அத்தியாயம் 13.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்து வீடு வந்திருந்தார் வேணு.
இந்த ஒரு கிழமையில், தோற்றத்தில் பத்து வயதைச் சுலபமாகக் கடந்திருந்தார் அவர்.
இதுவரை தாயின் முன்னால் மட்டும் தலைகுனிந்திருந்தவர், இப்போது எல்லோர் முன்னாலும் கூனிக் குறுகிப் போய் விட்டார்.
என்றோ செய்த தப்பின் பலனை இன்று அனுபவிப்பவர், அதையும் கடந்து ஏஞ்சலை காண மனதில் வெகுவாக ஆசை கொண்டார் என்பது தான் நிஜம்.
‘அவள் வளர்ந்து தன் பிறப்பையும் நிராகரிப்பையும் கேட்ட போது எப்படித் துடித்துப் போயிருப்பாள்?’ நினைத்து நினைத்து மறுகினார்.
தானாடாவிட்டாலும் தன் தசையாடும் என்பதற்கிணங்க, தன் உதிரத்தில் உதித்த முத்தைக் காணவே அந்தக் கோழையுள்ளம் கொண்டவர் ஏங்கினார்.
அன்று, ராஜசேகர் தங்கையிடம் ஏஞ்சல் பற்றிச் சொல்லும் பொழுது அதில் தன் தங்கை ஏமாற்றப்பட்டு விட்டாள் என்கின்ற கொதிப்பே முன்னிலை வகித்தது.
ஆனால், இடையிடையே குறுக்கிட்ட எழில், ஏஞ்சலின் மனதைப் பற்றியும், திறப்பு விழாவிற்குச் சென்று வந்தவள் கதறியதையும் சொன்ன போதே வேணு உள்ளே மரிக்கத் தொடங்கியிருந்தார்.
ஏஞ்சல் தன்னைப் பெற்றவளைப் பற்றி மட்டும் அறிந்து கொண்ட போதும், தான் பிறக்கக் காரணமானவனைப் பற்றி அறிய முயலவில்லை என்பதை எழில் சொன்னதும், உயிர்ப்பின்றிக் கேட்டுக் கொண்டிருந்தவர்,
தன் தாய் இன்னாரென்று பாரதி அம்மாவின் மூலம் அறிந்திருந்தவளிடம், “ஷீலாவும் சேகரும் தானே உன் பெற்றோர்கள்?” என்று எழில் கேட்கையில், கோமதிப் பாட்டியின் உருவ ஒற்றுமையையும் அவன் ஏற்கனவே சொல்லிருந்ததால், மிகவும் தற்செயலாகவே தான் பிறக்கக் காரணமானவனை அவள் இனம் கண்டு கொண்டாள் என்பதையும்,
அதன் பின்னர், “இனிமேல் இந்தியாவுக்கும் எனக்கும் தொடர்பே இல்லை.” என்று சொல்லிச் சென்றதையும் அவன் சொல்லக் கேட்டவரின் இதயம், “இனியும் நான் இயங்கவா வேண்டும்?” என்று அவரையே வினவத் தொடங்கி விட்டது.
பெற்றவர்கள் உயிருடன் குத்துக் கல்லாட்டம் இருக்கும் போதே, எங்கோ தத்துக் குழந்தையாக வளர்ந்ததையும், இறுதியில் பெற்றவர்களைத் தேடி வந்து கொஞ்ச நஞ்சம் இருந்த நிம்மதியையும் தொலைத்து விட்டுப் போனதையும் உணர்ந்து கொண்டவர், ஏஞ்சலை உடனே பார்த்து, கைகூப்பி அவளிடம் மன்னிப்பு யாசகம் வாங்கிக் கொள்ள மிகவும் ஆசைப்பட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.
