அத்தியாயம் 3. ^^^^^^^^
‘‘சாப்பிடுங்கோ சித்தி!’’ உணவுத்தட்டை தன்முன் நீட்டியவளைப் பாசத்துடன் நோக்கினார், லக்ஷ்மி!
‘‘நீ சாப்பிட்டியா ராசாத்தி? என்னால உனக்குத்தான் வீண் சிரமம்! இதெல்லாம் சின்ன விசயம், உனக்குச் சொல்லத் தேவையில்ல எண்டு அப்பவே கணேஷிட்டச் சொன்னன்; அவன் கேட்டாத் தானே!’’ அலுத்துக்கொண்டே உணவுத்தட்டை வாங்கிக்கொண்டார்.
‘‘என்ன சித்தி நீங்க, எனக்குச் சொல்லாம வேற ஆருக்குச் சொல்லுறது? எனக்கு ஒண்டு எண்டா, பேசாம இருப்பீங்களா சொல்லுங்க பார்ப்பம்? அது மாதிரித் தான் இதும்!’’ அன்பும் கண்டிப்புமாகச் சொன்னவள், ‘‘உண்மையாவே கரைச்சல் எல்லாம் இல்ல சித்தி; இண்டைக்கு மட்டும்தான் இங்க இருக்க வேணுமாம்; நாளைக்கு வீட்ட போயிரலாமாம்; இப்பச் சாப்பிடுங்க, மருந்து குடிக்க வேணும்.’’ என்றதும், அவரும் உணவை உண்ணத் தொடங்கினார்.
சாப்பிட்டபடியே அவளைப் பார்த்தவர், ‘‘அப்ப அம்மா, தம்பி கதைச்சவரா? அவரும் பாவம், நீ இல்லாம தனியாக் கஷ்டப்படுவார்!’’ என்றதும் ஒருகணம் விழித்தவள், ‘‘ம்ம்…கதச்சார் கதச்சார்!” என்றவள், “நேற்றிரவு பஸ்சில வரேக்க எடுத்தவர். எல்லாரும் நல்ல நித்திரை சித்தி, பிறகெப்பிடி கதைக்கிறது சொல்லுங்க? அதுதான் கட் பண்ணச் சொன்னன், இண்டைக்குத் திருப்பி எடுப்பார்!’’ அலட்சியக் குரலில் தொடர்ந்து சொன்னாள்.
‘‘ஏனம்மா, கலியாணம் செய்து இவ்வளவு நாட்களாகியும் இன்னும் விளையாட்டுப் பிள்ளையா இருக்கிறயே! அவரா எடுக்க வேணும்? நீ எடுக்கக் கூடாதாம்மா? அது சரி, நீ வந்து சேர்ந்ததக் கூடச் சொல்லேல்லையா?” கண்டிப்போடு கேட்ட லக்ஷ்மி, மகளைக் கூர்ந்து நோக்கினார்.
“அதெல்லாம் காலமயே மாமிட்டச் சொல்லிட்டன் சித்தி, அவரே ரகுட்டச் சொல்லி இருப்பார்!” என்றவள், லக்ஷ்மியின் பார்வையை உணர்ந்ததும், “எப்பவும் காலமேல வேலைகளில ஓடித் திரிவார் சித்தி, அதனாலதான் மாமிட்டச் சொன்னன்!” சமாளித்தாள்.
“சரி விடு; இப்ப அங்க சாப்பாட்டு நேரம் தானே? எடுத்துக் கதைச்சிட்டு அப்பிடியே எனக்கும் தா பார்ப்பம்!’’ லக்ஷ்மியும் இலேசில் விடுவதாக இல்லை.
‘‘மருத்து குடிக்க வேணும் சித்தி, முதல் சாப்பிட்டு முடியுங்க; அதுக்குப் பிறகு எடுக்கிறன்!’’ அவரின் நச்சரிப்புத் தாங்காது சொன்னவள், அவர் உண்டதும் அவருக்குரிய மருந்தைக் கொடுத்துவிட்டு, கணவனின் கைபேசிக்கு அழைத்து, அவன் அழைப்பை ஏற்கும் முன்பே லக்ஷ்மியிடம் கொடுத்து, ‘‘நீங்க கதையுங்கோ சித்தி, பாத்ரூமுக்குப் போய்ட்டு வாறன்!’’ என்றவாறே, அவர் பதிலுக்குக் காத்திராமல் அவ்விடம் விட்டு வெளியேறி விட்டாள்.
பொழுது புலர, வழமை போல விழிப்படைந்த ரகுவிற்கு, அருகில் படுக்கை காலியாக இருப்பதைப் பார்த்த பின்னும், மனைவி வீட்டிலில்லை என்பதை உணர்ந்து கொள்ள வெகுநேரம் சென்றது.
