நீயில்லாது வாழ்வேதடி 5 – 1

அத்தியாயம் 5.

கடற்காற்று முகத்தில் மோத, வேகநடை பயின்று கொண்டிருந்தார் சதாசிவம். ஓய்வு பெற்ற கஸ்டம்ஸ் டைரக்டரான இவர், வீட்டில் ஓய்ந்திருப்பதை எப்போதுமே விரும்புவதில்லை. தினமும் அதிகாலையில், வெள்ளவத்தை ஹம்டன் லேனிலுள்ள தம் வீட்டிலிருந்து கடற்கரை நோக்கிப் புறப்பட்டு, கடலைன்னையோடு உரையாடியபடி நடைபயில்வதை பெரிதும் விரும்புவார், இவர்.
சில்லென்ற காற்று உடலில் மோத, விரைந்து நடந்தவரின் உடலோ புத்துணர்வில் குளித்திருந்தது. அதற்கு நேர்மாறாக, அதைச் சிறிதும் உணரவோ, அனுபவிக்கவோ அடியோடு மறுத்து அடம் பிடித்தது அவருள்ளம்.
கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக அவருள்ளத்தை அழுத்தும் சுமையின் கனம், நாட்கள் செல்ல செல்ல அதிகரித்துள்ளதேயொழிய சிறிதும் குறையக் காணோமே!
என்றும் போல் இன்றும், தான் கடந்து வந்த காலம் அவர் மனதில் திரைப்படமாக ஓடியது. வீட்டின் தலைமகனாக, சிறுவயதிலேயே தன் தோள்களில் விருப்பமாக ஏந்திக்கொண்ட குடும்பப் பொறுப்புகள்! இவற்றிலிருந்து மீளும் முன்னரே, “காலா காலத்தில் நடக்க வேண்டியதை முறையாச் செய்ய வேணும் தம்பி!” என்ற பீடிகையுடன், இவரின் திருமணம் பற்றிப் பேச்செடுத்தார் அன்னை.
‘மனைவியாக வருபவளால் என்ர குடும்பத்த அனுசரிச்சுப் போக ஏலுமா? என்ர தம்பி தங்கச்சிகளுக்கு உதவி, அவேக்கு நல்ல வழி காட்ட உதவுவாளா?’ என்ற இவரின் கவலைகளை, இருந்த இடம் தெரியாது போக்கினார் இவரின் தர்மபத்தினி.
கணவன் சொல்லே அவருக்கு வேதம்! பிறகென்ன? கடும் உழைப்பால் தானும் உயர்ந்து தன் சகோதரர்களையும் வாழ வைத்தவர், தன் இரு பெண் குழந்தைகளையும் நற்பண்புடனேயே வளர்த்தார். அல்லது ‘அப்படிதான் வளர்த்தேன்!’ என நம்பி, ஏமாற்றமடைந்தாரா?
மூத்தமகளிற்கு பொருத்தமான இடத்தில் திருமணம் பேசி, அவள் வாழ்க்கை நன்றாக அமையும் எனப் பெருமிதம் கொண்டிருந்த வேளையில், அவளது செய்கையில் நிலைகுலைந்தது, அக்குடும்பம்!
இத்தனை காலமும், ‘எப்பாடுபட்டாவது எல்லாவற்றையும் நேர்மையாக செய்து முடிப்பவன் நான்!’ என, இறுமாந்திருந்த அக்குடும்பத்தலைவனது நிமிர்வும் மரியாதையும் அங்கே கேள்விக்குறியானது.
அக்குடும்பம் பேணிப் பாதுகாத்த கௌரவமோ, அங்குமிங்குமாக குட்டுக்களை, அடிகளை வாங்கி பலத்த காயங்களுக்குள்ளானது.
இவை எதுவுவே அவர் மகளின் கருத்தில் பதியவில்லையே! தன் செய்கையால், தங்கையின் வாழ்வே கேள்விக்குறியாகிட வாய்ப்புகள் உள்ளதென்பதையும் அவள் சற்றும் எண்ணிப் பார்க்கவில்லையே!
வருத்தும் என்று அறிந்தே கடந்தவற்றை நினைத்தவர் இயலாமையோடு பெருமூச்செறிந்தார்.
”மாற்றம் ஒன்றே மாறாதது! ஆனால், எங்கட வீட்டு நிலையில் மூணு வருசங்களுக்கு மேலா எந்தவித மாற்றமும் இல்ல! போதாக்குறைக்கு சின்னமகள் இப்பச் சொல்லுறதோ!” வேதனையோடு முணுமுணுத்துக்கொண்டார்.
தன் பிள்ளைகளிற்கு முழுச்சுதந்திரம் கொடுத்து, அதை எப்படி நல்வழியில் பயன்படுத்த வேண்டும் என்றும் நற்தந்தையாய் வழிகாட்டினார். ஆனால் நடந்ததோ, ‘மூத்தவள் தான் அப்பிடிச் செய்தாள் எண்டால், இப்ப சின்னவள் செய்திருக்கிற வேல?’ சதாசிவத்தால் தொடர்ந்து யோசிக்க முடியவில்லை.
