நீயென் சொந்தமடி 12 – 2

“தெரியும்டா…தெரியும்.” அசட்டையாகத் தொடங்கி தீர்க்கமாக மகனைப் பார்த்த பார்வையில், கொஞ்சமாகத் திரண்டிருந்த அவனின் தைரியம் அப்படியே படுத்து விட, பெட்டிப் பாம்பாகச் சுருண்டு கொண்டது வேணுவின் மனம்.
இறுதியாக, “வேணு நான் சொல்வது புரிந்ததா? இன்னமும் நான்கு நாட்களில் உனக்கு நிச்சயம் வைத்திருக்கின்றோம். உன் மனைவியாகப் போகின்றவளை நன்றாகப் பார்த்துக் கொள்.” என்று சொல்லி விலகிய தாயிடம் எதிர்த்து நிற்கும் துணிவோ, தன் உள்ளத்தை திறந்து காட்டும் எண்ணமோ, வேணுவுக்கு கடைசி வரை வரவில்லை.
அது மட்டுமா? தனக்கு கல்யாணம் பேசியதையும் நிச்சயத்துக்கு நாள் குறித்ததையும் தன்னைவிட மிகவும் அடாவடியுமான ராஜத்திடம் வெளியிடவும் தயங்கிப் போனான் அவன்.
அவன் தயக்கத்தின் மொத்தப் பரிசாக நிச்சயம் அழகாக நடந்தேறியது.
தோழியின் அண்ணன் வாயிலாக பிந்திக் கிடைத்த காதலனின் நிச்சயச் செய்தி ராஜத்தை சுருட்டி மூலையில் உட்கார வைக்கவில்லை.
அவள் கண்ணீருடன் காதல் பிச்சை கேட்கவுமில்லை. ஊரைக் கூட்டவுமில்லை.
ஒரே ஒரு கணம், நம்பிக்கைத் துரோகம் தந்த வலியில் சுருளப் போன மனதை வில்லென நிமிர்த்தி, கோழையாக தன் முன் குற்றவாளியாக தலைகுனிந்து நின்றவன் முகத்தில் காறித் துப்பி விட்டு ஒதுங்கி விட்டாள் ராஜம்.
ஆனால், அவர்களின் அசைட்டையீனமும், வரம்புமீறலும், காதலுடன் கைகோர்த்த இனிமையான கள்ளத்தனமும், தன் வயற்றில் கருவாக உதித்திருப்பதை அறிந்ததும் தான் அப்படியே ஓய்ந்து போனாள் ராஜம்.
இவ்விடயம் தெரிய வந்த போது, முளையிலேயே கிள்ளி எறியும் காலமும் கடந்திருக்கவே, குடும்பத்தின் முன் தலைகுனிந்து நின்றாள் ராஜம்.
“யார் காரணம்?” என்று கேட்ட பெற்றவர்களிடம் மூச்சும் விடவில்லை அவள்.
அப்படிச் செய்வதால் மட்டும் என்ன நடந்து விடும்?!
‘அட… போயும் போயும் இப்படி ஒரு கோழையிடமா ஏமாந்து போனாய்? என்று அவர்கள் எள்ளி நகையாடவா?’ என்று நினைத்துக் கொண்டவள், ஒத்த வார்த்தை பேசவில்லை.
பெற்றோர்களே பிறந்ததும் எங்காவது கொடுத்து தலைமுழுகுவோம் என்று முடிவெடுக்க இறுக்கமுடன் அமைதி காத்தாள் ராஜம் .
தான் பிறந்து வளர்ந்த இடத்தை விட்டு ஊட்டியில் சென்றிருந்து கருவைச் சுமந்த அந்தப் பத்து மாதங்களும், பணத்தாசை பிடித்தவன் தந்த ஏமாற்றத்தின் பரிசை மிகவும் வலியுடனும் அருவருப்புடனும் தாங்கிக் கொண்ட ராஜம், குழந்தை பிறந்த பின் அதன் முகத்தைக் கூட ஏறெடுத்துப் பார்க்கவில்லை.
தான் பத்து மாதம் சுமந்த மகவு ஆணா பெண்ணா என்றும் அறியத் துடிக்கவில்லை.
அந்த உயிரின் பிறப்பில் சரிபாதி தன் பங்கு என்று அவள் உள்ளம் கொஞ்சமும் உணரவில்லை.
இங்கு, இந்த சந்தர்ப்பத்தில், ‘தாய்மை’ என்பது, தனது அனைத்து வரவிலக்கணங்களையும் மொத்தமாகத் தலை முழுகி விட்டது.
அவள் பெற்றோர்களோ, தாம் முடிவு செய்தபடி, தமக்கு மிகவும் நம்பிக்கையான பாரதியிடம் காதும் காதும் வைத்த மாதிரி பிள்ளையைக் கொடுத்து விட்டிருந்தனர்.
