ஒரு கை தட்டி ஓசை எழுந்திடுமா? அல்லது ஓசையெழுமென்ற நம்பிக்கைதான் உருவாகிடுமா? எத்தனைக்குத்தான் நாமே அன்பையும் அக்கறையையும் மனதாரக் கொடுப்பது? அதை ஏற்றுக் கொள்பவர் புறத்திலிருந்து சிறு எதிரொலியேனும் இல்லையென்றால், அந்த அன்பின் மதிப்புத்தான் என்ன?
இவ்வாறு ஒரு எண்ணம் உருவாகிவிட்டால், கடமைக்காக, அன்பையும் அக்கறையையும் காட்டிட முடியுமா? அதிலும், சந்தேகம் சிறு பொறியாக பட்டு விட்டால், உயர்தரப் பட்டாகப் போற்றிப் பராமரிக்க வேண்டிய மணபந்தம் தான் கரிகிடாதா?
சித்தியின் சுகயீனம் கொஞ்சமே கொஞ்சமாக அவள் நெஞ்சக் கனத்தை மறக்கச் செய்து, அவள் சிந்தையை அவர்பால் திருப்பியிருந்தாலும், யாழ் வந்து சித்தியைப் பார்த்த பின், அதுவும், அவரை தன்னோடு அழைத்துச் செல்வதென தன்னளவில் உறுதி கொண்ட பின், கணவனின் வார்த்தைகளும் செய்கைகளும் இவள் நினைவில் சுழன்று சுழன்று அவன் மீதான கோபத்தை வெற்றிகரமாகத் தக்க வைத்துக் கொண்டன.
இருவரும் ஒன்றாக இருந்திருந்தால், இந்தளவுக்கு இவளால் கோபத்தை தக்க வைத்துக் கொள்ள முடியுமா என்று அவளுக்கே தெரியவில்லை. அவர்களுள் பிரச்சனை நடந்தபின் அவனோடு முகம் கொடுத்துக் கதைக்கவில்லைதான்; ஆனால், அந்நாட்களில் தன்னுள் தானே மிகவும் வருந்தினாள்; பலதடவைகள் அவனை நோக்கிச் சென்ற கால்களை கடிந்து கொண்டாள்; பேசத் துடித்த உதடுகளை அடக்கி அழுந்த மூடிக்கொண்டாள்.
அப்படியே யாழ் வந்திருந்தவள், திருமணம் செய்த நாளிலிருந்து கணவன் தன்னை அலட்சியம் செய்வதாகே முடிவெடுத்து விட்டாள். அதுவே, அவன் மீதிருந்த கோபத்தைத் தக்க வைக்கத் துணை புரிந்தது.
இப்படியிருக்க, அன்றிரவே மீண்டும் அழைத்தான் ரகு. அழைப்பது கணவன் எனத் தெரிந்தும், அழைப்பை ஏற்காது பார்த்திருந்தவள் விழிகளோ நீரில் தத்தளித்தன. அடுத்தடுத்து இருமுறைகள் அடித்து ஓய்ந்த கைபேசியோ பிடிவாதத்தோடு மீண்டும் அலறியது.
சட்டென்று இயக்கியவள், “ஹலோ! இப்ப உங்களுக்கு என்ன வேணும்? எனக்கு நித்திர வருகுது, தூங்கப் போறன்!” மறுகணம் அழைப்பைத் துண்டிக்க, அழைத்தவனோ அதிர்வோடு பார்த்திருந்தான்.
“அட! பிழை என்ர பக்கம் எண்டு சமாதானம் செய்யப் பார்த்தால் இந்தத் துள்ளு துள்ளுறாள்!” முணுமுணுத்துக் கொண்டவனுள், கோபத்துக்குப் பதிலாக இளநகையே அரும்பியது.
‘சின்னப்பிள்ள போல அவள் முறுக்கிக் கொள்ளுறத நேரில பார்க்க முடியேல்லையே!’ அவன் மனமோ ஏங்கியது. தன்னையே தான் மிகவும் வித்தியாசமாக உணர்ந்தான், ரகு. அவ்வுணர்வு தந்த இதத்தோடு ஒருவித பிடிவாதம் கலக்க மீண்டும் அழைத்தான்.
நித்திரை கொள்ளப்போகிறேன் தொந்தரவு செய்யாதே என்கின்ற பாணியில் அழைப்பைத் துண்டித்த பின்னரோ, சிந்துவின் மனம் கணவனையே சுற்றி சுற்றி வரத் தொடங்கியது.
