நீயில்லாது வாழ்வேதடி – 12 ( இறுதி அத்தியாயம் )

அத்தியாயம் 12.
வைத்தியசாலையை சென்றடைவதற்கு முன்பே, கொஞ்சம் கொஞ்சமாக நினைவு திரும்பிய சிந்து, நெஞ்சம் கனக்க, அதற்கு ஜோடியாக தலையும் கனப்பதை உணர்ந்தவள், ஒட்டிக்கொண்டிருந்த இமைகளை மிகவும் பிரயாசைப்பட்டு மெதுவாகப் பிரித்தாள்.
இமைகளைப் பிரித்ததும் அவள் பார்வை வட்டத்தில் விழுந்தான் அவள் கணவன். அவன் முகம் கலவரத்தால் சூழப்பட்டிருப்பதையும் தன் கன்னம் தட்டி எழுப்பிக் கொண்டிருப்பதையும் பார்த்து, “ர…கு” மெதுவாக முறுவல் செய்தாள்.
“அப்பா…இப்ப தான் போன உயிர் திரும்பி வந்திச்சு! கொஞ்ச நேரத்தில இந்த பாடு படுத்திட்டீர் சிந்து!” ஆசுவாசமூச்சு விட்டவன், தான் காரில் செல்வதையும் அவன் மடியில் இருப்பதையும் உணர்ந்து எழ முயன்றவளை, அதற்கு அனுமதியாது கரங்களால் வளைத்துக் கொண்டான்.
“பச்..எங்கப்பா போறம்!? முதல் கையை எடுங்க; எனக்கு ஒண்டுமில்ல!” மீண்டும் எழ முயன்றவள், “ஸ்ஸ்ஆஆ” வலித்த நெற்றியில் கைவைத்துப் பார்த்தாள். “ஒண்டும் இல்ல சிந்து, அது சின்னக்காயம் தான்; கதைச்சுக் கொண்டிருக்கேக்க மயங்கி விழுந்ததில அடிபட்டிட்டு. எவ்வளவு எழுப்பியும் எழும்பேல்ல எண்டோன்ன நல்லாவே பயந்திட்டன் சிந்து!” என்றவன், குரல் நடுங்கிற்று!
கணவன் சொல்லச் சொல்ல, சற்றுமுன் வீட்டில் நடந்தவை நினைவில் வலம் வர, அவள் முகம் வேதனையில் கன்றிச் சிறுத்துவிட்டது.
‘நாம நினைச்சது போல, இது அவ்வளவு சுகமா முடியும் போல தெரியேல்லையே! மாமா..மாமாவா?! அதுவும் என்னைப் போய்!’ மனதில் அழுதாலும், கலங்கிப் போயிருக்கும் கணவனிடம் அதைக் காட்ட விரும்பவில்லை, அவள்.
“அதெல்லாம் ஒண்டுமில்லையப்பா; முதல் என்னை விடுங்க.” மீண்டும் எழ முயன்றவள், “இப்ப எங்க போறம்?” என்றதும், “கொஞ்ச நேரம் சும்மா இரும் சிந்து; இந்தா வந்திட்டம், எதுக்கும் தினேஷிட்ட ஒருக்கா காட்டிட்டுப் போனா மனசுக்கு நிம்மதி!”
“தினேஷ் எண்டா, ஹொஸ்பிட்டலுக்கா போறம்!? அய்யோ… இதென்ன ரகு! சும்மா தலைசுத்தி விழுறதுக்கு எல்லாம் ஆரும் ஹொஸ்பிட்டல் போவினமா? எனக்கு ஒண்டுமில்லையப்பா.” என்றவள் காரோட்டும் ரமேஷிடம், “காரைத் திருப்புங்க ரமேஷ்..” சொல்லிக்கொண்டிருக்கையில், வைத்தியசாலை முன்னால் காரை நிறுத்தியவன், “நீங்க அண்ணியோட போங்கண்ணா, காரை பார்க் பண்ணிட்டு வாறன்!” இவர்களை இறக்கி விட்டுவிட்டு அருகிலிருந்த கார் நிறுத்துமிடத்தினுள் நுழைந்தான்.
