அத்தியாயம் 7.
இரவுணவைத் தயாரித்துக் கொண்டிருந்தாள், சிந்து. அரிசிமாப் பிட்டும், நெத்தலிப்பொரியலும், இடித்த தேங்காய்ச்சம்பலும் என்றால் அவள் கணவன் மிகவும் விரும்பி உண்பான். கரங்கள் அவற்றைத் தயாரிப்பதில் ஈடுபட்டிருக்க, அவள் சிந்தையோ, மாலை ஐஸ்கிரீம் கடையில் நிகழ்ந்தவற்றையே சுற்றி வந்தது.
”ஹாய்” என பதற்றத்துடன் வந்து நின்றவளையும், சங்கடமும் கலவரமும் கலந்து தவிப்புடன் அமர்ந்திருந்த மைத்துனனையும் மாறி மாறிப் பார்த்தாள், சிந்து. இருவரும் நின்ற நிலை பிரச்சனை இதுவாகத்தானிருக்கும் என்ற ஊகத்தைத் தர, “ஏன் நிற்கிறீர் உட்காரும்!” மீண்டும் மலர்வுடன் உபசரித்தாள்.
மறுகணம், அமர்ந்து கொண்ட இந்துவின் பார்வையோ, தவிப்பு விலகாது ரமேஷைத் தொட்டுத் தொட்டு மீண்டது. அவனோ, எதுவுமே சொல்லத் தோன்றாது அமைதி காத்தான்.
அண்ணியைக் கொண்டு அனைத்தையும் சமாளித்துவிடலாம் என்ற அசையாத நம்பிக்கையில்தான் புறப்பட்டு வந்திருந்தான். தான் நேசித்தவளையும் வரவைத்திருந்தான். ஆனால் இப்போதோ, வார்த்தைகள் எங்கோ சென்றுப் பதுங்கி, கண்ணாமூச்சி ஆட்டம் ஆட விளைகின்றதே! அதுவும், தன் அண்ணியின் கூரான பார்வையைத் தாங்க முடியாது, அங்குமிங்குமாக அலைமோதியது அவன் பார்வை!
அவர்கள் இருவரும் இருந்த நிலையே அவள் மனதில் எண்ணியதை ஊர்ஜிதம் செய்ய, “ஐஸ்கிரீமைக் குடிச்சிட்டு ஆறுதலாக் கதைப்பமே!” என்றபடி, தன்னுடயதைக் குடிக்கத் தொடங்கினாள் சிந்து. அவளைத் தொடர்ந்து, தாமும் ஐஸ்கிரீமைச் சுவைக்கத் தொடங்கினர் ரமேஷும் இந்துவும்.
சிந்துவின் பார்வையோ, மைத்துனனை அடிக்கடி அளவெடுத்தது. அதனைக் கண்ணுற்ற ரமேஷால் தொடர்ந்து மௌனம் காக்க முடியவில்லை. தடுமாற்றத்தை மென்று விழுங்கிக்கொண்டு, “அண்ணி!” ஐஸை வெறித்தவாறே அழைத்தான்.
“ம்ம்..சொல்லும் ரமேஷ், என்ன விசயம்?” அவள் கேட்ட தொனியில் இலேசான கேலி எட்டிப் பார்த்தது. சட்டென்று நிமிர்ந்து க்கியவன் பார்வையோ, கெஞ்சலோடு இருந்தது.
“அண்ணி, இவ..இந்து…வந்து ..நாங்க ரெண்டு பேரும் ஒண்டாத்தான் கம்பஸில படிச்சம். வந்து நாங்க… அண்ணி…” வெகுவாகத் தடுமாறியவன், சிந்துவுக்கு மிகவும் புதியவனாகத் தெரிந்தான்.
