நீயில்லாது வாழ்வேதடி 4 – 1

அத்தியாயம் 4.
கட்டிலில் குப்புறக்கிடந்து, குமுறி குமுறி அழுது கொண்டிருந்தாள் சிந்து! அவள் மனமோ, வேதனையுடன் உலைக்களமாகக் கொதித்துக்கொண்டிருந்தது!
‘என்னைப் பார்த்து எப்பிடி இப்படிக் கேட்க முடிஞ்சிது? அதுமட்டும் இல்லாம அடிக்கவும் செய்யிறாரே!’ மீண்டும் மீண்டும் சற்று முன் நடந்ததை நினைத்து வேதனையில் குழறியது அவள் மனம்!
‘உன்னை ஒன்று கேட்பேன், உண்மை சொல்ல வேண்டும்!’ என்ற பாவனையில் கணவன் வினவ, ‘ஏதோ என்னப்பத்தித் தெரிஞ்சு கொள்ள கேட்கப் போறார்! இவ்வளவு நாளும் இவர் இப்பிடியில்ல எண்டு தானே ஏங்கினம்!’ என மனமகிழ்ந்தவள், ‘‘சொல்லுங்கப்பா…என்ன தெரிய வேணும்?’’ தயங்கியவனைத் தூண்டினாள்.
அவனோ இலேசான தடுமாற்றம் இருந்தாலும், மனதில் வைத்துக் குழம்புவதை விட, கேட்டு விடுவதே மேலென்ற முடிவிலிருந்தானே!
‘‘இல்ல சிந்து, அது வந்து… நான் சுத்தி வளைக்காம நேராவே கேட்கிறன், வந்து…நீரும் கணேஷும் லவ் பண்ணினீங்களா? இல்ல இல்ல. அது வந்து, கணேஷ் உம்மை லவ் பண்ணினாரா? அப்பிடி ஏதாவது எண்டா என்னட்ட மறைக்கத் தேவையில்ல சிந்து!’’ தயங்கினாலும், அறிந்துகொள் என மனமிட்ட கட்டளையை தெளிவாகவே நிறைவேற்றினான்.
தன் மன உளைச்சலுக்கு அக்கணமே விடைகாணத் துடித்தவன், அச்சமயம் வேறெதையும் எண்ணிப் பார்க்கவில்லை. அவன் வாயிலிருந்து தெறித்து விழுந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் நெருப்பாகச் சுட, முள்ளாகக் குத்த, தவித்துத் துடித்துப் போனாள் சிந்து. கணவனிடமிருந்து இப்படியொரு கேள்வியைச் சற்றும் எதிர்பார்க்கவில்லையே அவள். விழிகள் சிவக்க, உதடுகள் துடிக்க, கொந்தளிக்கும் உள்ளத்தோடு விசுக்கென்று எழுந்தவள், பார்வையால் கணவனைச் சுட்டுப் பொசுக்கினாள்.
‘‘இப்ப என்ன கேட்டீங்க?” தீப்பார்வையோடு மனைவி கேட்ட விதத்தில் மனதுள் தத்தளித்துப் போனான், அவள் கணவன்.
“இல்ல சிந்து, கணேஷ்…உம்மை…” தடுமாறியவனை, அடங்கா ஆத்திரத்தோடு முறைத்தவள், “லவ்வா? நானா? கணேஷை! ம்ம்…” என்றவள் குரலில் வெளிப்பட்ட ஏளனத்தை, இதழ்களின் சுளிப்பும் விழி வீச்சும் தப்பாமல் அவனுக்கு உணர்த்தி நின்றன.
“இல்ல ரகு, தெரியாம தான் கேட்கிறன், எல்லாருமே உங்கட முதல் மனிசி போலவே இருப்பீனம் எண்டா நினைச்…’’ அவள் சொல்லி முடிக்க முன் விருட்டென்று எழுந்தவனோ, ‘‘என்னடி சொல்லுற?’’ கர்ஜனையுடன், அவள் பட்டுக்கன்னத்தில் தன் கரத்தை இடியாக இறக்கினான்!
