அத்தியாயம் 10.
“எப்போதுமே என் செல்லமகள் இராசியானவள்!” ஏஞ்சலின் தாய் எம்மா அடிக்கடிச் சொல்வதை மெய்யாக்கும் வகையில் அன்று அதிகாலை இந்தியாவிலிருந்து ஃப்ரான்ஸ் புறப்படும் விமானத்தில் இடம் கிடைத்திருந்தது அவளுக்கு.
“மேடம், நீங்க ரொம்பவும் லக்கி!” முகம் முழுவதும் மலர்ந்த நகையுடன் சொன்ன விமானநிலைய அலுவலகப் பெண்ணை மெல்லிய முறுவலுடன் பார்த்தவளிடம், ‘அட அப்படியா ஏஞ்சல்! இது எந்தளவுக்கு உண்மை?’ அவளுள்ளம், கணமும் தாமதியாமல் கேலியுடன் கேள்வி கேட்டது.
‘இதுவரை உன் இதயத்தில் எந்த ஆண்மகனையும் அனுமதிக்காதவள், அனுமதியின்றியே உள்ளே சென்றமர்ந்தவனை அப்படியே உதறித் தள்ளிவிட்டு வந்து கொண்டிருக்கின்றாயே! நீயெல்லாம் அதிஸ்டக்காரியா?!’ மீண்டும் கோபத்துடன் சீண்டிப் பார்த்தது அவளுள்ளம்.
உள்ளத்தின் ஆழத்தில் எழுந்த வலியை கசப்புடன் உணர்ந்து கொண்டவள், அதைத் தாங்காது கால்கள் துவள, வெகுவாகத் தன்னை கட்டுப்படுத்திக்கொண்டே சற்றுத் தள்ளி நிற்கும் மனோவை நோக்கி வந்தாள்.
அங்கே அவனோ, எப்போதும் மலர்வாகவே இருப்பவன், இன்று முகம் இறுகி, விழிகளில் தன் கோபத்தை அப்பட்டமாக வெளிப்படுத்திக் கொண்டு நின்றிருந்தான்.
தன்னை நோக்கி வந்தவளை ஏறிட்டவனுக்கு அவளை நினைத்தால் மிகவும் பாவமாக இருந்தாலும், அவளின் பிடிவாதத்தின் முன்னால் தோற்று விட்டதில் விசனமே மிஞ்சியது.
எப்போதும் நிமிர்வாக நடந்து கொள்ளும் தன் நண்பனை இன்று இவள் கலங்கடித்து அனுப்பியதையும், அவனையும் அவன் அன்பையும் தூசி தட்டி விடுவது போல உதறி விட்டு அவள் புறப்பட்டுள்ளதையும் பார்க்கும் போது, இதுவரை அவள் மீது கொண்டிருந்த பாசமும் நட்பும் இப்போது கோபமாக உருவெடுப்பதை உணர்ந்தவன், தன்னை நோக்கி முயன்று முறுவலித்தவளுக்கு தயக்கமேயின்றி முறைப்பைப் பதிலாகக் கொடுத்தான்.
“ஹப்பாடா இப்போது தான் நிம்மதியாக இருக்கு!” என்றவள், அப்போதும் முறைத்தவனிடம், “டிக்கெட் கிடைத்து விட்டது மனோ.” சொன்னதும் அவன் போட்ட, “ஓ!” என்ற ஒற்றைச் சொல்லில் அவன் மனதை அறிந்து கொண்டாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் தொடர்ந்தாள் அவள்.
“அப்போ, நான் போய் வருகிறேன் மனோ. இனி என்னைப் பார்க்க வேண்டும் என்றால் நீங்க தான் அங்கே வர வேண்டும்; வருவீங்க தானே?!” தன் வருத்தம் மறைத்து புன்முறுவலுடன் வினவினாள்.
“ஆன்ட்டியையும் அழைத்துக் கொண்டு வாங்க; சுற்றிப் பார்த்து விட்டு வரலாம்.” தொடர்ந்து தாராள மனதோடு அழைப்பை முன் வைத்தவளை தணல் விழிகளால் சுட்டான் அவன்.
“நீங்க வீட்டுக்குப் போங்க மனோ, இனி நான் போய்க் கொள்வேன். மணியைப் பாருங்க சாமம் ஆகிவிட்டது.” என்று விட்டு,
“கவனமாகப் போங்க மனோ.” என்றவளைப் பார்க்கையில், ‘எனக்கு மட்டும் இவள் சகோதரியாக இருந்திருந்தால் இப்படி இவள் எண்ணத்துக்கு விட்டு விடுவேனா?’ என, தோன்றிய ஏக்கத்துடனேயே அவளிடம் விடை பெற்றுக் கொண்டான் அவன்.
