நீயென் சொந்தமடி 15 – 3

மகள் முன்னாலும் தலைகுனிந்து கொண்டார் வேணு. ஆனாலும் ஏஞ்சலை அவள் அக்கா என்றது அவருக்கு பெரும் ஆறுதலைத் தந்தது .
‘தன் திருமணம் நின்றது தெரிந்தும் எழிலுக்கு அவன் விரும்பியவளை பெண் கேட்கிறாளே!’ மனதில் தன் மகளை நினைத்து வியந்து போனார் ஸ்ரீமதி.
சின்னப்பெண்ணாக தான் நினைத்திருந்தவள் எவ்வளவு பெருந்தன்மையும் சாதுரியமுமாக இந்த விடயத்தை அணுக நினைக்கிறாள் என்று புரிந்து கொண்டவர் கண்கள் நிறைந்தன.
அப்படியே எழிலைப் பார்த்த ஸ்வேதா அழகாகப் புன்னைகைத்தவள், ராஜசேகரைப் பார்த்தவாறு திரும்பி அமர்ந்து அவர் கைகளைப் பாசத்துடன் பற்றிக் கொண்டே, “மாமா, எனக்கு எல்லாமே தெரியும். அதுவும் எழில் அத்தான் என்னிடம் சொல்லிச் சொல்லி நிறைய வருந்தினார். தான் ஏதோ எனக்கு கெடுதல் செய்து விட்டது போல பேசுகின்றார். அந்தளவுக்கு அவர் எந்தத் தப்பும் செய்யவில்லை. ஒருவேளை…” சொல்லி எழிலை ஒரு பார்வை பார்த்தாள்.
“நான் காதலிக்கிறேன் என்று அவர் சொன்ன பெண் வேறு யாருமாக இருந்திருந்தால், இந்தளவுக்கு நான் சமாதானம் அடைந்திருப்பேனோ தெரியவில்லை.” சொன்னவள் எழிலை நோக்கி,
“அத்தான், நிச்சயம் உங்களைக் கல்யாணம் செய்ய விட்டிருக்க மாட்டேன் என்று தான் நினைக்கிறேன்.” இப்போதும் அவள் குரல் அழுத்தமாகவே வந்தது.
மறுபடியும் மாமனை நோக்கியவள், “ஆனால், ஏஞ்சல் என் அக்கா. அதுவும் இருவரும் விரும்புகையில் அதை நாங்க நடத்தி வைக்க வேண்டும் மாமா. என்னைப் போலவே அவளும் உங்கள் மருமகள் தானே! இல்லை என்று சொல்லுவீங்களா?” தமயனிடம் கேட்டவளை கண்ணீருடன் வியப்பாகப் பார்த்தார் ஸ்ரீமதி. இப்படி ஒரு தெளிவான மனமுள்ள பெண்ணைப் பெற்றதற்காக அவர் உள்ளம் அந்த நிமிடம் பெருமிதம் கொண்டது.
கண்ணீர் வழிய தன்னையே பார்த்த தாயிடம் விரைந்தவள், “ஸ்ஸ்..என்னம்மா, இப்போது என்ன நடந்து விட்டது?” அவரைக் கட்டிக் கொண்டாள்.
ஏமாற்றமும் வெறுப்புமாக தொய்ந்து போய் இருந்த ஸ்ரீமதியும் மகளைக் கட்டிக் கொண்டு அழுதே விட்டார்.
தாயின் கண்ணீரைத் துடைத்து விட்டவள், “அம்மா, இங்க பாருங்க..” அவர் முகத்தைத் தன்னை நோக்கி நிமிர்த்தினாள்.
“என்றோ நடந்து போனதுக்கு இப்போ அப்பாவுக்கு நீங்க தண்டனை கொடுத்து, உங்களையும் வருத்தி…என்ன இது? இதனால் உங்களுக்கு என்ன வரப் போகுது? நடந்தவை ஏதும் இல்லை என்றாகி விடுமா? இருவருக்கும் மன வருத்தம் மட்டும் தான்மா மிஞ்சும். அதனால், வேண்டாம்மா..அப்பாவும் பாவம்மா..” இப்போது ஸ்வேதாவின் குரல் நடுங்கியது. மீண்டும் மகளைக் கட்டிக் கொண்டு அழத் தொடங்கி விட்டார் ஸ்ரீமதி.
அப்போது அவர்கள் அருகில் வந்த வேணு, “ஸ்ரீ, என்னை… என்னை மன்னித்துக் கொள்ளும்மா. இப்படிக் கேட்கக் கூட தகுதில்லாதவன் நான்.” சொன்னவர்,
“ராஜசேகரைப் பார்த்து கைகூப்பினார். “மன்னித்துக் கொள்ளுங்க; எல்லோருமே மன்னித்துக் கொள்ளுங்க.” கண்களில் நீருடன் தழுதழுத்தவரை ராஜசேகர் சலனமின்றிப் பார்த்திருந்தார். அந்தளவிற்கு அவரில் கோபமும் வெறுப்பும் கொண்டிருந்தது அவர் மனம்.
