நீயென் சொந்தமடி 15 – 2

“ஏஞ்சல் இங்க பாருடா.. நான் சும்மா தான் சொன்னேன்; உண்மையாவே விளையாட்டுக்குடா..” அவளைச் சமாதனம் செய்ய முயன்றவனின் முயற்சி தோல்வியைத் தொட்டு நின்றது.
தொடர்ந்து விசும்பிக் கொண்டிருந்தவளை அப்படியே அணைத்துக் கொண்டு அருகில் இருந்த சோஃபாவில் அமர்ந்து கொண்டான் அவன்.
இதுவரை எட்டாத தூரத்தில் மிகவும் திடமானவளாகத் தெரிந்தவள், தன்னருகில் மட்டும் தன்னிலை மறந்து உருகுவதை உணர்ந்து கொண்டவனின் உள்ளம், ‘இவள் என்னவள், எனக்கே எனக்கானவள்.’ என்று உரிமையோடு சொல்லிக் கொண்டது.
எந்தப் பாவமும் அறியாதவளின் வாழ்வில் உற்றவர்கள் செயல்களே எவ்வளவு துன்பத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை நினைத்துக் கொண்டவனுக்கு, அவளின் வாழ்க்கை முழுவதும் தன் கைவளைக்குள் வைத்துப் பொத்திப் பாதுகாக்க வேண்டும் என்ற உறுதி எழுந்தது.
“ஏஞ்சல் இங்க பார், நான் எவ்வளவு கஷ்டப்பட்டு உன் மம்மி டாடியிடம் போய் அவர்களைச் சமாளித்து, அது போதாதென்று அந்தக் காட்டான் லூகாஸ் கேட்ட குறுக்குக் கேள்விகளுக்கெல்லாம் பொறுமையாகப் பதில் சொல்லி, நயமாகப் பேசி உன் வீட்டு மாற்றுச் சாவி வாங்கி..” சொல்லிக் கொண்டு வந்தவனை நனைந்த விழிகளுடன் ஏறிட்டவள், “அப்போ லூகாஸுக்கும் தெரியுமா?” வியப்புடன் கேட்டாள்.
“தெரியும். உங்க மம்மி, வீட்டுத் திறப்பைக் கொடுக்கச் சொன்ன பிறகும் எத்தனை கேள்விகள் கேட்டான் தெரியுமா?” என்றவனிடம் ,
“இல்ல உங்களைப் பற்றி நான் ஒன்றுமே சொல்லவில்லையல்லவா? பொதுவாக நான் வீட்டிலும் அவனிடமும் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்வேன். அதனால் கேட்டிருப்பான்.” நண்பனை விட்டுக் கொடுக்காமல் சொன்னாள்.
“வேண்டாம் என்று விட்டு விட்டு வந்தவனைப் பற்றி என்ன கதை என்று ஒருவரிடமும் சொல்லவில்லையா ஏஞ்சல்?” எவ்வளவு முயன்றாலும் அவன் குரலில் வருத்தத்தின் நிழல் தெரிந்தது..
அதை உணர்ந்த ஏஞ்சல், “இங்க பாருங்க எழில், நான் அன்று அப்படி சொன்னதில் என்ன தப்பு? என் நிலையில் நீங்க இருந்திருந்தாலும்…” சொல்லிக் கொண்டு வந்தவளுக்கு தொண்டை அடைக்க மீண்டும் அவன் நெஞ்சில் தலையைச் சாய்த்துக் கொண்டவள்,
“ஸ்வேதா…அவளுக்கு எல்லாம் தெரியுமா? என்ன சொன்னாள்? அங்கே என்ன நடந்தது?” எழும்பாத குரலில் கேட்டவளின் தலையை ஆதரவாக வருடியவன்,
“எல்லாம் சொல்கிறேன் ஏஞ்சல், நீ ஒன்றுக்குமே கவலைப்பட வேண்டாம்.” என்றவன், “நம்ம இருவருக்கும் எட்டு மணிக்கு லூகாஸ் வீட்டில் டின்னர்.” சொன்னவன் தொடர்ந்து,
“சும்மா சொல்லக் கூடாது ஏஞ்சல், அவன் நல்ல நண்பன் தான். உங்கள் வீட்டிலிருந்து வரும் வழியில் கொஞ்சம் தாமதம் ஆகிவிட்டது. அதைச் சொன்னதும் உனக்கு அவசர வேலை தந்து நிறுத்தி வைத்திருந்தான்.” என்றவனை செல்லமாக முறைத்தவாறே,
“எனக்கு மறைத்து இத்தனையையும் செய்தீர்களா?” சொல்லிக் கொண்டே அவன் நெஞ்சில் குத்தத் தொடங்கினாள்.
