அத்தியாயம் 9.
வரவேற்பறையிலிருந்து லக்ஷ்மியை எப்படியாவது சமாதானம் செய்துவிட முனைந்து கொண்டிருந்தாள், சிந்து. அவர் அவ்வளவு இலேசில் சமாதானம் அடைவதாக இல்லை.
இவ்விடயத்தைப் பேச ஆரம்பித்தால் கணவன் மனைவியிடையே வாக்குவாதம் எழும் என்பதை அறிந்திருந்தாலும், பழைய கதைகளைக் கிளறி, அதுவும் அப்பெண்ணோடு ரகுவை இணைத்து சிந்து பேசியதைக் கொஞ்சமும் சகித்துக்கொள்ள முடியவில்லை, லக்ஷ்மியால். தான் வீட்டில் இருக்கப் போய் ரகுவின் கோபம் முழுதாக வெளிப்படவில்லை என்பதும் அவருக்குப் புரிந்தே இருந்தது.
”இங்கபார் சிந்து, பொம்பளையோ, ஆம்பளையோ ஆரா இருந்தாலும் கதைக்க முதல் யோசிச்சுக் கதைக்க வேணும்! நாவடக்கம் இல்ல எண்டால் வாழ்க்க நேர் சீராச் செல்லுறது சரியான கஷ்டம்! அதென்ன கோவம் உனக்கு? கொஞ்சம் கூட பொறுமை இல்லாம இப்பிடி எல்லாம் வார்த்தைய விடுற!” கோபத்தில் மகளைக் கண்டித்தார்.
அவள் எதுவும் சொல்ல முனையவில்லை.
“அந்தத் தம்பிய வேதனப்படுத்தி குத்திப் பேசிட்ட சிந்து! உனக்கு அது கொஞ்சமும் விளங்கேல்லையா? இனி என்ன செய்யப் போற? எந்த முகத்த வச்சுக்கொண்டு தம்பியச் சமாதானம் செய்வ?” இயலாமையோடு அரற்றியவர், “அப்ப உன்ர மனசிலும் அந்த நீரஜாட நினைவு இருந்திருக்குத் தானே?” நிமிர்ந்து பார்த்த மகளை முறைத்தார்.
”உன்ன முறையா வளர்த்து, நல்லவர் கையில கொடுத்து, நீயும் நல்ல சந்தோசமா அமோகமா வாழுற எண்டு நிம்மதியா இருந்தனே!” மீண்டும் புலம்பினார்.
கோபத்தில் சீறியவளுக்குமே, தான் அத்துமீறிப் பேசியது உறைத்துத் தான் இருந்தது.
“கோவமும், பொறுமை இல்லாத தன்மையும் சில நேரங்களில மனிசர சிந்திக்க முடியாத நிலைக்குத் தள்ளிரும் எண்டது உண்மைதான் சித்தி! நான் அப்பிடியெல்லாம் அவரோட கதைக்க வேணும் எண்டு கொஞ்சமும் நினைச்சிருக்கேல்ல.” அடங்கிய குரலில் மொழிந்தாள்.
“எண்டாலும், என்னைப் பொருத்தமட்டில, ரகுவோ அவேட குடும்பமோ இந்துட குடும்பத்த இனியும் வெறுக்கிறது நியாமாப்படேல்ல!’’ என்றவள், மறுத்துக் கூற முயன்ற லக்ஷ்மியின் கரங்களைப் பற்றிக்கொண்டாள்.
“கொஞ்சம் நிதானமா யோசிச்சா நான் என்ன சொல்லுறன் எண்டு விளங்கும் சித்தி!” கெஞ்சலாகத் தொடர்ந்தாள்.
“அதைத்தான் நானும் சொல்லுறன், நீயும் கொஞ்சம் நிதானமா நடந்து கொள்!” லக்ஷ்மியோ சிடுசிடுத்தார்.
“பச்…நீரஜாட செய்கையால அந்த நேரத்தில இவேக்கு மனவருத்தம் தான்! சொந்தபந்தம் மத்தியில வீண் பேச்சுகள் வந்திருந்தாலும், அவள்ட செய்கையால இவே இழந்தது ஒண்டும் இல்ல எண்டுதான் எனக்குப்படுது. இந்த நினைப்புத்தான் ரகு அப்பிடிக் கோவப்படுறதப் பார்த்தோன்ன அப்பிடிக் கதைக்க வச்சது!” சித்தியை சமாதானப்படுத்த முனைந்தாலும், ‘உண்மைதானே! அண்டைக்குக் கலியாணம் குழம்பினாலும் இப்ப…என்ர ரகு எவ்வளவு சந்தோசமா இருக்கிறார்! அல்லாட்டி என்னைக் கலியாணம் செய்ததில அவருக்கு முழுத்திருப்தி இல்லையா?’ நினைத்தவள் கண்கள் கலங்கிப்போயின.