அடிவாங்கியதில் அதிர்ந்து நின்றவள், மறுகணம் அவ்விடம் விட்டகன்று ஓடிச்சென்று கட்டிலில் விழுந்து நீண்ட நேரமாக அழுது கொண்டிருந்தாள். பெற்றவர்களுடன் இருக்கும் போது, அவர்களால் மிகவும் செல்லமாக வளர்க்கப்பட்டவள் சிந்து. அவர்கள் மறைந்த பின்னரும் சித்தியால் அன்பாகவே வளர்க்கப்பட்டாள். இதுவரை அவள் யாரிடமும் அடியோ, அவப் பெயரோ வாங்கியதில்லை! இன்றோ, தன்னவனின் சந்தேகக்கேள்வியும், அடியும் ஒன்றிணைந்து அவளை நிலை குலைய வைத்தது.
ரகுவிற்கோ, மனைவி ஏளனத்தோடு உதிர்த்த, ‘உங்கட முதல் மனிசி’ என்ற வார்த்தை துளியும் யோசியாது, ஆறிக்கொண்டிருந்த அவன் மன இரணத்தில் கூர் ஊசியாக ஆழக்குத்தி, தாங்கொணா வலியை ஏற்படுத்தியது. அதையும் மீறி, தான் செய்த காரி யம் முழுமையாக உறைக்க கூனிக்குறுகிப் போனான், அவன்.
‘‘ச்சே! ஏன் தான் நான் இப்பிடியெல்லாம் நடந்து கொள்ளுறனோ? கடவுளே! கேட்கக் கூடாததைக் கேட்டது மட்டுமில்லாம, கைநீட்டி…’’ முணுமுணுத்துக் கொண்டே தன் கரத்தைப் பார்த்தவனுக்கு, அதை எதிலாவது அடித்து உடைக்கும் ஆவேசம் எழுந்தது.
‘‘என்ன தெரிய வேணும் கேளுங்க!’’ என, ஆவல் கொப்பளிக்கக் கேட்ட மனைவியின் முகம் நினைவில் வர, வருத்தத்தில் துடித்தவனின் மனமோ, அடுத்த கணம் முறுக்கிக்கொண்டது.
‘அவள் செய்தது மட்டும் சரியா? அவளுக்கு இது போதாது! இன்னும் நாலு குடுத்திருக்க வேணும்! அதென்ன முதல் மனிசி? அப்படியெண்டா இவள் ஆர்? விசரி! தன்னையே தான் இப்பிடிச் சொல்லுறாளே!’ கோபத்துடன் சலித்துக்கொண்டவன், ‘‘நீ தான்டி, நீ மட்டும் தான் என்ர பெஞ்சாதி! முதல் கடைசி எல்லாம் நீதான்!’’ மெல்ல முனகிக்கொண்டே, உள்ளே எழுந்த வேதனையால் சிரசைக் கரங்களில் ஏந்திக்கொண்டு முன்புறமாகக் குனிந்தமர்ந்தான்.
சில நொடிகள்தான் சென்றிருக்கும், ‘தொம்…தொம்’ திடீரென்று அவன் முதுகில் சரமாரியான குத்துக்கள் விழ, விதிர்விதிர்த்துப் போய் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தவன், அளவிட முடியாத திகைப்புடன் இருக்கையை விட்டெழுந்தான்.
அதிர்ந்து போய் எழுந்து நின்றவன் முன்னால் வந்து நின்ற அவன் மனைவியோ, ‘‘இங்க பாருங்க, இந்த அடிக்கிற வேலையெல்லாம் என்னட்ட வச்சுக் கொள்ள வேணாம் சொல்லிப்போட்டன்! அடிச்சா வாங்கிக் கொண்டிருப்பன் எண்டா நினைச்சீங்க?” சீறினாள்.
“அதற்கு வேற ஆளப் பாருங்க! இன்னொருதரம் இப்பிடி நடக்க வேணும், அப்பத் தெரியும் நான் ஆர் எண்டு! அடிக்கிறாராம் அடிக்கிறார்!’’ கடகடவென்று பொரிந்து தள்ளியவள், அதிர்ந்து நின்றவனை கொஞ்சமும் பொருட்படுத்தாது, அதே வேகத்தில் அறைக்குள் சென்று மறைந்தாள்.

இதையெல்லாம் இன்று நினைத்துப் பார்க்கும் போதே ரகுவால் நம்பமுடியாமல் இருந்தது.