“பாவம், பஸ்சில வரேக்கையும் எடுத்தவர், ஒண்டு ரெண்டு சொல்லுகளோட வச்சிட்டன். மத்தியானம், சித்தி கதைச்ச நேரமும் நான் கதைக்கேல்ல. இப்பவும்… ச்சா! அவரா எடுக்க எடுக்க நான் இப்பிடிச் செய்திருக்கக் கூடாதோ?” வாய்விட்டே சொல்லிக்கொண்டாள்.
மறுகணமோ, “இல்ல இல்ல! இதுதான் சரி; அண்டைக்கு என்ன எல்லாம் கேட்டவர்? பாவம் கணேஷ்! அவரையும் சந்தேகக்கண்ணோட எல்லோ பார்த்திருக்கிறார்? பச்…என்னை அடிக்கவேற செய்தாரே!” கணவனே தன் முன்னால் நிற்பதாக நினைத்துச் சத்தமாகக் கூறி முறைத்தாள்.
இவள், இப்படி மாறி மாறிக் குழம்பித் தவிக்கையில், மீண்டும் ரகுவின் அழைப்பு வந்தது. அவள் வலக்கரமோ, அவள் மறுத்தாலும் என்கின்ற பயத்தில் மின்னலெனப் பாய்ந்து அழைப்பை ஏற்றுக் கொண்டது.
“சிந்து சிந்து…சிந்தும்மா… ப்ளீஸ் மா…” ஹலோ கூடச் சொல்லாது அவசரமாகக் கத்தினான், ரகு.
“ஃபோன வச்சிராதேயும் சிந்து, ப்ளீஸ்! நான் சொல்லுறதக் கேட்டுட்டுப் பிறகு வையும்… சிந்து ப்ளீஸ்மா!’’ கெஞ்சினான்.
கணவன் குரல் கெஞ்சலுடன் வந்ததே சிந்துவை என்னவோ போல உணரச் செய்தது. அவள் விழிகள் மழுக்கென்று நீரைச் சுரந்தன. திருமணம் முடித்த இத்தனை மாதங்களில், இவன், இப்படி நெருக்கமாக அவளை விளித்துப் பேசியதில்லையே.
‘கறாராக மட்டுமே பேசவோ பழகவோ செய்பவன் நான்!’ என்று, தன் நடவடிக்கைகளால் சொல்லாமல் சொன்னவன், அவள் கணவன்.
அப்படியிருக்க, இன்றோ, முற்றிலும் புதியவனாகத் தெரிந்தான் அவளுக்கு! கணவன் எப்போதும் முறைப்பாக இருந்தாலும், கதைத்தாலும், அதையே அவள் இரசித்தாள் என்று தான் சொல்ல வேண்டும். அதுவே அவனுக்கு அழகு என நினைத்திருக்கிறாள்; அந்தளவுக்கு அவனை இவள் நேசித்தாள். இப்போதோ, அவன் குரலில் கெஞ்சல் ஒட்டிக் கொண்டிருக்கவும், மனம் குழைய அமைதி காத்தாள்.
அவளின் அமைதியைப் பொருட்படுத்தாது, தான் சொல்ல வந்ததைச் சொல்லிவிடும் நோக்கில் தொடர்ந்தான், அவளவன்.
‘‘சிந்து, அண்டைக்கு நான் அப்பிடிக் கேட்டதுக்கு என்னை மன்னிச்சுக் கொள்ளுடா ப்ளீஸ்! முதல், அப்பிடி உம்மப் பார்த்துக் கேட்டது பெரிய பிழை. அது அப்ப எனக்கு உறைக்கேல்ல. என்ர மனசில வந்த குழப்பத்தத் தெளிவு படுத்தவே விரும்பினன். மனசுக்குள்ள வச்சு குழம்பாமல் உம்மட வாய் வார்த்தைகளால தெரிஞ்சு கொள்ள விரும்பினன்.’’ சொல்லி நிதானித்தவன், “ஆனால், அதுக்கு நீர் என்ன வார்த்தை சொல்லிட்டீர்?! அது என்ன, அவள் என்ர மனிசியா சிந்து? அதும் முதல் மனிசி! என்ன கதை சிந்து அது? நீர் மட்டும் தான் என்ர மனிசி, முதலும் கடைசியும் நீர் மட்டுதான்!’’ சொன்னவன் குரலில், கடினமும் வேகமும் கலந்து வந்தது.