”இதுக்கெல்லாம் முடிவுதான் என்ன? என்னால என்னத்தச் செய்ய ஏலும்!” வாய்விட்டு அங்கலாய்த்தவாறே, வீட்டை நோக்கித் திரும்பி நடக்கத் தொடங்கினார் அவர்.
இதேநேரம், ஹம்டன் லேனிலுள்ள சதாசிவத்தின் வீட்டுமாடியில் தன்றையில் துயில் கலைந்த இந்திரஜா(இந்து) படுக்கையை விட்டெழாது மணியைப் பார்த்தாள். ‘அப்பா நடக்கப் போயிருப்பார், என்னாலும் அவருக்கு மனவேதனை! நானும் தான் வேறென்ன செய்ய?’ நினைத்தவாறே சிறிது நேரம் படுத்திருந்தவள், போட்டி போட்டுக் கொண்டெழுந்த நினைவலைகளை கண்டிப்போடு அழுத்தி அடக்கிவிட்டாள்.
“காலமகாட்டி வேதனை வேணவே வேணாம். ரதி கடைக்குப் போக வரச் சொன்னாள், போய்ட்டு வந்து வேலைக்குப் போகச் சரியா இருக்கும்.’ என்ற முடிவுடன் எழுந்து, குளியலறைக்குள் சென்று மறைந்தாள்.
இவள், தன் முகாமைத்துவ(மானேஜ்மென்ட்) பட்டப்படிப்பைத் தொடரும் போதே, ‘இலங்கை பட்டயக் கணக்காளர்(ஸ்ரீலங்கன் சார்ட்டட் அகௌன்டன்ஸ்)’ தேர்வுகளையும் எடுத்து வந்தாள். அப்போதிருந்தே தந்தையின் நண்பர் நடத்தும் நிறுவனத்தில் பகுதி நேரமாக வேலையும் செய்து வந்தாள். இப்போது பல்கலைப்படிப்பு முடிந்து விட்டது. கணக்காளர் பரீட்சையின் இறுதிப்பகுதியும் எழுதிவிட்டால், முழுநேரமாக வேலை தருவதாக அவளின் நிறுவனத்தில் கூறி இருக்கின்றனர்.
தாய் தந்த தேநீரை அருந்தியபடியே அன்றைய ‘டெய்லி நியூஸ்’ பத்திரிகையைப் புரட்டிக் கொண்டிருந்தாள் இந்திரஜா.
”எத்தனைக்கம்மா கடைக்குப் போக வேணும்?”
“மஜெஸ்டிக்சிட்டிக்கு’ போய்ட்டு பிறகு ‘பெட்டா’ போவம் எண்டாள் ரதி, ஒரு ஒன்பதரை போல இங்க இருந்து வெளிக்கிடுவன் மா.” என்று, சொல்லிக் கொண்டிருக்கையில் வீட்டினுள் நுழைந்தார் சதாசிவம்.
தந்தையை முறுவலுடன் எதிர்கொண்டாள் இந்து. ”மோர்னிங்பா, நடந்திட்டு வாறீங்களா?”
“மோர்னிங் மா, ஓம் டா!” என்றவாறே அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்து கொண்டவர், ”கனகம், எனக்கும் ஒருகப் டீ தாறீங்களா?” மனைவியிடம் கேட்டவர், “சொப்பிங் போகப் போறதா அம்மா சொன்னார் மா, அலைஞ்சு திரியாம நேரத்தோடு போயிட்டு வாங்க! பிறகு வேலைக்கும் போக வேணும்தானே?” என்றதும், “ஓம், போய்ட்டு நேரத்துக்கே வந்திருவன் பா!” என்றவள், கையிலிருந்த பத்திரிகையை தந்தையிடம் கொடுத்துவிட்டு, புறப்படுவதற்காக மேலே சென்றாள்.
காலை உணவை உண்டபின் புறப்பட்டவள் வெள்ளவத்தை சந்தையடியில் காத்திருந்த தோழி ரதியுடன் சேர்ந்து பஸ் எடுத்து ‘மஜெஸ்டிக்சிட்டி’க்கருகில் இறங்கிக்கொண்டனர்.
தன் உக்கிரத்தை காட்டிக் கொண்டிந்த பகலவனிடமிருந்து தப்பி, அளவலாவியவாறே ‘மஜெஸ்டிக்சிட்டி’க்குள் நுழைகையில் இந்துவின் பார்வையில் தற்செயலாகப்பட்டான், அவன். ஓரமாக நின்று அவளையே கூர்மையாகப் பார்த்திருந்தவனைக் கண்டதும், அடுத்தநொடி நடையை மறந்து, ஸ்தம்பித்து அவ்விடத்திலேயே நின்றுவிட்டாள், இந்து.
”எத்தின நாளாச்சு இவரைக் கண்டு?” அவளிதழ்கள் மெல்ல முணுமுணுத்துக்கொண்டன. விழிகளோ, மெல்ல மெல்ல நீரில் மிதக்கத் தொடங்கின.
