல்லுறீங்க அண்ணி?! எனக்கெண்டா அப்பா ஓமெண்டு சொல்லுவார் எண்ட நம்பிக்க கொஞ்சமும் இல்ல அண்ணி!” இறங்கிய குரலில் தொடர்ந்தான், ரமேஷ்.
“கதைச்சுப் பார்க்காம நாமே எப்பிடி ரமேஷ் முடிவு செய்யிறது? அதெல்லாம் சம்மதம் சொல்லுவார் பாருமன்!” நம்பிக்கை தந்த அண்ணியை அன்புடன் பார்த்தவன் விழிகள், இலேசாகக் கலங்கி இருந்தன.
“உங்கட அண்ணா என்னதான் உம்மோட கதைக்காம இருந்தாலும் தன்ர சம்மதத்தச் சொல்லிட்டார் தானே! அவர்ட சம்மதம் வாங்கியதே நமக்குப் பெரிய வெற்றி ரமேஷ். மாமா கோபக்காரர்தான்; ஆனா, நிச்சயம் புரிஞ்சு கொள்ளுவார், யோசிக்காதேயும்.” மிகுந்த நம்பிக்கையோடு சொன்னாள்.
பதில் சொல்லாது இந்து வீட்டுப் பாதையினுள் காரை விட்டவன்,
”இந்து வீட்டில இறக்கி விடுறன் அண்ணி; வெளிக்கிடேக்க ஒருக்கா கோல் பண்ணுங்க, இங்க பக்கத்தில போயிட்டு வாறன்.” என்றவனுக்கு தலையாட்டியவாறே, “அந்தா அங்க நிற்கிறது இந்துதானே! அதுதான் வீடா?” வினவினாள்.
“ஓம் அண்ணி!” என்றவாறே அவர்கள் வாயிலில் காரை நிறுத்தியவன் சிந்து இறங்கியதும், இந்துவைப் பார்த்து கண்களாலேயே விடை பெற்றவாறே, “போயிட்டு வாறன் அண்ணி, பார்த்து, நான் உங்களுக்குச் சொல்லத் தேவை இல்ல; எனக்காக நீங்க ஆரிட்டயும் இறங்கிப் போகத் தேவையில்ல; அவையள் நல்லாக் கதைக்கேல்ல எண்டா பேசாமல் வந்திருங்க! ” என்றபடி காரை ஓட்டிக்கொண்டு செல்ல, அவன் சொல்லிச் செல்வதில் விழிகள் கலங்க நின்றாள், இந்து.
“அம்மா அப்பா ரெண்டு பேரும் இருக்கினம் தானே இந்து?”அவள் கரம் பற்றி சிந்து கேட்க, சுதாகரித்துக் கொண்டவள், ”உள்ளுக்கு வாங்க அக்கா, அப்பா அம்மா உங்களத் தான் பார்த்துக்கொண்டு இருக்கினம்.” உள்ளே அழைத்துச் சென்றாள்.
இந்துவின் பெற்றோர் அவளை அன்பாக எதிர்கொண்டாலும், அவர்கள் முகங்களில் அடங்க மறுத்த சங்கடம் துல்லியமாகத் தெரிந்தது.
“எப்பிடி இருக்கிறீங்க ஆன்ட்டி?” என்று ஆரம்பித்துப் பொதுவாகக் கதைத்தவர்கள், மெல்ல இந்து விடயத்தினுள் நுழைந்தார்கள்.
தம் மூத்தமகள் செய்த காரியத்தில் குற்ற உணர்ச்சியுடன் இருந்தவர்களை , சிந்துவின் அன்புப் பேச்சும் ஆதரவும் கண் கலங்க வைத்துவிட்டது!