காலையில் மனைவி சமையலறையில் எழுப்பும் சத்தங்கள் இன்று இல்லாததே அவளில்லை என்றுணர்த்த, மிகவும் ஆயாசமாக உணர்ந்தான் அவன். எப்பொழுதும் மனஸ்தாபப்பட்டதும் அவளே ஓடி வந்து கதைப்பதால், நேற்றிரவு அவள் தன்னிடம் சொல்லாமல் கொள்ளாமல் போயிருந்தாலும், ‘இம்முறை நாமே எடுத்துக் கதைப்போம்!’ என்றெண்ணி அவளுக்கு அழைத்திருந்தான்.
அவளோ, “ ‘பஸ்சில எல்லாரும் நல்ல நித்திரை, பிறகு கதைப்பம்!’ என, நறுக்கென்று சொன்ன வேகத்தில ஃபோன வச்சிட்டாளே!” முணுமுணுத்துக் கொண்டவனுக்கு, அவள் செயலை நினைக்கையில் இலேசாகக் கோபம் எட்டிப் பார்த்தது.
‘சரி, கோவத்தில சொல்லாமல் போனாள் எண்டு நானே எடுத்துக் கதைச்சா இந்த முறுக்கு முறுக்கிறாளே!’ மனதில் கடுகடுத்துக் கொண்டவனுக்கு, அதையும் மீறி மனைவியைக் காணும் ஆவல் எழுந்தது.
இந்த எட்டு மாதங்களில் மனைவியுடன் வாழ்ந்திருந்தாலும், அவள் பற்றித் தெரிந்து அவளுடன் ஒன்றி வாழ அவன் முனையவில்லை. அதற்காக அவள் முனையும் பொழுதெல்லாம், தகுந்த ஒத்துழைப்பைத் தன் பக்கத்திலிருந்து கொடுக்கவும் முனையவில்லை. அவசர வாழ்க்கை, வேலை, வீடு என்று ஓடித் திரிபவன், இரவில் களைத்து வந்து சாப்பிட்டுவிட்டு தூங்கவே நேரம் சரியாக இருக்கும். அப்படியே நேரம் கிடைத்தாலும், மாறி மாறிக் கதைபேசி சண்டை பிடிக்கவே பொழுது ஓடிவிடும்.
ஆனால் இப்போது?
வெறுமையான வீட்டைப் பார்க்கையில் அந்த வெறுமை அவன் மனதுள் துள்ளியேறி அமர்ந்து மிகவும் வாட்டி எடுத்தது! சிட்டுக்குருவி போல சுற்றித் திரியும் மனைவியின் கைவண்ணம், வீட்டின் ஒவ்வொரு அங்கத்திலும் பளிச்சிட, ஆழ்ந்த பெருமூச்சொன்றை வெளியேற்றியவன், சோம்பலுடன் எழுந்து காலைக்கடன்களை முடித்துவிட்டு வேண்டா வெறுப்பாகவே கடைக்குக் கிளம்பினான்.
அதன்பின்னர், எப்போதும் போலவே வேலைகள் விழுங்கிக்கொள்ள, அதிலாழ்ந்து கடையின் கணக்குகளைப் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு மனைவியின் அழைப்பைக் கண்டவுடன் மிகவும் மகிழ்வாக இருந்தது.
‘‘சிந்தூ!’’ ஆவலை அடக்காத குரலில் அழைத்தபடி கைபேசியைக் காதில் வைத்தவன், ‘‘தம்பி, நான் மாமி கதைக்கிறன்!’’ என்ற லக்ஷ்மியின் குரலால் ஒருகணம் திகைத்தான்!
சட்டென்று உள்ளே பரவிய ஏமாற்றத்திலிருந்து கணத்தில் மீண்டவன், ‘‘ மாமி! இப்ப உடம்புக்கு எப்படியிருக்கு? இப்பிடி அங்க தனியா இருந்து உடம்பையும் கவனிக்காமல் கஷ்டப்பட வேணுமா சொல்லுங்க பார்ப்பம்?’’ கண்டிப்பும் ஆதங்கமுமாகக் கேட்டான்.
‘‘மாட்டன் எண்டெல்லாம் சொல்லாமல், சிந்துவோட இங்க வாங்க மாமி; இனி உங்கள அங்க தனியாக விட முடியாது!’’ அன்பாக மிரட்டினான்.
மருமகனின் கரிசனையான பேச்சு, லக்ஷ்மியின் விழிகளை கலங்கச் செய்தது. தன் பெற்றவர்களுக்கு பின் தனிமையில் இருந்தவருக்கு, அன்பைக் காட்டவும், அன்பை வாங்கவும் இதுவரை முழு உரிமையுள்ளவளாக சிந்து ஒருத்தியே இருந்தாள். ஆனால் இப்போது, அவள் கணவன் காட்டும் கரிசனையில் அவர் விழிகள் மெல்ல நனைந்தன!
