“ஒரு தரம் போய் அவளைப் பார்த்துப் பேச வேண்டும்.” சிறிது நேரத்தின் பின்னால் சொன்ன கணவரை, இலேசான கலவரத்தோடு பார்த்தார் பரிமளா,
“இப்போ வேண்டாம்பா. இருட்டியும் போச்சு, நாளை காலையில் போய்ப் பார்க்கலாம். இப்போ கோபத்திலும் குழப்பத்திலும் வேண்டாமே. எனக்கு என் பிள்ளையில் நம்பிக்கையிருக்கு. அவன் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செய்யும் ஆளில்லை.” அழும் குரலில் சொன்னவர் மகனைத் தேடும் முயற்சியில் இறங்கினார்.
“அம்மா, மனோ அண்ணாவிடமே கேட்டுப் பார்ப்போமா? அண்ணா அங்குதான் போனாரோ தெரியாது.” சின்னக் குரலில் மகள் சொன்னதும் ஆதி மனோவிற்கு அழைத்தான்.
உடனே அழைப்பை ஏற்ற மனோ, “ம்ம்ம்..வந்தான் அண்ணா. ஆனால்… உடனேயே திரும்பிப் போய் விட்டானே! ஏன் அங்கு வரவில்லையா?!” குழப்பமாகவே கேட்டான்.
“ஓஓ..அப்படியா! வேறு எங்காவது வேலையாகப் போய் இருப்பான்; சரி மனோ.” சொல்லி வைத்தவனுக்கு தம்பி எங்கே என்று குழப்பமாக இருந்தது.
அப்போது தான் அவர்களின் பீச் ஹவுஸில் காவலுக்கு இருக்கும் பெரியவர் அழைத்து, “தம்பி இங்கு வந்திருக்கிறாரம்மா. இரவைக்கு இங்கேயே தங்கப் போவதாகச் சொல்லச் சொன்னார்.” என்ற பின்னர் தான் நிம்மதி மூச்சு விட்டார்கள் அனைவரும்.
“செய்வதை செய்து விட்டு அங்கே போய் இருக்கிறானே!” அதற்கும் இரைந்தார் ராஜசேகர் .
நடு இரவைக் கடந்திருந்தும் நித்திரையின்றிப் புரளும் கணவனை எப்படி ஆறுதல் படுத்துவதென்று தெரியாது தவித்தார் பரிமளா.
“இப்போ நாம் இப்படிக் கவலைப்படுவதால் எந்தப் பிரயோசனமும் இல்லையப்பா. எப்போதோ நடந்த விடயங்களை மாற்றவும் முடியாது. நீங்க கொஞ்சம் ஆறுதலாகப் படுங்க. காலையில் பார்க்கலாம்.” தன்னிடம் கனிவாகச் சொன்னாலும், கலங்கி ஒலிக்கும் மனைவியின் குரலில் இருந்தே அவர் மனநிலையை ஊகித்தார் ராஜசேகர்.
“சரிதான் பரிமளம். என்றாலும், நம்ம மகனுக்கு இப்போது இப்படி ஒரு எண்ணம் வர வேண்டுமா? முதல் நடந்ததை விடுங்க; இப்போ இவன் சொல்வது என்ன அவ்வளவு சின்ன விடயமா?” குரலில் ஆத்திரம் கொப்பளித்தது.
“அப்போ என்னப்பா செய்யப் போறீங்க? இதையெல்லாம் கோமதிப் பெரியம்மாவிடம் கதைத்து பிரச்சனையை இன்னமும் பெரிதாக்காமல்..” கணவனின் கோபம் அறிந்து சொன்னவர், “எழிலுடன் பொறுமையாகக் கதைப்போம்பா..” சமாதானம் செய்தார்.
“பார்த்ததும் அதென்ன காதல்…” அவரால் மகன் செயலை கொஞ்சமும் ஒப்ப முடியவில்லை.
“அதுதானே என்ன கண்றாவியோ! முதல் வெளிநாட்டில் வளர்ந்த பிள்ளைகள்! அந்தப் பிள்ளைக்கு இது எத்தனையாவது காதலோ?! இதெல்லாம் நம்ம குடும்பத்துக்கு சரிவருமாப்பா? கோமதி பெரியம்மா மாதிரியே இருக்கிறாள் என்றால், அதுவே எத்தனை பேரின் கேள்விகளுக்கு வழிவகுக்கும்! என் மகன் இதை எல்லாம் கொஞ்சமும் யோசிக்காமல் ..ச்சே!” மகனின் செய்கையை நம்பவும் ஏற்கவும் முடியாமல் தவித்தார் பரிமளா.
