நீயில்லாது வாழ்வேதடி 8 – 2

அதற்குப் பதிலாக, மனைவியின் நாவிலிருந்து தீக்கங்குகளாக வார்த்தைகள் தன்னை நோக்கிப் பாயுமென, அவன் சிறிதும் நினைத்திருக்கவில்லையே!
கணவன் இப்படிக் கேட்டதும், தமக்கு மறுபுறமாகத் தனியாக இருந்த சோஃபாவில் அமர்ந்திருந்த லக்ஷ்மியை ஒரு பார்வை பார்த்தாள் சிந்து. அவரோ, ‘வேணாம் விட்டிரு!’ கண்களால் கெஞ்சினார்.
இவளோ, மனதில் எழுந்த நடுக்கத்தை அரும்பாடுபட்டு அடக்கியவள், ரமேஷ் தன்னை அழைத்ததிலிருந்து நடந்தவை அனைத்தையும் ஒன்றுவிடாது ஒப்பித்துவிட்டே மூச்சு விட்டாள்.
மைத்துனன் சொன்ன விடயம் அதிர்வையும் கோபத்தையும் தந்திருந்தாலும், அதைத் தெரிந்து கொண்டதும் கணவனிடம் சொல்லவில்லையே என்றுதான் துடித்துக் கொண்டிருந்தாள். இப்போதோ, மிக மிக ஆறுதலாக உணர்ந்தவள், வருவது வரட்டும் என்ற வகையில் கணவனை நோக்கினாள்.
மனைவி சொல்லச் சொல்ல கேட்டிருந்த ரகுவோ, ஆத்திரத்தால் தன் வசமிழந்தான்!
“இவ்வளவு நடந்திருக்கு! நீ…ஆற அமர யோசிச்சிட்டு வந்து சொல்லுற!” கணவனின் குரலின் கடுமை சிந்துவை நிமிர்ந்து அமர வைத்தது!
“அது …அப்பிடி எல்லாம் இல்லையப்பா..வந்து…” என்றவளை இடைமறித்துத் தொடர்ந்தது அவன் குரல்.
“நீ சொல்லுறதப் பார்த்தா, அவையள ஆதரிச்சுக் கதைக்கிறது போல இருக்கே!” விழிகளிடுங்க முறைத்தவனை நேராகப் பார்க்கத் தயங்கியவளின் பார்வை சித்தியைத் தொட்டு மீண்டது!
“வந்து ரகு…”
“என்ன வந்தும் போயும்? நீ படிச்சனி தானே! ரெண்டு குடும்பங்களுக்கும் இடையில் என்ன நடந்தது எண்டு தெரிஞ்சனி தானே!” அவன் குரல் உறுமலாக உயர, சிந்துவும் முறைத்துக்கொண்டே கணவனை எதிர்கொண்டாள்.
“என்ர படிப்புக்கும் இதுக்கும் என்ன சமந்தம் ரகு? முதல் ஏன் இப்பிடிச் சத்தம் போடுறீங்க? உங்கட தம்பியையும் இந்துவையும் நானா காதலிக்கச் சொன்னன்? ஏதோ என்னட்ட சொன்னதச் சொல்ல வந்தா, இந்தக் குதி குதிக்கிறீங்களே! அவே என்ன கொலையா செய்திட்டீனம்?” இவள் குரலும் கணிசமாக உயர்ந்திருந்தது.
மகள் சொன்னதைக் கேட்டதும் ரகுவின் கோபத்தைக் கண்ட லக்ஷ்மி, இதை எதிர்பார்த்திருந்தாலும் அக்கணம் ஆடித்தான் போய்விட்டார். மகளும் கணவனும் கண்முன்னால் சண்டையிட்டுக் கொள்வதை அவர் எப்படி அமைதியாக இருந்து பார் ப்பார்? எனவே, பேசத் தொடங்கிய சிந்துவை அடக்கும் வகையில் குறுக்கிட்டது அவர் குரல்.
“சிந்து வேணாம் மா! இங்கபார் சிந்து, கொஞ்சம் பொறுமையாப் பேச வேண்டிய விசயம் இது! கோவத்தில வேணாம் மா!” என்ற லக்ஷ்மியின் குரல் அங்கு ஒருவர் ஒருவரைப் பார்த்து முறுக்கிக் கொண்டவர்கள் செவிகளைத் தழுவவே இல்லையே! அவர் அங்கிருப்பதையே மறந்தார்கள் இருவரும்!
” என்ன நீ, ஒண்டுமே தெரியாத மாதிரிக் கேட்கிற? அந்தக் குடும்பம் எப்பிடி எங்கள நம்ப வச்சுக் கழுத்தறுத்தது; அவமானப்பட வச்சது; இதெல்லாம் உனக்குத் தெரியாதா?” ஜிவு ஜிவுத்த முகத்தோடு சீறினான், ரகு.
