நீயில்லாது வாழ்வேதடி 9 – 2

அந்தளவுக்கு அவள் பேச்சினால் இரணப்பட்டிருந்தது, அவன் மனம்.
அவள் அழுகையோ சற்றும் குறையாது வலுக்கவே, மெல்ல மெல்ல ஆட்டம் கண்ட அவன் அன்பு கொண்ட மனம், கொஞ்சம் கொஞ்சமாக இளகிக் கரையத் தொடங்கியிருந் தது.
மெல்ல உயர்ந்த அவன் கரம் நெஞ்சில் அழுந்தப் படிந்திருந்த மனைவியின் சிரத்தில் படிந்து சிறு அழுத்தத்தோடு தடவியது.
இதயம் பிசைய, “இப்ப ஏன்டி இந்த அழுகை! நானல்லோ இப்பிடி அழ வேணும்! சொல்லுறத எல்லாம் கொஞ்சமும் கூசாமல் சொல்லிட்டு ஒண்டுமே இல்லை போல அழுகிறியே!” என்றவாறே, அவள் தலையை நிமிர்ந்த முயன்றான்.
அவளோ, இன்னும் அதிகமாக அவன் நெஞ்சில் அழுந்தினாள்.
“சிந்து…இங்கபாரன்! தயவு செய்து முதல் இந்த அழுகைய நிப்பாட்டு!” சொன்னவனின் ஒருகரம் மனைவியை அணைத்துக்கொள்ள, மறுகரத்தால் அவள் தலை கோதினான், அவள் புருசன்.
“அழாத சிந்து, நெஞ்சு எல்லாம் வலிக்குது! என்னைப் பார்த்து அப்பிடி ஒரு கேள்வி கேட்டிட்டியே! என்ர உயிரே போன மாதிரி இருந்ததடி!” கலங்கி ஒலித்த குரல், அவன் மனைவியின் இதயத்தைக் குத்தியது!
“உன்ர வாயில இருந்து இதை நான் எதிர்பார்க்கவே இல்ல சிந்து; உண்மையாவே எதிர்பார்க்கேல்ல! என்ர வாழ்க்கையில முதல் நடந்தத நானே மறந்திட்டன்; ஆனால், நீ அதை மறக்கவே இல்லை என்ன?”
சட்டென்று நிமிர்ந்தாள் சிந்து!
“அய்யோ அப்பிடியெல்லாம் இல்லவே இல்ல ரகு; ஏதோ பேச்சுவாக்கில …நீங்க …புரிஞ்சு கொள்ள மாட்டன் எண்டு அடம்பிடிச்ச கோவத்தில சொல்லிட்டன்! மற்றும் படி… நான் அதையெல்லாம் நினைக்கவே இல்லை.” கண்ணீரோடு தடுமாறி, அவன் கழுத்து வளைவினுள் முகத்தைப் புதைத்துக் கொண்டாள்.
“என்னில கோவம் கொள்ளுறன் எண்டு நினைச்சு உன்னை நீயே வருத்தப்படுத்தாத சிந்து! என்ர வாழ்க்கையில நீ மட்டும் தான்; அதில் உனக்கு சந்தேகமே வரக்கூடாதடி!” தொடர்ந்தவன், வாயை இறுகப் பொத்தினாள் சிந்து.
“சொறி சொறி ரகு …இந்துவும் ரமேஷும் சந்தோசமா இருக்க வேணும் எண்டு நினைச்சு எதையோ கதைக்கப் போய், நீங்க அதுக்கு மறுக்க, சொறிப்பா…ப்ளீஸ்…” தழுதழுத்தவளை, அவள் கணவனின் கரங்கள் இறுக அணைத்துக்கொண்டன!
கடந்த சில மணிநேரங்கள், நெஞ்சமெல்லாம் வியாபித்து தலைவிரித்தாடிய வேதனையின் இறுகிய பிடி மெல்ல மெல்லத் தளர, மனைவியை வளைத்துக் கொண்டவன் மனம் இதத்தை உணர ஆரம்பித்தது!
திருமணம் முடித்து ஒருவருடத்திற்கு மேலே தான் ஆகியிருந்தாலும், ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து கொண்ட, மாறாத நேசத்தில் இணைந்த இருவராலும், இத்தகைய சிறுசிறு விரிசல்களைப் மனஸ்தாபங்களைப் பெரிது படுத்தாது , மீண்டும் இணைய ஒருவர் மீது ஒருவர் கொண்டிருந்த நேசம் உதவியது.
