அத்தியாயம் 6.
பலத்த காற்று, இடியோடு மழை கொட்டிக் கொண்டிருந்தது. வெளிப்புறத்தில் கவிந்திருந்த இருளைக் கிழித்துக்கொண்டு, பாதையோர மின்விளக்குகளும் வீடுகளின் வெளிச்சங்களும் ஒளிர்ந்து கொண்டிருந்தன!
கொட்டும் மழைக்கொதுங்கி தம் வீட்டின் மாடி பால்கனியில் நின்றவாறே இருள் சூழ்ந்த வெளியை வெறித்துக் கொண்டிருந்தான், ரமேஷ்.
சுழன்றடிக்கும் காற்றின் குளிரும், கண்ணைப் பறிக்கும் மின்னலும், காதைக்கிழிக்கும் பேரிடியும், கொட்டும் மழையும், அவன் கவனத்தைத் தம்பால் ஈர்க்க முடியவில்லையே என்கின்ற ஆதங்கத்தில் ஆக்ரோசமாகச் செயல்பட்டன. இவற்றை உணராத அவன் விழிகளோ, இலக்கின்றி இருளை வெறித்த வண்ணமிருந்தன! மனமோ, வேதனையில் கசங்கிக் கிடந்தது!
தன்னவளை, அவள் பார்க்காத தருணங்களில் வெவ்வேறு இடங்களிலிருந்து அடிக்கடி கண்டிருந்தாலும், மூன்று நான்கு மாதங்களின் பின் இன்று அருகில் பார்த்ததும், அவளுடன் சிறிது நேரமேனும் கதைத்ததும் அவன் மனதில் சந்தோசத்தை ஏற்படுத்தினாலும், அவளின் துயர முகமே மீண்டும் மீண்டும் நினைவுகளில் உலா வந்து அச்சந்தோசத்தையும் அழித்துத் தாங்கொணாத் துயரையும் ஏற்படுத்தியது.
ஓராயிரம் தரத்திற்கு மேல், திரும்ப திரும்ப வினவியதையே அவன் மனம் இன்றும் வினவியது. ‘உன்னை ஏன் சந்திச்சன்! காதலிச்சன்! இப்பிடிக் கையாலாகாத் தனத்தோட வருத்தவா?’ என, அவன் மனம் ஓங்கிக் குரலெடுத்து ஓலமிட்டது!
நான்கு வருடங்களுக்கு முன், பல்கலைக்குச் சென்ற இரண்டாவது நாளன்று, நண்பர்கள் சிலருடன் விரிவுரை மண்டபத்திற்குச் சென்று கொண்டிருக்கையில், தன் பெயர் சொல்லி அழைத்தவாறே ஓடிவந்த பெண்ணொருத்தி அவன் முன் நின்று, “ஐ லவ் யூ ரமேஷ்! என்னைக் கலியாணம் செய்து கொள்ளுறீங்களா?” என வினவ, முதலில் அதிர்ந்து விழித்தான், இவன்.
பின், அப்பெண் மிகுந்த பதற்றத்துடனும் கலக்கத்துடனும் நிற்பதைப் பார்த்து ‘ராகிங்’ என்பதையுணர்ந்து கொண்டவன், சிறு தலையசைப்புடன் அவ்விடம் விட்டகல, அவர்களுக்கான பாட விரிவுரையாளரும் அவ்விடத்தால் வர, அப்பெண்ணும் தூரத்தில் நின்ற சிரேஸ்ட மாணவர்களைத் திரும்பி திரும்பிப் பார்த்த வண்ணம் இவர்களுடன் இணைந்து கொண்டாள்.
இந்நிகழ்ச்சிக்குப் பிறகு, தன் பிரிவிலிருக்கும் அவளையும் அவளது தோழியையும் கண்டு அவ்வப்போது கதைப்பதில் தொடங்கிய இவர்களது நட்பு, காதலில் வந்து நின்றது! இருவர் வீட்டிலிருந்தும் இவர்கள் காதலை எதிர்ப்பதற்கு ஏதுமில்லாததால் வீட்டினருக்குச் சொல்லாவிடினும், இவர்கள் காதல் தன்பாட்டில் வளர்ந்து கொண்டிருந்தது.
இவை எல்லாம், சில மாதங்களில் ஏற்பட்ட ஒரு பேரிடியின் மூலம் சடுதியில் நிறுத்தப்பட்டது. ஒருநாள், தன் தமக்கையை பெண் பார்க்க வருகிறார்கள் என்ற இந்து, தானும் விரிவுரைக்கு வரவில்லை. பின், பதிவுத்திருமணம் செய்யவிருப்பதாக அவள் கூறிய பொழுது தான் அம்மாப்பிள்ளையே தன் தமையன் என இவனுக்குத் தெரிய வந்தது.