‘காதல்தான் மனிசரை எப்பிடியெல்லாம் மாற்றி விடுது!’ மனதுள் நகைத்துக்கொண்டவள், ”என்ன லவ்வா ரமேஷ்?” விழிகளால் நகைத்தவாறே, அவனையும் இந்துவையும் மாறி மாறிப் பார்த்தாள். சட்டென்று அவள் கேட்க, இருவரும் அவஸ்தையாகத் தடுமாறியதென்னவோ ஒருகணம் தான்; மறுகணம், இருதலைகளும் ஒருசேர ‘ஆமென’ ஆடின!
சிந்துவோ, இருக்கையில் வாகாகச் சாய்ந்தமர்ந்து, முன்னிருந்தவர்களையே இளமுறுவலுடன் பார்த்திருந்தாள். பேச்சொலி தற்காலிகமாக விடைபெற்றிருக்க, அமைதித்திரை போர்த்திருந்தவர்களில் முதலில் அத்திரையை விலக்கினாள், சிந்து. இப்போது அவள் முகத்தில் சற்று முன்னிருந்த கேலி வடிந்து, ஒருவகைத் தீவிரம் குடி வந்திருந்தது.
மனதுள் உருவான பல கேள்விகளோடு ரமேஷை நோக்கியவள், “சரி ரமேஷ், அதையேன் இங்க வச்சு அதுவும் பயந்துகொண்டு சொல்லுறீங்க?” என்றவள், ‘ரமேஷ் அப்பிடியொண்டும் பயந்தாங்கொள்ளி இல்லயே! நேரடியாவே தன் அப்பா, அண்ணாட்டயோ, இல்லையோ அம்மாட்டயோ கதைக்கிற தைரியமானவர் தானே! இப்ப இப்பிடிப் பதுங்குகிறாரே!’ என்ற எண்ணமே அவள் மனதில் எச்சரிக்கை மணியோசையைத் துல்லியமாகக் கேட்கச் செய்திருந்தது.
“சொல்லுங்க ரமேஷ்! என்ன பிரச்சின?” சிந்து அப்படிக் கேட்டதும்தான் தாமதம், மளமளவென மடை திறந்த வெள்ளமாய் சொல்லத் தொடங்கினான் ரமேஷ். கேட்டிருந்த சிந்துதான் அடியோடு கலங்கிப் போனாள். ‘இந்தப் பிள்ளைக்கு என்ன தைரியம்!?’ இப்படித்தான் அவள் மனம் முதலில் நினைத்தது. மைத்துனனில் கட்டுக் கடங்காத கோபமும் வந்தது.
‘பெரிய பிரச்சின, அவமானத்துக்குப் பிறகு பிரிஞ்ச குடும்பங்கள் ரெண்டும் திரும்பவும் கல்யாணத்தில? மாமா இத ஏற்கவே மாட்டார். அவருக்கு முதல் ரகு? நினைச்சுக் கூடப் பார்க்க முடியாதத, இவர் என்ன துணிவில என்னைக் கதைக்கச் சொல்லிக் கேட்கிறார்?’ மனதில் குழம்பியவளின் முகமும் அதையே பிரதிபலித்தது.
அதைப் பார்த்துக் கொண்டிருந்த இருவரும் வேதனையால் கசங்கிய படி, தம் நிலையை அவளிடம் தெளிவாகக் கூறினர். அப்போதும் சிந்துவின் மனம் இளக்கம் காட்டவில்லை.
“நாங்க இப்பிடிச் சொல்லுறோம் எண்டு பிழையா நினைக்காதீங்க அண்ணி!” மனதில் குடைந்து கொண்டு அடைத்திருந்ததை சிந்துவிடம் கொட்டிவிட்ட ஆறுதலில் மனம் சமநிலைக்கு வந்திருக்க, பொறுமையாக உரைத்தான், ரமேஷ்.
