“அது வந்து மாமா… ச்சே…ச்சே…அப்பிடியெல்லாம் இல்ல மாமா; எல்லாம் நம்மட பிள்ள தான்; உங்களுக்கும் அவேய நல்லாவே தெரியும்!” ஒருவேகத்தில் சட்டென்று சொல்லிவிட்ட சிந்து, மீண்டும் கணவனிடம் விழிகளால் கெஞ்சினாள்.
‘ கொஞ்சம் உதவிக்கு வாங்களன்!’ மனைவியின் பார்வையின் மன்றாடல் புரிந்தும் அசையாதிருந்தான், ரகு.
கணவன் உதவிக்கு வரமாட்டான் என நன்றாக விளங்கிக் கொண்டவள், ”அது ஆரெண்டா மாமா… வெள்ளவத்தையில இருக்கிறாரே… கஷ்டம்ஸில வேல செய்த சதாசிவம் அங்கிள்; உங்கட ஊர்தான்…” என்று சொன்னது தான் தாமதம், விசுக்கென்று இருக்கையை விட்டெழுந்தார், சோமசுந்தரம்.
” என்ன!? அந்த வீட்டில திரும்பவுமா?’’ கத்தியவர், யாருமே எதிர்பார்க்காதவாறு மின்னலென நகர்ந்து, ரமேஷின் கன்னம் இரண்டிலும் மாறி மாறி விளாசித் தள்ளினார்.
மருமகள் வாய்மொழியை உள்வாங்கி, அதிர்வின் உச்சத்தில் நின்ற சாரதா, தன் செல்ல மகனுக்கு அடிமேல் அடிவிழ அசையாது நின்றார். அவரால், தன்மகன் அந்த வீட்டுப் பெண்ணைக் காதலித்தான் என்பதை கணமும் நினைத்துப் பார்க்க முடியவில்லை.
இங்கேயே காதுகளை வைத்துக்கொண்டு அறைக் கதவோரமாக நின்ற லக்ஷ்மி, சோமசுந்தரத்தின் ஆக்ரோசம் பார்த்து உள்ளே குளிர் பரவ, திறந்த வாயை மூடாது அதிர்ந்து நின்றார்.
ரகுவோ, ‘அவன் செய்த பிழை என்ன! காதலிச்சான்? அதவிட வேற என்ன செய்தான்! அவன் காதலிச்ச வீட்டில எனக்குச் சம்பந்தம் பார்த்ததும், அவள் கம்பி நீட்டினதும்…ம்ம்…அதில இவன்ட பிழை என்ன? இவன் காதலிச்ச பிள்ள செய்த பிழை என்ன?’ மனைவியின் கைங்காரியத்தில் சமாதானம் அடைந்திருந்த மனதின் குரலுக்குச் செவி சாய்த்து, சகோதரனைக் காக்க எண்ணி விரையத் துடித்த மனதின் சொல் கேட்க மறந்து, இருக்கையோடு இருக்கையாகத் திகைத்துப் போய் அமர்ந்திருந்தான்.
தந்தையோ தாயோ தம்மை அடித்ததாக அவனுக்கு நினைவே இல்லையே! அப்படியிருக்க, வளர்ந்த முழு ஆண்மகணை இப்படிப் போட்டு அடிப்பதில் இருந்தே, கேட்ட செய்தி, தந்தையை எந்தளவுக்கு தாக்கியுள்ளது என்பதை உணர்ந்தவன், செயல்பட மறந்து போனான்!
மைத்துனனை அடிப்பதை யாருமே தடுக்காததை பார்த்த சிந்துவுக்கு, எங்கிருந்துதான் அப்படிக் கோபம் வந்ததோ! சட்டென்று நகர்ந்து அவள் மாமானாரின் கரங்களை இறுகப் பற்றினாள்!
“போதும், நிப்பாட்டுங்க மாமா! பேசிக்கொண்டிருக்கேக்க வளர்ந்த பிள்ளைய இப்பிடி அடிக்கிறீங்களே! ஏன் மாமா? அப்பிடி அடிக்கிற அளவுக்கு அவர் என்ன பிழை செய்திட்டார்!?” குரல் நடுங்கக் கேட்டவளின் விழிகள், கலங்கிக் கண்ணீரைச் சொரிந்தன!
