நீயென் சொந்தமடி 14 – 1

அத்தியாயம் 14.

வழமையான நேரத்திற்கு முன்பாகவே விழிப்பு வந்து விட்டது ஏஞ்சலுக்கு.
இரவில் படுத்ததும் உறவு கொண்டாட மிகுந்த ஆசையுடன் அவளையணுகும் நித்திரா தேவி, இப்போதெல்லாம் அவளை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. நீண்ட நேர கெஞ்சல்களின் பின் சுணக்கத்துடன் வந்து அணைத்துக் கொள்பவளும், இப்படித்தான் விடியும் முன்னே சொல்லாமல் கொள்ளாமல் உதறிச் செல்கின்றாள்.
மனதில் ஆழத்திலிருந்து எழுந்த பெருமூச்சை அப்படியே தலையணையில் முகம் புதைத்து வெளியேற்றினாள் ஏஞ்சல்.
மலரும் ஒவ்வொரு நாளையும் மிகவும் ஆவலுடன் எதிர்கொண்ட ஏஞ்சல் இவளுக்கு அறிமுகமானவளா என்று சந்தேகம் கொள்ளும் வகையில், இவளின் தற்போதய நடவடிக்கைகள் ஒவ்வொன்றிலும் ஒருவித சோர்வு வெளிப்பட்டு நிற்கின்றது.
மனதை அழுத்தும் சுமையின் கனம் பல சமயங்களில் அவளின் இயல்பைப் பதம் பார்ப்பதை உணர்ந்திருந்தாலும், அதைத் தவிர்க்க முடியாமல் தடுமாறிப் போகின்றாள் அவள்.
இவள் இந்தியாவிலிருந்து திரும்பி வந்து ஒரு மாதம் விரைந்து கடந்திருந்தது.
தன் பிறப்பு பற்றித் தெரிந்து கொண்டால், தன்னுள் ஒரு நிம்மதி பரவும் என்று துடி துடித்தவள், தன் வேரினைத் தேடி மிகவும் ஆவலுடன் தான் இந்தியா சென்றாள்.
ஆனால், அதை அறிந்து கொண்டதும் கசப்பும் வேதனையும் மட்டுமே நெஞ்சில் எச்சமாயிருக்க இப்போது தவித்துக் கொண்டிருக்கிறாள்.
அதுமட்டுமின்றி, கூடவே புதிதாக ஒரு சுழலுக்குள் சிக்கி, அதன் சுழற்சியில் இருந்து மீளும் வழி தெரியாது, சிறிது சிறிதாக அதனுள் தன்னையே தான் தொலைத்துக் கொண்டிருக்கிறாள்.
குப்புறக் கிடந்து தலையணையை கட்டிப் பிடித்துக் கொண்டிருந்தவள், மெல்லத் தன் தலையை உயர்த்தி நேர் எதிரே தெரிந்த சுவரில் பார்வையை நிலைக்க விட்டாள்.
அறை முழுவதும் கருமை சூழ்ந்திருந்தாலும், அதற்குப் பழகிய விழிகளோ சுவரில் தொங்கிய புகைப்படத்தையே உற்று நோக்கின.
அடுத்த கணம், அவளின் வலக்கரம் கததப்பான போர்வையை விட்டு வெளியேறி அருகில் தொங்கிய மின் விசையை எட்டி அழுத்தியது.
சுவரில் மாட்டியிருந்த புகைப்படத்தின் கீழ் ஆழ்ந்த சயனத்தில் இருந்த இரு சிறிய அலங்கார மின் விளக்குகள், அவள் கரத்தின் ஸ்பரிசத்தை உணர்ந்து கொண்டதும் அழகாக கண்கள் மலர்ந்தது.
அவை பாய்ச்சிய மெல்லிய ஒளியை அப்படியே தன்மேல் வாங்கிக் கொண்ட புகைப்படம், இப்போது மிகவும் தெளிவாக தன்னைக் காட்டி நின்றது.
இமைக்க மறந்த விழிகளில் ஒருவகை மந்தகாசப் பார்வையும், இதழில் தோன்றிய இளமுறுவலுமாக அப் புகைப்படத்தையே பார்த்திருந்தாள் ஏஞ்சல்.
அவள் முகபாவனைகளைப் பார்த்தால், அந்த புகைப்படத்தில் இருப்பவருடன் அவள் மனதில் உரையாடுபவள் போலத் தோன்றியது.
நீலவானைத் தொட்டு உறவாடிக் கொண்டே நுரைதட்டிக் குதூகலித்துக் கொண்டிருந்த பரந்த கடல் கூட, தன்னெதிரில் நிற்பவரில் இலயித்து ஸ்தம்பித்து நிற்க, காற்றில் கலைந்து திரிந்த கேசங்களின் சீண்டலில் விழிகள் சுருக்கி, வெண் முத்துப்பற்கள் தெரியும் பளீரென்ற விரிந்த நகையுடன் பெண்ணவள் நிற்க, சிறுமுறுவல் அவன் முகத்தின் கம்பீரத்தை இன்னமும் அதிகரித்துக் காட்ட, தனக்கேயுரிய நிமிர்வுடன் அவளருகில் நின்று கொண்டிருந்தான் ஆண்மகன்.