அவள் கைகளை இறுகப் பற்றிக் கொண்டவன், “இப்போ நீ போய் ஃபிரெஸ் ஆகி வா ஏஞ்சல். நான் உன்னுடன் தானே இருக்கப் போகிறேன்; பிறகு ஆறுதலாக சண்டை பிடிக்கலாம்.” என்றவனிடம்,
“இல்லை, இப்பவே இந்தியாவிலிருந்து நான் வந்த பிறகு அங்கு என்ன நடந்தது என்று சொல்லுங்க. முக்கியமாக ஸ்வேதா என்ன சொன்னாள் என்று சொல்லுங்க..” விடாமல் கேட்டவளிடம்,
“ஸ்வேதா என்னை புரிந்து கொண்டாள் ஏஞ்சல். அதையும் விட தான் எப்போது தன் அக்காவைப் பார்ப்பது என்று அங்கிருந்து ஒரே அடம்.” என்றவனை நேராகப் பார்த்தாள் ஏஞ்சல்.
இதுவரை தான் கனவில் பேசி, சந்திப்போமா என்று ஏங்கிக் கொண்டிருந்தவனை கண்ட மகிழ்வை அப்படியே வெளிப்படுத்திக் கொண்டிருந்த அவள் விழிகள் சட்டென்று உணர்சிகள் துடைத்து ஒருவகை கம்பீரத்தை தன்னுள் நிறைத்துக் கொண்டன.
“அவள் உங்களைப் புரிந்து கொண்டதில் சந்தோஷம் எழில். அவள் திருமணம் செய்து சந்தோசமாக வாழ்ந்தால் தான், என் மனம் நிம்மதியாக இருக்கும்.” என்றவள்,
“அதற்கென்று எனக்குப் புதிய உறவுகள்…” சொல்லி நிறுத்தியவள் எழிலின் முகம் சட்டென்று மாறியதைப் பார்த்து ,
“உங்களைச் சொல்லவில்லை எழில், அக்கா அப்படி இப்படி அதெல்லாம் தேவையே இல்லை; எனக்கு அதில் விருப்பமுமில்லை.” அவள் குரல் முதன் முதல் விமான நிலையத்தில் கண்ட ஏஞ்சலை இவனுக்கு நினைவுபடுத்தியது.
ஸ்வேதாவின் ஆர்வத்தையும் வேணு மாமாவின் தவிப்பையும் அவளுக்கு எப்படிச் சொல்லிப் புரியவைப்பதேன்றே விளங்கவில்லை எழிலுக்கு,
“ கொஞ்சம் பொறுமையாக நான் சொல்ல வருவதைக் கேள். ஸ்வேதா பாவம்மா. நான் அவளை ஏதோ ஒருவிதத்தில் வருத்திவிட்டதாக இப்போதும் நினைக்கிறேன். நீயும் உன் பங்கிற்கு வருத்தி விடாதே!” சொன்னவனை அதிர்ச்சியாகப் பார்த்தாள் ஏஞ்சல்.
“என்ன எழில் சொல்றீங்க? நான் ஏன் அவளை வருத்துகிறேன்? கல்யாணம் நின்றதைச் சொல்றீங்களா?” கேட்டவள் முகம் மெல்லக் கசங்கியது.
அதைப் பார்த்த எழில், “இல்லை ஏஞ்சல், அவள் முழுமையாக என்னைப் புரிந்து கொண்டாள் என்று சொன்னேனே!” என்றதும்,
“அவளுக்கு ஒரு கல்யாணம் நடந்த பின்னராக நாம் கல்யாணம் செய்து கொள்வோம் எழில்.” என்றவளை இப்போது மலர்ந்த முகத்துடன் பார்த்தவன்,
“இப்போது சரி உன் வாயால் என்னைக் கல்யாணம் செய்வதாகச் சொன்னாயே!” அவள் கைகளைப் பற்றிக் கொண்டவன் ,
“நான் அதைச் சொல்லவில்லை…” என்று தொடங்கி அன்று ஸ்வேதா வீடு வந்த பின்னர் நடந்தவைகளைச் சொல்லத் தொடங்கினான்.

அன்று அமெரிக்காவில் இருந்து வந்திருந்த ஸ்வேதா வீட்டில் நடந்தவை எதுவுமே தனக்குத் தெரிந்த மாதிரி பெற்றோரிடம் காட்டிக் கொள்ளவில்லை. ஆனால் அவையெல்லாம் அவளுக்கு தெரியும் என்பதை எழில் மூலம் அறிந்திருந்த ராஜசேகர் தம்பதியினர், ஸ்வேதாவின் அமைதியான போக்கைப் பார்த்து வியந்து தான் போனார்கள்.
