நீயில்லாது வாழ்வேதடி 4 – 3

‘‘ஆங்! ஏனா? எல்லாம் உங்கட கைங்கரியம் தான்! அண்டைக்கு அப்படி அடிச்சிட்டு, ஏன் எண்டா கேட்கிறீங்க? அதுக்காக இன்னுமொருதரம் மன்னிப்புப் கேளுங்க பார்ப்பம்!’’ பொய்யாக கோபம் காட்டி மிரட்ட, வாய்விட்டே பெரிதாக நகைத்தான் ரகு.
‘‘ஒரு கணம் பயந்திட்டன் சிந்து; எங்கயாவது விழுந்தெழும்பிட்டீரோ எண்டு நினைச்சிட்டன். மன்னிப்புத்தானே? எத்தனை தரம் வேணும் எண்டாலும் கேட்கத் தயார்.’’ சொல்லி, மீண்டும் நகைத்தவன் புதியவனாகத் தெரிந்தான் அவன் மனைவிக்கு!
“ரகு…. இது…. இது நீங்க தானே?” அவளையுமறியாது கேட்டே விட்டாள்.
அவள் கேட்டதன் பொருள் புரிந்தவன், “ம்ம்..நானேதான் சிந்து! எல்லாமே சகவாசதோசம்! இதெல்லாம் உடனே வேலை செய்யாது சிந்து, கொஞ்சம் கொஞ்சமாகத்தான் வேலை செய்யும்..ம்ம்..விளங்குதா?” கேலிக்குரலில் சொல்லி மீண்டும் நகைத்தான்.
‘இவர் இப்பிடிச் சந்தோசமா இருக்கேக்க அவருக்குப் பக்கத்தில நான் இல்லயே! அவர்ட சந்தோசத்தக் கண்ணால பார்க்கக் குடுத்து வைக்கேல்லையே!’ நினைத்ததும் ஏக்கப்பெருமூச்சு அவளையும் அறியாமல் வெளியேறியது!
‘‘என்ன சிந்து பெருமூச்சு பலமாக இருக்கு?” கேட்டவனுக்கு பதில் புரிந்தே இருந்தது. அவன் மனைவியும் பதில் சொல்ல முனையவில்லை. சிலநிமிடங்கள் இருவர் மூச்சுக்காற்றையும் அங்குமிங்கும் கடத்தும் வேலையை செவ்வனே செய்தது, அலைபேசி!
அந்த அமைதியின் கனத்தைத் தாங்க விரும்பாத ரகுதான் முதலில் மௌனத்தை கலைத்தான்.
“அது சரியம்மா, நான் ஒரு அடி அடிச்சன்; அதுக்கு எவ்வளவும் மன்னிப்பும் கேட்கத் தயார் எண்டு சொல்லியும் விட்டன். ஆனால்….’’ இலகுவாகச் சொல்லி நிறுத்தி, மீண்டும் அடக்கமாட்டாமல் நகைத்தவன், ‘‘தாங்க மறந்து போனீர்கள் என்று நினைக்கிறேன்!” நாடக பாணியில் ஆரம்பித்தவன், “அப்பப்பா! என்ர முதுகு புண்ணாகிப் போச்சு! ஒண்டா ரெண்டா? எத்தினை குத்துகள்? அம்மாடியோவ்! இப்பிடி மட்டும் இன்னுமொருதரம் நடந்துதோ, என்ர எலும்புக்கூடு நொறுங்கிப் போயிரும் சொல்லிட்டன்!’’ சொன்னவன் சிரித்த சிரிப்பில் தானும் மலர்ந்தாள், சிந்து.
‘‘சொறி சொறி ரகு! அண்டைக்கு வந்த கோவத்தில…’’ தயக்கமாகச் ஆரம்பித்தவள், ‘‘அந்தளவோட தப்பினதே எண்டு சந்தோசப்பட்டுக் கொள்ளுங்க!” மிரட்டல் விட்டாள்.
“எது தப்பியது சிந்து?” விளக்கம் கேட்டான் அவள் கணவன்!
“ஹா..ஹா..எல்லாம் உங்கட முதுகத்தான் சொல்லுறன்! உங்களுக்கு ஏதோ அண்டைக்கு நல்ல காலம் போல! ஆனால், எப்பவும் அப்பிடி இருக்காதப்பா…சொல்லிட்டன்!’’ கலகலத்துச் சிரித்தாள், அவன் மனையாள்.