ஸ்வேதாவின் எழிலுடனான திருமணம் இனி நடக்கவே வாய்ப்பில்லை என்பது மிகவும் தெளிவானாலும், மகளைத் தேற்றி விடலாம் என்று நினைத்துக் கொண்டவரால், மொத்தமாக அந்நியமாகிப் போன மனைவியை எப்படிச் சமாதானம் செய்வது என்று மட்டும் கொஞ்சமும் புரியவில்லை.
வைத்தியசாலையில், ஒத்த வார்த்தை பேசாது அருகிலிருந்து பார்த்துப் பார்த்து கவனித்துக் கொண்ட மனைவியின் மௌனமே, அவருக்கு ஆயுள் தண்டனையை வழங்கி விட்டிருந்தது.
ஆனால், நடப்பவை அனைத்தையும் பொறுமையாக உள்வாங்கிக் கொண்டு அமைதியாக இருந்தார் கோமதி.
அவர் மனமோ, ஏஞ்சல் என்ற சொல்லை எழில் உச்சரிக்கும் போதே கொதி நிலையின் உச்சத்தை தொட்டுத் தொட்டு வந்திருந்தது .
ராஜசேகர் குடும்பத்தின் இகழ்ச்சிப் பார்வையையும், மருமகளின் மௌனத்தையும் அசட்டையாக எதிர்கொண்டவர், வேணு நெஞ்சைப் பிடித்துக் கொண்டு விழ ஒரு கணம் ஆடிப் போய் விட்டார் .
அதிலும் ஹாட் அட்டாக் என்றதும் முழுதாக ஒடிந்து போனவர், தன்னால் முடிந்த அளவுக்கு ஏஞ்சலுக்கு வசைமாரி பொழிந்தார் .
மகனுக்கு ஒன்றும் ஆபத்தில்லை என்று சொல்லும் வரை தன்னை அடக்கிக் கொண்டவர், வீடு வந்ததும் அப்படியே தன் உள்ளக் கொதிப்பை எல்லாம் கொட்டத் தொடங்கினார்.
“சரி ராஜசேகர், இப்போ நீ சொல்வதை வைத்துப் பார்த்தால் அந்த ராஜத்தின் பெண்ணா அந்த ஃப்ரான்ஸ்காரி…” ஏளனமாகத் தொடங்கியவரை பஸ்பமாக்கி விடுவது போலப் பார்த்தான் எழில்.
கோமதி, இந்தப் பார்வை போல எத்தனை பார்வைகளைத் தன் வயதுக்கு கண்டிருப்பார்? அதனால் கொஞ்சமும் அசரவில்லை.
எப்பாடு பட்டாவது தன் மகன் மேல் விழுந்த பழியைத் துடைப்பதிலேயே அவர் கவனம் முழுவதுமாக இருந்து.
மௌனமாக இருந்த மருமகளைப் பார்த்து, “இங்க பார் ஸ்ரீமதி, உன் புருஷன் எப்பவோ ஒரு சலனத்தில் அந்த குணம் கெட்ட திமிர் பிடிச்சவளை காதலித்தான் தான். அது எல்லாம் காதலே இல்லையம்மா.
நான் உன்னைக் கைகாட்டினதும் அவன் உனக்கு தாலி கட்டவில்லையா? அந்தளவுதான் அந்தக் காதல்.” அசட்டையாகவே சொன்னவர், அருகிலிருந்த மற்றவர்களை இகழ்ச்சிப் பார்வையை கண்டு கொள்ளவே இல்லை.
வேதனையுடன் பார்த்த மகனைத் திரும்பியும் பார்க்கவில்லை.
“இவனுக்கு அந்த நேரம் புத்தி புல் மேயப் போய் இருந்ததம்மா. இவன் காதலித்த குற்றத்திற்காக அந்த ராஜம் பெத்துப் போட்டது என் பிள்ளையின் குழந்தையா? அவள் இவனுக்குப் பிறகு யாரைக் காதலித்தாளோ?!” இலகுவாக சொல்லி முடித்தவரின் அருகில் ஓரெட்டில் வந்திருந்தான் எழில்.