“பொறுங்க விடியட்டும், நானே அவனுடன் கதைக்கிறேன்!” கணவன் மகனுடன் வார்த்தையாடி பெரிய தர்க்கம் ஏற்படுவதில் பரிமளாவுக்கு சிறிதும் இஷ்டமில்லை. அதனால், தானே மகனுடம் கதைக்க முடிவு செய்தார்.
****
ஈசிஆர் ரோட்டிலுள்ள தங்கள் பீச் ஹவுசின் மொட்டை மாடியில் நின்றவாறே கடலை வெறித்துக் கொண்டிருந்தான் எழில்.
சுற்றிலும் இருள் கவிந்திருந்தாலும், தூரத்தில் இரைச்சலுடன் பொங்கும் கடலையே இலக்கின்றிப் பார்த்திருந்தவனின் மனமும், அதற்குப் போட்டியாக இரைந்து கொண்டிருந்தது.
‘எவ்வளவு சொல்லியும் ச்சே! எப்படிப் போக முடிந்தது அவளால்? அதுவும் வாழ்கையில் நாம் ஒன்று சேர்வது என்பது இயலாத காரியம் என்று முற்றுப் புள்ளி வைத்து விட்டு!’ புலம்பியது அவன் மனம்.
தான் மனதில் உணர்ந்த வேகத்திலேயே காதலில் தோற்று விட்டது போன்று, நெஞ்சைக் குடைந்த உணர்வை அடக்கிக் கொள்ள பெரும்பாடுபட்டான் அவன்.
அவள் சொல்லிச் சென்ற ஒவ்வொரு வார்த்தைகளும் அவன் காதில் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தாலும், அவன் அவள் மீது வைத்த நேசத்தையே அவை எள்ளி நகையாடினாலும், அதையெல்லாம் மீறி, அவள் கடைசியாகத் தன்னிடம் சொன்னதை நம்பவே முடியாத அதிர்வுடன் திரும்பத் திரும்ப நினைத்துக் கொண்டவன், மனதில் பொங்கும் சினத்தை கட்டுப்படுத்தும் வழி தெரியாது மிகவும் தடுமாறிப் போனான்.
‘என்னுள் பொங்கும் ஆத்திரத்தை கோபப்படுபவர்கள் மீது காட்ட முடியுமா? அதன் பின் விளைவுகள்?!’ நினைத்துப் பார்த்தவனின் நெஞ்சம் பதறியது.
‘அவள் சொல்வது போல நாங்கள் சேர்வதென்பது எங்கள் இருவர் சம்பந்தப்பட்ட விடயமல்ல என்பது உண்மை தான்!’ கடைசியில் வெறுப்புடன் அவன் மனமும் அதை ஏற்றுக் கொண்டது.
“என்னைப் பற்றி வெளியில் தெரிய வரும் போது, உங்க கோமதிப் பாட்டி குடும்பமும் மங்களா ஜுவல்லரியினரும் நிச்சயம் தலைகுனிய வேண்டி வரும்.” என, ஏஞ்சல் சொன்னது நிச்சயமான உண்மைதான் என்பதை அவனால் புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தாலும்,
அதற்காக, ‘என்னால் அவளை இழக்க முடியுமா?’ தன்னைத் தானே மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டான்.
‘ஏஞ்சலின் உருவம் நிச்சயம் அவள் பற்றிய கேள்வியை என் சொந்தங்கள் மத்தியில் உருவாக்கும்.’ நெற்றியைத் தேய்த்துக் கொண்டவனுக்கு தலை முணுக்முணுகென்று வலித்து, தன் பங்கிற்கு வேதனையத் தந்தது.
‘அவளைப் பெற்றுப் போட்டு விட்டு, அப்படியொரு சம்பவம் நடந்ததாகவே காட்டிக் கொள்ளாது, இன்று நிம்மதியாக வாழ்பவர்களினதும், அவர்களைச் சார்ந்தவர்களினதும் மனநிம்மதி நிச்சயம் கேள்விக் குறியாகும்!’ என நினைத்துக் கொண்டவனுள், ஓடிச் சென்று அவர்களைப் பிடித்து வைத்து வார்த்தைகாளால் விளாசித் தள்ளும் அளவிற்கு ஆக்ரோஷம் எழுந்தது.
