அத்தியாயம் 2.
‘‘ஹேய் ஹேய்! மெல்ல மெல்ல…பார்த்தம்மா!’’
ஓரெட்டு விரைந்து, ஓடி வந்த வேகத்தில் விழப்போன குழந்தையை அணைத்துத் தூக்கினாள், சிந்து.
குழந்தையோ, அறியாதவர் தூக்கியதும் மிரண்டு திமிறினாள்! கொழுகொழுவென்றிருந்த குழந்தையை இரசித்தவாறே சிநேகமாய் முறுவலித்து, ‘‘குட்டிப் பாப்பா, ஏன் இப்பிடி ஓடி வந்தீங்க? டொம்மா போட்டிருப்பீங்களே!’’ என்றவளை, மிரட்சி விலகாது நோக்கினாள், குழந்தை.
அப்போது, அவர்களை அணுகிய முதிய பெண்மணியொருவர், ‘‘சொன்னா கேட்கவே மாட்டாளாம் மா! நீங்க பிடிச்சிருக்கேல்ல எண்டா விழுந்து அடிபட்டிருக்கும்!’’ என்றவாறே, குழந்தையை வாங்கிக்கொண்டவர், ‘‘இவள் என்ர பேத்திம்மா! இவளுக்குத் தங்கச்சி பிறந்திருக்கிறாள், அதுதான் பார்க்க வந்தம்; ரெண்டு நாட்களா, இவளச் சமாளிக்கிறதுக்குள்ள போதும் போதுமெண்டாகி விடுதம்மா! அப்பா…அதச் சொல்லி மாளாது!’’ அயர்ச்சியாகத் தொடர்ந்தார்.
‘‘வாழ்த்துகள் மா! சின்னப்பிள்ள தானே, துடுதுடுப்பாகத் தான் இருப்பீனம்!’’ என, முறுவலித்தவளிடம் நன்றி கூறியவாறே அவர் அப்பால் நகர, மிகவும் பரபரப்பாக காணப்பட்ட யாழ் போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவு வாயிலால் வெளியேறினாள், சிந்து.
கொழும்பிலிருந்து இரவிரவாகப் பயணம் செய்து யாழ் வந்திருந்தாள், இவள். பயணக்களைப்பு முழுமையாக ஆக்கிரமித்திருந்தாலும், சோபை குறையாத வதனத்தோடு, அடங்கமறுத்துப் பறந்த சிகையை ஒற்றைக் கரத்தால் ஒதுக்கியபடியே, பயணப்பையையும் உருட்டிக்கொண்டு அருகிலிருந்த பேரூந்துத்தரிப்பில் சென்று நின்றவள் அச்சுற்றுப்புறத்தை விழிகளால் துளாவினாள்.
காலைப் பொழுதில், சுளீரென்று அடிக்கும் வெயில்; சர் சர்ரென்று விரைந்து செல்லும் வாகனங்கள்; துவிச்சக்கர வண்டிகளில் விரையும் மக்கள்; இவர்களுக்கு கொஞ்சமும் குறையாத அளவில் பாதசாரிகள்!
இப்படி, ‘யாழ் ஆஸ்பத்திரி வீதி’ உயிர்ப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது.
பேரூந்துக்காக காத்து நின்றவளின் மனம் சுழன்றடிக்கும் நினைவுகளால் அலைக்கழிக்கப்பட்டுக் குழம்பிக் கிடந்தாலும், அவற்றைப் புறம்தள்ளி, அவள் சிந்தை முழுவதும் தன் சித்தியையே சுற்றி வந்தது.
‘இந்தமுறை எப்பிடியும் சித்திய கொழும்புக்கே கூட்டிக்கொண்டு போயிற வேணும். தனிய இருக்கிறதால அவர் தன்ன ஒழுங்காகக் கவனிக்கிறதில்ல!’ என நினைத்தவள், தனக்குரிய பேரூந்து வரவே ஏறி, ‘ஓல்ட் பார்க்’ சந்தியில் இறங்கி, ஐந்து நிமிட நடையில் பிரதான வீதியிலிருந்த தம் வீட்டைச் சென்றடைந்தாள்.
மூன்று படுக்கை அறைகளுடன் கூடிய அளவான அழகிய வீடு! இவர்கள் இருவருக்கும் அது ஒரு மாளிகை! தன் பன்னிரெண்டாவது வயதில் சித்தியுடன் வாழ வந்ததிலிருந்து, சிந்து தான் இம்மாளிகையின் இளவரசி! ஆமாம், அவள் சித்தி அவளை அப்படித்தான் பார்த்துக் கொண்டார்.