ரமேஷ் ஏற்கனவே சொல்லியிருந்ததால், இவர்களை எதிர்பார்த்திருந்த ரகுவின் நண்பன் தினேஷ், கணவனின் கைத்தாங்கலில் நடந்து வந்தவளைப் பரிசோதித்தான்.
கவலை சற்றும் வடியாத முகத்தோடு நின்ற நண்பனைப் பார்த்து முறுவல் செய்த தினேஷ், “ஏன்பா ரகு, உண்மையாவே சிஸ்டர் மயங்கி விழுந்தாரா? அல்லது, நீ தள்ளி விட்டியா?” நெற்றிக் காயத்தைப் பார்த்துக்கொண்டே கிண்டல் செய்தான்.
“ப்ச்…மயங்கித்தான் விழுந்திட்டா தினேஷ்! இதே, நான் இப்பிடிக் காயங்களோட வந்திருந்தா, இதே கேள்வியைக் கொஞ்சமும் சந்தேகப்படாமல் சிந்துட்ட கேட்கலாம்!” என்ற, கணவனை அவள் முறைக்க, வாய்விட்டு நகைத்தான் தினேஷ்.
கேலியும் கிண்டலுமாகக் கதைத்தவாறே, தினேஷ் கேட்ட கேள்விகளுக்கு தயங்கியாவாறே பதில் சொன்ன சிந்துவின் பார்வை, கணவனை விட்டு அப்பால் இப்பால் நகரவில்லை!
அவள் மனதிலும் சில நாட்களாக இந்த சந்தேகம் வந்திருந்தாலும், இந்து ரமேஷ் விடயத்தில் மூழ்கியிருந்ததில் அவ்வளவாக அதைப் பொருட்படுத்தாமல் இருந்துவிட்டாள். இப்போதோ, அனைத்தும் மறந்து போக, மருத்துவர் வாயால் ஊர்ஜிதம் செய்துவிடும் ஆர்வத்தில் காத்திருந்தாள்.
சில பரிசோதனைகளின் முடிவில், “ரகு, சிஸ்டர நீ தள்ளியெல்லாம் விடேல்ல; அவரே மயங்கி விழுந்தார் எண்டத இப்ப நான் நம்புறன்!” கண்ணடித்தவாறே நண்பனைக் கட்டிக் கொண்டான் தினேஷ்.
“வாழ்த்துகள் மச்சான்! அப்பா ஆகப் போற டா; இவ்வளவு சந்தோசமான விசயத்தத் தெரிஞ்சு கொள்ள நல்லாவே பயப்பட்டுட்ட போல இருக்கே!” தொடர்ந்து கேலி செய்தவனிடம் விடைபெற்று வெளியில் வந்தவர்களை, வாயிலில் நின்ற ரமேஷின் கலங்கிய முகம் வரவேற்றது.
“என்னவாம் அண்ணா! அண்ணிக்கு ஒண்டுமில்லையே!” பதறியவனுக்கு பதில் சொன்னான், இவர்கள் பின்னால் வந்த தினேஷ்.
“எப்பிடி இருக்கிறீர் ரமேஷ்? பார், உம்மட அண்ணா பதில் சொல்ல வெட்கப்படுறான்! நானே அவன்ட சார்பில சொல்லுறன்!” என்றவன், ரமேஷின் கரத்தைப் பற்றிக் குலுக்கியவாறே, “வாழ்த்துகள் ரமேஷ்; விரைவில நீர் சித்தப்பா ஆகப் போறீர்!” கண்ணடித்தான்.