மனோ செல்வதையே பார்த்திருந்து விட்டு உள்ளே நுழைந்த ஏஞ்சல், தான் விமானம் ஏற வேண்டிய வாயிலருகில் அமர்ந்திருந்த பயணிகளுடன் சென்றமர்ந்து, சுற்றிலும் ஒருவித அவசரத்துடன் நடமாடும் பயணிகளைப் பார்த்தபடியே சிறிது நேரம் இருந்தவள், பின் ஆயாசமாக கண்களை மூடிக் கொண்டாள்.
மூடியிருந்த கலங்கிய விழிகளுள் பல வர்ணங்கள் ஜாலம் புரிந்தன!
அதேபோல, அவள் மனதினுள்ளும் பலவித கலவையான உணர்வுகள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து முட்டி மோதிக் கொண்டது.
இவற்றினிடையில் பேரொலிச் சிதறல்களாக எழிலின் கண்டனப் பார்வையுடன் கூடிய கம்பீர முகமும் மின்னி மின்னி மறைந்தது.
சட்டென்று ஒரு அவசரத்துடன் இமைகளை பிரித்துக் கொண்டவள், நெஞ்சம் அடைக்க, அவனைத் தேடி ஓடத் துடித்த கால்களை இறுக்கிப் பிடித்துக்கொண்டே விமானத்தில் ஏறுவதற்காக காத்திருந்தாள்.
தன் பெற்றவளையோ தான் பிறக்கக் காரணமாக இருந்தவனையோ காணும் ஆவலில் இந்தியா வந்தவள், இங்கே, நெஞ்சை நிறைத்த நேசத்தை சந்திபாள் என கணமும் நினைத்துப் பார்க்கவில்லையே!
எழில் கூறியது போல, “பார்த்த கணத்திலிருந்து உங்களால் நான் பாதிக்கப்பட்டேன்!” என, அவளால் நிச்சயம் வசனமும் பேச முடியவில்லை.
ஆனால், ‘அவருடன் அப்பபோ செலவவிட்ட இந்த சில நாட்களில், என் மனம் எந்தவித முன்னறிப்புமின்றியே அவர்பால் சாய்ந்து விட்டதை நிச்சயம் ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும்!’ என எண்ணிக் கொண்டவள்,
‘நாம் திருமணம் செய்து கொள்வோமா என்று அவர் கேட்டதற்கு நான் துளியும் மறுப்புச் சொல்ல நினைக்கவில்லையே! என்னையறியாமலேயே அவர் என்னுள் நுழைந்து விட்டார் தான்.’ இப்படித் தன் மனதை உணர்ந்து கொண்டதும், மிகவும் சிறிதாக கசந்த முறுவல் ஒன்று அவளிதழில் உதித்து மறைந்தது.
“ஆமாம் எழில். என் வாழ்வில் உங்களை என்னால் மறக்கவே முடியாது. அதேவேளை, உங்களுடன் என் வாழ்வைப் பகிர்ந்து கொள்ளவும் முடியாது” மெல்ல முணுமுணுத்துக் கொண்டவள், அதையே தடுமாறும் தன் உள்ளத்துக்கும் கடுமையாக கட்டளையிட்டுக் கொண்டாள் .
“எனக்குத் தெரிந்ததை நான் சொல்கிறேன்; கேட்டபின், உன்னை வெளிப்படுத்தாமல் சென்று விடு!” என்ற எச்சரிக்கை கலந்த கோரிக்கையையின் அடிப்படையில் தான், அவள் பிறப்பில் தான் அறிந்ததைக் கூறியிருந்தார் பாரதி அம்மா.
அப்படியிருக்க, ‘என் உணர்வாகி விட்ட எழிலுடன், அதுவும் என் உரு மற்றவர்களுக்கு என்னை வெளிப்படுத்தும் வகையில் இருக்கையில் நான் எப்படி இணைந்து வாழ்வது?