கலங்கியாவாறே தலை தாழ்த்திருந்த இந்துவை ஒருகணம் உற்றுப் பார்த்தவன், “அண்ணாண்ட விசயத்துக்கு முதல் இருந்தே நாங்க விரும்பிறம் அண்ணி; அப்பிடி எல்லாம் நடக்கும் எண்டு நாங்க கொஞ்சமும் எதிர்பார்க்கேல்ல; அப்பிடியிருந்தும், இவ்வளவு நாட்களா அமைதியாக ஒதுங்கி இருந்தம்; ஆனாலும் பாருங்க, எங்கட மனம் மாறேல்ல!” சொல்லி நிறுத்தியவன், முறைப்போடு கேட்டிருக்கும் சிந்துவை ஒரு முடிவோடு நோக்கினான்.
“ஒருவர் ஒருவரை மறந்து…இது சரிவராது எண்டு ஒதுங்கியிருந்தம் தான்; ஆனா, கடைசிவரை எங்களால முடியவே முடியாது!” தீர்மானமாக மறுத்தவனை அதிர்வோடு பார்த்தாள், சிந்து.
“அப்படியெண்டா, இப்ப என்ன சொல்ல வாறீர் ரமேஷ்?” கூர்மையாக ஆரம்பித்தாள். “உம்மட விருப்பத்துக்கு உம்மட வாழ்க்கையத் தீர்மானிக்கப் போறீரா?” தொடர்ந்தவள் குரலில் கோபமே பிரதானமாக வெளிப்பட்டது.
“இல்லையில்ல. நான் அப்பிடிச் சொல்ல வரேல்ல!” அவசரமாக மறுத்தவன், “என்ன அண்ணி, என்னப் போய் இப்படிக் கேட்கிறீங்க!” வருத்தப்பட்டான்.
“குடும்பத்த மீறி, எங்கட விருப்பத்துக்கு, எல்லாரையும் துன்பப்படுத்திற மாதிரி எல்லாம் நிச்சயம் நடக்க மாட்டம் அண்ணி; அதேநேரம், வேற வாழ்க்கை எண்டு எல்லாம் இனிமேல் எங்களுக்கு இல்ல!” என்றவன் குரலில் இப்போது கடினமே பிரதானமாக நின்றது.
அவனை ஆமோதிக்கும் வகையில் கசிந்த விழிகளுடன் ஏறிட்டாள் இந்து.
“இப்பக் கூட, அப்பா கலியாணக் கதை எடுத்ததால தான் இத உங்களிட்ட சொல்ல நினச்சன். ஏன் எண்டால், அப்பாவோ அல்லது அம்மா, அண்ணாவோ நான் சொல்லுறதக் காது குடுத்துக் கேட்க மாட்டினம் அண்ணி!” என்றவன், “ஒருவேளை, இந்து வேற வாழ்க்கையைத் தேடுறது எண்டால் எனக்கு அதில ஒருவித பிரச்சனையும் இல்ல!” என்று சொல்லிக்கொண்டே சென்றவனைத் தீவிழியால் சுட்டுப் பொசுக்கினாள், இந்து.
அதைக் கவனித்த சிந்துவுக்குத் தலைவலி அதிகரித்தது. அவர்கள் ஒருவர் ஒருவரில் கொண்டுள்ள நேசம் புலப்பட்டதில் மனதில் இருந்த கோபத்தையும் மீறி அவர்களில் பரிதாபமே எழ முயன்றது .
“இவர் இப்பத்தான் உங்களிட்டச் சொல்லுறார் அக்கா, நான் ஏற்கனவே வீட்டில சொல்லிட்டன்!” ரமேஷை முறைத்தவாறே வாய்திறந்தாள், இந்து.
“என்ர அக்கா செய்தது பெரிய துரோகம்! அப்பிடி இல்ல எண்டு நாங்க ஆருமே ஒருநாளும் சொல்லப் போறதில்ல அக்கா!” என்றவள் விழிகளால் நீர் வடிந்தது. தமக்கையின் செயல் அவளை இன்றும் குன்றிக் குறுக வைக்கின்றதே!