அப்பெண்ணின் விழிகளில் நேசத்தின் சாயல் தெரிந்தாலும், அவ் ஆணின் விழிகளோ காதலை வாரி இறைத்துக் கொண்டிருந்ததை அப்பட்டமாக உணர முடிந்தது.
நீண்ட நேரமாக அப்புகைப்படத்தையே பார்த்திருந்த ஏஞ்சலின் விழிகள் மெல்ல மெல்ல நீரால் நனைந்தன.
மனதின் ஆழத்திலிருந்து துக்கப்பந்து திரண்டெழுந்து தொண்டைக் குழியில் அடைத்துக் கொண்டது.
அவள் இதழ்களோ மிகவும் முயன்று, “ஸாரி எழில்..” என்ற வார்த்தையை உச்சரித்தது.
“கடைசியாக உங்களுடன் மிகவும் கடுமையாகப் பேசி விட்டேன் எழில். உங்களைக் காயப்படுத்தவோ அதிர வைக்கவோ நான் நினைக்கவில்லை. உண்மை அந்தளவுக்கு இருக்கையில், நானும் தான் என்ன செய்வது?” அன்றைய நினைவுகளின் அழுத்தத்தில் முணுமுணுத்தன அவள் உதடுகள்.
“உன்னைக் காதலிப்பதையும் நீ யாரென்றும் வீட்டில் சொல்லிவிட்டேன்..” என்று ஒருவேகத்துடன் அன்று சொல்லத் தொடங்கியவனைக் கையமர்த்தியவள்,
“நான் யாரென்று உங்களுக்கே இன்னமும் சரியாகத் தெரியாத போது உங்கள் வீட்டில் எப்படி எழில் சொல்ல முடியும்?” கேலியும் வருத்தமுமாகக் கேட்டவளை அவன் புரியாது பார்த்து நின்றான்.
“ஏஞ்சல் நீ..” தொடங்கியவனைக் கையமர்த்தியவள், “நீங்க நினைப்பது பிழை எழில். நான் உங்கள் ஷீலா ஆன்ட்டியின் மகள் இல்லை. நான் பிறக்கக் காரணம்…” சொல்லி நிறுத்தியவள் வெளிப்புறத்தை சிறிது நேரம் வெறித்துக் கொண்டு நின்றாள்.
“ஏஞ்சல்..” சிறிது நேரம் பொறுத்திருந்தவனின் குரல் பொறுமையின்றி ஆரம்பிக்க, அவன் புறமாகத் திரும்பியவள், “உங்க மாமா..வேணு.” சொன்னவளை நம்பாத் தன்மையுடன் கண்டனப் பார்வை பார்த்தான் எழில்.
அவள் சொன்னதை அவன் கொஞ்சமும் ஏற்கவில்லை என்பதை அவன் முகம் அப்பட்டமாகக் காட்டி நின்றது.
சிலகணங்கள் இறுக்கமான மௌனம் அவர்கள் மத்தியில் உலாச் சென்றது.
“என்ன எழில் நம்பவே முடியவில்லையா? எனக்கும் அது நீங்க அன்று கடற்கரையில் வைத்துச் சொன்ன பின்னர் தான் தெரியும். எப்படியென்றால்,” சொல்லி நிறுத்தி அவனையே பார்த்தவள்,
“என்னைப் பெற்றவள் என்று பாரதி அம்மா கைகாட்டியது மங்களா ஜுவல்லரி ராஜத்தை.” என்று அவள் சொன்ன வார்த்தைகளை கிரகித்துக் கொள்ளவே மிகவும் கஷ்டப்பட்டான் எழில்.
“வேணு மாமாவா?!” நம்பவே முடியாமல் தவித்தவனை சாட்டையாகச் சுழன்று விளாசித் தள்ளி விட்டாள் ஏஞ்சல்.
“என் பிறப்பை பற்றி அப்படியே தள்ளி வைத்து விடுங்க எழில். அதில் நீங்க தேவையில்லாமல் நுழையத் தேவையில்லை. அது எனக்கு கொஞ்சமும் விருப்பமும் இல்லை.” ஒருவித கடினத்துடன் சொல்லி அதற்கு முற்றுப் புள்ளி வைத்தாள்.
“முதல் உங்கள் விடயத்துக்கே வருவோம், உங்களுக்காக ஒருத்தி காத்திருக்கும் பொழுது உங்கள் மனதில் என் மீது, அதுவும் பார்த்தும் எப்படி எழில் காதல் வந்தது?!” கேட்டவள் இதழ்கள் வெறுப்பிலும் இகழ்ச்சியிலும் மடிந்தன.
