அத்தியாயம் 8.
முதல் நாளிலிருந்து நடத்திய மனப்போராட்டத்தை ஒருவழியாக முடிவுக்குக்கொண்டு வந்தாள், சிந்து.
மைத்துனனின் காதலை கணவனிடம் சொல்வதென முடிவெடுத்தவள், அதற்குமுன் லக்ஷ்மியிடம் அதைத் தெரிவிக்க விரும்பினாள். இவ்விடயத்தைத் தெரிந்து கொள்கையில், நிச்சயம் கணவனிடமிருந்து அமைதியை இவள் எதிர்பார்க்கவில்லை. அப்படித் தம்மிடையே மனஸ்தாபம் ஏற்படுமாயின், ‘சித்தி நிச்சயம் குழம்பிப் போவார்!’ என எண்ணிக்கொண்டவள், முதலில் அவரைத் தயார்ப்படுத்த முடிவெடுத்தாள்.
அன்றாட வழக்கப்படி காலையில் எழுந்து, அவசரம் அவசரமாக வேலைகளை முடித்து, முடிந்தவரை கணவன், சித்தியுடன் இயல்பாய் இருந்தவள், பாடசாலை சென்றுவந்து மதிய உணவை உண்டபின், தொலைக்காட்சியில் மூழ்கியிருந்த லக்ஷ்மியின் அருகில் அணைந்தவாறே வந்தமர்ந்தாள்.
முதல் நாளிலிருந்து அவளையே உன்னிப்பாகக் கவனித்து வரும் பெரியவர், மகளை உற்று நோக்கினார். “என்னடாம்மா?” கனிவோடு ஆரம்பித்தவர், “நீயாகச் சொல்லுவ எண்டுதான் நானும் பாத்துக்கொண்டிருக்கிறன்; அப்பிடி என்னதான் உனக்குப் பிரச்சின? நேற்றில இருந்து நீ கொஞ்சமும் சரியா இல்ல!” என்றவர் முகத்தில் என்னவென்று அறிந்துகொள்ளும் தீவிரம் குடிவந்திருந்தது.
அவளை, சிறுவயதிலிருந்து தாயாய் தந்தையாய்ப் பேணி வளர்த்தவர் அல்லவா? அவருக்குத் தான் அவளின் ஒவ்வொரு அசைவும் அத்துப்படியாச்சே!
தடுமாற்றமும் குழப்பமும் குடியிருந்த சிந்துவின் வதனத்தில் மெல்லிய முறுவல் மலர, சிறிய தாயாரைப் பார்த்தவள், ”சித்தி…அது வந்து…நான் சொல்லி முடிக்கும் வரைக்கும் பொறுமையாக் கேட்பீங்களா? கோவப்படக் கூடாது! என்ன சொல்லுறீங்க? சொல்லவா?” இதற்குச் சம்மதமென்றால் சொல்கிறேன் என்ற தோரணையில் ஆரம்பித்தவளை, பொய்யாக முறைத்தவாறே இடையிட்டார் லக்ஷ்மி.
“அப்படியெண்டா, கோவப்பட வைக்கிற விசயத்தைத்தான் சொல்லப் போறியா?” கேட்டவர் பார்வை கூர்மையானது.
அதைக் கேட்ட சிந்துவின் பார்வை தொலைக்காட்சியில் நிலைத்து நகர மறுத்து நிற்க, சிறிது நேரம் மௌனம் காத்தாள்.
”நான் சொல்லப் போறது என் சம்பத்தப்பட்ட விசயமில்ல சித்தி! ஆனா, நம்மட குடும்பம் சம்பந்தப்பட்டது. இத அவரிட்ட சொல்ல வேணும். அதுக்கு முதல் உங்களிட்ட சொல்ல நினைக்கிறன்!” என்றவள், அதன்பின் காத்திராது ரமேஷ் சொன்னதை அப்படியே ஒப்புவித்தாள்.