ஏமாற்றத்தின் அருவருப்புக்குரிய பரிசு என்ற முத்திரையுடன், உருவாகக் காரணமானவன் அறியாமல் இருக்க, சுமந்து பெற்றவளின் மொத்த வெறுப்பையும் சொத்தாகக் கொண்டு பிறந்த குழந்தையை கைகளில் ஏந்திக் கொண்ட பாரதி, ‘ஓவியா’ என்று பெயர் சூட்டி, கமலம் பொறுப்பில் அவளைப் வளர்த்தது ஆறே ஆறு மாதங்கள் தான்.
அதன் பின்னர் அக்குட்டித் தேவதை, மழலைக்கு ஏங்கிய ஒரு ஜோடியின் மொத்த மகிழ்ச்சிக்கும் அழியாத வித்தாகி விட்டாள்.
குழந்தை வெளிநாட்டுக்கு தத்துப் போய் விட்டாள் என்பதை அறிந்து கொண்ட ராஜத்தின் பெற்றோர்கள் அடைந்த நிம்மதிக்கு அளவேயில்லை. ராஜமோ அதைக் கேட்டு எந்தச் சலனத்தையும் வெளிப்படுத்தவில்லை. அவளைப் பொறுத்த மட்டில் தான் அருவருத்த விடயம் வெகு தூரமாகப் போய் விட்டதில் அலாதியான நிம்மதியே!
அதன் பின்னர் ராஜமோ, தன்னிடம் குறைவாக இருந்த பணத்தை எப்படியும் அடைந்தே தீருவதாக கங்கணம் கட்டிக் கொண்டு முன்னேறினாள். அப்போது அவளுக்கு வாழ்கையில் கை கொடுத்தான் அமைதியே உருவான சேகர். அவர்களின் மிக நெருங்கிய குடும்ப நண்பரின் மகன் அவன். ராஜத்தின் கடந்தகாலம் அறிந்திருந்ததால் அவர்கள் வாழ்க்கை சந்தோசமாகவே குழந்தைகள், குடும்பம், தொழில் என்று சென்று கொண்டிருக்கின்றது.
வேணு பங்களூரில் வசித்து வந்ததால் அவரை அடிக்கடிக் காணும் சந்தர்ப்பம் ராஜத்துக்கு ஏற்படவில்லை. பின்பு ஒரே தெருவில் வசிக்க வேண்டி வந்ததும், ராஜசேகரை தன் எதிரி என்பதை விட இகழ்சியாகவே பார்த்தார் ராஜம்.
‘அன்று என்னை விட அதிகமாக உன்னிடம் இருந்த பணம் தானே, என்னை ஏமாளியாக்கியது. இன்று அந்தப் பணம் என்னிடமும் அதிகமாகவே இருக்கிறது, நானும் மிகவும் நன்றாக இருக்கிறேன். கண்குளிரப் பார்த்துக் கொள்.’ ராஜத்தின் விழிகள் சொன்ன இகழ்ச்சிச் செய்தியை புரிந்து கொள்ளும் அளவிற்கு ராஜசேகருக்கு விஷயம் தெரிந்திருக்கவில்லையே!
ஆனாலும் இரு குடும்பங்களும் முறைத்துக் கொண்டாலும், பெரியவர்கள் அறியாமலேயே குழந்தைகள் ஆர்த்தியும் சுருதியும் நட்பில் இணைந்து விட, பிரிக்க முயன்று தோற்றாலும் அந்த நட்பும் வீடு வரை சென்றதில்லை.
ராஜத்தின் வெறுப்பும் இகழ்ச்சியும் ஏன் என்று தெரியாது குழம்பிப் போன ராஜசேகர் சில வருடங்கள் கழித்தே வேணுவின் காதல் விவகாரத்தை தெரிந்து கொண்டார். ஆனால் அதை அவர் பெரிதாக எடுக்கவில்லை; மாறாக, ‘இதற்குப் போயா இந்தம்மா இப்படி முகத்தை நீட்டுது!!’ என்றிருந்தது அவருக்கு.
அதுவும் தன் தங்கை மிகவும் மகிழ்வுடன் வாழ்வதால், சிறு விடயம், வயதுக்கேயுரிய தடுமாற்றம் என்று நினைத்து அதை அப்படியே ஒதுக்கி விட்டிருந்தார் ராஜசேகர்.
ஆனால் இன்று?? அதுவோ வளர்ந்து பூதாகரமாக பயம் காட்டி நிற்கின்றதே!

எழில் வீட்டுக் கூடம் மயான அமைதியால் சூழப்பட்டிருந்தாலும், அங்கிருந்தோர் மனங்களோ தம்முள்ளே பெரும் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தன.