“இந்துவில உங்களுக்கு துளியும் மனஸ்தாபம் இருக்கக்கூடாது, அது தேவையே இல்ல எண்டு என்ர மனம் விரும்புறதில தப்பிருக்கா ரகு!?” அவனோடு அணைந்தபடி மீண்டும் ஆரம்பித்தவளை, நன்றாகவே முறைத்தான், ரகு.
“நான் அவேட விசயத்தில கதைச்சதில பிழையேதும் இருப்பதா எனக்குத் தெரியேல்லா ரகு!”
“இந்துவின் அக்கா மட்டும் அந்த ஓட்டம் போடாவிட்டால் எனக்கு…எனக்கு…நீங்க ”என்றவள் விழிகள் மீண்டும் குபுக்கென்று நிறைந்து கொண்டன!
“நான் உங்கட வாழ்க்கையில வந்திருக்க மாட்டன் தானே? அதுக்காகவே நான் இந்துக்கு ஹெல்ப் பண்ண வேணும்!” என்ற மனைவியை தானும் கலங்கிய விழிகளோடு இறுக அணைத்துக்கொண்டான், ரகு.
மனைவியின் பேச்சு ஏற்படுத்திய கோபத்தில் அவள் ஏன் அப்படிச் சொல்ல முனைந்தாள் என்பதை ஆராய மறந்தவனுக்கு, இப்போது மனைவியின் மனதில் இருந்த ஏக்கம் புரிந்தது.
வேண்டாம் என்று போனவளில் கோபம் பாராட்டினால், அதையே சாக்காக வைத்து உயிராக விரும்புபவர்களை பிரிக்கத் தாயாரானால், ‘உதறிப் போனவள் இழப்பில் இன்னமும் வருந்துகிறாயா என்றுதானே நினைப்பாள்!’ அவன் மனம் முணுமுணுக்க, “சிந்தும்மா..எங்கள சரியா அவமானப்படுத்திய குடும்பம் அது; அப்பிடி மட்டுத்தான் என்ர மனசில இருக்கு! அதனாலதான் சரிவராது எண்டு மறுப்புச் சொன்னன்! மற்றுபடி வேறெதுவும் இல்லையம்மா…நீ ஏன் அப்பிடியெல்லாம் நினைக்கிற சொல்லு! அசடு!”
“இப்ப இப்பிடிச் சொல்லுங்க, கொஞ்சம் முதல், இதுதான் சாட்டெண்டு என்ன எல்லாம் சொன்னீங்க?” அவள் கேட்ட தொனியில் கலங்கிய விழிகளோடு நகைத்தான், அவள் கணவன்.
“அது வந்தடா…ஒரு கோவத்தில சொல்லுறதுதான்! அதப் போய்ப் பெரிசு படுத்திறதா? ஒரு காதால கேட்டு மற்றதால விட்டிர வேணும்.”
“சொல்வீங்க சொல்வீங்க! இதுதான் சாட்டெண்டு, ஏதோ ஒவ்வொரு நிமிசமும் நான் உங்களக் கொடுமைப்படுத்திறது போல எல்லா சொன்னீங்க! அதுமட்டுமா?” சிலிர்த்துக்கொண்டு ஆரம்பித்தவள் பேச்சை, தற்காலிக நிறுத்தம் செய்யும் பணியில் இறங்கியிருந்தான், அவள் கணவன்.
சிலமணிநேரங்களாக மாறி மாறிச் சீறிக்கொண்டிருந்த உள்ளங்களிரண்டும் ஆசுவாச மூச்சுடன் அமைதியடைந்திருந்தன!
சிறிது நேரத்தின் பின், “இங்க பாருங்க மேடம், கொஞ்ச நாளைக்கு ரமேஷ் விசயம் பற்றி ஒத்த வார்த்த வரக்கூடாது; கொஞ்சம் பொறுமையா இரும்; என்ன செய்யிறது எண்டு யோசிப்பம்!”
“இதில என்னப்பா யோசிக்க இருக்கு!” மீண்டும் ஆரம்பித்தாள் சிந்து.
“மணி ரெண்டுக்கும் மேலாகிட்டுது; கொஞ்சநேரம் தூங்குவம்; பிறகு இதப் பற்றிக் கதைக்கலாம்.” முற்றுப்புள்ளி வைத்தவனைப் பொய்யாக முறைத்தாலும், அவள் மனதில் நம்பிக்கை மலையளவுக்கு வளர்ந்திருந்தது!
“ம்ம்..தூங்குவம்…” என்றவள், சட்டென்று நினைவு வந்தவளாக எழுந்தமர்ந்தாள்.