“உண்மையாகவா அண்ணா?!” அண்ணா அண்ணியைப் பார்த்த ரமேஷின் விழிகள் கலங்கி விட்டன. சற்று முன்வரை இதயம் நிரப்பியிருந்த பதற்றம், தவிப்பு, ஏக்கம், பயம், விரக்தி அனைத்தும் மாயமாவதை உணர்ந்தான் அவன்.
“அப்ப, நாங்க பொய்யா சொல்லுறம்! எல்லாம் உண்மைதான். பெரிய பார்ட்டிக்கு ஏற்பாடு பண்ணுங்க!” என்ற தினேஷ் விடைபெற, சட்டென்று தமையனைக் கட்டிக் கொண்டான் ரமேஷ். சிலநாட்களாக தம்பியோடு பாராமுகம் காட்டியவன், தன்னுள்ளத்து மகிழ்வை உடன் பிறப்பின் இறுகிய அணைப்பு உணர்த்த, தானும் தம்பியை கட்டிக் கொண்டான்.
ஒன்றாக நின்ற சகோதர்களை விழிகள் மின்னப் பார்த்திருந்த சிந்துவினுள், ரமேஷ் இந்து காதலைச் சேர்த்து வைக்க முடியும் என்கின்ற யானைப் பலம் வந்திருந்தது! அம்மாவின் மணி வயற்றினுள் உதித்த முத்து அப்பலத்தை நல்கியிருந்தது!

நான்கு மாதங்களிற்குப் பிறகு…
ஓர் இனிய மாலைப்பொழுதில், கொழும்பு மையத்திலுள்ள அம் முன்னணி ஹோட்டலின் பிரமாண்டமான ரிசப்ஷன் ஹால் , மலர் அலங்காரங்களாலும் , வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
அங்கு அமைக்கப்பட்டிருந்த அழகிய வண்ணமலர் வளைவுக்குள் தம்பதியினராக , அன்று காலையில் திருமண பந்தத்தினுள் பிரவேசித்த ரமேஷ், இந்து ஜோடி மகிழ்வும் பூரிப்புமாக நின்றிருந்தனர்.
உவகை ததும்ப, முறுவல் மாறாத முகங்களுடன் வாழ்த்தும் உறவுகள், நட்புகளை ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்வதும் , புகைப்படங்கள் எடுப்பதுமாக நின்றார்கள், மணமக்கள்.
இருவரும் ஒரே ஆண்டில் படித்தவர்கள் என்பதால், வந்திருந்த நட்புகள் ஒருவர் ஒருவரை நன்றாக அறிந்தவர்களாக இருந்ததில், கும்பல் கும்பலாக நின்ற நட்புவட்டத்தின் கேலிப்பேச்சுகளும் நகைப்பொழியும் அம்மண்டபத்தின் உவகைக்கு அழகு சேர்த்தது.
மணமக்களின் பெற்றோர்களும், வெளிநாட்டிலிருந்து வந்திருந்த ரகு, ரமேஷின் சகோதரியும், விருந்தினர்களை வரவேற்று உபசரிப்பதில் முனைந்திருந்தனர்.
சில காலங்களுக்கு முன், இவ்விரு குடும்பங்களும் பிரிந்திருந்த போது, கேலிப்பேச்சும் குத்தல் கதையுமாக இருந்த உறவுகள் சிலர், இன்று, வாயடைக்க நடப்பதைப் பார்த்திருந்தனர்.
அன்று மருமகள் மூலம் விடயமறிந்து கொந்தளித்துப் போன சோமசுந்தரம், நடந்தவற்றை லக்ஷ்மி மூலம் விரிவாக அறிந்து கொண்டவருக்கு, தன் சின்ன மகன் மீது நீங்கா பழி சொல்ல முடியவில்லை. அதேநேரம், தன் செல்ல மருமகளுக்கு வார்த்தைகளால் பெரும் தண்டனை கொடுத்துவிட்டதாக மனதில் துடித்துவிட்டார் அவர்.