மறுகணமே, தன் மனத்தைக் கட்டுப்படுத்திவிட்டு வேதனையில் புலம்பிக் கொண்டிருந்த சித்தியைத் தேற்றுவதில் முனைந்தாள், சிந்து.
“நான் வேணுமெண்டு அப்பியெல்லாம் கதைக்கேல்ல சித்தி; எப்பிடியும் அவரைச் சமாதானம் செய்திருவன், கவலைப்படாதீங்க!” என்றவள், “பாருங்க, எத்தின மணி? நீங்க போய்ப் படுங்கோ!” என, அவரை ஆறுதல்படுத்தி படுக்கைக்கு அனுப்ப முயற்சித்தவளின் உள்ளமும், உடலும் நடுங்கிக் கொண்டு தான் இருந்தது.
‘இரவு பதினொண்டு தாண்டிட்டுதே, கோபமா வெளிய போனவர் இன்னும் திரும்பி வரேல்ல; ஃபோனையும் கொண்டு போகேல்ல; இப்பது என்ன செய்யிறது?’ கலங்கிக் கொண்டிருந்தாள்.
அதற்கு ஏதுவாக தன்னைச் சமாதானப்படுத்திய சிந்துவை முறைத்தார், லக்ஷ்மி.
“நான் தூங்குறது இருக்கட்டும்; போய் மூணு மணித்தியாலத்துக்கு மேலாயிற்றே, இந்தத் தம்பி இன்னும் வந்தபாடில்ல; நீயும் பேசாமல் இருக்கிறம்மா!” கடிந்து கொண்டார்.
“அதுக்கு நான் என்ன செய்யிறது சித்தி? அவரிட ஃபோனும் இங்க கிடக்கு!”
“ரமேஷ்க்கு கோல் பண்ணிக் கேட்டுப் பாரன்; ஒருவேள அங்க தான் போயிருக்கிறாரோ!”
“அவர் அங்க போயிருக்க மாட்டார் சித்தி!” சட்டென்று மறுத்தவள், “கடைசிவரைக்கும் போயிருக்க மாட்டார்!” என்றாள், ஒருவகை நம்பிக்கையுடன்.
பின், லக்ஷ்மியை வற்புறுத்தி படுக்கைக்கு அனுப்பிவிட்டு அதே இடத்தில் வந்தமர்ந்தவள் மனதோடு சேர்ந்து விழிகளும் கலங்கத் தொடங்கின.
மணி பன்னிரெண்டை நெருங்குகையில் முன்கதவு திறக்கும் சத்தம் கேட்டு அதிர்ந்து திரும்பிய சிந்துவின் பார்வையில் விழுந்தான், கலங்கிய முகமும், களைத்த தோற்றமாகவும் நின்ற அவளின் அன்புக் கணவன்!
அவன் உருவைக் கண்ட மறுநிமிடம் எழுந்தோடியவள், அவனை இறுகக் கட்டிக்கொண்டு ஓவென அழுதுவிட்டாள்.
கோபத்தோடு புறப்பட்டுச் சென்றவன் இத்தனை நேரமாக வரவில்லையே என்கின்ற தவிப்பில் தளர்ந்து போயிருந்தவள் அழ, மனைவி மீதிருந்த ஆத்திரத்தால் அவளை விலக்க முற்பட்டான், ரகு.
அவன் கைகள் அழுத்தத்துடன் தன்னை விலக்குவதை உணர்ந்து கொண்டவளுள் சட்டென்று தலைதூக்கியது, ஆத்திரம்!
நீர் கசியும் விழிகளுடன் கணவனை முறைத்தாள், சிந்து
“சொல்லாமல் கொள்ளாமல் போய் இவ்வளவு நேரமா எங்க ஊர்சுத்திட்டு வாறீங்க? போதாக்குறைக்கு முறைப்பு வேற!” கேட்டுக்கொண்டே, அவன் சற்றும் எதிர்பாரா வண்ணம், அவன் நெஞ்சில் கரம் பதித்து மூடிய கதவோடு தள்ளியவள், “நான் பட்ட பாடு எனக்கல்லோ தெரியும்!” இரு கைகளாலும் அவன் நெஞ்சில் குத்தத் தொடங்கினாள்.