கேட்டிருந்த லக்ஷ்மியோ, அவள் கூறி முடித்த பின்னும் அதிர்விலிருந்து விடுபடவில்லை. கேட்ட செய்தியில் உறைந்த அவர் இதயமோ, மகள் சொல்வதை ஜீரணிக்கவே முக்கி முனகியது! அப்படியே சிலையாக இருந்தவர், ”சித்தீ! ” என்ற சிந்துவின் உலுக்கலில் கலைந்தார்.
”ஈஸ்வரா! இது என்ன சோதனை? இந்த ரமேஷ்ட புத்தி இப்பிடியாப் போகவேணும்? எனக்கு என்ன சொல்லுறதெண்டோ செய்யிறதெண்டோ விளங்கேல்ல!” அரற்றினார்.
“இந்தப் பரந்த உலகத்தில வேற பொம்பளையே அவனுக்குக் கிடைக்கேல்லையா? தேடிப்போய்த் திரும்பவும் அந்த வீட்டிலயே விழுந்திருக்கிறானே!” புலம்பத் தொடங்கினார், லக்ஷ்மி.
சித்தியின் புலம்பலை, சிறிது நேரம் அமைதியாகப் பார்த்திருந்தாள் சிந்து. “மாற்ற முடியாது எண்டு தெரிஞ்ச பிறகும் நடந்ததைக் கதைகிறதால என்ன பிரயோசனம் சித்தி!? அதை விட்டுட்டு இப்போதைய பிரச்சனையைப் பார்ப்பம்!” என்றவளைப் புரியாது பார்த்தார் லக்ஷ்மி.
“ஓம் சித்தி! மாமா ரமேஷுக்குப் பொம்பள பார்த்திருக்கிறாராம்! சாதகமும் பொருத்தமா இருக்கெண்டு சொல்லிக் கேட்டவராம். இப்ப வந்து ரமேஷ் இப்பிடியொரு குண்டைத்தூக்கிப் போட்டிருக்கிறார்! அதுமட்டுமில்ல, அவே ரெண்டு பேரும் உறுதியா இருக்கினம். இந்துவப் பார்க்கேக்கையும் சரியான பாவமா இருக்குச் சித்தி! அவள் என்ன பிழை செய்தாள்?” என்றவளை, முறைத்தார் அவள் சித்தி.
”ஐயோ சிந்து! இப்ப ஆர் பிழை செய்தது எண்டா பார்ப்பினம்? அவேட வீட்டுப்பிள்ள செய்த வேலைய இலேசில மறந்து, மன்னிச்சுத் திரும்பவும் அதே குடும்பத்தில…கொஞ்சம் நிதானமா யோசிச்சுப் பார் பார்ப்பம்!” அவர்களுக்காக சிந்து பேசுவதை அவர் இரசிக்கவில்லை என்பதை அவர் குரலின் தொனி தெளிவாக்கியது.
“ஐயோ! என்னால நினைச்சும் பார்க்க முடியேல்லயே! ரகுட அப்பா? அதோட, உன்ர புருசன் பற்றி உனக்குத் தெரியாதா?” தன் விருப்பமின்மையை மகளுக்கு உணர்த்த முயன்றார் லக்ஷ்மி.
அவளோ, தான் தீர்மானித்ததில் நிதானமாக நின்றாள்.
“அதால தானே நேற்றில இருந்து மண்டையப் போட்டு உடைச்சுக் கொண்டிருக்கிறன்! ஆனா, இந்த விசயத்த சும்மா விடவும் ஏலாது தானே? இண்டைக்கு அவர் வந்தோன்ன கதைக்கப் போறன் சித்தி. முதல் எப்படியோ! இப்ப வீட்டில எல்லாரும் சந்தோசமாத் தானே இருக்கினம்!” என்றாள், கணவனிடம் கதைப்பது உறுதி என்பதை அவருக்குத் தெரிவிக்கும் முகமாக!
லக்ஷ்மியின் மனமோ, கொஞ்சமும் இசைய மறுத்தது. ” பிள்ள, எனக்கு இது சரியாப்படேல்ல! பழச எல்லாம் நினைவுபடுத்தி உன்ர நிம்மதிய நீயே கெடுக்கப் போறியா?” மகளின் அருமையான குடும்ப வாழ்வில், திருப்தியும், மகிழ்ச்சியும் கொண்டிருந்த அவருள்ளம், அது கெட்டுவிடுமோ என அச்சம் கொண்டேங்கியது.