அவரோ அவனையே நேராகப் பார்த்தவர், “இங்க பார் எழில், ஸ்வேதாவுக்கும் உனக்கும் ஆறு மாதத்தில் கல்யாணம் என்று சொல்லி வைத்திருக்க, நீ எப்படி அந்த வெள்ளக்காரியைக் காதலிக்கலாம்? பிறகு உனக்கும் என் பிள்ளைக்கும் என்ன வித்தியாசம் கண்டு பிடித்து விட்டீங்க?” குரலில் கேலியும் எகத்தாளமும் ஏகத்துக்கும் வந்திருந்தது.
குடும்பமே அவரின் பேச்சில் அதிர்ந்து அயர்ந்து போய் இருக்க, “உங்க வயதுக்கு ஒரு அளவுக்குத் தான் மரியாதை கிடைக்கும்; அதை நன்றாக நினைவில் வைத்திருங்க..” கர்ஜித்தான் எழில்.
செய்வதறியாமல் திகைத்திருந்த ராஜசேகர் “எழில்?” மறுப்பாகத் தொடங்க, கடினப் பார்வையுடன் கையமர்த்தியவன்,
“இவ்வளவுக்கும் பிறகு உங்க தப்பு ஒன்றுமே இல்லை என்கின்ற மாதிரி எப்படி உங்களால் இப்படிக் கதைக்க முடியுது? எல்லோருக்கும் பொதுவாக ஒன்றைச் சொல்கிறேன்!” சொல்லி நிறுத்தி அங்கிருந்த குடும்பத்தவரையும் அத்தை வீட்டினரையும் தீர்க்கமான பார்வையால் அளந்தவன்,
“எனக்கு வாழ்கையில் கல்யாணம் என்பது நடக்கவில்லை என்றாலும் கவலையில்லை; ஆனால், கல்யாணம் என்று நடந்தால் என் மனைவி ஏஞ்சல் மட்டும் தான்..” உறுமினான்.
அதே வேகத்தில், “என்ன?? உங்க பிள்ளை அவள் அப்பா இல்லையா?” இடுங்கும் விழிகளால் அசையாதிருக்கும் கோமதியைப் பார்த்தவன், தன் கைபேசியை உயிர்ப்பித்து,
“இதோ பாருங்க… ராஜத்தின் மகளை. இனிச் சொல்லுங்க பார்ப்போம், இவளுக்கும் உங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று.” கோமதியின் முகத்தினெதிரே நீட்டிப் பிடித்தான்.
எழிலின் இந்த நேரடித் தாக்குதலை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை கோமதி. தன் வயதுக்கு நிச்சயம் மரியாதை கிடைக்கும் என்றும், இதுவரை தன்னை மிகவும் மரியாதையாக இவர்கள் நடத்தி வந்ததால், தன்னுள்ளே உருவாகியிருந்த ஒருவகை இறுமாப்பில் பேச்சை ஆரம்பித்திருந்தவர், எழில் தந்தையையே பேசவிடவில்லை என்றதும் பேச்சற்றுப் போனார்.
தன் செல்லப் பேத்தியின் கல்யாணம் கனவில் கருகப் போவது அவருக்கு மெல்ல மெல்ல புலப்பட்டு விட்டது. உள்ளம் கொதிக்க கைபேசியின் திரையில் விழிகளைப் பதித்தவர், கொதிநீரைக் கொட்டிக் கொண்டவர் போல துள்ளி எழுந்தார்.
முகம் விகாரமாக கைபேசியையே வெறித்தார் கோமதி. அந்த நேரம் அவர் எதிரில் ஏஞ்சல் இருந்திருந்தால், நிச்சயம் அவள் கழுத்தை நெரித்துப் போட்டிருப்பார்; அந்தளவிற்கு வெறுப்பாக இருந்தது அவருக்கு!
