பாரதி அம்மா சொன்ன விடயத்தை என் பெற்றோர்களிடம் பகிர்ந்து கொண்ட என்னால், உங்களைப் பற்றி ஒரு வார்த்தை சொல்ல முடியவில்லை.
இங்கு அவர்கள் வந்து இந்தப் புகைப்படத்தைப் பார்த்துக் கேள்வி கேட்டால், நான் என்ன பதில் சொல்லப் போகின்றேன்?’ புலம்பலுடன் தறிகெட்டோடும் நினைவுகளுக்கு, தடை போட முயன்றாள் .
அவள் சொல் கேட்காத நினைவுகளோ தன் பயணத்தைத் தொடர்ந்தன.
‘சத்தியமாகத் தெரியவில்லையே! பேசிய திருமணத்தை செய்து, பெரியோர்கள் ஆசைப்படி சந்தோஷமாக இருங்கள் என்று சொல்லி வந்த நான் செய்யும் வேலையா இது?! அப்படிப் பார்த்தால் இன்னொருத்தியின் கணவனாகப் போகின்ற உங்களை நான் இங்கு உரிமையாக இரசித்துக் கொண்டிருக்கிறேன். அது தப்பென்று புரிந்தாலும் என்னால் முடியவில்லையே!’ அப்படியே தலையணையில் முகம் புதைத்துக் கொண்டாள்.
‘மறந்தே ஆக வேண்டும். இந்த நினைவுகளை என்னில் இருந்து அழித்து விட்டு நான் பழைய ஏஞ்சல் ஆக வேண்டும்.’
இந்தியாவில் இருந்து வந்த இந்த ஒரு மாதமும் இப்படி நினைத்து நினைத்து எவ்வளவோ முயன்றாலும், கடைசியில் உள்ளத்தில் மறுகுவதே அவள் வேலையாகிப் போயிற்று.
கடைசியாக கோபத்துடன் நாடி வந்தவன், வெறுமையாக அதிர்ந்து போய் ஒரு வார்த்தை பேசமுடியாது தளர்ந்து வெளியேறிய கோலம், எந்நேரமும் அவள் மனக்கண்ணில் வலம் வந்து அவளை வாட்டி எடுத்தது.
“அப்பட்டமான ஏமாற்றுக்கு கிடைத்த பரிசு நீ என்று சொன்னவர்களால், உன்னை ஒரு போதும் ஏற்க முடியாது ஓவி.
அதுமட்டும் இல்லாமல், அவரவர் தத்தம் குடும்பங்கள் என்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதனால், நீ அமைதியாக ஊருக்குப் போய் சந்தோசமாக இரம்மா.
நான் சொன்னதும் அவர்களைப் பார்க்கப் போகிறேன் என்று கிளம்பாது, ஊருக்குப் போகப் புறப்படுகிறாயே மிகவும் சந்தோசம்மா..”
இவள் அவசரமாக புறப்படுகிறாள் என்றதும், பாரதி அம்மா இவளிடம் சொன்ன வார்த்தைகள் இவை.
அவருக்குத் தெரியாது, அவர் சொன்ன இடத்துக்கு சென்று பார்க்கும் வாய்ப்பு தற்செயலாக ஏற்பட அதைப் பயன்படுத்திக் கொண்டதும், அதனைத் தொடர்ந்து நடந்தவைகளும்.
‘யாரோ யாரிடமோ தெரிந்தோ தெரியாமலோ ஏமாற்றம் அடைந்தால், அதன் மூலம் கிடைக்கும் உயிருள்ள பரிசுகளை மட்டும் லாவகமாகத் தூக்கி எறிந்து விடுகிறார்களே!
அப்படிச் செய்வதன் மூலம் தாங்கள் ஏமாறவே இல்லை என்று நினைத்துக் கொள்வார்களோ!?
தம்மைத் தாமே சமாதானம் செய்து கொள்வார்களோ!’ பழையபடி அதே கடினம் அவள் மனதை இறுக்கியது.
ஆனாலும், பாரதி அம்மா சொன்னது போல, சமூகத்தில் மிகவும் செல்வாக்காக வாழும் தான் பிறக்கக் காரணமானவர்களை, தலைகுனிய வைக்கும் விதத்தில் நடந்து கொள்ள வேண்டும் என்று அவள் ஒரு கணமும் நினைத்துப் பார்க்கவில்லை.
அவர்கள் முன்னால் போய் நின்று, நியாயமோ அன்புப் பிச்சையோ கேட்கவும் அவள் நினைக்கவில்லை.
சுருதியை கண்டதும், அவளையும் அவள் அக்காவையும் அவர்கள் பெற்றோர்கள் பெருமையாக மற்றவர்களிடம் அறிமுகம் செய்து கதைக்கும் பொழுது, உள்ளுக்குள் மிகவும் வலி ஏற்பட்டது என்னவோ உண்மைதான்.