“அவள் காதலிச்சது எங்களுக்குத் தெரியவே தெரியாதக்கா; அப்படித் தெரிஞ்சு ரகு அண்ணாவுக்கு அவவைப் பேசேல்ல!” என்றவள், அழுதே விட்டாள்.
“ஸ்ஸ்.. இப்ப ஏன் அழுகிறீர் இந்து? அழுறதால நடந்தது எதுவும் இல்ல எண்டு ஆகிருமா?” இந்துவைக் கடிந்து கொண்டான் ரமேஷ்.
‘உன்ர அக்கா விலகியதால தான் எனக்குக் கிடைச்சார் என்ர ரகு!’ சட்டென்று இப்படித்தான் சிந்துவின் மனதில் தோன்றியது. இவ்வெண்ணமே அவள் மனதை ஒருநிலைக்கு கொண்டுவரத் துணைபுரிந்தது.
‘இவே இவ்வளவு தெளிவாவும் உறுதியாவும் தங்கட நிலையைச் சொன்ன பிறகு, இப்ப அவசரப்பட்டு எதுவுமே கதைக்கக் கூடாது!’ மனதில் உறுதியாக நினைத்துக் கொண்டவள், ‘கோவத்திலும் குழப்பத்திலும் வார்த்தைகள விட வேணாம்; ஆறுதலா யோசிச்சு ஒருவழி கண்டு பிடிப்பம்!’ என்ற முடிவுக்கு வந்தாள்.
”எனக்கு இலேசாத் தலை இடிக்குது; இதப்பற்றி நாம பிறகு கதைப்பம்; இப்ப நான் போயிட்டு வாறன்!” அவர்கள் இருவருக்கும் பொதுவாகக் கூறியபடி எழுந்தவள், ”அண்ணி!” என அவசரமாக எழுந்த ரமேஷையும் கவனிக்காது வெளியில் வந்துவிட்டாள்.
இப்படி மாலையில் நடந்தவற்றை நினைத்துக்கொண்டு பிட்டுக் குழைத்துக் கொண்டிருந்த சிந்துவை, ”சிந்தூ!” என்ற சித்தியின் குரல் இவ்வுலகுக்குக் கூட்டி வந்தது. அவர் அழைத்தவுடன் திடுக்கிட்டு, தன்னைச் சமாளித்துக் கொண்டே, ”என்ன சித்தி?” உள்ளத்தின் குழப்பத்தை மறைத்து வினவினாள்.
“குழைத்த பிட்டையே எத்தின தரம்தான் குழைப்பாய்மா?” என்ற லக்ஷ்மி, “ஏன்மா, ஏதாவது பிரச்சனையா?” என்றார் பரிவாக. அவள் வீடு திரும்பியதிலிருந்து பல தடவைகள் இதே கேள்வியை அவர் கேட்டு விட்டார்; சிந்துவால்தான் பதில் சொல்லவும் முடியவில்லை. தன்னை நம்பிக்கையோடு அணுகிய ரமேஷின் உள்ளத்து ஆசையையும் அவ்வளவில் அசட்டையாக ஒதுக்க முடியவில்லை.
“இல்ல சித்தி அப்பிடி ஒண்டுமில்ல; இருந்தாச் சொல்லமாட்டனா? கொஞ்சம் தலைவலி அவ்வளவும் தான்.” என்றாள், மழுப்பலாக.
“அப்ப நீ தள்ளு, நான் மிச்ச அலுவலப் பார்க்கிறன்; நீ போய் ரெண்டு பரசிட்டமோல் குடி!” அவளை வெளியே அனுப்ப முயன்றார், லக்ஷ்மி.
“இல்ல சித்தி, வந்தோன்ன குடிச்சிட்டன்; இப்பக் கொஞ்சம் பரவாயில்ல; நீங்க வெங்காயம் மட்டும் உரிச்சுத் தாங்க, மிச்சத்த நான் செய்யிறன்.” என்றவாறே வேலையைத் தொடர்ந்தாள், அவள்.
