நீயில்லாது வாழ்வேதடி 3 – 2

அப்படியே இன்றும் சிறிது நேரமிருந்தவர்கள், ‘‘சரி..போவமா சிந்து? எனக்கு வீட்டில கொஞ்சம் வேலைகள் இருக்கு!’’ சொல்லிக்கொண்டே கணவன் எழ, ‘‘ம்ம்ம்…வாங்கோ…’’ என்று எழுந்து வெளியே வந்தவர்கள் தம் கார் நிறுத்தியிருந்த இடத்தை நோக்கிச் செல்கையில், ‘‘ சிந்தூ!’’ என்ற அழைப்பைக் கேட்டுத் திரும்பிப் பார்த்தனர்.
அங்கே, தன் பின் வீட்டில் வசித்து வருபவனும், சிறுவயது நண்பனுமாகிய கணேஷ் நிற்பதைக் கண்ட சிந்து, ‘‘ஹேய் கணேஷ்! எப்ப வந்தீங்க? அட, நீங்க வரப்போறதா சித்தியும் சொல்லேல்லயே! நீங்களும் வீட்டுப்பக்கம் வரவும் இல்ல.’’ என்றாள், நண்பனைக் கண்ட சந்தோசக் குரலில்!
அவர்கள் அருகில் வந்த கணேஷ், ‘‘டீச்சர்ஸ் செமினார் ஒண்டுக்காக ரெண்டு நாட்களுக்கு முதல் வந்தனான் சிந்து; இண்டைக்கு இரவே யாழ்ப்பாணம் திரும்ப இருக்கிறன்; அடுத்தமுறை வரேக்க உங்கட வீட்டுக்குக் கட்டாயமா வாறன்.’’ இருவரையும் மாறி மாறிப் பார்த்தபடி சொன்னான்.
தம் திருமணத்தின் போது கணேஷ் குடும்பம் இந்தியா சென்றிருந்ததும், அவர்களிற்கு தன் கணவனை அறிமுகமில்லை என்பதையும் நினைத்துக் கொண்ட சிந்து, ‘‘ரகு, இவர் கணேஷ்! யாழ்பாணத்தில் எங்கட பின் வீடு; சின்னவயசில இருந்தே நல்ல பழக்கம்; இவே இருக்கீனம் எண்ட தைரியத்தில தான் சித்தி தனியாக இருக்கவே சம்மதிச்சன்.’’ என்றவள், ‘‘கணேஷ், இவர்…’’ தொடங்க, அவளை இடைமறித்தான், கணேஷ்.
‘‘நீர் சொல்லாமலேயே தெரியுது இவர் உம்மட கணவர் எண்டு…’’ என்றவாறே, ரகுவின் கரங்களைப் பற்றிக்கொண்டவன், ‘‘உங்களச் சந்திச்சதில நல்ல சந்தோசம் ரகு. ரகுதானே…’’ சிந்துவிடம் வினவி, அவள் தலையசைப்பைப் பெற்றுக்கொண்டே, ‘‘உங்கட கலியாணத்துக்கு வர ஏலாமல் போச்சு! அந்த நேரம் என்ர அக்கா கலியாணத்துக்கெண்டு இந்தியா போயிருந்தம். இல்லையெண்டா, சிந்துட கலியாணத்த முன்னிண்டு நான் தான் செய்து வச்சிருப்பன்!’’ என்றவன், ‘‘சிந்து போல ஒரு மனைவி கிடைக்க நீங்க குடுத்து வைச்சிருக்கிறீங்க ரகு; ரெண்டு பேரும் எப்பவுமே சந்தோசமா இருக்க வேணும்; அதுதான் என்ர ஆசை!’’ உணர்வு பூர்வமாகச் சொன்னவன் பார்வையோ, அவனையுமறியாது சிந்துவின் முகத்தை ஒருவித ஏக்கத்தோடு தொட்டு மீண்டது!
சட்டென்று அவன் அப்படிச் சொன்னவிதமும் பார்வையும் அவளை கணத்தில் தடுமாற வைத்தது! என்றாலும், ‘சிறுவயது முதல் பழகியவன். மிகவும் நல்லவன். உண்மையான அன்பில், உள்ளத்திலிருந்து சொல்கிறான்!’ என நினைத்துக் கொண்டவள் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், அவள் கொஞ்சமும் அறியாததொன்றும் இருந்தது! அது, கணேஷ் தன் மனமார சிந்துவை விரும்பினான் என்பதேயாகும்.
தன் பெற்றவர்களிற்கு சிந்து மீது ஒருவகை அனுதாபமும் அன்பும் இருந்தாலும், அவள் மிகவும் நல்ல பெண் என்பதை அறிந்திருந்தாலும், திருமணம் என்று வரும் போது, குறைவில்லாத சீதனமின்றி ஒரு பெண்ணை தம் ஒரே மகனுக்குச் செய்ய கொஞ்சமும் விரும்ப மாட்டார்கள் என்று நன்குணர்ந்த கணேஷ், மனதில் எழுந்த ஆசையை அப்படியே ஆழப்புதைத்து விட்டான்.