தன் கரம் பற்றி நிறுத்தியதோடு தன்னையே கேள்வி கேட்ட மருமகளை, நெருப்பாக ஜொலித்த விழிகளால் சுட்டார், சோமசுந்தரம்.
“உன்ன எவ்வளவு அருமையான கெட்டிக்காரி எண்டு நினைச்சிருந்தன்! இப்ப என்னடா எண்டால், இந்தக் குடும்பத்தத் தலைகுனிய வச்சவேக்கு நீயே வக்காலத்து! இந்தக் குடும்ப மானம் போகக் காரணமான மனிசர உன்னால எப்பிடி ஏற்றுக்கொள்ள முடிஞ்சிது!? அப்ப, உனக்கு இந்தக் குடும்பம் முக்கியமில்ல! முதல் இந்த விசயத்த என்னட்ட வந்து சொல்லுற அளவுக்கு துணிவு ஆர் குடுத்தது? நானா? என்ர மகள் போல நினைச்சதுக்கு தக்க சன்மானம் தந்திட்ட!’ அவர் குரல் சிந்துவின் தேகத்தை நடுங்கச் செய்தது.
அவரின் சுடும் விழிகளை நேராகப் பார்க்க முடியாது தடுமாறினாலும், “மாமா! நான் சொல்லுறத முழுசா…” தடுமாறித் தொடர்ந்தவள் கரத்தை உதறிவிட்ட சோமசுந்தரம், “போதும், வாயா மூடு; நீ சொல்லுறதை எல்லாம் கேட்க வேண்டிய அவசியம் எனக்கு இல்ல; அத நல்லா நினைவில வச்சிரு!” சீறியவர், முகம் அதிர்ந்து சிறுக்க, நம்பமுடியாது பார்த்தவளிடம், “நான் அடிக்கிறது என்ர மகன, இதில தலையிட நீ ஆர்? பேசாம அந்தப் பக்கமாப் போ!” உறுமினார்.
சிலநொடிகளில் நடந்துவிட்ட சம்பவத்தையும், வீட்டுப் பெரியவரின் சீறலையும், கடும்வார்த்தைகளையும் கேட்ட அனைவரும், நெஞ்சம் அதிர அசைவற்று நின்றனர்.
சோமசுந்தரம் மருமகளில் கொண்டிருந்த பாசமும் மதிப்பும் பற்றித் தெரியாதவர்களா அவர்கள்!
அப்படியிருக்க, இப்படிப் பேச வைத்தது எது?
நெஞ்சில் உயிர்ப்போடு இருந்த அவமானத்தின் வலியும் வேதனையும் அல்லவா?
அந்தக் குடும்பத்தில் விரும்புகிறான் என்பதை அவர் காதுக்கு கொண்டு வந்தால், அவன் ஒருவன் விருப்பை மொத்தக் குடும்பமே ஏற்க வேண்டும் என்பதற்கான முயற்சிதானே அது! அதை, அவர் மருமகள் செய்கிறாளே! நெஞ்சம் கொதித்தது அவருக்கு!
தன்னை அடித்தபோது மௌனியாக அடிவாங்கி நின்ற ரமேஷ், தந்தை, தன் அண்ணியிடம் சீறியதும் வாய் திறந்தான்.
”அப்பா, என்னப்பா இது? வேணாம்பா; என்னை என்ன வேணும் எண்டாலும் சொல்லுங்க, செய்யுங்க; அண்ணிய ஒண்ணும் சொல்லாதீங்கப்பா!” என்றவன், பேச்சை இடைமறித்தது சிந்துவின் வெற்றுக் குரல்.
“மாமா, அப்ப நான் கதைக்கக் கூடாதா? உங்களுக்கு நான் ஆரோவா? நான் இந்த வீட்டு ஆள் இல்லையா?” வேதனை நிரம்பிய குரலில் கேட்டவள், அதேவேகத்தில் மாடியை நோக்கி வேகமாகத் திரும்பினாள்.
அடுத்தநொடி, யாருமே சிறிதும் எதிர்பாராத வண்ணம் அப்படியே மயங்கிச் சரிந்துவிட்டாள் !
தந்தையின் கோபம், மனைவி தந்தையின் வெறுப்புக்கு ஆளானது, எதிர்பார்த்த ஒன்று என்றாலும், அந்நேரம், வேதனையில் கசங்கிய மனைவியின் முகத்தைக் கண்கொண்டு பார்க்க முடியவில்லை ரகுவால்.
