தன்னிடமிருந்து இந்த பதிலை எதிர்பார்க்காதவர்களின் திகைத்த தோற்றத்தை அசட்டை செய்து, “எழில் தம்பி தான் அவளை லவ் பண்ணுவதாகச் சொல்ல, அவள் அதெல்லாம் சரிப்பட்டு வராது என்று சொல்லிவிட்டுத் தான் சென்றாள். நேற்று இங்கு வந்து அவளுடன் பேசி அவள் மறுப்பைக் கேட்டுக்கொண்டு தானே எழில் தம்பி போனார். உங்களிடம் சொல்லவில்லையா?” கசப்பும் கோபமும் கலந்த குரலில் கேட்டவரை பார்க்கவே பிடிக்கவில்லை ராஜசேகருக்கு.
வேண்டாம் என்று தான் மறுத்த பின்னரும் ஒவியிடம் கதைப்பதற்காகச் சென்றவன் திகைத்துக் கலங்கிய முகத்துடன் வெளியேறியதில் இருந்தே, ஓவி அவனுக்கு என்ன பதில் சொல்லி இருப்பாள் என்பதை ஊகித்து விட்டிருந்தார் கமலம்.
அதன் பிறகு ஓவியிடம் கேட்க அவளும், “இதெல்லாம் எனக்கு கொஞ்சமும் சரிப்பட்டு வராது ஆன்ட்டி. அவர் ஏதோ தன் விருப்பத்தைச் சொன்னார் தான்; சரிவராது என்று சொல்லி விட்டேன்.” ஒரே வரியில் முடித்து விட்டாள் .
அது தெரிந்திருந்ததால் இவர்களுடன் கண்டிப்பாகக் கதைக்க முடிந்தது.
‘அப்போ என் பிள்ளை தான் அவள் பின்னால் போனானா? இவனுக்கு என்ன தலையெழுத்தா? இப்படிக் கண்டவர்களையும் காதலிக்க வேண்டும், அவர்கள் முறுக்கிக் கொள்ள வேண்டும் என்று!?
முதல் இவன் எதில் குறைத்து போனான்? இவனுக்கு ஏன் திடீரென்று புத்தி இப்படிப் போக வேண்டும்? கண்டவர்கள் முன்னிலையில் மானத்தை வேண்டி விட்டானே!’ மனம் கொதிக்க சட்டென்று அவர்களிடமிருந்து விடை பெற்றார்கள் அவர்கள்.
“பார்த்தாயா மனோ? ஓவி செய்தது தான் சரி. எழிலுக்கு கொஞ்சமும் புத்தியில்லையா? இவர்களே எப்படி அவளைக் கல்யாணம் செய்ய சம்மதிப்பார்கள். எதையாவது கதைத்து அவளை விலக்கத் தான் இப்போது வந்ததும்.” என்றவருக்கு எழில் மீது கண் மண் தெரியாத கோபம் வந்தது.
“சும்மா வந்த பிள்ளையின் மனதை எழில் கெடுத்து விட்டான்.” என்று தொடர்ந்து சொன்னவரின் விழிகள் கலங்கின. ஓவியாவின் மனமும் எழிலை விரும்புகின்றது என்பதை அவள் நடவடிக்கைகள் மூலம் நன்குணர்ந்தவரால், இப்போதைக்கு கண்கலங்கி மனதுள் புலம்புவதை விட வேறு என்ன செய்வது என்று புரியவில்லை.
மனோ வீட்டிலிருந்து அடக்கப்பட்ட ஆத்திரத்துடன் தம் வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்தனர் ராஜசேகர் தம்பதி.
“உங்க மகன் இப்போ சரி வந்திருப்பானா?” கேட்டவருக்கு பதில் சொல்லாது அமைதி காத்தார் பரிமளா.