அப்படியும் இப்படியும் கலங்கிய லக்ஷ்மியைப் படாது பாடுபட்டுச் சமாதானம் செய்த சிந்து, “இதப் பற்றி நான் அவரோட கதைக்கேக்க நீங்களும் இருங்க சித்தி; கொஞ்சம் கோவப்படாம சொல்லுறது முழுசும் கேட்பார்!” லக்ஷ்மியிடம் மிகவும் தன்மையாக கேட்டுக்கொண்டாள்.
லக்ஷ்மி மீது கணவனுக்குள்ள பாசமும் மரியாதையும் தெரிந்தவள், அவரருகில் இருந்தால் கணவனின் கோபத்தின் வீரியத்தைக் குறைக்கலாம் என்று நினைத்தே இவ்வாறு கேட்டுக்கொண்டாள்.
சமாதானமோ, விருப்பமோ சிறிதுமின்றியே சிந்துவின் கோரிக்கைக்குத் தலையாட்டினார் லக்ஷ்மி.
*****
சுற்றிலும் கருமையின் ஆதிக்கம்! ஆளரவம் குறைந்திருந்த கடற்கரைப்பகுதி! இடையூறின்றிக் கிடைத்த தனிமையை அணுவணுவாக இரசித்து, பேரிரைச்சல் எழுப்பி, இருளவனுடன் குதூகலத்தோடு உறவாடிக் கொண்டிருந்தாள், கடல் மங்கை!
எதிரே, கவிந்திருந்த இருட்டில் நின்று, தன்னையே வெறித்து நிற்கும் ரகுவை அவள் சிறிதும் கண்டு கொள்ளவில்லை! அவனும்தான் கடல் பெண்ணின் ஆர்ப்பரிப்பை இரசிக்கவில்லையே!
ஆத்திரமும் கோபமும் பெருங்காற்றாகச் சுழன்றடிக்க, அவனுள்ளமோ கடலைன்னைக்குச் சவாலாகக் கொந்தளித்துக் கொண்டிருந்தது!
‘என்ர வாழ்க்கையில, கடந்த காலத்தில ஏற்பட்ட தலை குனிவ மறந்ந்திட்டன், ஏமாற்றத்த வென்றுட்டன்!’ நினைத்துக்கொண்டவன் முகம், கோபத்தை மீறிய வேதனையைப் பூசிக்கொண்டது.
‘என்ர பெஞ்சாதி, எனக்கே எனக்கானவள் எண்டு அவளோட முழுமையா ஒன்றிப்போன நேரத்தில, என்ன வார்த்தையெல்லாம் கதைச்சிட்டாள்?’ தீயாகக் கனன்ற மனதால் சற்றும் ஜீரணிக்க முடியவில்லையே!
உள்ளமும் உடலும் அனலாகத் தகிக்க, சற்றுமுன் வீட்டில் நடந்தவை மீண்டும் மீண்டும் அவனைப் பதம் பார்க்கத் துணிந்து, அவனை ஆக்கிரமித்துக் கொண்டன.
மாலை கடையிலிருந்து வந்தவனை, மனைவியின் சோர்ந்த முகமே வரவேற்றது.
“என்ன சிந்து ஒருமாதிரி இருக்கிறீர்? உடம்புக்க ஏதாவது செய்யுதா?” அக்கறையாக வினவியவனுக்குச் சரியான பதில் கிட்டவில்லை.
‘நேற்றும் ஒருமாதிரித்தான் இருந்தாள்; எதுவோ இருக்கு; ம்ம்..என்ன பிரச்சனையா இருக்கும்? மாமியோடு ஏதாவது பிரச்சனையா? அப்பிடியெல்லாம் இருக்காதே!” மனதில் பல கேள்விகள் எழுத்தாலும், ‘சொல்ல மாட்டேன் எண்டு இருக்கிறவளிட்ட இருந்து எப்படித் தெரிஞ்சு கொள்ளுறது? என்ன செய்கிறாள் பார்ப்போம்!’ அமைதியானான் ரகு.