“இந்த வீட்டில உனக்கு இல்லாத உரிமையா? எனக்கு உரிமை இருக்கு எண்டால் உனக்கும் இருக்கு சிந்து!” கூக்குரலிட முனைந்தவனின் பார்வை, தடுமாறிய மனைவியில் படிந்து, பேச்சை மறந்து, அவளருகில் விரையும் முன், நிலத்தைத் தொட்டிருந்தாள், அவன் மனைவி.
விழும் பொழுது அருகிலிருந்த சிறுமேசையின் விளிம்பில் அவள் தலைபட்டு நெற்றியோரமாக இரத்தமும் கசிந்தது!
சற்றுமுன் வரை பார்வையால் தன்னை ஆட்டுவித்த அவன் மனையாளின் இக்கோலத்தில் ஒருகணம் தன்னையே மறந்தான், ரகு.
மறுகணமோ, “ சிந்தூ!” என்ற கூக்குரலுடன் பாய்ந்து தூக்கியவன், அவள் கன்னம் பற்றி , ” சிந்தூ ..சிந்து இங்க பாருடா.. ” எழுப்பினான்.
ஓடிப் போய் தண்ணீர் எடுத்து வந்து அவள் முகத்தில் தெளித்த ரமேஷ், “அண்ணி …. அண்ணி..” என்றவன், அழுதுவிடும் நிலைக்கு வந்திருந்தான்.
‘என்னால் தானே இவ்வளவும்!’ அவனிதயம் நெரிந்து தொய்ந்தது!
இதுவரையில் அறையினுள் நின்றிருந்த லக்ஷ்மி, பதற்றத்துடன் ஓடி வந்தார்.
சாரதா மட்டுமில்லை, இதுவரை ஆக்ரோஷத்தின் பிடியில் அகப்பட்டிருந்த சோமசுந்தரத்தை விட்டு, காததூரம் பயணித்திருந்தது ஆத்திரமும் கோபமும்! சற்றும் எதிர்பாராத மருமகளின் மயக்கத்தில் கலங்கி விட்டார் அவர்.
“ தம்பி ஆஸ்பத்திரிக்குப் போவம்! பிள்ளையத் தூக்கிக்கொண்டு கார்ல ஏறப்பா!” சொன்ன சாரதாவை முறைத்தவன், அருகில் நின்ற தந்தையை விழிகளால் நெருப்பாகச் சுட்டான்.
அருகில் பதைத்துக் கொண்டிருந்த அனைவருமே, ஆடிப்போயிருந்த அவன் பார்வைக்கு, எதிரிகள் போலவே தோற்றமளித்தனர்.
“இந்த வீட்டில உரிமையே இல்லாதவளுக்காக ஆரும் கஷ்டப்படத் தேவையில்ல, நானே பார்த்துக்கொள்ளுவன்!” என்றுமில்லாத உறுமல் வெளிவந்தது ரகுவிடமிருந்து!
‘என்ர மனைவியைப் பிரிச்சுப் பார்த்திட்டாரே!’ தகப்பனை மீண்டும் முறைத்தான் ரகு.
கொதிக்கும் உள்ளத்தோடு மனைவியைக் கைகளில் ஏந்தியவாறே வாயிலை நோக்கி விரைய , கார்ச்சாவியை எடுத்துக்கொண்டு பின்னால் வந்த ரமேஷ், தமையனின் முறைப்பைப் பார்த்து,
“ ப்ளீஸ் ணா! இப்ப எதுவுமே கதைக்காதீங்க; அண்ணி தான் முக்கியம். நான் டிரைவ் பண்ணுறன், நீங்க பின்னுக்கு அண்ணியோட ஏறுங்க! ” என்றபடி அவர்களை ஏற்றிவிட்டு, தானும் ஏறி அமர்ந்தவன் கரத்தில் கார் சீறிப் பாய்ந்தது!
காரைச் செலுத்திக்கொண்டே, வெள்ளவத்தையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையொன்றில் வைத்தியராக இருக்கும், தமையனின் நண்பனான தினேஷுக்கு கைபேசியில் அழைத்த ரமேஷ், அந்நேரத்தில் அவன் பணியில் இருப்பது தெரிந்து மன நிம்மதியுடன் காரை வேகமாகச் செலுத்தினான்.