“கேடு கேட்டவளே! போயும் போயும் என்னுரு உனக்கு வர வேண்டுமா? என் பேத்தியின் வாழ்கையைத் தட்டிப் பறித்து, என் பிள்ளையின் குடும்ப நிம்மதியில் நெருப்பு வைத்து விட்டாயே! நீ நன்றாக இருப்பாயா?” வாய்விட்டே புலம்பி, சாபமே விட்டார் கோமதி.
அதைப் பார்த்ததும் அவருடன் சண்டைக்கு கிளம்பிய எழிலைக் கட்டுப் படுத்துவதற்குள் ஆதியும் ஆர்த்தியும் படாதபாடு பட்டு விட்டனர்.
“பார்க்கிறேன், என் பேத்தியை சுலபமாக உங்களால் உதற முடியுமா என்று!” எழிலைப் பார்த்து மீண்டும் ஆங்காரமாகக் கத்தினார் கோமதி.
“சும்மா சும்மா என் தங்கை, என் தங்கை மகள் என்று தலையில் தூக்கி வைத்துக் கொஞ்சுவது எல்லாம் பாசாங்கா? வெளி வேஷமா?” ராஜசேகரை நேரடியாகவே சண்டைக்கு அழைத்தார்.
எது எப்படி என்றாலும் எழில் ஸ்வேதா திருமணம் தடைப்படுவதை அவர் விரும்பவில்லை.
“ஏன் ஸ்ரீமதி, என்றைக்கோ நடந்து விட்டதை கிளறி நியாயம் பேச நினைக்கின்றாயா? உன் புருஷன் இத்தனை நாட்களாக உன்னை சந்தோஷமாக மாகாராணி மாதிரி வைத்திருக்கவில்லையா? அதையெல்லாம் நினைத்துப் பார்க்கவே மாட்டாயா?” மௌனித்திருக்கும் மருமகளைப் பேச வைக்க முயன்றார்.
“அன்றைக்கு என் மகன் செய்த பிழையை விட, இன்றைக்கு உன் அண்ணா மகன் செய்த நம்பிக்கைத் துரோகம் கொஞ்சமும் குறைந்தது இல்லை. பெண்ணைப் பேசி இவள் தான் உனக்கு என்று கைகாட்டிய பின்னர், இவருக்கு காதல் வருமாமா? இது எந்த ஊர் நியாயம்!!” ஏளனம் செய்தவர்,
“ஹைய்யோ இதையெல்லாம் கேட்டால் என் பேத்தி உடைந்து போவாளே!” கோபமாகப் பேசிக் கொண்டு வந்தவர் வாய் விட்டே அழத் தொடங்கினார்.
மெல்லத் தன்னைப் பிடித்திருந்த ஆதியின் கரத்தை விலகிக் கொண்டு கோமதியின் அருகில் சென்றான் எழில்.
“பாட்டி..” அதட்டலாக அழைத்தவன் குரோதமாகப் பார்த்தவரைப் பார்த்து,
“நீங்க என்ன நினைத்தாலும் எனக்கு அதில் கவலை இல்லை. முதல் அதைத் தெளிவாக விளங்கிக் கொள்ளுங்க..” கண்களில் கடினத்துடன் அவரை தீவிரமாகப் பார்த்தவன்,
“அடுத்து, நான் உங்க பேத்தியைக் கட்ட மாட்டேன் என்று சொல்லவே இல்லையே! இப்போ ஏன் இந்த ஒப்பாரி?!” ஒரு மாதிரிக் குரலில் இழுத்தவனை அனைவரும் ஆச்சரியமாகப் பார்த்தனர்.
“ஏஞ்சல் தானே உங்க மூத்த பேத்தி. அவள் தான் என் மனைவி. அதை யாராலும் மாற்ற முடியாது.” சொல்லிவிட்டு விறுவிறுவென்று அவ்விடம் விட்டகன்றான் எழில்..