மற்றும் படி வேறெந்த பாசத் துடிப்பும், வியக்கும் வகையில் அவள் மனதில் எழவில்லை.
‘யாரோ வேண்டாம் என்று தூக்கிப் போட, தமக்குக் கிடைத்த அற்புதப் பரிசாக நினைத்து பாராட்டிச் சீராட்டி வளர்க்கும் பெற்றோர்கள் என்னைப் போல எத்தனை பேருக்கு கிடைப்பார்கள்?!’ தன் பெற்றோரை நினைத்து உள்ளம் நெகிழ்ந்தவள்,
‘அப்போ நான் உண்மையாகவே கொடுத்து வைத்தவள் தான். என்றாவது அன்பு கிடைக்காதா என்று ஏங்குவோருடன் பார்க்கையில், அன்பின் ருசியை தினமும் சுவைத்து, அதன் தித்திப்பில் வளர்ந்த நான் பாக்கியம் பெற்றவள் தான்!’ அளவற்ற திருப்தியோடு எண்ணிக் கொண்டாள்.
அடுத்த நொடி, ‘எனக்கும் ஏமாற்றத்தின் ருசி தெரிய வேண்டும் என்பதால் தான் எழிலை நான் சந்த்திதேனோ!?’ வலியுடன் நினைக்கவும் செய்தாள்.
‘இந்த மனதை அறுக்கும் நினைவுகளில் இருந்து நிச்சயமாக நான் வெளியேற வேண்டும்; வெளியேறுவேன்!’ என்றவள் நினைவில் மின்னலாகப் பளிச்சிட்டது ஒரு யோசனை. அது அப்பப்போ தோன்றியது என்றாலும் இப்போது வலுவாகத் தோன்றியது.
‘ம்ம்ம்..நான் ஏன் அப்படிச் செய்யக் கூடாது?’ நினைத்த மாத்திரத்தில் படுக்கையை உதறிக் கொண்டு எழுந்தாள் ஏஞ்சல்.
விறுவிறுவென்று வேலைக்குப் புறப்பட்டு வெளியில் வந்தவள், ஊரே பனிப் போர்வை போர்த்திருப்பதைப் பார்த்ததும், அவளுள் உறங்கிய இயற்கையின் இரசிகை மெல்லக் கடைக்கண் திறந்து தன்னைச் சுற்றிப் பார்த்து இரசிக்க விளைந்தாள்.
****
அன்று வெள்ளிக் கிழமை. மாலை வேலை முடிந்ததும் அப்படியே பெற்றோர்களைக் காண போக நினைத்துக் கொண்டிருந்தாள் ஏஞ்சல்.
ஆனால், கடைசி நேரத்தில் வந்த வேலைகளால் தொடர்ந்து வங்கியில் நிற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
எப்போதாவது இருந்திருந்து இப்படி ஏற்படுவது வழக்கம் என்பதால், பொறுமையாக இருந்து வேலைகள் முடிக்க முனைந்தாள்.
கடைசி நேரத்தில் இவளிடம் வேலைகளை கொடுத்த லூகாஸும், ஒரு மர்மப் புன்னகையுடன் தானும் அமர்ந்திருந்து வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தான்.
வேலைகளின் இடையில் தாயார் காத்துக் கொண்டிருப்பாரே என்று நினைத்துக் கொண்டவள், அவருக்கு அழைத்து, “மாம்..கடைசி நேரத்தில் வேலை தந்து கழுத்தறுத்து விட்டான் லூகாஸ்; நாளை வருகிறேன்.” என்றதும்,
அவரும், “பரவாயில்லை, நாளை வா ஏஞ்சல்; உனக்காக நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம்.” என்றவர் குரல் மிகவும் குதூகலமாக இருந்ததுவோ என்ற எண்ணம் வர, அதை அவரிடமே கேட்க நினைத்தவளை எமிலியின் வரவு தடுக்க, தொலைபேசியை வைத்து விட்டு எதுவோ சொல்ல முயன்ற தோழியை ஏறிட்டாள்.
“என்ன எமிலி, நீ இன்னமும் கிளம்பவில்லையா?” கேட்டவளைப் பார்த்து வெட்கச் சிரிப்பு சிரித்தாள் எமிலி.
“ஹேய்…எமில் என்ன சந்தோசம் பொங்கி வழியுது!? உன் ஆளுடன் கதைத்து விட்டாயா? பச்சைக் கொடி ஆட்டி விட்டானா?” கேலி செய்தாள் ஏஞ்சல்.