“சிந்து சொல்லுறதில நிச்சயம் பிழையில்ல தான்! ஆனாலும், அந்த வீட்டில எப்பிடிச் சம்பந்தம் செய்யிறது? உறவாடுறது? எல்லாம் மறந்திட்டம் எண்டு சொல்ல அது என்ன அவ்வளவு சின்ன விசயமா?” மனைவியிடமும் லக்ஷ்மியிடமும் வாய்விட்டே சொல்லிவிட்டார்.
“நீங்க சொல்லுறதும் சரிதான் அண்ணன். இப்பிடியே பார்த்தா இந்த விசயத்துக்கு முடிவுதான் என்ன? ரெண்டு பேரும் மறந்திருங்க எண்டு நாமளே சொல்லுறதா? எது எண்டாலும் பொறுமையா யோசிச்சு முடிவெடுங்க; நம்மட பிள்ளைகள்ட வாழ்க்க தானே நமக்கு முக்கியம்!” விடாமல் சொன்னார் லக்ஷ்மி.
இப்படியே பேசிக்கொண்டு, போனவர்களைக் காணவில்லையே என்கின்ற தவிப்பில் இவர்கள் அமர்ந்திருக்க, சிறிது நேரத்தில் வைத்தியசாலையிலிருந்து வந்த சிந்து, விரைந்து வந்து, முதலில் எதிர்ப்பட்ட சாரதாவை இறுகக் கட்டிக்கொண்டாள்.
போகும் பொழுது மயக்கத்தில் இருந்தவள் இப்படி மகிழ்வோடு வருவதைப் பார்த்து ஒருகணம் புரியாது நின்ற சாரதா, “சிந்து..என்னமா சொன்னவே? எல்லாரையும் நல்லாவே பயப்படுத்தி விட்டயம்மா!” தழுதழுத்தவரை பார்த்துக்கொண்டே வந்த மகன்கள் இருவரும், அமைதியாக சோஃபாவில் அமர்ந்தவர்கள், ஒருவர் ஒருவரைப் பார்த்தவாறு பேசாமல் இருக்க, “என்னவாம் தம்பி? சும்மா மயக்கம் தானே? நெற்றிக்கு மருந்து போட்டவையே? சின்னக்காயம் தான், அது ஆறிரும்!” என்ற லக்ஷ்மியிடம் சென்ற சிந்து, அவர் மடியில் முகத்தைப் புதைத்துக் கொண்டாள்.
“ராசாத்தி, ஏதாவது குடிக்கிறியா?” அவள் தலையைப் பரிவாகத் தடவியவாறே கேட்ட சித்தியைக் கடைக்கண்ணால் பார்த்தவள், மீண்டும் மடியில் முகம் புதைக்க, அவள் பாவனை லக்ஷ்மி மனதில் சந்தேகத்தை உருவாக்கிய அதேநேரம், சாரதாவின் மனதிலும் சந்தேகம் தோன்றியது.
மகன்களை ஆராய்ந்தவர், இருவர் முகமும் மலர்ந்திருப்பதைப் பார்த்து, “உண்மையாவா…சிந்து! இத நான் கொஞ்சமும் நினைச்சுப் பார்க்கேல்லையே பாருங்க! நடந்த கலவரத்தில சிந்திக்கிற சக்தியே போய்ட்டுதம்மா!” என்றவர், விரைந்து மருமகள் அருகில் சென்றமர்ந்து, “சிந்து, நான் அம்மம்மா ஆகப் போறன் தானே!” மகிழ்வோடு வார்த்தைகளை உதிர்த்தார்.
“இல்லையம்மா, நான் சித்தப்பா ஆகப் போறனாக்கும்!” நடந்தவை எதையும் சற்றும் நினைவில் வைத்திராது மலர்ந்தான், ரமேஷ்.