தன் பெற்றோர்களுக்கு ஏஞ்சலின் விடயம் எந்தளவுக்கு அதிர்ச்சியையும், தன் காதல் எந்தளவுக்கு மனவருத்ததையும் தந்திருக்கும் என்பதும் நன்றாகவே புரிந்தது அவனுக்கு!.
‘நானா அவளைத் தேடித் திரிந்து கண்டு பிடித்தேன்? ஏதோ மிகவும் தற்செயலாக என் கண்ணில் பாட்டாள்!’ தன்னுள்ளே தன்னக்காகப் போராடினான்.
‘அவள் என் மனதினுள் நுழைந்தது?’ நினைத்துக் கொண்டவனுக்கு மிகவும் ஆயாசமாக இருந்தது.
அவள் திருமணமானவள் என்று நினைத்துமே தான் அவளில் தடுமாறியதை நினைத்துக் கொண்டவன், அந்த நேரத்தில் தன்னையே தான் கட்டுப்படுத்திக் கொண்டது போல, இப்போது தன் முன்னால் எழுந்துள்ள பிரச்சனைகளுக்காக அவளை இழக்க முடியாதென்றே தோன்றியது.
இப்படிக் கலங்கித் தவித்தவனால், தான் இல்லையென்றால் ஸ்வேதா மனமுடைந்து போவாள் என்றும், தன் மறுப்பு அவளை ஏமாற்றுவதாக அமையும் என்றும் ஏஞ்சல் தன் மீது செலுத்திய குற்றச்சாட்டை மட்டும் கொஞ்சமும் ஏற்க முடியாதிருந்தது.
‘இப்போ என்ன? கல்யாணம் பேசி வைத்திருக்கிறார்கள், அவ்வளவும் தானே! நான் என்ன அவளைக் காதலித்து ஏமாற்றி விட்டேனா?’ தன்னுள் தனக்காக வாதாடிக் கொண்டான்.
“அப்படியும் இல்லையே! சொல்வதைப் புரிந்து ஆராய்ந்து ஏற்றுக் கொள்ளக் கூடிய பெண் ஸ்வேதா; நிச்சயம் என்னைப் புரிந்து கொள்வாள்” முணுமுணுத்துக் கொண்டவன்,
“உன் மாமா மகன், உன் அத்தை மகள் என்று சொல்லிச் சொல்லி தங்கள் விருப்பத்தை எங்கள் மேல் திணிக்க வேண்டியது…பிறகு…” பெரியோர்களில் கோபம் கொண்டவனுக்கு, இந்தப் பேச்சுக்கு பிள்ளையார் சுழி போட்ட கோமதிப் பாட்டியை நினைத்த மாத்திரத்தில் மனதில் வெறியே வந்தது.
“என் பேத்தி தான் உங்க வீட்டு கடைசி மருமகள்.” அடித்துச் சொன்னவரைப் பற்றி கசப்புடன் நினைத்துப் பார்த்தான்.
‘இப்போதும் உங்க பேத்திதான் எங்க வீட்டு கடைசி மருமகள். ஆனால் என்ன… அவளை நானே உங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டிய நிலையில் இருக்கிறேன்.’ என, நினைத்துக் கொண்டவனுக்கு, ஏஞ்சல் தான் தன் மனைவி என்பதில் எள்ளளவும் சந்தேகம் இருக்கவில்லை.
“அத்தானைக் கட்டுவதில் எனக்கு எதுவித ஆட்சேபனையும் இல்லை. பெரியவர்கள் விருப்பம் எதுவோ அதன் படி செய்யுங்க,” என்று சொன்ன ஸ்வேதா, ‘இப்போது என் மறுப்பை எப்படி எடுத்துக் கொள்வாள்?’ இக்கேள்வியெழ, அடுத்து என்ன செய்வதென்று தெரியாது தடுமாறினான்.
மேல்படிப்புக்கென அமெரிக்கா சென்றவள், ஷீலா வீட்டிலிருந்து தான் படித்துக் கொண்டிருக்கிறாள்.
திடீரென்று மனதில் தோன்ற நேரத்தைப் பார்த்தவன், ‘இந்தளவுக்கு வந்த பின்னர் இனி மூடி மறைக்கத் தேவையே இல்லை. சம்பந்தப்பட்ட ஸ்வேதாவுடனேயே எடுத்துக் கதைத்து விடுவோம். யாரும் சொல்வதை விட நானே சொல்வது தான் முறை!’ என்ற முடிவோடு, அவள் கைபேசிக்கு அழைப்பை ஏற்படுத்தினான்.