இந்தியாவிலிருந்து வந்த இந்த ஐந்தாறு கிழமைகளாக தன்னுள் உழன்று கொண்டிருந்தவள், மற்றவர்களைப் பற்றி அந்தளவுக்கு கவனிக்காது விட்டு விட்டாள். அப்படிக் கவனித்திருந்தால் எமிலியின் மாற்றம் எப்போதோ தெரிய வந்திருக்கும். அவள் கவனிக்கவில்லை என்ற பின்னர் தான், தானே சொல்லலாம் என்று வந்திருக்கிறாள் எமிலி.
“தாங்க்ஸ் ஏஞ்சல்..” சொல்லிக் கொண்டே ஏஞ்சலின் கரங்களைப் பற்றிக் கொண்டதும், கேள்வியாக ஏறிட்டவளிடம், “லூகாஸ் என்னைப் புரிந்து கொண்டு விட்டான்.” சொன்னவளின் கண்கள் கலங்கியிருந்தன .
“ஹே..ஹே… இது கொஞ்சமும் நல்லாவே இல்லை. நான் தான் அவனுக்கு உன்னைக் கை காட்டினேன். அவன் என்னிடமே இந்த விடயத்தைச் சொல்லாமல் மறைத்து விட்டானே!” கோபம் போல சொன்னாலும், மிகவும் மகிழ்வுடன் தோழியைக் கட்டிக் கொண்டாள் ஏஞ்சல்.
வாழ்த்துக்களைச் சொன்னவள் பின் அவளை அப்படியே விலக்கி நிறுத்தி கூர்மையாகப் பார்த்தாள்.
“நீ..நீ நிச்சயம் சோஃபியை கவனமாகப் பார்த்துக் கொள்வாய் தானே எமில்?” என்னவோ தன் பிள்ளையை அவளிடம் ஒப்படைப்பது போலவே கேட்டாள்.
எமிலியோ மீண்டும் தோழியை இறுக்கிக் கட்டிக் கொண்டவள், “நிச்சயமாக ஏஞ்சல். லூகாஸின் மனம் இவ்வளவு விரைவாக என் பக்கம் திரும்ப முக்கிய காரணம் சோஃபி தான். நீ இந்தியாவில் இருக்கும் பொழுது கடையில் வைத்து அவர்களைக் கண்டு கதைத்தேன். அதன் பின்னர் என் வீட்டுக்கருகில் தானே அவள் பாடசாலையும், அப்பப்போ பார்த்து நாங்க இருவரும் மிகவும் நெருங்கி விட்டோம் தெரியுமா?” கண்ணடித்துச் சிரித்தாள் எமிலி.
இவர்கள் இருவரும் இப்படி வார்த்தையாடிக் கொண்டிருக்கும் பொழுது இவர்களை நோக்கி வந்தான் லூகாஸ்.
“அவசரமாக முடிக்க வேண்டிய வேலையைத் தந்தால், செய்து முடிக்காமல் இங்கே என்ன அரட்டையும் சிரிப்பும்?” வெகுவாக முயன்று குரலில் கண்டிப்பை வரவழைக்கப் பார்த்தவன் தோல்வியைத் தழுவிக் கொண்டான்.
அவன் விழிகள் எமிலியின் விழிகளுடன் இரகசியம் பேசிக் கொண்டிருக்க, “இன்னமும் எவ்வளவு இருக்கு ஏஞ்சல்?” கேட்டவனுக்கு பதில் சொல்லாது அவன் கரத்தைப் பற்றி குலுக்கியவள், “வாழ்த்துக்கள் லூகாஸ்; நீங்க இரண்டு பேருமே நீண்ட நாட்களுக்கு இதே அன்புடன் இருக்க வேண்டும்.” சொன்னவளை இப்போது மிகவும் அன்புடன் பார்த்தவன்,
“நீயும் தான் ஏஞ்சல். எப்போதும் நிறைவான சந்தோஷத்துடன் மகிழ்வாக இருக்க வேண்டும். அதற்கு என் அன்பான வாழ்த்துக்கள்.” என்றான் அவன்.
அப்படிச் சொன்னவனை புரியாது பார்த்தாள் அவள். “எனக்கு ஏன் வாழ்த்துச் சொல்கின்றாய்?” என்றவளை கண்களில் சிரிப்புடன் கேலியாகப் பார்த்தனர் எமிலியும் லூகாஸும்.
“உனக்குத்தான் இப்போது மறுப்புச் சொல்ல காரணம் இல்லையே ஏஞ்சல்! இனி என்ன, வாழ்கையில் செட்டில் ஆக வேண்டாமா? அதற்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள் என்று நினைத்துக் கொள்.” சொல்லிச் செல்பவனை யோசனையாகப் பார்த்தாள் ஏஞ்சல் .
‘ஏதோ பொடி வைத்துப் பேசுவது போல சொல்கிறானே!’ சட்டென்று தோன்றினாலும் தன் முன்னால் இருக்கும் வேலையைச் செய்து முடிப்பத்தில் கவனத்தைத் திருப்பினாள்.