எல்லாவறையும் விட அவனுக்கும் அவன் அத்தை பெண்ணுக்கும் கல்யாணமும் பேசி இருக்கையில்! எழில் அதை அசட்டையாக நினைத்தாலும், என்னால் அப்படி அந்தப் பெண்ணின் மனதை முறிப்பதை அசட்டையாக நினைக்க முடியுமா? இல்லை முடியவே முடியாது.’ மனதுள் முணுமுணுத்தவள், ‘அப்பெண்ணின் கண்ணீருக்கு நீ காரணமாகிவிடாதே!’ தனக்குத் தானே கடுமையாக எச்சரிக்கை செய்து கொண்டாள்.
கண்டு பழகியேயிராத அப்பெண் மீது ஒருவகையான பாசமும் உருவானது அவளுக்கு!
விமானநிலையத்திலிருந்து வீடு நோக்கி காரைச் செலுத்திக் கொண்டிருந்த மனோவின் நினைவுகள் இன்னமும் ஓவியாவைச் சுற்றியே வந்து கொண்டிருந்தது.
“எப்படியென்றாலும் இன்றைக்கே நான் ஃப்ரான்ஸ் போகிறேன்!” என்று புறப்பட்டவளை எவ்வளவோ தடுத்தும் கேட்காததால், மெல்ல அவள் புறப்படும் தகவலை எழிலுக்கு சொன்னான் மனோ.
அதுவும், “எழிலிடம் இதைச் சொன்னால், என் நட்பை இழக்க வேண்டி வரும்!” என்ற ஓவியின் எச்சரிகையையும் மீறி!
தகவல் சொன்னதும் மின்னல் வேகத்தில் விரைந்து வந்தவனோ, வரவேற்பறையில் அமர்ந்திருந்த கமலத்தைக் கண்டதும் ஒருகணம் தயங்கினான்.
“ஆன்ட்டி, நான் ஏஞ்சலுடன் கதைக்க வேண்டும்.” இறுகிய குரலில் சொன்னவனிடம், “தம்பி, அவள் புறப்பட்டுக் கொண்டிருகிறாள். நீங்க நினைப்பது போல அவள் கதைப்பாளோ தெரியாது. வந்த இடத்தில் அவளுக்கு இதுவரை ஏற்பட்ட குழப்பங்களும் பிரச்சனைகளுமே போதும்.” அவள் பற்றிய மொத்தக் கதையையும் தன் மகன் வாயிலாக அறிந்து கொண்டவர் சொல்ல, கணம் கண்கள் மூடித் திறந்தவன் ,
“ஆன்ட்டி, மனோ சொல்லி இருப்பானே, நான் அவளை..” என்றவனை இடையிட்டார் கமலம்.
“சொன்னான் எல்லாம் சொன்னான். ஆனாலும் இப்போது எதையும் பேச வேண்டாம் தம்பி. முதல் அவள் போகட்டும்; பிறகு கொஞ்ச நாட்களில்…நீங்க தானே அடிக்கடி அங்கு போவீங்களே, அப்போ கதைத்துக் கொள்ளலாம்.” அவர் ஒரு வித கண்டிப்புடன் சொன்னார்.
ஓவியாவை இப்படிக் குழப்பமும் தடுமாற்றமுமாக இதுவரை பார்த்திராதவர், அவள் பத்திரமாக தன் வீடு போய்ச் சேர வேண்டும் என்றே விரும்பினார் .
ஆனால் அவர் சொன்னதைக் கேட்ட எழிலோ, “இல்லை ஆன்ட்டி, நான் ஒரு பத்து நிமிடம் அவளுடன் கதைக்க வேண்டும். வீட்டில் அப்பாவிடமும் எல்லாம் சொல்லி விட்டேன்.” பிடிவாதமாகச் சொல்லிக் கொண்டிருக்கும் போது வெளியில் இருந்து வந்தான் மனோ.
“மச்சான், ஓவி எங்கேடா?” கேட்டதும், அவன் தாயைப் பார்த்துக் கொண்டே அவள் ரூமைக் கை காட்ட, விரைந்து சென்று கதவைத் தட்டி விட்டுக் காத்திருந்தான் எழில்.
குளியலறையில் இருந்து அப்போது தான் வெளியில் வந்த ஏஞ்சல், கதவு தட்டப்படுவதை உணர்ந்து, “மனோவா? கதவு திறந்து தான் இருக்கு.” சொல்லிக் கொண்டே தன் கணனியை உயிர்ப்பித்தாள்.
அடுத்த நிமிடம் சட்டென்று உள்ளே நுழைந்த எழில் உட்புறமாக கதவைத் தாழிட, அந்த சத்தத்தில் திரும்பியவள் கொஞ்சமும் அங்கே அவனை எதிர்பார்த்திருக்கவில்லை .