அப்படியிருந்தும் எத்தனையோ தரங்கள், ‘வீட்டில் சொல்லிப் பார்ப்போமா?’ என்று முயன்றவன், பெற்றவர்களை மீறவோ அவர்களை நோகச் செய்யவோ துணிவின்றி தன் ஆசையை அப்படியே அடக்கிக்கொண்டான்.
என்ன தான் என்றாலும், சிறுவயதிலிருந்தே சிந்துவின் நலனில் மிகவும் அக்கறை கொண்ட நண்பன் அவன். அவளின் கல்யாணச்செய்தி காதில் விழுந்தபோது மனதில் சிறிதாக ஏக்கம் பிறந்தாலும், ‘அவள் எங்கிருந்தாலும் மகிழ்வுடன் நிறைவாக வாழ வேண்டும்!’ என்றே விரும்பினான்.
இன்றோ, ஜோடியாக இருவரையும் கண்டதும் கொஞ்சமே கொஞ்சம் தடுமாறித்தான் போனான்.
ரகுவோ, மிகவும் இயல்பாக அவனுடன் கதைத்தான்.
‘‘அடுத்தமுறை கட்டாயமாக வீட்டுக்கு வாங்க கணேஷ்!’’ என்று சொல்லி விடைபெற்று வீடு வந்தவர்கள், இரவுணவை உண்டு முடித்துவிட்டு வரவேற்பறையில் வந்தமர்ந்தனர்.
தொலைக்காட்சியில் சென்று கொண்டிருந்த நாடகமொன்றில் சிந்துவின் கவனமிருக்க, ரகுவோ, இமைக்கவும் மறந்து மனைவியைப் பார்த்திருந்தான். அவன் நினைவோ, கணேஷை சந்தித்த இடத்திலிருந்து வர மறுத்து அடம் பிடித்தது.
சிந்து, அவனைக்கண்டு மிகவும் மகிழ்வாகக் கதைத்தாள் தான். அவள் சுபாவமே அதுதான் என்பதை இந்த சில மாதங்களில் அறிந்திருந்தான், அவள் கணவன். ‘ஆனால், கணேஷ்! அவளைக் கண்டு முகம் மலர்ந்தவன், அதையும் தாண்டி…’ எதுவோ போல உணர்ந்தான் ரகு.
‘ஒருகணம் எண்டாலும் கணேஷின்ட பார்வை ஏக்கத்தோட சிந்துவில படிஞ்சது தானே?’ இவன் மனம் கிடந்தது அல்லாடியது.
அதுமட்டுமில்லாமல், அவன் கதைத்த ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் ‘வேற ஏதாவது அர்த்தங்கள் இருக்கா?’ அவன் மனமோ ஆராயத் துணிந்தது.
‘நீ இப்பிடிக் குழம்பிறது தேவை இல்லாதது ரகு! சிந்து உன்ர பெஞ்சாதி! அவளைப் பற்றி இப்பிடி ஒருகணம் நினைச்சுப் பார்க்கிறதும் சரியான பிழை!’ அவன் மனசாட்சி விடுத்த எச்சரிக்கை ஓலைகளைப் பிடிவாதமாக நிராகரித்தவன், தேவையில்லாது தன் சிந்தனையைத் தட்டி விட்டுக் குழம்பித் தவித்தான்.
சிறிதுநேரக் குழப்பத்தின் பின், இதற்கு ஒரு முடிவு கட்டியே தீரவேண்டும் என்ற முடிவில் தயங்கிக்கொண்டே மனைவியை நோக்கியவன், ‘‘நான் ஒண்டு கேட்பன் கோவிக்காம பதில் சொல்வீரா சிந்து?’’ ஒருநாளும் இல்லாது தயக்கமாக அவன் குரல் வந்ததை உணர்ந்தாலும், இப்படி நீளமாகக் கதைத்திராதவனை, அதுவும், எதையோ கேட்கிறேன் கோபிக்க மாட்டாயா என்றேல்லாம் அனுமதி கேட்கிறானே என நினைத்த சிந்து, இறக்கை இல்லாது வானவீதியில் பறக்கத் தயாராகிக்கொண்டே, ‘‘ஒண்டில்ல நிறையவே…சும்மா தாராளமாக் கேளுங்க ரகு! நான் பதில் சொல்லூறன்!’’ மிக்க மகிழ்வுடன் சொன்னாள்.
அவன் கேட்டதற்கு அவளால் இதே மகிழ்வுடன் பதில் சொல்ல முடிந்ததா?

error: Alert: Content selection is disabled!!