முன்புறத்தில், விலாட்டு மாமரத்துடன் கூடிய சிறு தோட்டமும், அத்தோட்டத்துக்கே அழகு சேர்க்கும் வகையில் ஒரு மல்லிகைப்பந்தலும்; பின்புறத்தில், பெரிய கிணறும் அதனைச் சுற்றி வாழை, பப்பாளி, நெல்லி மரங்களுமாக பசுமைக்குள் அமைந்திருந்தது அவள் வீடு.
‘என்னதான் எண்டாலும், இங்க இருக்கிற பசுமையும் அமைதியும் கொழும்பில கிடைக்கவே கிடைக்காது!’ நினைத்தபடி, கைப்பையிலிருந்த வீட்டுத்திறப்பை எடுத்துக்கொண்டு தோட்டத்தைச் சுற்றிப் பார்வையிட்டவாறே முன்வாயிலை நெருங்கினாள், சிந்து.
இவள் கேட்டை திறந்து உள்ளே நுழைந்ததை தன் வீட்டு முற்றத்திலிருந்து எட்டிப்பார்த்திருந்தார், பக்கத்து வீட்டுப் பெண்மணி.
‘‘சிந்து, எப்பம்மா வந்தனீர்? சித்தியப் போய்ப் பார்த்தீரா? நானும் இண்டு மதியம் தான் போகலாமெண்டு இருக்கிறன்!’’ என்றவர், அவளைப் பேச அனுமதியாது தொடர்ந்தார்.
‘‘தம்பி வரேல்லயாம்மா? எப்பிடிப் போகுது கொழும்பு வாழ்க்க? தம்பி வீட்டுக்காரர்கள் எல்லாரும் உன்னில பாசமாக இருக்கீனமோ?’’ தனக்கேயுரிய விதத்தில் விடாது கேள்விக்கணைகளைத் தொடுத்தார்.
அவரை நோக்கி அழகாகப் புன்னகைத்தாள், சிந்து.
‘‘அப்பிடியே ஆஸ்பத்திரிக்குப் போய்ட்டுத் தான் வாறன் ஆன்ட்டி. இவர் வரேல்ல. சித்தி ஆஸ்பத்திரியில எண்டு கணேஷ் ஃபோன் பண்ணினதும் அவசரமா இரவு பஸ்ஸில வெளிக்கிட்டுட்டன்.’’ என்றவள், ‘‘நாங்களும் நல்லா இருக்கிறம் ஆன்ட்டி. மாமி வீட்டாக்கள் எல்லாரும் அன்பாக நடந்து கொள்ளினம்.’’ பொறுமையாகப் பதிலளித்தவாறே முன்வாயிலைத் திறந்தவள், ‘‘சித்தி இண்டைக்கு அங்கதான் இருக்க வேணுமாம், மத்தியானச் சாப்பாடு செய்து கொண்டு போக வேணும் ஆன்ட்டி; பிறகு ஆறுதலாக் கதைப்பமே!’’ முறுவல் மாறாது சொன்னாள்.
‘‘ஓ…அப்பிடியா?! சரி சரி… நீ போம்மா. உனக்கும் பயணம் செய்து வந்தது களைப்பாவும் இருக்கும், நாம ஆறுதலாகக் கதைப்பமே!’’ என்றவருக்குத் தலையாட்டிக்கொண்டே வீட்டினுள் நுழைந்து கதவைச் சாத்தினாள், அவள்.
சிந்துவின் பெற்றவர்களுக்கு ஆண் ஒன்றும், பெண் ஒன்றுமாக இரு பிள்ளைகள். சிந்துவின் தந்தை சொந்தமாக அச்சகம் நடத்தி வந்தார். பெரும் பணமாகப் புழங்காவிடினும், அவர்கள் தேவைக்கு போதுமான வருமானம் அதிலிருந்து வந்து கொண்டிருந்தது.
இப்படியிருக்கையில் ஓர் நாள், கோர விபத்தொன்றில் பெற்றவர்களையும் சகோதரனையும் பலி கொடுத்து, கதறித்துடித்தவாறு அநாதரவாக நின்று கொண்டிருந்தாள், சிந்து. இதுவரை, பாசமான குருவிக் கூட்டில், பாதுகாப்பாக, உறவுகளின் கதகதப்போடு வாழ்ந்தவள், கண்ணிமைக்கும் பொழுதில் தனியாளாக்கப்பட்டாள். எதிர்காலம் பற்றிய பயம், முற்றிலும் புதியதாய் அவளை ஆசையோடு ஆக்கிரமித்துக் கொண்டது. அதன் சுமைதாங்காது, மூச்சுமுட்டி செய்வதறியாது ஒற்றையாய்த் தவித்து நின்றாள், சிறுமி சிந்து!
