நீயென் சொந்தமடி 12 – 1

அத்தியாயம் 12.

ஏஞ்சலின் பிறப்புப் பற்றியும், எழிலின் காதல் பற்றியும் அறிந்து கொண்ட எழில் வீடு, என்றுமில்லாதவாறு ஒரு அசாதாரண அமைதிப் போர்வையை வெறுப்புடன் போர்த்திருந்தது.
கைமீறிப் போய்விட்ட விடயத்தை இனியும் மூடி மறைப்பதில் எவ்விதப் பலனுமில்லை என்று நினைத்த ராஜசேகர், பங்களூரிலிருந்து கொதித்துப் போய் வந்திருந்த தங்கையிடம், அனைத்தையும் ஒன்று விடாது பகிர்ந்து கொண்டார்.
தான் சொல்லப் போகும் செய்தியால் தன் செல்லத் தங்கையின் மனம் என்ன பாடுபடும் என்பதை அறிந்திருந்தும், ஏஞ்சல் பற்றிய அனைத்து உண்மைகளையும் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்தவர், மனதைக் கல்லாக்கிக் கொண்டே தன் மைத்துனரையும், அவர் தாயாரையும் துச்சமாகப் பார்த்தவாறே அனைத்தையும் கூறி முடித்து விட்டார்.
“உன் கணவனுக்கு, உனக்கு முன்னரே ஒரு காதலி இருந்தாள்.
அந்தக் காதலில் பிறந்த குழந்தை எங்கோ போய் வளர்ந்து இன்று நம் முன்னே வந்து நிற்கின்றாள்.
சும்மா இல்லை, உன் மகளின் வருங்காலக் கணவனாக முடிவு செய்திருந்தவனின் காதலியாக!”
அண்ணன் வாய் வார்த்தைகள் ஒவ்வொன்றும் குறி தப்பாமல் சென்று ஸ்ரீமதியின் உள்ளத்தைப் பதம் பார்த்து அதன் துடிப்பைக் கேள்விக் குறியாக்கின!
தான் குழந்தையில் இருந்து பாராட்டிச் சீராட்டி தூக்கி வளர்த்த அண்ணன் மகன், தன் ஒரே மகளுக்கு மணவாளனாக வருவான், அவளும் எவ்வித துன்பங்களுமின்றி மகிழ்வாக வாழ்வாள் என்று மிகவும் நிம்மதியுடனிருந்தார் ஸ்ரீமதி.
ஆனால், “அத்தை எப்படி இருக்கிறீர்கள்?” என்று அன்புடன் நலம் விசாரித்தவன் அடுத்த நிமிடம், “எனக்கும் ஸ்வேதாவுக்குமான திருமணம் நடக்காது அத்தை. ஏனென்றால், நான் ஒருத்தியைக் காதலிக்கிறேன்.” பட்டென்று சொன்னதும், அதுவரை இருந்த மகிழ்வும் நிம்மதியும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போனது மட்டுமின்றி, அவனின் செய்கையில் மிகுந்த சினமுற்றார் ஸ்ரீமதி.
எழிலின் செய்கை தம் செல்ல மகளை எந்தளவுக்கு பாதிக்கும் என்று நினைத்துக் கொதித்துப் போனவர்கள், ராஜசேகரிடம் நியாயம் கேட்கவே புறப்பட்டு வந்திருந்தனர்.
வரும் வழியெல்லாம் ராஜசேகர் குடும்பத்தை வாயில் போட்டு கண்டபடி அரைத்துத் துப்பிக் கொண்டே வந்தார் கோமதி. அதைக் கேட்டு எதுவும் செய்ய முடியாமல் கண்ணீருடன் அமர்ந்திருந்தார் ஸ்ரீமதி. தன்னையும் அண்ணனையும் இந்த நிலையில் கொண்டு வந்து விட்ட மருமகன் மீது அடங்காத ஆத்திரத்துடன் தான் வந்து சேர்ந்தார் அவர்.
ஆனால் இப்பொழுதோ, ராஜசேகர் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும் பேரிடியாகத் தாக்கியது அவர்களை.
கணமும் நினைத்திராத கணவன் பற்றிய செய்தியால் மித மிஞ்சிய அதிர்வுடன் உள்ளம் நொருங்கிப் போனார் ஸ்ரீமதி.
தன் கணவன், தாய் கீறிய கோட்டைத் தாண்டாத தனயன் என்பது சில பல வேளைகளில் மனச் சுணக்கத்தைத் தந்திருந்தாலும், கோமதியுமே மருமகளில் பாசமாகவே இருந்ததால், இவரின் இத்தனை வருடத் தாம்பத்தியம் மிகவும் சுமுகமாகவே சென்றிருந்தது. அதுவும் வாழ்கையை இரம்மியமாக்கிய மகள் ஸ்வேதாவின் வரவும் சேர்ந்து கொள்ளவே, அவர்கள் மணவாழ்வின் தித்திப்பு ஒவ்வொரு கணமும் அதிகரித்துச் சென்றது.