தன் மாமி கோமதி ஏன் திடீரென்று வீட்டை விட்டுப் போய் விட்டார் என்று வினவிய ஸ்ரீமதியும், பிரச்சனை தொடங்கியதில் இருந்து அண்ணன் வீட்டிலேயே தங்கியிருந்து எழிலையும் அண்ணனையும் கோமதி திட்டிக் கொண்டே இருந்ததால், ‘மாமாவும் வந்துள்ளார் தானே, வீட்டில் போய் இருக்கட்டும்.’ என்றே நினைத்துக் கொண்டார்.
நான்கு நாட்களின் பின்னர் வேணு ஓரளவிற்குத் தெளிந்ததும் பங்களூர் செல்லப் புறப்பட்டார்கள் ஸ்ரீமதி குடும்பம்.
அதுவரை ஸ்ரீமதி தன் கணவருடன் முகம் கொடுத்து ஒரு வார்த்தை பேசிக் கொள்ளவில்லை. பெற்றோர்களின் மௌனத்தை அவதானித்தே இருந்தாலும் ஸ்வேதாவும் எதுவும் சொல்லவில்லை.
இதுவரை இப்படி எல்லோரும் ஒன்றாகக் கூடி விட்டால் அந்த இடமே கலகலத்துப் போய்விடும். ஆனால், இந்த சில நாட்களாக இவர்கள் வீட்டில் மௌனத்தின் ராஜ்ஜியம் அல்லவா நடக்கின்றது!
உணர்ச்சி துடைத்த முகத்துடன் புறப்படத் தயாராகி இருக்கும் தங்கையை ஏறிட்ட ராஜசேகருக்கு துக்கம் நெஞ்சை அடைத்து.
‘இவளுக்கு ஆறுதலோ தேறுதலோ சொல்லும் எந்தத் தகுதியும் எனக்கில்லை. என் தங்கையின் மனதைப் புண்ணாக்கி அவள் நம்பிக்கையை சிதைத்து விட்டேன்.’ மனதில் வருந்தினார் அவர்.
அப்போது, “என்ன மாமா பலமான யோசனை?” சாதாரணமாகக் கேட்டுக் கொண்டு அவரருகில் வந்தமர்ந்த ஸ்வேதா, “மாமா நான் உங்களிடம் ஒன்று கேட்கலாமா?” என்றதும், மருமகளைப் பார்த்த ராஜசேகரின் கண்கள் கலங்கின.
ஆதரவாக மருமகள் தலையை வருடியவர், “அம்மா ராஜாத்தி, ஒன்றென்ன எத்தனையும் கேட்கலாம்டா. நீ கேட்பது கேட்காதது எல்லாவற்றையும் அப்படியே அள்ளித் தர இந்த மாமனுக்கு ஆசை தான், ஆனால் நான் மட்டும் ஆசைப்பட்டால் போதாதே!” கரகரத்தவர் விழிகள் அங்கே கொஞ்சம் தள்ளி அமர்ந்திருந்த எழிலை தீக்கங்குகளாக சுட மறக்கவில்லை. அந்தளவிற்கு மகனில் ஆத்திரம் இருந்தது அவருக்கு.
“அதுதான் எனக்குத் தெரியுமே மாமா. அதனால் தானே இதைக் கேட்கவே போகிறேன். என் மாமா என் ஆசையை, விருப்பத்தை நிச்சயம் மதிப்பார் என்று எனக்குத் தெரியும்.” அவர் தோளில் சாய்ந்து கொண்டவள்,
“மாமா, அப்போ என் அக்காவுக்கு உங்க மகனைச் செய்வதில் உங்களுக்கு பூரண சம்மதம் தானே.” வார்த்தைகளில் அழுத்தத்துடன் கேட்டவளை அனைவருமே அதிர்ந்து போய்ப் பார்த்தனர்.
மௌனமாக அதிர்ந்து போய் இருப்பவர் ஒவ்வொருவரையும் பார்த்து வந்த ஸ்வேதாவின் விழிகள் தன் பெற்றோரில் சில கணங்கள் நிலைத்தன.
‘அப்போ, இவளுக்கு எல்லாமே தெரிந்திருக்கு’ நினைத்துக் கொண்ட ஸ்ரீமதி வேணு இருவருமே வெவ்வேறு மனிநிலைகளில் அதிர்ந்து போய் இருந்தனர்.

error: Alert: Content selection is disabled!!