கணவனின் இக்கோலம் முற்றிலும் புதிதென்றாலும் சிந்துவால் அமைதியாக இருக்க முடியவில்லை. அவள் அமைதியானால், ஏதோ ஒருவகையில் நம்பிக்கை மின்ன தன்னிடம் தம் காதலைச் சொன்ன ரமேஷ் இந்துவின் வாழ்க்கை என்னாவது?
என்றாலும், கணவனை கோபப்படுத்திப் பார்க்கவும் அவள் மனம் இடம் கொடுக்கவில்லை; சட்டென்று தணிந்தாள். “சரிப்பா சரி, அது நடந்து முடிஞ்ச விசயம் தானே? அதைக் காரணமாக் காட்டி உங்கட தம்பி வாழ்க்கைய நாமளே குழப்பிறதா? கொஞ்சம் பொறுமையா யோசிச்சுப் பாருங்களன்!” கெஞ்சலாகக் கேட்டாள்.
“என்ன சிந்து நீ! நான் என்ன சொல் லுறன், நீ என்ன சொல்லுற? முடிவெடுத்திட்டுத்தான் கதைக்கிறியா?” மனைவியின் புறமாகத் திரும்பி அமர்ந்தான் ரகு.
“முதல், இதில யோசிக்கிறதுக்கு என்ன இருக்கு? இல்ல, தெரியாமல் தான் கேட்கிறன்; என்ன இருக்கு? அதுவும் பொறுமையா! எங்கட வேதனையும் அவமானமும் உனக்குச் சொல்லி விளங்காது சிந்து! அத எல்லாம் நீ பட்டிருக்க வேணும், அப்பத் தெரிஞ்சிருக்கும்; அப்பா மட்டும் இதக் கேட்டா என்ன பாடு படுவார் தெரியுமா?” கோபமும் கசப்புமாக வந்தது, அவன் குரல்.
கணவனைச் சமாளித்தால், அவன் மூலம் மாமனாரை அணுகலாம் என நினைத்திருந்த சிந்துவின் நம்பிக்கை மெல்ல மெல்ல மறையும் வகையில், இருவரும் மாறி மாறி கதையை வளர்த்துச் சென்றனர்.
பார்த்திருந்த லக்ஷ்மியோ செய்வதறியாது திகைத்திருந்தார்.
இக்காதலை ஏற்கவோ, இத்தனை நாளும் இந்த விடயத்தை மறைத்த தன் தம்பியை மன்னிக்கவோ கணவன் இலேசில் தயாரில்லை என நன்றாகப் புரிந்து கொண்ட சிந்துவும், ஆத்திரத்தில் தன்னையே மறந்தாள்.
தான் இவ்வளவு சொல்லியும் ஏற்க மறுக்கிறான் என்கின்ற ஆதங்கம், கோபமாக அவளை ஆட்கொள்ள, வார்த்தைகள் தெறித்து விழுந்தன!
”இங்க பாருங்க, இப்ப ஏன் இப்பிடிக் கத்துறீங்க? அப்ப, ரமேஷ் இந்து காதல நீங்க ஏற்கப்போறதில்ல, அப்பிடித்தானே?”
“திரும்ப திரும்ப சொன்னதையே சொல்லாத சிந்து; இண்டைக்கு இருக்கு அவனுக்கு!” எழ எத்தனித்தவனைத் தடுத்தது அவள் கரம்.
மனைவியை முறைத்தவனை உற்றுப் பார்த்தவளுக்கு, உள்ளே கொந்தளித்த ஆத்திரத்தில் கண்கள் முட்டின!
“நீங்க மட்டும் சந்தோசமாக இருக்க வேணும். உங்கட தம்பி வாழ்க்க எப்பிடிப் போனாலும், ரமேஷ் என்ன கவலைப்பட்டாலும் அதப் பற்றி கவலையே இல்ல என்ன? அல்லது, நீங்களும் சந்தோசமா இல்லையா?” கண்ணீர் தெறிக்க கேட்டவளை, முறைத்தான் அவள் கணவன்.
“எதுக்கும் எதுக்கும் முடிச்சுப் போடுற சிந்து!” அவள் பிடியிலிருந்து கரத்தை விடுவித்துக் கொண்டான்.
லக்ஷ்மியோ சிந்துவின் பேச்சு தடம் மாறுவதை உணர்ந்து கொண்டவர், “சிந்து விடம்மா, இதோட இந்தக் கதையை நிறுத்து; போ.. போய்ப் படுங்க!” இருவரையும் சமாதானம் செய்ய முயன்றார்.
அதைக் கேட்டு அப்பால் நகர முயன்ற கணவனை, மீண்டும் தடுத்தது சிந்துவின் கரம்.
மனைவியின் மெல்லிய கரம் தந்த அழுத்தத்தில் புருவங்கள் நெரிய அவளைப் பார்த்தான், ரகு. அதேவேகத்தில் லக்ஷ்மியை நாடியது, அவன் பார்வை. மறுநொடி, அவள் கரத்தை ஒரே உதறலில் உதறிவிட்டு விறுவிறுவென்று மாடியேறிவிட்டான்.