பிறந்ததில் இருந்து அனைத்தும் நிறைவாகவே, ஏன் அளவுக்கு அதிகமாகவே கிடைக்கப் பெற்றவள் தான் என்று மிகவும் இறுமாந்திருந்தார் ஸ்ரீமதி.
ஆனால், இன்னொருத்தியின் தீராத சாபத்திலும், ஒன்றுமே அறியாத ஒரு இளம்குருத்தின் தவிப்பிலும், துடிப்பிலும் தான், தன் வாழ்க்கை ஆரம்பித்திருக்கின்றது என்ற உண்மை தமயன் வாயால் போட்டுடைக்கப்பட, அப்படியே துடிதுடித்துப் போனார் அவர்.
இதுவரை தித்திப்பை மட்டுமே வழங்கியிருந்த அவர் மணவாழ்வு, இன்று மிகவும் அருவருப்பையும் கசப்பையும் அவருக்கு உணர வைத்தது.
‘கணவன் மனைவிக்குள் இப்படி ஒளிவு மறைவு இருந்தால், அவர்களால் எப்படி மனமொருமித்து வாழ்ந்திருக்க முடியும்?
அப்படியென்றால் இவர் என்னுடன் போலியாகவா வாழ்க்கை நடத்தினார்?’ கசப்புடன் ஏங்கினார்.
‘மனைவிக்கு ஒரு விடயத்தை, அதுவும் இவ்வளவு பெரிய விடயத்தை மறைக்கின்றோமே என்பது உள்ளத்தில் முள்ளாகக் குத்தியிருக்காதா?
அதுவும், இத்தனை வருடங்களுக்கு எப்படி முடிந்தது இவரால்?!
ஒன்றும் தெரியாத அப்பாவி போல வேஷம் போட்டு என் அண்ணாவை முதலில் ஏமாற்றி, பின் என்னை, என் பெண்ணை..’ உள்ளக் கொதிப்பால் விழிகள் கட்டுப்பாடின்றி உடைப்பெடுத்தன ஸ்ரீமதிக்கு.
தன்னெதிரே கூனிக் குறுகிப் போய் அமர்ந்திருந்த கணவரை, உடலும் உள்ளமும் நடுங்க வெற்றுப் பார்வையால் ஏறிட்டார் ஸ்ரீமதி.
தன் மைத்துனர் ஏஞ்சல் பற்றிச் கூறத் தொடங்கியதும், ஹை வோல்ட்டேஜ் மின்சாரம் தாக்கியது போன்று அதிர்ச்சி அடைந்தார் வேணு.
இது முற்றிலும் புதிய செய்தியாக இருந்தது அவருக்கு!
இதைக் கிரகித்துக் கொள்ளவே நீண்ட அவகாசம் வேண்டி நின்றது அவர் மூளை.
ஆனால், மெல்ல மெல்ல கிரகித்துக் கொண்ட மறுகணம், இதுவரை இல்லாதவகையில் அவர் பார்வை தீக்கங்குகளாக மாறித் தன் தாய் கோமதியை நோக்கிப் பாய்ந்தது.
எவ்வித சலனமுமின்றி நடப்பவற்றை பார்வையாளராக இருந்து பார்த்திருக்கும் கோமதியின் தீர்க்கமான பார்வையைச் சந்தித்தவர், எப்போதும் போலவே இயலாமையுடன் நெஞ்சம் நடுங்க மனைவியை ஏறிட்டார்.
மனைவியின் பேச்சற்ற வெற்றுப் பார்வையோ, ஆயிரம் தேள்கள் ஒன்றாகச் சேர்ந்து கடித்த வலியை ஏற்படுத்தியது அவரிதயத்தில்.
கணவனே உலகம் என்று நினைத்திருக்கும் மனைவியால் இதனை நிச்சயம் ஜீரணித்துக் கொள்ள முடியாது என்பதைப் புரிந்து கொண்டவருக்கு, தன்னையும் தன் கோழைத்தனத்தையும் நினைத்தால் மிகவும் அருவருப்பாக இருந்தது.
ஆனால், இத்தனை வருடங்கள் கடந்து அருவருத்துக் கொள்வதாலோ வேதனையில் உருண்டு புரள்வதாலோ பயனேதும் உண்டோ?!
சிறுவயதிலிருந்தே, தந்தையே தலைகுனிந்து நிற்கும் தாய் கோமதியின் முன்னால் தலைகுனிந்தும், அவர் சொல்லுக்குத் தலையாட்டியும் பழகியிருந்தவர், தன்னிலை மறந்து இளமையின் ஊந்துதலில் காதலில் சிக்குப்பட்டார் தான்.