அவருக்குமே மகனில் ஆத்திரம் வந்தது. ‘கண்ணுக்கு இலட்சணமாக சொந்தத்தில் அருமையான பெண்ணாகப் பார்த்து வைத்திருக்க, இவருக்கு பார்த்ததும் காதல் வரும். காதல் மட்டுமா எத்தனை வில்லங்கங்கள் அதோடு சேர்ந்து வந்திருக்கு!’ என நினைத்துக் கொண்டவருக்கு உள்ளே மிகவும் கொந்தளிப்பாக இருந்தது.
அப்படியே வீடு வந்து சேர்ந்தவர்கள் உள்ளே நுழைகையில், அவர்களை தன் மௌனப் பார்வையால் சலனமின்றி ஏறிட்டான் வரவேற்பறையில் அமர்ந்திருந்த எழில்.
‘பார், இவ்வளவு நடந்த பின்னும் அமைதியாக அமர்ந்திருப்பதை!’ தந்தை மனதுள் முறைத்துக் கொண்டாலும் எதுவும் சொல்லாது முன்னேற, அப்போது கல்லூரி செல்லத் தயாராகி வந்த தங்கையுடன் சேர்ந்து கொண்டவன்,
“நான் கடைக்குப் போகின்றேன்; வாறோம் அம்மா.” சொல்லி, சாதாரணமாக நகர்ந்த மகனை, ஆச்சரியமாக விழி விரித்துப் பார்த்தார் பரிமளம்.
‘நேற்று இவ்வளவு நடந்த பின்னும், எதுவும் கதைக்காது அமைதியாகப் போகிறானே!’ என்ற அவர் சிந்தனையைக் கலைத்தது வீட்டுத் தொலைபேசியினதும், ராஜசேகரின் கைபேசியினதும் ஒன்று சேர்ந்த அலறல்!
வெளியே சென்று கொண்டிருந்த எழிலோ, பெற்றோரைத் திரும்பி ஒரு பார்வை பார்த்துக் கொண்டே இறங்கி நடந்தவன் அங்கிருந்தே, “அப்பா, நான் காலையில் அத்தையுடன் கதைத்து என் முடிவைச் சொல்லி விட்டேன். எனக்கு..” சொல்லி நிறுத்தி நிதானமாக அவரைப் பார்த்தவன்,
“எனக்கு எல்லாமே தெளிவாகத் தெரிந்து விட்டது.” அந்த எல்லாமே என்றதில் மகன் கொடுத்த அழுத்தம் அவரை நெற்றி சுருங்க வைத்தது. அலறும் கைபேசியில் பார்வை பதித்து விட்டு மகனைப் பார்த்தவரிடம், “அத்தை தானே? எடுத்துக் கதையுங்க.” வெளியேறினான் எழில்.
மகன் சொல்வதைத் திகைப்புடன் கேட்டுக் கொண்டிருந்த பரிமளம் விரைந்து சென்று வீட்டுத் தொலைபேசியைத் தூக்கி, “ஹலோ..” சொல்ல,
தன் கைபேசியை இயக்கி அழைப்பை ஏற்றார் ராஜசேகர்.
அடுத்த கணம் கதைத்துக் கொண்டிருந்த இருவர் பார்வையும் அதிர்வுடன் ஒன்றுடன் ஒன்று சந்தித்துக் கொண்டது.
கதைத்து முடித்து தொலைபேசியை அதனிடத்தில் வைத்த பரிமளம், தங்கைக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கும் கணவரைப் பார்த்தவருக்கு ‘இனி என்ன நடக்கப் போகின்றதோ?’ என்று கலக்கமாக இருந்தது.
தான் நினைப்பதைச் செயலில் காட்டும் மகனில் அவருக்கு மிகவும் கோபம் ஏற்பட்டது.
‘அந்தப் பெண் இவனை வேண்டாம் என்று சொன்னாளாமே! அதன் பிறகும் ஸ்ரீமதியிடம், ‘அத்தை உங்க பெண்ணைக் கட்ட முடியாது. நான் வேறு பெண்ணைக் காதலிக்கிறேன்.’ என்று சொல்லி இருக்கிறானே!