“என்ன சிந்து!”
“இல்லப்பா, கடைசிவரை சித்தி நித்திர கொண்டிருக்க மாட்டார். கவலைப்பட்டுக் கொண்டிருப்பார்; வாறீங்களா போய்ப் பார்த்திட்டு வருவம்!” கட்டிலை விட்டு இறங்கியவாறே கேட்க, “ம்ம்ம்..நடவும்..” என்று, தானும் அவளோடு சேர்ந்து கொண்டவன், “ஒரு அப்பாவிப் பெடியனுக்கு ராட்சசியைக் கட்டிக் குடுத்து, அவன் படுற பாட்ட கூட இருந்து பார்க்க வேண்டி இருக்கே எண்டு கவலைப்பட்டுக் கொண்டிருப்பார்; கொஞ்சம் கெதியா நடவும்!” என்றவன், முறைத்த மனைவியின் இடையில் கைபோட்டு இழுத்தணைக்க, திமிறினாள் அவள்.
”ஓஹோ ராட்சசியா!? அப்ப ராட்சசி என்ன செய்வாள் எண்டு காட்டவா?” அவன் கழுத்தில் கை வைக்க, ”அட….அட….அதை இனித்தான் காட்டப் போரீரா? இப்ப நீர் செய்யிறது எல்லாம் என்னம்மா! ” என்றதும், சட்டென்று நடை பின்ன, கலங்கிய விழிகளோடு கணவனை ஏறிட்டாள், சிந்து.
“பச்.. திரும்பவுமா? வேணாம்மா! இண்டையான் பொழுதுக்கு இவ்வளவுமே போதும் டா!” என்றதும், “சொறி ரகு…” என அவனோடு ஒன்றியவளை, “ம்ம்…விடும் விடும் கழுதைக்கு வாழ்க்கைப்பட்டா பொதி சுமந்துதான் ஆகவேணும்!” அவனது கேலிக்குச் செல்லமாக முறைத்து, பதிலடி கொடுத்தவாறே படிகளால் இறங்கினார்கள்.

சிந்து மேலே சென்றவுடன், நித்திரை வராது தவித்த லக்ஷ்மி, ‘பிள்ளைகள் ரெண்டுபேருமே ஒருத்தர் ஒருத்தரில பற்றும் பாசமும் கொண்டவே; ஆனாலும், இப்படியா முட்டிக் கொள்ளுறது!’ கலங்கி, தெய்வங்களை துணைக்கழைத்தவாறே முழித்திருந்தார்.
மகள் திருமணத்தின் பின் அவர் மனதில் குடிவந்திருந்த, நிம்மதி, சந்தோசம் எல்லாமே காணாமல் போயிருந்தது.
‘’இதையெல்லாம் பார்க்க வேணும் எண்டு என்ர தலையில எழுதி வச்சிருக்கிறானே! ” மனம் தொய்ந்தவர், வாய்விட்டே முணுமுணுத்துக்கொண்டார்.
‘இத இப்ப எப்பிடிச் சரி செய்யிறது? இந்த விசயம் நாளைக்கு ரகுட அப்பா காதுக்குப் போகேக்க என்ன நடக்கும்?!’ மனதில் குமைந்தபடியே இருந்தார்.
அச்சமயம் அவர் அறைக்குள் நுழைந்தனர் ரகுவும் சிந்துவும்.
அவர்கள் இருவரையும் ஒன்றாகப் பார்த்தவர், நம்பவே முடியாமல் விழி விரித்தபடி சட்டென்று படுக்கையிலிருந்து எழுந்தமர்ந்தார்.
‘இவ்வளவு நேரமா பாம்பும் கீரியுமா சண்டை போட்டதுகள் ரெண்டும் ஒண்டா, அதுவும் இவ்வளவு கெதியா!’ லக்ஷ்மியின் மனம் வாய்பிளக்க, அதைத் துல்லியமாகப் பிரதிபலித்தது, அவர் முகபாவனை.
அவரைப் பார்த்து மெலிதாகச் சிரித்தான், ரகு, ”மாமி, இப்ப மணி என்ன தெரியுமா? இப்பிடி நித்திர முழிச்சா உங்கட உடம்புக்கு ஒத்துக்கொள்ளுமா சொல்லுங்க பார்ப்பம்!” என்றபடி அவரருகில் அமர்ந்து கொண்டவன், ஆறுதலாக தோளோடு வளைத்துக்கொள்ள, சங்கடமாக நெளிந்தார் லக்ஷ்மி.