தமையனுக்குப் பெண் பார்த்துப் பதிவுத்திருமண ஆயத்தம் நடப்பது தெரிந்திருந்தாலும், அப்பெண் இந்துவின் அக்கா என்பது அவனுக்குத் தெரியாது. இப்போது தெரிந்து கொண்டதும், இருவரும் மட்டற்ற மகிழ்வடைந்தனர்.
பதிவுத்திருமணத்தின் பின், கடைகள், கோவில் என்று தமக்கை தன் வருங்காலக் கணவரோடு செல்லும் போதெல்லாம், தமக்கையின் வற்புறுத்துதலில் இந்துவும் கூடச் சென்றாள். இது தொடரவே, அவர்கள் இருவராக வருவதால், ரமேஷின் அண்ணனும் இவனை அழைத்துச் சென்றான். ஏற்கனவே ஒருவர் ஒருவரை விரும்பிக் கொண்டிருந்தவர்களுக்கு, இது ஒன்றும் கஸ்டமான காரியம் அல்லவே! அப்படியான பொழுதுகளை மகிழ்வோடு எதிர்பார்த்திருக்கத் தொடங்கினர் இருவரும். அவ்வாறு அமையும் பொழுதுகளை, சிறுசிறு தருணங்களை, அற்புதமாக இரசிக்கவும் தொடங்கினர்.
இந்த மகிழ்வும் ஒருநாள் சடுதியில் முற்றுப் பெற்றது; அதுவும், இனிமேல் தொடராது என்கின்ற முடிவோடு!
இந்துவின் அக்கா செய்த சுயநலச்செயல், அது ஏற்படுத்திய காயம், இன்னமும் இரணமாக நின்று இவர்களை வருத்துகின்றதே! இருபகுதி பெற்றவர்களும் ஆறாத மனவருத்தத்துடன் இருப்பதால், தாமும் அவர்களை வருத்தக்கூடாதென இதுவரை இருந்தவனை, தந்தை தன் திருமணத்திற்குப் பெண் பார்த்துள்ளார் என்ற செய்தி, நிலைகுழைய வைத்தது மட்டுமன்றி, வீட்டிலே கட்டாயமாகப் பேச வேண்டிய நிர்ப்பந்தத்தையும் ஏற்படுத்தியது.
‘ ‘உங்கட பிரச்சனைகளுக்கு முதல் இருந்தே ரமேஷ விரும்புறன். என்னால வேற ஒருவரைக் கலியாணம் செய்ய முடியாது. கலியாணம் எண்டது என்ர வாழ்க்கையில இல்லையெண்ட நிலைவந்தாலும் இந்த முடிவு மாறாது’ என, இந்து தன்ர தகப்பனிட்டத் துணிஞ்சு சொன்னது போல, என்னால என்ர வீட்டில சொல்லிர ஏலுமா? அதுக்கான தைரியம்தான் என்னட்ட இருக்கா?’ நினைத்தவுடன், மனதில் சோர்ந்து போனான், ரமேஷ்.
பெற்றோரும் தமையனும் இந்துவின் குடும்பத்தில் கொண்டுள்ள வெறுப்பை அறியாதவனா இவன்? அதில் தவறு இருப்பதாகவும் இவன் உணரவில்லை. ஆனால், ‘இப்பிடியெல்லாம் நடக்கும் எண்டு எனக்கு முதலே தெரியுமா என்ன? ரெண்டு குடும்பங்களுக்கும் இடையில மனஸ்தாபம் வந்த பிறகா நான் அவளை விரும்பினன்; இல்லையே!’ தன்னுள் தான் தவித்தவன் நினைவில், சட்டென்று தோன்றினாள் அவன் அண்ணி சிந்து.
“ஓம்! அண்ணியால மட்டும் தான் எனக்கு உதவ முடியும். எப்பிடியிருந்த அண்ணனையும், அப்பா, அம்மாவையும் மாற்றிச் சந்தோசச் சூழல வீட்டில கொண்டு வந்தார்! அப்பாவுக்கும் அண்ணி எண்டா நல்ல விருப்பம்! மறுவார்த்த கதைக்கிறது இல்ல! அதனால நம்மட விசயத்தையும் அண்ணிண்ட கையிலயே ஒப்படைப்பம்!” என முடிவெடுத்தவன், தன் முடிவை இந்துவிடம் சொல்வதற்காக, நீண்ட இடைவெளியின் பின் அவள் கைபேசிக்கு அழைத்தான்.
இரவு, அலுவலகத்திலிருந்து வீட்டிற்குப் புறப்பட்ட இந்து, ”எப்பிடித் தாத்தா இருக்கிறீங்க?” கேட்டுக்கொண்டே, அலுவலக வாசலில் காத்திருந்த ஆட்டோவில் ஏறினாள்.