‘‘எனக்கு ஒண்ணுமே இல்ல தம்பி! வயசு போகப் போக, எல்லா வருத்தங்களும் ஒண்டுமாறி ஒண்டு எண்டு ஆசையா வந்து பார்க்கீனம், அவ்வளவும்தான்! இப்ப நல்ல சுகம். அங்கு வாறது பற்றி ஆறுதலா யோசிப்பமே!’’ என்றவர், மறக்காது அவனையும் அவன் குடும்பத்தையும் நலம் விசாரித்தார்.
‘‘இவள் சிந்துவும் இங்க வர, உங்களுக்குத்தான் கஷ்டமாக இருக்கும்!’’ சங்கடமாக ஆரம்பிக்க, ‘‘இதென்ன கதை மாமி? அவள் வராமல்? இதிலென்ன சங்கடம்? அப்பிடியெல்லாம் ஒண்டுமில்ல! எனக்கு இங்க நிறைய வேலைகள் மாமி, தெரியும் தானே! இல்லையெண்டா நானும் வந்திருப்பன்!’’ சட்டென்று இடையிட்டான் ரகு.
இப்படியே சிறிது நேரம் அவருடன் கதைத்தவன், ‘‘பக்கத்தில சிந்து நிற்கிறாவா மாமி?’’ மெதுவாகக் கேட்டுப் பார்த்தான்.
‘இந்தா வாறன் எண்டு போன பிள்ள இவ்வளவு நேரமாக அங்க என்ன செய்யிறாள்!?’ மனதில் முணுமுணுத்துக்கொண்டே, ‘‘இப்பத்தான் பாத்ரூம் போனாள் தம்பி, இந்தா வந்திருவாள்!’’ அவள் சென்ற திசையைப் பார்த்துக்கொண்டே சொன்னார், லக்ஷ்மி.
மனைவி தன்னை தவிர்க்கிறாள் என்பதை நன்குணர்ந்து கொண்டவனின் மனமோ மிகவும் சுணக்கம் கண்டது. அவளின் பாராமுகம், தன்னில் இந்தளவு தாக்கம் ஏற்படுத்தும் என்பதை இதுவரை அவனே உணர்ந்திருக்கவில்லையே! இன்று உணர்ந்தவனுக்கோ, தன்னை நினைக்கவே ஆச்சரியமாக இருந்தது.
‘‘பாரவாயில்ல மாமி, இரவைக்கு வீட்ட போனதும் எடுக்கிறன்!’’ முயன்று சாதாரணமாகச் சொல்லி, அவரிடம் விடைபெற்றவன் மனமோ தவிப்பிலிருந்து விடைபெறாமல் அதையே கட்டிப்பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்தது.
‘‘எண்டாலும், இவளுக்கு இப்பிடிக் கோவம் வரக்கூடாது; நாட்கணக்கில கதைக்காமல் இருக்கிறாளே!’’ என்று நினைத்தவுடனேயே, ‘அந்தக் கோபம் நியாயம் தானே? இல்லையெண்டு அவளில பிழைகாண உன்னால ஏலுமா ரகு?’ மனச்சாட்சி முறைப்புடன் வினவியது.
‘ஓம்! அண்டு நான் அப்படிக் கேட்டிருக்கக் கூடாது தான். அது அவள்ட மனச என்ன பாடுபடுத்தி இருந்தா, எதையும் கொஞ்ச நேரத்துக்கு மேல வச்சுச் சாதிக்காம ஓடி வந்து சிரிச்சுக் கதைகிறவள், இத்தின நாட்களா பாராமுகத்தத் தொடருவாள்?’ என, நினைத்துக் கொண்டவன், தம்மிருவருக்கும் இடையிலான இந்த கண்ணாமூச்சி ஆட்டத்துக்கு வித்திட்ட அந்நிகழ்வினுள் நுழைந்தான்.
மூன்றுநாட்களுக்கு முன், ரகுவும் சிந்துவும் மயூரா அம்மன் கோவிலுக்கு வந்தவர்கள், சுவாமி தரிசனம் முடித்து கோவில் பிரகாரத்தில் சிறிது நேரம் அமர்ந்திருந்தனர்.
சிந்துவோ, மிகவும் மகிழ்சியாகவும் நிறைவாகவும் உணர்ந்தாள். வேலை வேலையென்று எப்போதும் திரியும் கணவன் இப்படிச் சிறுபொழுதை தன்னுடன் கழித்தாலும் அவள் வானில் பறப்பது போல மகிழ்வில் மிதந்து விடுவாள்!