‘அவள் மட்டும் அன்றே இதைப் பற்றி என்னிடம் சொல்லியிருந்தால்…’ நினைத்துக் கொண்ட வேணுவின் மனசாட்சி அவர் உயிரைப் பிடுங்கும் வகையில் ஒரு ஏளனப் பார்வையை வீசியது.
“உன்னிடம் சொல்லியிருந்தால் மட்டும் உன் தாயின் முன்னால் என்ன செய்திருப்பாய் கோழையே!” வார்த்தைகளால் சுட்டது.
“ஆமாம் நீ காதலித்தாய். காதலியுடன் எல்லை மீறி உல்லாசமாகக் கொட்டமடித்தாய். உன் தாய் பெரிய இடத்தில் சம்பந்தம் பேசியிருப்பதாகச் சொன்னதும், தயக்கமாக உன் காதலை தாயிடம் சொல்லத் தொடங்கினாய்..” தன் மனசாட்சியின் முன்னால் ஒரு குற்றவாளியாக தலை குனிந்தார் வேணு.
மனசாட்சி தொடர்ந்து கர்ஜித்தது.
“உன் தாய் என்ன செய்தார்? போடா மடையா, உனக்கு ஒளிமயமான எதிர்காலத்தை நான் காட்டுகிறேன். நீ அதை உருப்படாத விடயங்களைச் சொல்லி எட்டி உதைக்கப் பார்க்கின்றாயா? காதலித்தேன்; சுற்றித் திரிந்தேன் என்கின்றாயே! வெட்கமாக இல்லையா? உன் வீட்டிலும் ஒரு பெண்பிள்ளை இருக்கிறாள் என்பதை நினைத்துப் பார்த்தாயா?” முழங்கினார்.
அதோடு சேர்த்து, ராஜத்தின் நடத்தையையும் குணத்தையும் பிட்டுப் பிட்டு அங்குலம் அங்குலமாக ஆராய்ந்து பார்த்தார் கோமதி.
“கல்யாணத்துக்கு முன்பாகவே இவ்வளவு தாராளமாக உன்னுடன் சுற்றுபவள், எப்படி நல்ல பெண்ணாக இருக்க முடியும்?!” மிகப் பெரிய கண்டுபிடிப்பைக் கடை பரப்பினார்.
“அதனால்…நான் பார்த்திருக்கும் பெண்ணையே கட்டிக் கொள். உன் வாழ்வு சிறப்பாக அமையும்.”
அதன் பின்னர் எல்லாமே கோமதியின் முடிவுப் படி அழகாக நடந்தேறியது..
காலப் போக்கில், மனையாளின் அன்புக்கு முன்னால் முதல் காதலின் நினைவுகள் தம் வலுவை இழந்து விட்டன.
அப்படியே அங்கே இங்கே என்று எஞ்சியிருந்த அந்தக் காலத்து நினைவுகளின் எச்சங்களும், உருவின்றி அடையாளம் தெரியாமல் உதிர்ந்து விட்டன.
‘முதல் காதல் என்றுமே அழியாதது. பசுமையாக நிலைத்து, அந்தக் காதலில் ஊறிய மனதின் மூலையில் மறைந்திருக்கும். வாழ்கையின் ஓட்டத்தில் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் மெல்லக் கண் சிமிட்டி தன்னைக் காட்டிச் செல்லும்.’ என்றெல்லாம் எப்படி எப்படியோ பாராட்டப்படும் காதல்,
“அட எந்த முட்டாள் இப்படிச் சொன்னது?!” என்று பெரும் வியப்பை ஏற்படுத்தும் வகையில் வேணுவின் விடயத்தில் பொய்த்து விட்டது.
இதுதான் வழமையோ!?
ஆனால், அப்படி அவர் மறந்ததோ இன்று அழகாக உருப்பெற்று வேறு வேறு பரிமாணத்தில் வந்து குதித்திருக்கின்றதே!
அந்தக் காதலும், அதன் பலனும் மொத்த உருவாக வந்து தன் முன்னால் நின்று “அற்பப் புழுவே..” குற்றவாளியாகச் சுட்டிக் காட்ட,
இத்தனை வருடங்கள் ஒன்றாகக் கலந்திருந்த துணையின் வெறுப்புப் பார்வை அவரைத் “தூரமாகச் சென்று விடு; நீயெல்லாம் ஒரு மனிதப் பிறப்பா??” அருவருப்புடன் எச்சரிக்கை விட,
அப்படியே இதயத்தை முறுக்கிக் கொண்டு எழுந்த வலியில் துடித்துக் கொண்டே தன்னிலை மறந்து சரிந்தார் வேணு.

error: Alert: Content selection is disabled!!