வழமை போல தான் வம்பிழுக்கும் போதெல்லாம் பதிலடி தந்தும், அன்று பாடசாலை பஸ்ஸில் போகும் போதும், வரும் போதும் நடந்தவைகள், பள்ளியில் நடந்தவைகள் என ஒன்று விடாது கூறிக் கலகலத்துக் கொண்டிக்கும் மனைவியின் அமைதி, யோசனையில் மூழ்கியிருந்த அவள் முகம், இரவு வீடு வந்த ரகுவை வெகுவாகக் குழப்பியது.
”ஏன்டா ஒரு மாதிரி இருக்கிறீர்? ” எனக் கேட்கவும் செய்தான். அவளின் மழுப்பலான பதிலில், அவள் எதையோ சொல்லத் தயங்குவதைப் புரிந்து கொண்டவன், நிச்சயம் தன்னிடமிருந்து எதையும் மறைக்க மாட்டாள் என்கின்ற நம்பிக்கையில், வழமைபோல அவளுடன் சேட்டைகள் செய்வதும் லக்ஷ்மியோடு சேர்ந்து அவளைப் பகிடி பண்ணுவதுமாக இருந்தான்.
இரவு படுக்கையில் சாய்ந்திருந்த சிந்துவிடம், “இண்டைக்கு உன்னை நெருங்கவே மாட்டேன்! ” என, அடம் பிடித்துச்சண்டை போட்டுக் கொண்டிருந்தாள், நித்திராதேவி.
தன்னருகில் நிம்மதியாய் உறங்கும் கணவனைப் பார்த்துக்கொண்டே இருந்தவள், ‘இப்ப என்ன செய்யப் போறன்?’ மனதுள் அங்கலாய்த்தாள். அவளுக்கோ, இந்தப் பிரச்சனையை அணுகும் வழி புலப்படவே இல்லை.
இவ்வாறு நீண்ட நேரம் நித்திரையின்றிப் புரண்டவள், ”சிந்து! இதென்ன முழிச்சா இருக்கிறீர்? என்னடா நடந்தது? சொல்லாம இருந்தா எனக்கு எப்படித் தெரியும்? உமக்கு இப்ப என்ன பிரச்சனை?” கேட்டபடி எழுந்த கணவனைப் பார்த்து, ‘பேசாமல் சொல்லி விடுவமா?’ ஒரு நிமிடம் நினைத்து, மறுகணம், ‘இப்ப வேணாம்!’ அந்த எண்ணத்தைக் கைவிட்டவள், ”ம்ம்…ஒண்டுமில்லையப்பா! இந்தச் சின்னப்பெடியன்(பையன்) தூங்கிற வடிவப் பார்த்துக் கொண்டிருந்ததில, எனக்கு நித்திர வரமாட்டன் எண்டு சொல்லுதே! இப்ப என்ன செய்யலாம்?!” அவனோடு நெருங்கிப் படுத்தவாறே முணுமுணுத்தாள்.
“ஓ! அதுவா விசயம்? அப்பிடியே நம்பிட்டன்!” நித்திரைக் கலக்கம் விலகாது சொன்னவன், “எது எண்டாலும் இப்பத் தூங்கும் சிந்து; மிச்சத்த காலம கதைக்கலாம். பாரும் எத்தின மணியாச்சு! நாளைக்குக் காலம கொஞ்சம் நேரத்தோட போகவும் வேணும்.” சொல்லிக்கொண்டே நித்திரையைத் தொடர, அவளும் வலுகட்டாயமாக நித்திராதேவியை அணைத்துக்கொள்ள முயன்றாள்.
‘இவையள மனம் நோகச் செய்யாம இந்த விசயத்தை எப்பிடிக் கையாளுறது?’ அவள் தலைக்குள் இக்கேள்வி விழிப்போடு குறுகுறுத்துக் கொண்டிருந்தது!