எவ்வளவுதான் அவள் நிலையில் மனமிரங்கினாலும், வருந்தினாலும், வெளிநாடுகளில் வாழும் அவள் உறவுகளோ, உள்நாட்டில் வாழ்பவர்களோ, இளம்பிராயத்தில் அடியெடுத்து வைக்கக் காத்திருக்கும் அவளைத் தங்களோடு அழைத்துச் செல்லவோ அவள் பொறுப்பை ஏற்கவோ மிகவும் தயங்கினர். அத்தருணத்தில், திருமணத்தில் நாட்டமில்லாது ஆசிரியர் தொழிலுக்கே தன்னை அர்ப்பணித்திருந்த அவளின் ஒன்றுவிட்ட சித்தி லக்ஷ்மி, தனித்துத் தவித்து நின்றவளின் பொறுப்புக்களைத் தனதாக்கிக்கொள்ள முன்வந்தார்.
ஆசிரியர் தொழில்மீது மட்டுமே அளவில்லாக் காதல் கொண்டு, அதுவரை தனிமையில் வாழ்ந்து வந்த அந்நல்ல உள்ளம், தன் வாழ்வின் ஆதாரமாய், துணையாய் அவளை அரவணைத்துக் கொண்டது. அதோடு, யாருடைய தயவுமின்றிச் சொந்த உழைப்பில் அவளைப் படிப்பித்து, ஆசிரியர் பயிற்சிக்கும் அனுப்பி, தன்னைப் போலவே ஆசிரியராக்கினார், லக்ஷ்மி.
தன்னிடம் வந்த நாளிலிருந்து, மறைந்த குடும்பத்து நினைவுகளையும் துயரையும் அவளிடமிருந்து மறக்க வைக்க முடியாவிடினும், வேறெந்த வகையிலும் ‘நான் யாருமற்றவள்!’ என அவள் உணராத வகையில், தாயாய்த் தந்தையாய் உற்ற தோழியாய் இருந்து அவளைப் பார்த்துக் கொண்டார், லக்ஷ்மி.
ஆசிரியர் பயிற்சியை முடித்த கையோடு, வீட்டிற்கருகிலுள்ள மகளிர் பாடசாலையொன்றில் ஆசிரியையாகப் பணியாற்றத் தொடங்கினாள், சிந்து.
பன்னிரண்டு வயதில் சிறுமியாய் தன்னிடம் வந்தவள், அழகிய இளம்பெண்ணாக மலர்ந்து நிற்பதைப் பார்க்கையில் பெற்றவள் போல பாசத்தில் நெகிழ்ந்து, நெஞ்சம் நிறைந்து போகும், லக்ஷ்மிக்கு! அதுவும், என்ன தான் வாயாடியாக இருந்தாலும், அவளது பொறுப்பான செய்கைகளும், நற்குணநலன்களும் பழகுபவர்களை அவளிடம் ஒட்டிக்கொள்ள வைத்துவிடும்.
நாட்கள் செல்ல செல்ல, வளர்ந்த பெண்ணை வீட்டில் வைத்திருப்போர் எல்லோருக்கும் வரும் கவலை தான் லக்ஷ்மியையும் ஆட்டிப் படைத்தது. தன்னைப் போலவே திருமண வாழ்விலிருந்து அவளை விலக்க நினைக்காத லக்ஷ்மி, மும்மரமாக வரன் வேட்டையில் இறங்கியவர், அதன் பின்னரே அதிலுள்ள கஷ்டங்கள் புரிய முழி பிதுங்கிப் போனார்.
திருமணம் என்பதைத் தனியே, அழகோ, படிப்போ, அல்லது குணநலன்களோ தீர்மானிப்பதில்லையே! குறைவற்ற தனமும் இருப்பின் பெண்ணின் திருமணத்தை ஓரளவுக்குக் கஷ்டமின்றி நடத்திக் கொள்ளும் வாய்ப்புகள் உண்டே!
லக்ஷ்மியைப் பொறுத்த மட்டில், பணமென்று பெரிதாக இருக்கவில்லை. இந்த வீடும், அவர் தொழிலும், சொற்ப நகைகளுமே அவர் சொத்தாக இருந்தது. பல வரன்கள் வந்தும், இறுதியில் ஒவ்வொன்றும் இழுபறியில் முற்றுப் பெறாமல் செல்ல செல்ல, லக்ஷ்மியின் மனதைப் பயம் தனதாக்கத் தொடங்கியது.
‘எனக்குப் பிறகு இவளுக்கு ஆர்?’ கலங்கினார், லக்ஷ்மி.