இவர்களின் வரவை எதிர்கொண்டு நின்றவனின் பார்வை உறைத்ததும், சட்டென்று அருகில் நின்ற தோழியை முறைத்தாள் இந்து. அவள் பார்வையை ஒரு முறைப்புடன் ஏற்ற ரதி, தோழி கோபமாக ஏதாவது சொல்லமுன் தான் முந்திக் கொள்ளும் வகையில், ”என்னடி அப்பிடிப் பார்க்கிற? இல்ல தெரியாமல்தான் கேட்கிறன்!” முறைப்புடன் ஆரம்பித்தாள்.
“உங்கள் ரெண்டு பேருக்கும் இந்தக் காதல் தேவை தானா? பொல்லாத காதல்! அவனவன் காதலிக்கிறன் எண்ட பெயரில என்னவெல்லாமோ செய்ற இக்காலத்தில, நீங்க பண்ணுற அலட்டல், அப்ப்பா! என்னால தாங்கவே முடியேல்லடி!” சலிப்பும் கேலியுமாகத் தொடர்ந்தாள்.
நண்பிகள் இருவரும் கதைத்துக்கொண்டு, இல்லை இல்லை ஒருவரை ஒருவர் கடித்துக் கொண்டிருக்கையில் இவர்களை நெருங்கினான் ரமேஷ். நான்கு வருடங்களுக்கு முன், இந்துவின் இதயத்தை உரிமையாக்கிக் கொண்டவனும் இவனே! விதியின் சதிச் செயலோ, இவள் தமக்கையின் நடவடிக்கை தந்த பரிசோ, இக்காதலர்களின் காதலுணர்வு இருவருள்ளும் ஆல்போன்று செழித்தாலும் ஒருவர் ஒருவரை சந்தித்துக் கொள்ளவோ தொலைபேசியில் உரையாடவோ இருவரும் முனையவில்லை.
“ஹாய் ரதி, எப்படி இருக்கிறீர்?” விழிகளோ, இந்துமீது படிந்திருக்க, தம்மிருவருக்கும் பொதுவான தோழியிடம் நலம் விசாரித்தான், ரமேஷ்.
பின், ”எப்பிடி இந்து இருக்கிறீர்?” சாதாரணமாகக் கேட்க நினைத்தவனுடன் குரல் ஒத்துழைக்காததில், உள்ளத்தின் வேதனை மிகையாகவே வெளிப்பட்டது.
”ம்ம்…நல்லா இருக்கிறன்…நீங்க?” என்ற தோழியின் கலங்கிய விழிகளை நோக்கிய ரதி, ” ஹேய் ரமேஷ்! நீர் எப்பிடி இருக்கிறீர்? பார்த்து மூணு, நாலு மாசங்கள் இருக்குமே! இப்ப, உங்கட கடையிலா வேல செய்றீர்?” என்று, கலகலப்பாகக் கதைக்கத் தொடங்கினாள்.
இவர்கள் மூவரும் ஒன்றாக, ஒரே பிரிவில் பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள். ரமேஷ், இந்து காதல் விடயத்தை அறிந்தவளும் இவள் மட்டுமே! இரு குடும்பங்களுக்குமிடையில் நடந்த பிரச்சனைகளையும் ரதி அறிவாள். எப்பாடுபட்டாவது தன் நண்பர்கள் இருவரும் வாழ்வில் இணைய வேண்டும் என்கின்ற ஆவலில், “முக்கிய விசயமா இந்துவச் சந்திக்க வேணும் ரதி.” இப்படி, உன்னால் உதவ முடியுமா என மறைமுகமாகக் கேட்ட ரமேஷிடம், தாம் கடைக்கு வருவதைக் கூறி அவனையும் வரவைத்தாள், இவள்.
அவர்கள் இருவரும் கதைக்க வேண்டியதைப் கதைத்துக் கொள்ளட்டும் என நினைத்தவள், ”நான் மேல சல்வார் கடையில நிற்கிறன், கதைச்சிட்டு வா இந்து! ” என்றபடி, இந்துவின் பதிலுக்குக் காத்திராது நகர்ந்து விட்டாள்.
ரதி அப்பால் நகர, இந்துவின் வதனத்தையே ஆராய்ந்தது ரமேஷின் பார்வை. “காதலிச்சம் தான்! ஆனா, அந்தக் காதலுக்கு அவ்வளவு நீண்ட ஆயுள் இல்ல போல!” இவர்கள் பிரிந்த அன்று, கன்றிச் சிறுத்த முகத்தோடு ஆரம்பித்தான் ரமேஷ்.
“தெரியும் ரமேஷ்! அதுக்கு எனக்குக் கொஞ்சமும் அருகதையுமில்ல. இனி நாம ஒண்டு சேருறது சாத்தியமில்ல எண்டதும் எனக்கு நல்லாவே தெரியும்!” முகம் கன்ற கூறிய இந்து, அதன்பின், ஒன்றாகப் படித்த போதும் அவனை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.

error: Alert: Content selection is disabled!!