கட்டிப் பிடித்து அழுதவளை சினத்தோடு விலக்க முற்பட்டவனோ, அதிர்வில் அப்படியே அசையாது நின்றது சில கணங்கள் தான்!
முகம் கோபத்தில் ஜொலிக்க, விழிகளில் நீர் வடிய தன் நெஞ்சில் குத்துபவள் கரங்களை இறுகப் பற்றியவாறே, தானும் நெருப்புப் பார்வையில் அளந்தான், ரகு.
“லூசாடி நீ! இந்தக் குத்து குத்துற? அப்ப நீ கதைச்ச கதைகளக் கேட்டுக் கொண்டிருந்திட்டு உன்னோட ஓடிப் பிடிச்சு விளையாட வேணும் எண்டா எதிர்பார்க்கிற!?
முதல் உன்ர மனசில் என்னைப் பற்றி என்ன நினைச்சுக் கொண்டிருக்கிற? இழிச்சவாயன் எண்டா?
உனக்கும் எனக்கு எந்தக் கதையும் வேணாம் சொல்லிட்டன்! ஒரு முடிவோடதான் திரும்பி வந்தனான்!” என்றவன் குரல் உயரவில்லை என்றாலும் அதன் கடுமையில் அப்படியே அதிர்ந்து நின்றாள், சிந்து.
“யாழ்பாணம் போகப் போறன் எண்டு சொல்லிப் பயமுறுத்துறியா? முதல் அதச் செய்! துலைஞ்சாய் எண்டு மனிசன் நிம்மதியாக இருக்கலாம். நான் என்ர வழியப் பார்க்கிறன்; நீ உன்ர வழியப் பார்த்துக்கொண்டு போ! தாராளமாகப் போ!” உறுமிக்கொண்டே அவளை விலக்கியவன், விறுவிறுவென்று மாடியை நோக்கிச் சென்றான்.
கணவன் வாய்மொழி கேட்ட சிந்துவோ உறைந்து நின்றாள் என்றால், இதுவரை நடந்தவற்றைப் பார்த்திருந்த லக்ஷ்மி செய்வதறியாது அதிர்ந்து நின்றார்.
சிறிது நேரம் அசையாது அப்படியே நின்ற சிந்து, கண்ணீருடன் நின்ற லக்ஷ்மியைக் கண்டதும் தன் விழிநீரை உள்ளிழுத்துக் கொண்டவளுக்கு இதயம் வெகுவாகக் கனத்தது! எதற்கோ ஆரம்பித்த பேச்சுவார்த்தை, இப்போ எங்கேயோ நகர்ந்து விட்டதை உணர்ந்து கொண்டவளுக்கு லக்ஷ்மியின் முகம் நோக்கவே மிகுந்த தயக்கமாக இருந்தது.
வேண்டவே வேண்டாம் என்று மறுத்தவராச்சே! அவர் அனுபவம் சொன்ன விடையல்லவா அது; அதை இவள்தான் சரியென்று ஏற்கவில்லையே!
இப்போதும், ‘நான் கதைச்ச வார்த்தைகள் பிழையா, அளவுக்கு அதிகமா இருக்கலாம்!’ என நினைத்துக்கொண்டவள், “பச்…அப்பிடிக் கதைக்காம இருந்திக்கலாம் தான்; அதுக்கெண்டு ரமேஷ் விசயமாச் சொன்னதில எந்தப் பிழையுமே இல்ல; அவேட விருப்பத்தத் தட்டிக் கழிக்க நினைக்கிறதும் எந்த விதத்திலும் நியாயமும் இல்ல!’ அவள் மனமோ முனகியது.
மெல்ல, தன் அறை வாயிலில் நின்ற லக்ஷ்மியை நெருங்கியவள், “அவர் அப்பிடிச் சொன்னதப்பற்றி எல்லாம் பெரிசா எடுக்காதீங்க சித்தி! கோவத்தில கதைக்கிறார்; என்னிலும் பிழ தானே!” கன்றிய குரலில் சொல்லி அவரை அறையினுள் அழைத்துச்சென்றவள், “நான் அவரச் சமாதானம் செய்திருவன்; நீங்க யோசியாமல் தூங்குங்கோ சித்தி; இதெல்லாம் பெரிய பிரச்சினையா என்ன?” முறுவலிக்க முயன்றவள் விழிகளோ மீண்டும் நிரம்பின!