காதல் தான் சமயம் பார்த்திருந்து தன்னுள் மற்றவர்களை சிக்கவைப்பதில் கில்லாடியே!
ஆனால், அதன் பயனாக, இன்று முதன் முதலாக, கட்டிய அன்பு மனைவியின் பார்வையைத் தாங்க முடியாமல் தலையைக் கவிழ்த்துக் கொண்டார்.
‘இப்படியெல்லாம் நான் கொஞ்சமும் நினைத்துப் பார்க்கவில்லையே! அவளும் தான் குழந்தை உண்டாகியிருப்பதை என்னிடம் சொல்லவில்லையே! அத்தனை அகங்காரமும் பிடிவாதமும் அவளுக்கு!’ ஒருகாலத்தில் தான் சுற்றிச் சுற்றிக் காதலித்த ராஜத்தை வெறுப்புடன் குற்றம் சுமத்த விளைந்தது அவர் மனம்.
தன் கல்லூரி நண்பனின் தங்கையின் தோழியாக அறிமுகமானவளில், பழகப் பழக தீராத காதல் கொண்டான் வேணு என்கின்ற இளைஞன்.
அவன் காதலின் எதிரொலியும் அவ்வாறே இருக்க, எவ்வித கவலைகளுமின்றி இரம்மியமான காதல் வானில் வண்ண வண்ணக் கனவுகளுடன் சிறகடித்துப் பறந்து திரிந்தனர் இருவரும்.
கொஞ்சல்களும் மிஞ்சல்களுமாக கடந்த அவர்கள் காதலுக்கு கோமதியின் உருவில் தடை வந்தது.
மகனின் காதல் அவர் காதுகளில் அரசல் புரசலாக விழுந்திருந்ததில் கொதித்துக் கொண்டிருந்தவர், அதேநேரம் பெரிய இடத்துச் சம்பந்தமாக ஸ்ரீமதியின் வரன் வரவே, அதுதான் மகனின் வாழ்க்கையை அடுத்த கட்டத்துக்கு உயர்த்தும் என்று மனக் கணக்கு போட்டுப் பார்த்தவர், கண் முன்னால் தெரிந்த பிரகாசமான விடையை மகன் அனுபவிக்க வேண்டும் என்ற பேராவலில், தன் மனக்கணக்கை அறிவிப்பாக பெருந்தன்மையுடன் மகனிடம் தெரிவித்தார்.
“வேணு, இவள் தான் நான் உனக்குப் பார்த்து முடிவு செய்துள்ள பெண், இந்த வீட்டு மருமகள் ஸ்ரீமதி!” தான் சொன்னதும் மகனின் விழிகளில் அதிர்வைக் கண்டவரின் குரல், பின்னர் ஒருவித அழுத்ததுடன் வெளி வந்தது.
“சும்மா அப்படி இப்படி என்று நினைத்து விடாதே! பெரிய செல்வந்து வீட்டு ஒரே மகள். அதுவும் அவள் அண்ணன் இவளுக்கு என்றால் உயிரையும் கொடுப்பான். அள்ள அள்ளக் குறையாத செல்வந்த வீடு.” கண்களில் ஆசை மின்னச் சொல்லிக் கொண்டே தாய் தந்த புகைப்படத்தை, தயக்கத்துடன் வாங்கிக் கொண்டான் வேணு.
மறுத்துக் கூறவும், தன் காதலி பற்றிக் கூறவும் அவன் நெஞ்சம் ஆவல் கொண்டாலும் தைரியமோ, “ஹைய்யோ! என்னால் முடியவே முடியாதுடா.” சட்டென்று அடம் பிடித்துப் பின் வாங்கியது.
மென்று விழுங்கும் மகனையே கூர்மையாக அளவிட்டுக் கொண்டிருந்த கோமதி, ‘நான் காதலிப்பவளைக் கல்யாணம் செய்யப் போகிறேன் என்று சொல்லி விடுவானோ!’ கணம் உள்ளத்தில் தடுமாறினாலும் அதற்கு சந்தர்ப்பம் கொடாது தொடர்ந்தார் .
“உன் தங்கைக்கும் நல்ல எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்கலாம் வேணு. உருப்படாத மனிசனைக் கட்டி நான் தான் கஷ்டப்பட்டு கணக்குப் பார்த்து பார்த்து வாழ்கையை ஒட்டுகிறேன் என்றால், என் பிள்ளைகள் இருவரும் அப்படி இருக்கக் கூடாது என்று நினைப்பதில் பிழையில்லையே!” மகனுக்கு சொல்வது போல தனக்கே சொல்லிக் கொண்டார்.
“அம்மா நா..நான்..ஒருத்தியை…” எப்படியோ வருவித்துக் கொண்ட துணிவுடன் மென்று விழுங்கியவனை மிகவும் சாதாரணமாகப் பார்த்தார் தாய்.

error: Alert: Content selection is disabled!!