இவர்கள் கதைத்தவற்றைக் கேட்டிருந்த சோமசுந்தரமோ, ஆனந்தத்தில் திக்கு முக்காடிப் போனார்.
மகள் திருமணம் முடித்திருந்தாலும் அவர்களுக்கு இன்னும் குழந்தைகள் இல்லை. “அதெல்லாம் ஐஞ்சு வருசத்துக்குப் பிறகுதான்!” என்று அவர்கள் சொல்லிவிட்டார்களே! வீட்டின் முதல் வாரிசு! அதுவும் அவர் தலைமகனின் வாரிசு! சட்டென்று, மகனையே பார்த்துக்கொண்டு எழுந்தவருக்கு கண்கள் கலங்கி விட்டன! வந்ததிலிருந்து தந்தையையே பார்த்திருந்த ரகு, விரைந்து தந்தையை அணைத்துக்கொள்ள, தானும் சேர்ந்துகொண்டான், ரமேஷ்.
அதன்பின்னர், ஒவ்வொன்றும் மெல்ல மெல்ல நடக்கத் தொடங்கியது!
“ஆத்திரத்தில எதையெதையோ சொல்லிட்டன்மா! மாமாவில கோவமில்லையே சிந்து!” கண்கலங்கிய மாமானாரை செல்லமாக முறைத்தவாரே, அவர் கரத்தைப் பற்றிக்கொண்டவள், “என்னைக் கோவிக்கவும் திட்டவும் உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு மாமா, அத மறந்திருங்க!” என்றவள், இந்து, ரமேஷ் விடயத்தை மட்டும் சிறிதும் மறக்கவில்லை.
“சதாசிவம் அங்கிள், நீங்களும் ஆன்ட்டியுமா இண்டைக்கு மாமாட்ட போய்க் கதையுங்க, எல்லாம் சரிவரும்!” அவர்களை வரவைத்து, சமாதானம் பேசவைத்து, இதோ கல்யாணமும் நிறைவடைந்துவிட்டதே!
இன்று, காலையில் கோவிலில் நடந்த கல்யாணத்திலும், இப்போது நடக்கும் வரவேற்பிலும் எல்லாவற்றையும் பொறுப்பாகப் பார்த்துக்கொண்டு அங்குமிங்குமாக நடமாடிக் கொண்டிருந்தாள், சிந்து.
அவளையே சற்றும் தவறாது பின்தொடர்ந்து கொண்டிருந்தன, இரண்டு ஜோடி விழிகள்!
திருமணமே செய்யாதிருந்தவர் வளர்த்த குழந்தை, இன்று, தானும் மகிழ்ந்து, தன் புகுந்த வீட்டையும் சுற்றத்தையும் அரவணைத்து மகிழ்வோடு வாழ்வதில் மிகுந்த நிறைவும் மகிழ்வுமாக பெருமையோடு மகளையே பின்தொடர்ந்தன, லக்ஷ்மியின் விழிகள்!
தன் துணைவியால், குடும்பத்துக்கும் சுற்றத்துக்கும், தெகிட்டாத மகிழ்வை தெள்ளத்தெளிவாக அள்ளித் தரமுடியுமென்றால், ஒரு ஆண்மகனிற்கு, அதைவிட வேறென்ன வரம் வேண்டும்!?
உடலும் உள்ளமும் மொத்தமாய் மனைவியின் பிரியமான வாசத்தால் நிறைந்திருக்க, அவளில்லாத வாழ்வென்பதை கற்பனையில் கூடக் காணமுடியாதவனாக, தன் ஐந்து மாத மேடிட்ட வயிற்றோடு அங்குமிங்குமாக விரைபவளை விழிகள் தொடர, அவள் கணவன் உள்ளமோ, ‘நீயின்றி நானேதம்மா!’ சந்தோச ஆரவாரம் செய்தது.
*சுபம்*

error: Alert: Content selection is disabled!!