“இதுக்குத்தான்மா, இந்தப் பிரச்சின உனக்கு வேணாம் எண்டன்! பார், எங்க தொடங்கி எங்க வந்து நிற்குது!” என்றவர், “உனக்கும் தான் கோபம் வந்தா எதைக் கதைக்கிறம் எதைச் செய்யிறம் எண்டு தெரியுதில்லையே! இவ்வளவுக்கும் நீ ஒரு டீச்சர்; நீயே இப்பிடி நடந்து கொண்டா எப்படிம்மா?” கடிந்து கொண்டவரை சமாதானப்படுத்திப் படுக்க விட்டவள், அடுத்த நிமிடம் மாடியை நோக்கி நகர்ந்தாள்.
தன் மீது கட்டுக்கடங்காத கோபத்துடன் இருக்கும் கணவனை எப்படியும் சமாதானம் செய்ய முடியும் என்ற நம்பிக்கையோடு மாடியேறியவள், இருள் போர்வையிலிருந்த அறையினுள் நுழைந்து, கருமைக்கு விழிகள் பரிச்சியம் ஆகும் வரை சிறிது பொறுத்து நின்றவள், கணவன் வழமையாகத் தூங்கும் இடத்தில் படுத்திருப்பதைப் பார்த்துவிட்டு, மெதுவாக அவனை நோக்கி நகர்ந்தாள்.
மிதமிஞ்சிய சினத்துடன் விழிகள் மூடிப்படுத்திருந்த ரகு, மனைவியின் கரம் தன் தோளைப் ஸ்பரிசித்த மறுகணம், ”ச்சீ” மிகுந்த வெறுப்போடு அவள் கரத்தைத் தட்டி விட்டான்.
அவன் அப்படித் தட்டி விட்டதும், ”நீ என்னடா என்னைச் சீ எண்டு சொல்லுறது? நானா இனி உன்னோட கதைக்க வாறனா பார்! என்னைப் பற்றி என்ன நினைச்சுக் கொண்டாய்?” இப்படி முறுக்கிக்கொண்டு முகத்தை திருப்பிக்கொண்டு போனால், அவள் சிந்து இல்லையே!
‘அட! ஒருதரமில்லை நூறு தடவைகள் நீர் முறைச்சாலும் முறுக்கினாலும், தட்டினாலும் குட்டினாலும் அதுகெல்லாம் மருளுற ஆள் இந்த சிந்து இல்லையப்பா!’ சிந்துவின் மனம் நிமிர்ந்து, கொந்தளித்துப் போன கணவனைப் பார்த்துக் கண்ணடித்தது!
“இண்டைக்கு உம்ம என்னோட கதைக்க வைக்கேல்லையோ நான் சிந்துவே இல்லையாக்கும்!’ அவனுக்கே சவால் விட்டது அவள் மனம்; அதை முழுமையாக ஏற்றுக்கொண்ட அவள் கரமோ, மறுபடியும், சிறிது அழுத்தமாக அவன் தோளில் படிந்தது!
ஒரு வருடத்திற்கு மேல் அவளுடன் வாழ்ந்தவனுக்கு மனைவி பற்றித் தெரியாதா?
அதனால், இன்னமும் சினம் அதிகமாக அவள் கரத்தை இறுகப் பற்றியவாறே, ” இங்க பார், மற்ற நாட்கள் போல இண்டைக்குக் கதைப்பன் எண்டு மட்டும் கனவு காணாத! உனக்கும் எனக்கும் ஒத்த வார்த்தை தேவையில்ல. கண்டறியாத ஒரு கலியாணத்தால மனிசனின்ட மொத்த நிம்மதியே போச்சு!” உறுமியபடியே படுக்கையை உதறிக்கொண்டு எழ முயன்றான்.
கணவனின் குரல் கடுமையுடன் செவிகளில் வந்து மோத, உக்கிரமான அவன் பார்வையில் கலந்த சிந்துவின் பார்வையோ நீரால் மறைந்து போனது!
அடுத்த நொடி “ர..கு..” அப்படியே அவன் நெஞ்சில் தன் முகத்தைப் புதைத்தவள் கதறி அழுதுவிட்டாள். அப்போதும் அவளை உதறி விட முயன்றவனை, அப்பால் இப்பால் நகர விடவில்லை, அவள்.
அவள் தந்த அழுத்தத்தில் மீண்டும் கட்டிலில் சரிந்தவன் மனமோ, மனைவியின் அழுகையை செவிமடுக்க மறுத்து அடம் பிடித்தது.