“மாமி நான் ஆர்? சிந்து உங்கட மகள் எண்டா நான் உங்கட மகனில்லையா? என்றவன் பேச்சில் விழிகள் நிறைய, “அதில என்னய்யா சந்தேகம்! நீங்க ரெண்டுபேருமே எனக்கு ஒண்டுதான், என்ர குழந்தைகள்!” மனதிலிருந்த அழுத்தம் விழிகளால் வழியச் சொன்னவரின் மறுபுறம் அமர்ந்து, “சித்தி..இதென்ன?” என்றவாறே அவரை கட்டிக்கொண்டாள், சிந்து.
“குடும்பம் எண்டால் சண்டை சச்சரவு வாறது எல்லாம் சகஜம் தானே மாமி? அதுக்கெல்லாம் இப்பிடிக் கலங்கிறதா?” என்ற ரகு, மனைவியின் விழிகளை அன்போடு ஊடுருவியவாறே, “ஆனா பாருங்க, நாங்க ரெண்டு பேரும் அடிச்சுக் கொள்ளுற வேகத்தில சேர்ந்தும் விடுவம்; அதனால, நீங்க மனசப் போட்டுக் குழப்பிக் கொள்ளாமப் பேசாமத் தூங்குங்க!” என்று கூற, ”என்ர ராசா… இப்பிடி ஒரு தங்கமான பிள்ளைகிடைக்க நாங்க எவ்வளவு குடுத்து வச்சிருக்க வேணும்?!” மனதாரக் கூறி, நெஞ்சம் நிறைந்தார் லக்ஷ்மி.
அதோடு நிறுத்தாது, மகளை முறைக்கவும் செய்தார்.
“நல்லது கேட்டது சொல்லித்தான் உன்ன வளர்த்தன் எண்டு நினைக்கிறன்; அந்த நினைப்பில மண்ணள்ளிப் போட்டிராத சிந்து.” ஆரம்பிக்க, “அதுதான் கோவத்தில கதைச்சிட்டன் எண்டு சொல்லுறனே சித்தி! உங்கட மருமகன் மட்டும் திறமா? கெதியா வெளிக்கிட்டு யாழ்பாணத்துக்கு நடையைக் கட்டு எண்டு சொல்லேல்லையா? அதெல்லாம் சரியா? அப்ப நானும் தான் கோவப்படுவன்!”
கணவனைப் பார்த்துக் கண்ணடித்தவாறே அவனைக் குற்றவாளிக்கூண்டில் நிறுத்த, தொடர்ந்து முறைத்தார் லக்ஷ்மி.
“இல்ல சித்தி, உங்கட மருமகன் ஒழுங்கா இருந்தா நானும் ஒழுங்கா இருப்பன் எண்டு சொல்ல வாறன்.” முகம் மலரச் சொன்னவளை, ”கொழுப்படி உனக்கு! நல்லா இவர் செல்லம் தாறார்; அதுதான் எல்லாத்துக்கும் காரணம்.” கோபமாகச் சொன்னார் லக்ஷ்மி.
‘விளையாட்டு வினையாகி இருந்தால்!’ அவர் மனம் கிடந்தது அடித்துக் கொண்டது.
மனைவியின் பேச்சை மலர்ந்த முறுவலோடு பார்த்திருந்த ரகு, “விடுங்க…விடுங்க மாமி, எல்லாம் நம்மட தலை விதி!” என்று, தன் நெற்றியில் பெருவிரலால் கோடு போட்டுக்கொண்டே, தன்னவளை நேசத்தோடு பார்த்துக் கொண்டெழுந்து, “சரி மாமி, கண்டதையும் யோசிச்சுக் குழம்பாமல் நிம்மதியாத் தூங்குங்க. நாங்களும் தூங்கப் போறம்!” என்றபடி, மனைவியோடு கிளம்பினான்.
அவர்கள் செல்வதையே பார்த்திருந்த பெரியவரும், ‘இந்தக் காலத்துப்பிள்ளைகள் சின்ன சின்ன விசயங்கள பெரிசுபண்ணி குடும்பங்கள, உறவுகள உதறுறது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு ஒருத்தர் ஒருத்தரப் புரிஞ்சுகொண்டு இணைபிரியாம வாழ முயலுறதும் உண்மை!’ மனதில் வியந்தவர், ”ஈஸ்வரா! எண்டைக்கும் இந்தப் பிள்ளைக்கள் இப்பிடியே சந்தோசமா இருக்கவேணும்! ” கடவுளை நேர்ந்தபடி படுக்கைக்குச் சென்றார்.

error: Alert: Content selection is disabled!!