”அங்கிள், இந்துவுக்கும் ரமேஷுக்கும் கலியாணம் நடந்தா, இன்னும் உங்களைப்பற்றிக் கதைச்சுக்கொண்டிருக்கிற சொந்தங்கள் எல்லாம் பேசாம வாயை மூடிருவினம். உங்கட மகள் செய்த பிழைக்கு நீங்க அனுபவிச்சது எல்லாம் போதும். இனிச்சரி எல்லாரும் சந்தோசமா இருக்கலாம்!” என்று சிந்து சொன்னவுடன் இந்துவின் தாய் வாய்விட்டே அழுதுவிட்டார்.
“பத்துமாசங்கள் சுமந்து பார்த்துப் பார்த்து வளர்த்தவள் இப்பிடி ஒருகணம் நினைச்சிருந்தா, இப்பிடி ஒருகாரியம் செய்திருப்பாளாம்மா? ராசாத்தி நீ நல்லா இருக்க வேணும்மா!” அழுகையோடு சொன்னவரை ஆதரவாக அணைத்துக்கொண்ட சிந்து, “விடுங்க ஆன்ட்டி, நடந்து முடிஞ்சதைக் கதைச்சு என்ன நடக்கப் போகுது? நடக்க வேண்டியதைக் கதைப்பம்.” என்றவள், கண்ணீரோடு நின்ற இந்துவையும் கடிந்து கொண்டாள்.
“இப்ப ஏன் அழுகிறீர் இந்து? அதெல்லாம் மாமாவ எப்பிடியும் சமாதானப்படுத்தீரலாம், பயப்படாதேயும்!” அவள் கண்ணடித்துச் சொல்ல, ‘உண்மையாவா?’ இந்துவின் மனதில் சந்தோசம் பூக்க முயன்றாலும், அது அவ்வளவு இலகுவல்ல என்பது அவளுக்கும் புரிந்தே இருந்தது.
அதைவிட, ரகுவிடம் இலகுவில் சம்மதம் பெற்றிருப்பதும் சாத்தியமல்ல என்பதும் அவர்களுக்கு விளங்கியே இருந்தது.
“ரகு தம்பி, கேட்டோன்ன அவ்வளவு கெதியா சம்மதம் சொல்லி இருக்க மாட்டார் எண்டு தெரியும்மா! என்ர மகளுக்காக நீ இந்தளவு பாடுபடுவது..” இந்துவின் தாய் பேசமுடியாது திணறினார்.
“அப்பிடியெல்லாம் இல்ல ஆன்ட்டி; அவருக்கு உங்களில கோபமெல்லாம் இல்ல!” சமாளித்த சிந்து, “நான்…நான்…உங்கட வீட்டுக்கு வந்து கதைக்கிறன்மா! என்று சதாசிவம் சொன்னதும், “ம்ம்..முதல் மாமாட்ட விசயத்தச் சொல்லி விடலாம் எண்டு இருக்கிறம் அங்கிள்; பிறகு, முறையாக நீங்க வந்து கதையுங்கோ!” என்றவள், சிறிது நேரத்தில் விடைபெற, கல்யாணம் முடிவாகவில்லை என்றாலும் அம்மூவர் மனதிலும் ஒருவகை நிம்மதியின் வாசம் வீசத் தொடங்கியது!
சில வருடங்களாக மனதில் இராச்சியம் நடத்திய புளுக்கம் வெளியேறிட வழிதேடியது!

வீடு திரும்பிய சிந்து, இந்து வீட்டில் நடந்தவற்றை லக்ஷ்மியிடம் பகிர்ந்து கொண்டாள்.
அவள் கூறியவற்றைக் கேட்டுக் கொண்டிருந்தவரும், ”நீ சொல்லுறது சரிதான், அவேயும் படிச்ச நல்ல மரியாதையான குடும்பம் தானே! சுத்தி சுத்தி வந்து பார்த்தா ரகுட அப்பாவுக்குத் தூரத்தில சொந்தமும் கூட! அந்தப்பிள்ள புத்தி பேதலிச்சுச் செய்ததுக்குத் தாய், தகப்பன், தங்கச்சி பலியா என்ன?” அனுதாபத்தோடு சொன்னவர், “எண்டாலும் நான் உன்ர மாமனார் இடத்தில இருந்தாலும் ஆத்திரத்தில குதிப்பன் தான் சிந்து; அதுதான் மா இயல்பு!” என்றார்.
” அது சரி சித்தி, கோவம் இருக்கும் தான்; இப்ப அதால ஆருக்கு என்ன லாபம்? அட லாபம் வேணாம், குற்றமே செய்யாத ரெண்டு பேரை வருத்துவானேன்!” என்ற சிந்து, “இந்துட அம்மா நான் போனதில இருந்து ஒரே அழுகை! இருக்கிறது ரெண்டு பிள்ளைகள், ஒரு பிள்ளையால மற்றதும் வாழாமல் இருந்திருவாளோ எண்டு தவிக்கினம் சித்தி.” என்றவள்,
“அந்த நீரஜா…ஹாயா கலியாணம் கட்டிக்கொண்டு வெளிநாட்டில இருக்கிறா! இங்க, ரகு வீடும் அதில இருந்து மீண்டிட்டீனம்! பாவம் அவே மூணு பேரும் இன்னும் உள்ளுக்குள்ள அழுது கொண்டு இருக்கினம். ” என்றவள், “தான் நேரிலயே வந்து மாமாட்டக் கதைக்கிறன் எண்டு இந்துட அப்பா உடனயே சொல்லிட்டார். ஆனா, மாமா அவரோட நிண்டு கதைக்க வேணுமே!” கவலைப்பட்டாள்.
” பார்ப்பம் சித்தி, இந்த வெள்ளிக்கிழமை மாமா வீட்டதானே நிற்பம்; எப்பிடியும் இந்தக்கிழமை இந்த விசயத்துக்கு ஒரு முடிவு கட்ட வேணும்!” அவள் சொல்லி வாய் மூட முதல், ”அப்பிடியெண்டா நான் இந்தக்கிழமை இங்கயே நிற்கிறன் சிந்து!” சட்டென்று சொன்னார், லக்ஷ்மி.
“சித்தி…பார்த்தீங்களா? உங்கட மருமகன் போலவே என்னத் தனியா விட நினைக்கிறீங்களே! இது கொஞ்சமும் நல்லா இல்ல சித்தி!” செல்லமாக முறைத்தவள், “சரி சரி வாறன் விடு!” என்று அவரைச் சொல்ல வைத்துவிட்டே ஓய்ந்தாள்.

error: Alert: Content selection is disabled!!