இரவுணவை உண்பதற்கு வந்தமர்ந்தவனிடம், “எந்த வேலையையும் என்னைச் செய்ய விடுறதில்ல தம்பி! வேலைக்குப் போய் களைச்சு வாறவள் கொஞ்சம் ஓய்வா இரு எண்டா கேட்கிறாளா? எல்லாம் தன்ர கையால செய்தால் தான் அவளுக்குப் பத்தியப்படும்!” மனதில் இருந்த கலக்கத்தை மறைத்துச் சொல்லிக் கொண்டமர்ந்தார் லக்ஷ்மி.
“அதுதானே சிந்து, காலமையும் நீர் தானே சமைச்சுத் தந்து விடுறீர்; இரவில எண்டாலும் மாமி கையால ருசியாச் சாப்பிடட்டும் எண்ட நல்ல எண்ணம் வராதே!” மனைவியை வாரினான்.
“ஹலோ! ஹலோ! காலம எழும்பி சமைச்சுத் தாறது போதாதெண்டு…உங்களுக்குக் கொழுப்பு!” கணவனை முறைத்தவள், “நாளையில இருந்து கடையில சாப்பிடுங்க; அப்பத்தான் அருமை தெரியும்.” பொய்யாக முறுக்கிக் கொண்டாள்.
“அப்பாடா மாமி, நாளையில இருந்து எனக்குக் கொண்டாட்டம்! வேணும் எண்டா உங்களுக்கும் பார்ஸல் வாங்கி அனுப்பிவிடுறன்!” என்ற கணவன் கையில் இறுக்கிக் கிள்ளியவள், “உங்கள…உப்புப் புளி போடாம சமைச்சுத் தர வேணும்; அப்பத்தான் சரி வருவீங்க!” முறைத்தபடி அவனுக்குப் பரிமாற, “அப்ப, இப்ப அதெல்லாம் போட்டா சிந்து சமைக்கிறீர்!” அதிகமாகவே ஆச்சரியம் காட்டியவனோடு வார்த்தைகளால் மல்லுக்கட்டிக்கொண்டே உணவை முடித்தெழுந்தனர்.
சாப்பிட்ட பின் அவனருகில் வந்தமர்ந்து கொண்டவள், ‘எப்பிடித் தொடங்கிறது?’ மிகவும் குழம்பித் தவித்தாள். மெல்லிய நடுக்கம் அவளுள்ளத்தை அக்கிரமிக்க, தொண்டைவரை வேகமாக வந்த வார்த்தைகளோ வெளியில் வரப் பயந்துகொண்டு தொண்டைக்குழியில் தஞ்சம் கோர, மிகவும் அவஸ்தையாக உணர்ந்தாள், சிந்து.
வழமைக்கு மாறான மனைவியின் மாற்றத்தைத் துல்லியமாக உணர்ந்த ரகுவோ, எதுவோ உள்ளதென்பதை நிச்சயம் செய்து கொண்டவன், அந்த யோசனையையும் மீறி அவள் அவஸ்தையைப் பார்த்து முறுவல் பூத்தான்!
‘அப்பிடி என்ன விசயம்!? ஆள் இந்தப் பதுங்கு பதுங்குறா! பட்டெண்டு போட்டுடைக்கிறது தானே இவள்ட குணம்!’ மனம் கேள்வியெப்ப, “என்ன சிந்து, எதையாவது சொல்ல வேணுமா? அல்லது கேட்க வேணுமா? நிச்சயமா என்னவோ இருக்கு; அதும் நேற்றில இருந்து! சரிதானே?” கூர்மையாகக் கேட்டவன், அவள் தடுமாற்றத்தை இரசித்துக்கொண்டே, “என்ன எண்டாலும் இப்பவே சொல்லிரும்; எனக்கு இண்டைக்கும் நித்திர முழிக்கக் முடியாது!” முதல் நாளிரவு அவள் கொட்டக் கொட்ட விழித்திருந்ததைப் பரிகாசம் செய்தான்.