‘‘சேர்…இனியொருதரம் அப்பிடி என்னட்ட வேண்டுற அளவுக்கு நடந்து கொள்ளாதீங்க சரியா?’’ அன்பாக எச்சரிக்கை விட்டவளை, உடனேயே பார்க்கும் ஆவல் ஏற்பட்டது, ரகுவிற்கு.
‘‘சிந்து…’’ கணவனின் குரல் அவள் சிரிப்பைத் தேக்கியது.
‘‘ம்ம்…’’ அவன் குரல் வேறுபாடே அவளை ‘உம்’ கொட்ட வைத்தது.
‘‘உம்மப் பார்க்க வேணும், அதுவும் உடனே!’’ என்றவனிற்கு, மௌனத்தையே மறுமொழியாகியவள், சிறு தாமதத்துக்குப் பின் ‘‘எனக்கும் தான் ரகு!’’ முணுமுணுத்தாள்.
அவன் மௌனத்தைப் பார்த்தும், ‘‘எப்பிடியும் பத்து நாட்களில அங்க வந்திருவன் ரகு!” என்றவள், “வரேக்க சித்தியையும் கூட்டிக்கொண்டு வரவா? இனி அவர் நம்மோட இருக்கலாமா ரகு?’’ பேச்சை மாற்றும் விதத்தில் துள்ளலோடு ஆரம்பித்தாள்.
‘‘இதென்ன கேள்வி சிந்து! உம்மட வீட்டுக்குச் சித்தியைக் கூட்டிக்கொண்டு வர என்ர அனுமதி எதுக்கம்மா?! மாமி இனி நம்மளோட இருக்கட்டும், நானும் மாமிட்ட அப்பிடித்தான் சொல்லி இருக்கிறன்; அவே மாட்டன் எண்டு சொன்னாலும் நீர் கூட்டிக்கொண்டு வாரும். பெரியவே கூட இருக்கிறதே உதவியும் ஆறுதலும் தானே!’’ இப்படியே, என்றுமில்லா மகிழ்வுடன் சிறிதுநேரம் வார்த்தையாடியவன், இலேசான மனதுடனும் மிகவும் தெம்புடனும் அலைபேசியை அணைத்தான்.
அன்றைய நினைவும் அதன் பின்னர் கைபேசி வாயிலாகவே தம்மிரு மனங்களிடையே ஏற்பட்ட நெருக்கத்தையும் நினைத்துக்கொண்டவள், மலர்ந்த வதனத்தோடு நித்திரை வசப்பட்டாள்.

அடுத்தநாள், விடிகாலை நான்கு மணிக்கே துயில் கலைந்தெழுந்தாள், சிந்து.
அன்றிரவு லக்ஷ்மியையும் அழைத்துக்கொண்டு கொழும்பு செல்லவிருப்பதால், என்னென்ன செய்ய வேண்டுமென மனதில் வரிசைப்படுத்திக்கொண்டே காலைக்கடன்களை முடித்துவிட்டு, தேநீர் தயாரிக்கவென சமையலறைக்குள் நுழைந்தவளின் கவனத்தை ஈர்த்தது, வீட்டின் முன் கேட்ட ஆட்டோ சத்தம்!
‘இந்த நேரத்தில நம்மட வீட்டுக்கு ஆர் வரப்போகினம்? பக்கத்து வீடுகளுக்கு ஆராவது வந்திருப்பினம்!’ நினைத்துக்கொண்டே தேநீருக்கான நீரை அடுப்பில் வைக்கவும், அவர்கள் வீட்டு முன்கதவு மெல்லத் தட்டுப் படவும் சரியாக இருந்து.
‘‘ஆரா இருக்கும்?! அதுவும் இந்த வெள்ளனக் காலேல!’’ முணுமுணுத்துக் கொண்டே சென்று, முன் யன்னல் திரைச்சீலையை மெல்ல விலக்கிப் பார்த்தவள், மறுநொடி, விழிகளிரெண்டும் வியப்பில் விரிய கணநேரம் அசைவற்று நின்றுவிட்டாள். அக்கணம், அவள் உடலெங்கும் உவகையின் உணர்வுகள் மின்னலெனக் கோலமிட, நம்பவே முடியாது, நயனங்களை இமைத்துத் தான் காண்பது நிஜமா என உறுதி செய்து கொண்டாள், அவள். மறுகணம், பாய்ந்து சென்று கதவைத் திறந்தவள், வெளியில் நின்ற கணவனையே இமைக்கவும் மறந்து பார்த்து நின்றாள்.