“இதையெல்லாம் உங்களுடன் நான் கதைக்க இருக்கவில்லை. இப்பொழுது நீங்களாகவே வந்ததால் கதைக்கின்றேன்.” சொல்லிக் கொண்டு வந்தவள் அதிர்ந்து சோர்ந்து அமர்ந்திர்ந்தவனைப் பார்த்ததும், தன் உள்ளக் கொதிப்பை வெகுவாகக் கட்டுப்படுத்த முயன்றாள்.
அக்கணம் அவனை அப்படி வேதனை நிறைந்த முகத்துடன் அவளால் பார்க்க முடியாமல் இருந்து.
அவள் மனம் ஏனோ அவன் வேதனையைப் போக்க நினைத்து அவனுக்காக விரைந்து துடிக்கத் தொடங்கியது. ஆனால் அவளோ, மனதை வெகுவாக அலட்சியம் செய்தாள்.
“எழில் இங்க பாருங்க, உண்மையில் என்மீது உங்களுக்கு ஏற்பட்டது காதல் எல்லாம் இல்லை. பார்த்து சில நாட்கள் அருகில் இருந்த பெண்ணில் வந்த மயக்கம்.” தெளிவாகச் சொன்னாள்.
அவனோ பார்வையால் வெறித்தான்.
அவனுள்ளமோ, “உன் மாமா வேணு தான் நான் பிறக்கக் காரணம்.” என்றதையே பற்றிக் கொண்டு திக்பிரமையில் இருந்ததால், எதையுமே கதைக்கும் நிலையில் இருக்கவில்லை.
“அதனால், இந்த சலனங்களை ஒதுக்கி வைத்து விட்டு..” சொன்னவளை வலியுடன் ஏறிட்டது அவன் விழிகள். “ஆமாம் எழில், இது நிச்சயம் சலனம் தான். அதனால், உங்க மாமாவின் பெண்ணைத் திருமணம் செய்து சந்தோஷமாக இருங்கள்.” சொல்லி நிறுத்தியவள்,
அவன் விழிகளை கூர்மையாகப் பார்த்தவாறே, “எழில், அதோடு இன்னுமொன்றை நினைவில் வைத்திருங்க. எனக்கு உங்களில் அந்த மயக்கம், சலனம் கூட வரவில்லை.” வார்த்தைகள் ஒவ்வொன்றும் திடமாக வந்தது.
தொடர்ந்து அவளே நிறையக் கதைத்தாள். அவன் ஒத்த வார்த்தை பேசாது அப்படியே இருந்தான்.
அப்படி வந்தவள் இங்கு வந்த பின்னோ!?
“வேண்டாம் என்று வந்து விட்டால் அதை அப்படியே விட்டு விட வேண்டும் இல்லையா எழில்?” புகைப்படத்தில் இருந்தவாறே தன்னையே பார்வையால் சுண்டியிழுத்தவனிடம் கேள்வி கேட்டாள்.
‘ஆனால் என்னைப் பாருங்க! வந்ததும் நான் செய்த முதல் வேலை இந்த புகைப்படத்தை பெரிதாக்கி மாட்டியது தான்.’ தன் மீதே வெறுப்பு வந்தது அவளுக்கு.
‘நீ எப்படிக் காதலிக்கலாம் என்று கேட்டு உங்களைச் சாடியவள் செய்யும் வேலையைப் பார்த்தீர்களா?’ அவனிடம் வினவினாள்.
‘ஒரு ஆர்வத்தில் தொடங்கி, பின் அதுவே கட்டாயம் அறிந்து கொண்டால் தான் நிம்மதி என்று என் பிறப்பைப் பற்றி அறிய நினைத்தேன். ஆனால், உங்களை என் நெஞ்சில் இத்தனை சுலபமாக நுழைத்துக் கொள்வேன் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லையே!’ ஏங்கினாள்.
“நீங்கள் ஏன் நான் தேடிச் சென்றவர்களுடன் தொடர்புள்ளவராக இருந்தீர்கள்?” வாய்விட்டே முணுமுணுத்துக் கொண்டவள்,
“வேண்டாம் எழில், நாம் சேர்வதென்பது நடக்கவே நடக்காது” ஆயிரமாம் தடவைகள் தனக்குத் தானே சொல்லிக் கொண்டவளின் இதழ்கள் அவள் விழிநீரின் சுவையை அறிந்து சுளித்துக் கொண்டது.
‘என்னால் இன்னொருவர் கண்ணீர் விட்டதாகவோ, கலங்கியதாகவோ இருக்கத் தேவையில்லை எழில். நான் சொல்வது உங்களுக்குப் புரிகிறது தானே!’ மனக்கண்ணில் தன்னெதிரில் நிற்பவனுடன் தன்மையாகப் பேசினாள்.
‘அங்கிருந்து வீராப்பாக வந்தாலும், நான் உங்களை மறக்க முடியாமல் திண்டாடுகிறேன் எழில். அதுதான் அப்பட்டமான உண்மை.

error: Alert: Content selection is disabled!!