‘‘இனியொருமுறை இப்பிடிச் சொல்லிராதேயும்; என்னால அதைத் தாங்கவே முடியாது!’’ இப்போது குரல் இலேசாக நடுங்கியதோ!
கணவனின் கவலை நிறைந்த குரலை கேட்டவளோ, தான் அவன் மீது வளர்த்து வைத்திருந்த கோபமெல்லாம் பொசுக்கென்று மறைந்து போவதை துல்லியமாக உணர்ந்து கொண்டாள்.
‘‘அய்யோ…என்ன நீங்க! என்னட்டப் போய் மன்னிப்பெல்லாம் கேக்கிறீங்க! சரி சரி விட்டுத் தள்ளுங்க. என்ன கஷ்ட காலமோ, அண்டைக்கு அப்படி நடந்திட்டு; இனி அதைப் பற்றிக் கதைக்க வேணாம்!” ஒருவித அவசரத்தோடு வந்து விழுந்தன வார்த்தைகள்.
“நானும் தான் அப்பிடிக் கதைச்சிருக்கக் கூடாது. பிழைதான்…கோவிக்காதீங்க!’’ கெஞ்சலாகத் தொடர்ந்தாள்.
மனைவியின் அமைதியைச் சம்மதமாகக் கொண்டு படபடவென்று சொல்ல நினைத்தை உரைத்தவனோ, தன் மனைவியின் இயல்பில் கரைந்தான் என்றுதான் சொல்லவேண்டும். முதல் முதலாக நாட்கணக்கில் கட்டிப்பிடித்து வைத்திருந்த கோபத்தை, கணத்தில் அவள் உதறியவிதத்தில் அவன் நெஞ்சத்தில் குற்றவுணர்வு சுரந்தது.
‘அவள நான் கொஞ்சமும் புரிஞ்சு கொள்ள முயல இல்லயே; நிறையவே கஷ்டப்படுத்திட்டன்; இனிச்சரி அவளப் புரிஞ்சு நடக்க வேணும்.’ என்ற, அவன் எண்ணத்தைக் கலைத்தது அவள் குரல்.
‘‘ஆனாலும் ரகு…’’ மெல்ல நிறுத்தியவள், ‘‘நான் உங்களக் கலியாணம் செய்யும் வரைக்கும் எந்தத் தடியனையும் காதலிக்கேல்ல; அப்பிடி நினைச்சும் பார்க்கேல்ல; இனியொருதரம் உங்களுக்கு இப்படியொரு சந்தேகம் வரவே தேவையில்ல!’’ அவள் குரல் நடுங்கிக்கொண்டு வந்து விழுந்தது; கைகோர்த்து வழிந்தது விழிநீர்!
$$$$$அதைக் கேட்டவனோ, வெகுவாகத் துடித்துப் போனான்.
‘‘என்ன சிந்து திரும்பவும்? அண்டைக்கு ஏதோ ஒரு மனக்குழப்பம்! அதுமட்டுமில்ல, அந்தக் குழப்பமே என்ர முதல் அனுபவத்தால் வந்தது எண்டு வச்சுக் கொள்ளுமன். இனிமேல் அப்பிடி எல்லாம் நினைச்சும் பார்க்க மாட்டேன் மா! சொறி சிந்து, உண்மையாவே சொறி!’’ சொன்னவனின் நிலையையும் தவிப்பையும் இவளுக்கு உணர்த்தியது, அக்குரல்.
தன் விழிநீரை அழுந்த துடைத்துக்கொண்டே, ‘‘ம்ம்ம்…போனாப் போகுது விட்டுத் தள்ளுங்கப்பா!” சமாதானம் செய்தவளை, “அழுகிறீரா சிந்து?” அவளின் குரல் பேதத்தை உணர்ந்து விசாரித்தான்.
“ம்ம்..அழாம வேறென்ன செய்யிறதாம்? என்ர கடைவாய்ப் பல்லு ரெண்டு இங்க வந்த அண்டு விழுந்திட்டுத் தெரியுமா?’’ திடீரென்று சீறினாள் அவன் மனைவி.
‘‘என்ன? பல்லு விழுந்திட்டா? ஏன்? என்ன நடந்தது?’’ பதட்டமாக இடையிட்டது, அவன் குரல்.