தெரிந்த, நம்பிக்கையான, அவ்வயோதிப ஓட்டுனரும் கதைத்துக்கொண்டே ஆட்டோவை எடுத்தார். சிறிது தூரம் வரை அவருடன் கதைத்துக்கொண்டு வந்தவளின் வாய் அளவளாவினாலும் மனமோ குழம்பித் தவித்தது! காலையில் ரமேஷை சந்தித்ததையும், அவன் கூறியதையும் அசைபோட்டுக்கொண்டே வந்தது. இப்படியே வீடு வந்து சேர்ந்தவளை, வாசலில் காத்திருந்து வரவேற்றார் அவள் அன்னை.
”இப்ப ஏனம்மா மழைக் குளிரில நிற்கிறீங்க? நான் என்ன சின்னப் பிள்ளையா?” கடிந்து கொண்டவாறே உள்ளே வந்தவளின் வாடிக் கசங்கியிருந்த முகத்தைப் பார்த்த தாய், ”இண்டைக்கு ஒரே அலைச்சல் என்னம்மா? போய்க் குளிச்சிட்டு வா சாப்பிடலாம்!” என்றார், கரிசனையாய்!
”சரியம்மா…” என்வாறே, மேலே செல்லும் மகளைப் பார்த்த தாயின் உள்ளத்திற்குத் தெரியாதா தன் மகள் படும் வேதனை! அப்படியிருந்தும், அதனைத் தீர்க்கும் வழிதெரியாது தவிக்கின்றன, அவளைப் பெற்ற உள்ளங்களிரெண்டும்!
இரவுணவுக்குப் பின் பெற்றவர்களுடன் சிறிது உரையாடிவிட்டு, நித்திரைக்காக வந்து தன் படுக்கையில் சாய்ந்தவளை, பல்கலை வாழ்வும், அது பரிசளித்த காதல் நினைவுகளும் சூழ்ந்து கொண்டு ஆட்டிப் படைத்தன!
‘சமுத்திரத்தில கரை தெரியாமல் தத்தளிக்கிறவையிண்ட நிலையில தான் எங்கட காதலும் இருக்கு!’ என நினைத்தவள், என்றும் போல் இன்றும் தன் பல்கலைக்கழகப் புகைப்பட அல்பத்தை எடுத்து, அதில், அநேக படங்களில் தன்னருகில் நிற்கும் தன்னவனுடன் மெளனமாக உரையாடத் தொடங்கினாள்.
அப்போது அவள் கைபேசி அழைக்கவே, ”ஆர் இந்த நேரத்தில? ரதியோ!” நினைத்தவாறே எடுத்து, ரமேஷ் அழைத்திருப்பதைப் பார்த்துவிட்டுச் சிறிது நேரம் அப்படியே இருந்தாள். பலமாதங்களின் பின்னர் வரும் அவன் அழைப்பு, அவள் உள்ளத்தை நிச்சயம் துள்ளச் செய்தது என்பதில் ஐயமில்லை. அதோடு இணைந்து ஒருவகை பதை பதைப்பும் அவளை ஊடுருவியது.
‘என்ன இந்த நேரத்தில எடுக்கிறார்!? வீட்டில ஏதும் பிரச்சனையோ! எங்கட விசயத்தைச் சொல்லிட்டாரோ!’ பதை பதைப்புடன் கதைக்கத் தொடங்கியவள், அவன் சொன்னதைக் கேட்டவுடன் மௌனம் காத்தாள்.
”இது சரியா வருமா ரமேஷ்? உங்கட அண்ணி நமக்காகக் கதைப்பாரா? முதல் அவர்…அவர்…நம்மட விசயத்தை ஏற்றுக் கொள்வாரோ?” சிறிது நேரத்தின் பின் நம்பிக்கையற்ற குரலில் வினவினாள்.
அதற்கு அவன் சொன்னதைக் கேட்டவள், ”சரி வாறன்.” என்றபடி கைபேசியை அணைத்தாள்.
அவள் அறையின் அருகில் தான் பெற்றவர்களின் அறை. ‘இங்க இருந்து கதைக்கிறது அவேக்குக் கேட்கவும் கேட்கலாம்; ஏன் தேவையில்லாத பிரச்சினை!’ என, நீண்ட நேரம் தொலைபேசியில் கதைப்பதை தவிர்த்தவளின் மனமோ, “நம்மட விசயத்தை வீட்டில கதைக்கிறதுக்குச் சரியான ஆள், என்ர அண்ணி தான்!” என்றும், “நாளைக்கு நாம் ரெண்டு பேருமாச் சேர்ந்து போய் அவவைப் பார்ப்பம்!” என்றும், ரமேஷ் சொன்னதையே நினைத்தது.