இப்போது கோமதி பெரியம்மா தொலைபேசியிலேயே இந்தக் கத்து கத்துகிறார். நேரில் வருகிறாராம். ஹைய்யோ! வந்து வீட்டையே இரண்டாக்கப் போகிறார். அதற்கு முதல், இவருக்கு வரும் கோபத்தில் மகனுடன் சண்டை போடப் போகிறார்.’ மனதுள் புலம்பிக் கொண்டே பிரச்சனை தங்கள் கைமீறிப் போய் விட்டதை நினைத்தவாறே கணவரை அணுகினார்.
அங்கு, எழில் சொன்னதைச் சொல்லி அழுத தன் செல்லத் தங்கைக்கு ஆறுதல் சொல்லிக் கதைத்த ராஜசேகரும் கைபேசியை வைத்தவர், தங்கை வரப் போவதாகச் சொன்னதும், ‘அவளை எப்படி நான் பார்ப்பேன்!’ மனதில் அங்கலாய்த்துக் கொண்டார்.
மகன் எல்லாம் தெரிந்து விட்டது என்று சொன்னதிலிருந்து அவன் உண்மையைப் புரிந்து கொண்டான் என்பது அவருக்குத் துல்லியமாக விளங்கியது.
“அண்ணா அண்ணா என்று எல்லாவற்றுக்கும் என்னை நம்பியவளுக்கு நான் என் கடமையை ஒழுங்காகச் செய்யவில்லையா? அவள் வாழ்வில் இத்தனை வருடங்களின் பின்னர் இப்படிப் பிரச்சனைகள் வருகின்றதே! இதையெல்லாம் அவள் எப்படி எதிர் கொள்வாள்? உடைந்து போக மாட்டாளா? அடுத்து சின்னப் பெண் ஸ்வேதா…” மனம் குமுறித் தவித்த கணவரைப் பார்க்கவே பயமாக இருந்தது பரிமளாவுக்கு.
‘இவன் திரும்பவும் தன்னிஷ்டத்துக்கு ஒன்றொன்றாகச் செய்கிறானே! தன்னைச் சுற்றியுள்ளவர்கள் பற்றி கொஞ்சமும் யோசித்துப் பார்க்க மாட்டானா? அந்தளவு சுயநலமானவனா என் மகன்!’ மனதில் வெகுண்டார் ராஜசேகர்.
“காலங்காத்தால அவர்களுக்கு எடுத்து இப்படிச் சொல்லியிருக்கிறானே! இவன் மனதில் என்ன நினைத்து விட்டான்?” கர்ஜித்தவர் மனைவியின் சுணங்கிய முகம் பார்த்து, “யார் கதைத்தது?” என்றார்.
“கோமதிப் பெரியம்மா தான்.. கத்துறாங்க…” கண்கலங்கச் சொன்னார் பரிமளம்.
சந்தர்ப்பம் கிடைத்து விட்டால் நாட்டமை பண்ணுவது போல அதிகாரம் செலுத்தும் குணமுடையவர் கோமதி. அது தெரிந்தே, தங்கையைக் கட்டிக் கொடுத்த இடம் என்று மரியாதை கொடுத்தாலும், மிகவும் கவனமாகப் பழகுவார் ராஜசேகர். அப்படியிருக்க, அவரின் வாய்க்குள் அரைபடும் நிலையில் தாம் இன்று இருப்பதை நினைத்து கொண்டவர்,
“அவர் என்ன கத்துவது? அவர் தொடக்கி வைத்தது தான் எல்லாம். மூடி மறைத்து தங்கள் சுயநலத்துக்காக செய்தவை எல்லாம் என் தங்கை வாழ்வையும் அவள் பெண்ணின் எதிர்காலத்தையும் அல்லவா இப்போது பதம் பார்த்திருக்கு? வரட்டும் வரட்டும்.” கோபத்தில் உறுமினார்.