அவனோ, தன்னைக் கண்ட மகிழ்வை துளியும் மறைக்காது வெளிப்படுத்தி நிற்கும் மனையாளின் வதனத்தை நேசமுடன் விழிகளால் வருடியவன், ‘‘ஹலோ! வீட்டுக்கு வந்த மனிசர வா எண்டு உள்ளுக்குக் கூப்பிட மாட்டீர்களா?’’ ஏகத்துக்கும் மரியாதை துள்ளக் கேட்டான்.
அதற்கும் அசையாமல் நின்றவளின் மூக்கை செல்லமாகப் பிடித்துத் திருகியவன், ‘‘என்னடா சிந்து? அதுக்கிடையில அடையாளம் தெரியாத அளவுக்கு மறந்திட்டீரா? நான் ஆரெண்டு தெரியேல்லையா?’’ சோக இராகம் பாடினான்.
அப்போதுதான் தன் உணர்வுக்கு வந்தவள், ‘மறக்கிறதா? உங்களையா?’ மனதுள் வினவிக்கொண்டே, ‘‘உள்ளுக்கு வாங்க ரகு. என்ன நீங்க, நேற்றுப் பின்னேரம் கதைக்கேக்க இப்பிடி வரப் போறதாச் சொல்லவே இல்லயே! தெரிஞ்சிருக்க பஸ் ஸ்டாண்டுக்கு கணேஷ…’’ சொல்லிக்கொண்டு வந்தவள், நாக்கைக் கடித்துக்கொண்டே கணவனை தவிப்புடன் ஏறிட்டாள்.
அவள் சொல்ல வந்ததைப் புரிந்து கொண்டவன், ஏன் நிறுத்தினாள் என்பதையும் விளங்கிக் கொண்டதும், தன்னையே தான் நொந்து கொண்டான். தான் அன்று கதைத்தது அவள் மனதை விட்டு அவ்வளவு சீக்கிரம் மறையாதென்பதை உணர்ந்து கொண்டவன், தன் அன்பாலும் செய்கைகளாலும் அந்த வலி தரும் நினைவின் சுவட்டையே அழித்து விட வேண்டுமெனத் தீர்மானித்துக் கொண்டே, சிறு முறுவலுடன் மனைவியை ஏறிட்டவன், “என்ர மனசில இருந்து வேண்டாத குப்பைகள் எல்லாத்தையும் வழிச்சுத் துடைச்செறியத்தான் நானும் முயலுறன் சிந்து! நீரும் அதை மறந்திரும்! உம்மட புருசன் ஒண்டும் அந்தளவுக்குக் கெட்டவன் இல்ல!’’ எனச் சொல்ல, ‘‘அதில்ல ரகு…’’ தடுமாற்றத்தோடு இடையிட்டாள், சிந்து.
மனைவியை ஆதரவாகப் பார்த்தவனோ, “நாம கொழும்பு போக முதல் கணேஷ் வீட்டுக்கு ஒருக்கா போயிட்டே போவம் சரியா?’’ என்றான் கனிவாக.
அவனின் உள்ளம் திறந்த சிறு பேச்சால் மனம் நிறைந்த சிந்து, ‘‘ம்ம்..’’ என்று தலையாட்டியவாறே, ‘‘நீங்க போய் கைகால் அலம்பிக்கொண்டு வாங்கோ, தேத்தண்ணி போடுறன்!’’ என்றபடி சமையலறைப் பக்கமாகச் செல்லத் திரும்பினாள்.
அவளை எட்டிப் பிடித்து நிறுத்தியவன், அவளின் முகத்தையே உற்றுப் பார்த்துக்கொண்டு, ‘‘அத்தூரமிருந்து ஒருத்தன் விழுந்தடிச்சி வந்திருக்கிறான், அவனக் கவனிக்கிறதை விட்டுட்டு, தேத்தண்ணிதான் இப்ப முக்கியமா? இதெல்லாம் உமக்கே சரியாகப்படுதா சொல்லும் பார்ப்பம்!’’ கூறியவாறே மனைவியை இழுத்துக்கொண்டு அருகிலிருந்த அறைக்குள் நுழைந்தான் .
அவன் செய்கையில் முற்றாக அதிர்ந்தவளோ, கணவனையே ஆச்சரியமாகப் பார்த்தாள். தன் சிறுபிரிவு அவனைத் தன்பால் இழுத்துள்ளது என்று புரிந்து உள்ளம் துள்ள, ‘‘அய்யோ என்ன ரகு நீங்க, சித்தி முழிக்கிற நேரம்!” எனச் சிணுங்கியதெல்லாம் அவள் கணவன் செவிகளில் நுழையவே இல்லை.

error: Alert: Content selection is disabled!!