‘‘உண்மையிலயே அவள் ஒரு ராட்சசி தான்! ம்ம்..என்ர செல்ல ராட்சசி! அவள்ட இந்த வெளிப்படையான குணம் தான் என்னை என்ர கூட்டுக்குள்ள இருந்து வெளிய கொண்டு வந்திருக்கு!” தனக்குத்தானே சொல்லிக் கொண்டவன், ‘இண்டைக்கு இரவு எப்பிடியும் அவளோட கதைக்க வேணும்; அண்டைக்கு அப்பிடிக் கதைச்சதுக்கும் அடிச்சதுக்கும் மன்னிப்புக் கேட்க வேணும்!’ நினைத்துக் கொண்டவன், அதன் பின்னரே தன் வேலைகளில் மூழ்கினான்.
*****
“கண்ணச் சுழற்றிக்கொண்டு வருது! டிவியை ஓஃப் பண்ணிட்டு நீயும் போய்ப்படு சிந்து! நாளையிரவு பயணம் வேற செய்ய வேணுமே!” சொல்லிக் கொண்டெழுந்தார் லக்ஷ்மி.
“ம்ம்..படுப்பம், எனக்கும் நித்திர வருது, குட்நைட் சித்தி!” எழுந்து தன்னறைக்குள் புகுந்தவள், மறுநாளிரவு கொழும்பு செல்லப்போவதை நினைத்துக் கொண்டதும், ‘பத்து நாட்களுக்குப் பிறகு அவரைக் காணப்போறமே!’ என்ற, உவகையால் நிறைந்தவாறே படுக்கையில் சாய்ந்தாள்.
லக்ஷ்மியை கூடவே அழைத்துச் செல்வதற்காக மிகவும் கஷ்டப்பட்டே அவரது சம்மதம் பெற்றிருந்தாள், சிந்து. அவள் வந்து நின்ற இந்த சிலநாட்களுள், லக்ஷ்மி வைத்தியசாலையில் இருந்து வந்த பின், அவரைத் தன்னுடன் அழைத்துச் செல்வதால் வீட்டைப் பொறுப்பாகப் பார்த்துக்கொள்ள ஒரு குடும்பத்தை அமர்த்துவதிலிருந்து, சிறிது சிறிதாக ஒவ்வொன்றுக்கும் அங்குமிங்குமாக அலைந்து திரிந்து மிகவும் களைத்துப் போனாள், இவள்.
‘எது எப்பிடியிருந்தாலும் சித்திய என்னோட கூட்டிக்கொண்டு போக முடிஞ்சிதே, அதுவே போதும்!’ என்றெண்ணிக் கொண்டவளின் விழிகளில் உறைய முனைந்த உறக்கத்தைக் கலைத்து, அவளுள் புகுந்து, அவளை ஆட்கொண்டது அவள் கணவனின் நினைவுகள்!
இதழில் உதித்த மந்தகாச முறுவலோடு, தான் இங்கு வந்த அன்றிரவு நடந்ததை மீண்டும் மீண்டும் நினைத்துக் கொண்டாள், அவள்.
‘மனம் திறந்து பழகவே மாட்டாரா?!’ என, இவளை ஏங்க வைத்த அவள் கணவன், தன் மனக்கதவை திறந்த நாளல்லவா அது! அன்றைய அவன் பேச்சை அடிக்கடி நினைத்துப் பார்த்து நெஞ்சம் நிறைவதே இவள் வேலையாகிப் போயிற்று!
அன்று, லஷ்மியோடு அவன் கதைத்து முடிக்கும் வரை, வெளி வராந்தாவில் நடைபயின்று விட்டு வந்து சித்தியின் முணுமுணுப்பிற்கு ஆளாகியவள், “எடுத்துக் கதை சிந்து! தம்பி உன்னக் கேட்டவர்?” என்று, கண்டிப்பாகச் சொன்ன லக்ஷ்மியை முறுவலோடு நோக்கி, “வீட்டுக்குப் போய்க் கதைச்சுக் கொள்ளுறன் சித்தி!” மெல்லச் சமாளித்து விட்டாள்.
வீடு வந்த பின்னரோ, அவள் சுபாவத்தின் படி கணவனுக்கு அழைக்கத் துடித்த கரங்களையும், அதற்கு உறுதுணை செய்த கணவன் மீது நேசம் கொண்ட நெஞ்சையும், அதனதன் போக்கில் விட்டுவிடவில்லை, அவள். மிகவும் கஷ்டப்பட்டு தன்னைத் தான் அடக்கிக் கொண்டாள். அந்தளவுக்கு அவன் மீது மனஸ்தாபத்தில் இருந்தாளவள்.

error: Alert: Content selection is disabled!!