சில நொடிகள்தான் அப்படியே நின்றிருப்பாள், சிந்து. “பிள்ள இங்கபார் இதோட விடு, பிறகு கதைக்கலாம்.” சொல்லிக்கொண்டிருந்த லக்ஷ்மியைப் பாராது விறுவிறுவென்று கணவனைத் தொடர்ந்தாள், சிந்து.
“சொல்லுங்க, நீங்களும் சந்தோசமா இல்லையா? இன்னும் அந்த நீரஜாவை நினைச்சுக் கொண்டுதான் இருக்கிறீங்களா? அவவிட நினைப்பு இல்ல எண்டா உங்களுக்கு எப்பிடி இப்பிடிக் கோவம் வரும்?”
அறைக்குள் வந்த வேகத்தில் கட்டிலில் அமரப்போனவன், பின்னாலே கேட்டுக் கொண்டு வந்தவள் குரலில் நின்று திரும்பினான்.
“என்ன முறைப்பு? முதல் கேட்டதுக்குப் பதில் சொல்லுங்க? அவா உங்கள விட்டுப் போன கோபம் இருக்கு எண்டா, அவவிட நினைவிலதான் இன்னும் இருக்கிறீங்க எண்டுதானே அர்த்தம்? அப்படியெண்டா, நீங்க…என்ன…என்னட்ட காட்டுற அன்பு, பாசம் எல்லாமே பொய்யா? வெறும் பாசாங்கும் நடிப்புமா?” படபடவென்று கேட்டவள் விழிகளோ பார்வையை மறைத்து நீரைச் சொரிந்தது.
மனைவியிடமிருந்து இப்படியான பேச்சை சிறிதும் எதிர்ப்பார்த்திராத ரகுவோ, அப்படியே உறைந்து நின்றான். அந்தக் கணம் அதில் நின்று மனைவியோடு தர்க்கம் செய்ய அவனுக்குப் பிடிக்கவில்லை. ஏன், சிந்துவின் முகத்தைப் பார்க்கவும் பிடிக்கவில்லை. மனதுள் புரண்ட கோபத்தில் எதையாவது சொல்லிவிட்டால்…கீழே பெரியவர் இருக்கிறார் என்ற நினைவு அவனைக் கட்டுப்படுத்தியது.
விசுக்கென்று திரும்பி இறங்கியவனை என்ன செய்யலாம் என்ற மாதிரிப் பார்த்து நின்றாள், சிந்து. தான் கேட்ட பின்னரே, என்ன கேட்டோம் என்பதை முழுமையா உணர்ந்தும் இருந்தாள். ஆனாலும், ‘நான் கேட்டதில பிழையேதும் இல்லயே!’ என்றவாறே, அசட்டையாக, வெளியேறும் கணவனைப் பார்த்தவள், “நான் என்ன கேட்டுக்கொண்டிருக்கிறன், நீங்க என்ன ஓடிபிடிச்சு விளையாட்டுக் காட்டுறீங்களோ?!” என்றபடி தானும் இறங்கிவர, வாயிலருகில் தொங்கிக் கொண்டிருந்த காரின் சாவியை எடுத்துக்கொண்டு வெளியேற முனைந்தான், ரகு.
‘இப்ப போய் ரமேஷ ஒரு வழி பண்ணப் போறாரா? நான் கதைக்கிறது அவர்ட காதில சொட்டும் ஏற இல்லையே!’ மனம் குமுற அவனை நோக்கி விரைந்தாள்.
அவர்கள் மேலே சென்றதும் தன்னறைக்குள் சென்றிருந்த லக்ஷ்மி, மீண்டும் கேட்ட அவர்களின் அரவத்தில் வெளியே செல்வோமா வேண்டாமா என்ற குழப்பத்தில் தயங்கி நின்றார்.
”இங்க பாருங்க, நான் கேட்டதுக்குப் பதில் சொல்லாமல், இப்ப எங்க போறீங்க? ” என்றவள், கொஞ்சம் நிதானித்து, அவனைத் தீர்க்கமாகப் பார்த்தாள்.
”இப்ப அங்க போய் மாமாட்ட இதச் சொல்லுறது, ரமேஷ ஏசுறது எண்டு ஏதும் செய்தீங்களோ, நாளைக்கு முதல் வேல சித்தியோட யாழ்ப்பாணம் போயிருவன்; சொன்னாச் சொன்னதுதான்; மிச்சம் உங்கட விருப்பம்!” என்றவள், விருட்டென்று மாடியை நோக்கி விரைந்தாள்.
வார்த்தைகளால் சுட்டு விட்டு விசுக்கென்று செல்லும் மனைவியை வெறித்தபடி நின்றவன், அடுத்த நிமிடம் புறப்பட்டு நேரே கடற்கரையை நாடியவன், இதோ இருட்டுடன் உறவாடி நெஞ்சம் கணக்க நின்று கொண்டிருக்கிறான்.

error: Alert: Content selection is disabled!!