வயதுடன் சேர்ந்து சின்ன சின்னதாக நோய்களும் தொட்டுப் பார்க்க, அவர் பயமும் கவலையும் அதிகரித்துக்கொண்டே சென்றது. இச்சமயத்தில் தான், அவரின் தூரத்துச் சொந்தமான சாரதா, திருமணமொன்றிற்காக கொழும்பிலிருந்து யாழ் வந்திருந்தவர், திருமண வீட்டில் கலகலப்புடன் வளைய வந்த சிந்துவைக் கண்டதும், “பிள்ள, நீர் லக்ஷ்மியின்ட மகள் தானே?” சந்தேகமாகவே வினவினார்.
“ஓம் ஆன்ட்டி, அந்தா உங்களுக்குப் பின்னால கடைசியில இருக்கிறார், சித்தி!”
மணப்பெண்ணின் தங்கை அவளது தோழி என்பதால், வேலையாக அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தவள் லக்ஷ்மியைக் காட்டிவிட்டு அகன்று விட்டாள். அதன் பிறகோ, சிந்துவையே சுற்றி சுற்றி வந்தது சாரதாவின் விழிகள். முடிவில், மனதிற்கு மிகவும் திருப்தியாக இருக்கவே லக்ஷ்மியிடம் தன் விருப்பத்தைத் தெரிவித்தார்.
திருமணங்களில் இளம்பெண்களுக்கு தகுந்த வரன்கள் கூடிவருவது இயல்பு தானே? அவ்வகையில், சாரதாவின் விருப்பத்தை மிகவும் மகிழ்வோடு ஏற்றுக்கொண்டார், லக்ஷ்மி.
“உங்கட மூத்தமகன் ரகுக்குச் சிந்துவக் குடுக்க எனக்கு பூரண சம்மதம் அண்ணி.” தாமதிக்காது தன் விருப்பைச் சொல்லிவிட்டார். அதேவேகத்தில், “எண்டாலும், ஒருதரம் பிள்ளைகளிட்டயும் விருப்பத்தக் கேட்டிருவமே!” என்றும் சொல்லிவிட்டார்.
“அதற்கென்ன லக்ஷ்மி, நீர் சிந்துட்ட விருப்பத்தைக் கேளும்; ரகுட ஃபோட்டோ அனுப்பி விடுறன்; நானும் வீட்டில கதைச்சிட்டு மிச்ச வேலகளப் பாப்பம்!” என்றவர், போகும் பொழுது சிந்துவின் புகைப்படத்தையும் வாங்கிச் சென்றிருந்தார்.
வசதியிலும் ரகுவின் பழக்க வழக்கத்திலும், ஏன் அவர்கள் குடும்பத்திலேயும் எதுவித பிரச்சனைகளும் இல்லாதவர்கள் என்பதை நன்கறிந்த லக்ஷ்மிக்கு, ரகு ஏற்கனவே திருமணப்பதிவு செய்து ஒருவருடத்தில் விவாகரத்துப் பெற்றிருந்ததெல்லாம் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை.
சிந்துவிடம், மாப்பிள்ளையைப் பற்றி மிக்க மகிழ்வும் நிறைவுமாக மறைக்காது சொல்லி, அவன் புகைப்படத்தையும் கொடுத்துவிட்டு, “உனக்கு நல்ல பொருத்தமா இருப்பார் மா! சாரதா அண்ணியும் சரியான நல்லவர். அந்தக் குடும்பத்தில சந்தோசமா வாழுவ எண்ட முழுநம்பிக்க எனக்கிருக்கு! அதை விட வேற என்ன வேணும் சொல்லு!” என, தன் பூரண சம்மதத்தையும் வெளிப்படுத்தி விட்டார், லக்ஷ்மி.
அவர் மிகவும் தீவிரமாக வரன் பார்ப்பதையும், “ஒண்டும் பொருந்தி வருதில்லயே!” என்று கவலைப்படுவதையும் பார்த்து, “இப்ப என்ன அவசரம் சித்தி? முதல் எனக்கென்ன வயசு போய்ட்டுதா? அதோட, எனக்கெண்டு இனி ஒருத்தர் பிறந்தா வரப்போறார்? என்னைக் கட்டப் போற அந்த லக்கி ஃபெல்லோ எங்கயோ ஒரு இடத்தில இருப்பார்; நேரகாலம் கனிந்து வரேக்க எல்லாம் தானாகவே நடக்கும் சித்தி; கவலய விடுங்க!” என, தன் சுபாவத்தின் படி சொல்லித் திரிந்தவள், இன்றோ, அவர் இவ்வளவு நம்பிக்கையுடன் நீட்டிய ரகுவின் புகைப்படத்தை மெல்ல வாங்கிக்கொண்டே தயக்கமாக ஏறிட்டாள்.