ஆனால் ஸ்ரீமதியால் அப்படி இருக்க முடியவில்லை. இத்தனை வருடங்கள் மிகவும் அன்னியோன்யமாக வாழ்ந்தவர்கள் அல்லவா அவர்கள்? திருமணதிற்கு முன் செய்த தப்பு இன்று தெரிய வந்திருந்தாலும், அந்தக் கோபம் மனதில் கனன்றாலும், நெஞ்சைப் பிடித்துக் கொண்டு கணவன் விழுந்த போதே உள்ளத்தில் நடுங்கிப் போய் விட்டார் அவர். தான் வாய் திறந்தால் அது கணவனை நிச்சயம் மேலும் நொருங்க வைக்கும் என்று எண்ணியதால் தான், இந்த சிலநாட்களாக மௌனம் காத்து வந்தார் அவர்.
அதே நேரம் எதுவுமே நடக்கவில்லை என்கின்ற மாதிரி இயல்பாக கணவர் முகம் பார்க்க முடியவில்லை அவரால். தான் ஏமாற்றப்பட்டு விட்டதாய் உள்ளத்தில் துடித்துப் போனார் அவர்.
ஆனால், கணவர் எல்லோர் முன்னிலையில் கண்ணீருடன் கையேந்த வேண்டும் என்றோ, மன்னிப்பு யாசகம் செய்ய வேண்டும் என்றோ அவர் நினைக்கவில்லை.
தனக்கு அறிமுகமான நாளிலிருந்தே சுய விருப்பை மதிக்காது, தாயின் கட்டளைகளிற்கு ஏற்பவே கணவர் நடந்து கொள்வதைக் கண்டு வந்திருந்தவருக்கு, பொறுமையாக யோசித்துப் பார்க்கையில் அவர் மீது ஒருவகைப் பரிதாபமே எழுந்தது.
தன்னைக் கல்யாணம் செய்த இத்தனை வருடங்களில், ஒரு கணம் கூட குறை சொல்கின்ற மாதிரி அவர் தன்னை நடத்தவில்லை என்பதும் , கோபத்தில் கொந்தளித்த அவர் உள்ளத்திற்குப் புரியாமலுமில்லை.
தன்னை அணைத்திருந்த மகளை விலத்தி கணவரை நேராகப் பார்த்தவர், “இப்போது தான் உடம்பு குணமாகி இருக்கு திரும்ப..” சொல்லிக் கொண்டு வந்த மனைவியை நோக்கிய வேணு கண்ணீருடன் மனைவியை நேருக்கு நேராக ஏறிட்டவர்,
“மன்னிப்பாயா ஸ்ரீ? உன்னைத் திருமணம் செய்த நாளில் இருந்து நெஞ்சறிய உனக்கு ஒரு துரோகமும் செய்யவில்லை. முதல் நடந்ததை மறைத்தது தவிர. அதிலும் சத்தியமாக இந்தக் குழந்தை விடயம் எனக்குத் தெரியாதம்மா. தெரியவே தெரியாது.” சொல்லிக் கொண்டு வந்தவர் தேம்பி அழுதே விட்டார்.
“என்னங்க நீங்க? இப்போது எதற்கு…” வார்த்தைகள் தடுமாற கணவரை ஆதரவாக அணைத்துக் கொண்டார் ஸ்ரீமதி.
கலங்கி நிற்கும் பெற்றோர்களை கண்ணீருடன் சேர்த்தணைத்துக் கொண்டாள் ஸ்வேதா.
வார்த்தைகளால் சொல்லிக் கொள்ளாத தங்கள் உள்ளத்து மனவோட்டங்களை, ஸ்பரிசங்களாலும் பார்வைகளாலும் பரிமாறிக் கொண்டனர் மூவரும்.
சிறிது நேரத்தின் பின்னர் சமாதானமாகி அமர்ந்தவர்களை எல்லையில்லாத ஒரு நிம்மதியுடன் பார்த்தார் ராஜசேகர்.
தங்கை இதன் பிறகு எப்படி எல்லாம் நடந்து கொள்வாளோ என்று கலங்கிக் கொண்டிருந்தவருக்கு, மைத்துனரில் உள்ள கோபம் தணியவில்லை என்றாலும், தங்கை அவரை அரவணைத்துக் கொண்டத்தில் மகிழ்ச்சியே ஏற்பட்டது .
நடப்பவற்றை அமைதியாக கவனித்துக் கொண்டிருந்தனர் ராஜசேகரின் பிள்ளைகள் மூவரும். அவர்களையெல்லாம் ஒரு முறை பார்த்த ஸ்வேதா, “சரி அப்பா அம்மா, இப்போ மாமாவிடம் நீங்களே கேளுங்க, அக்காவிற்கும் எழில் அத்தானிற்கும் திருமணம் செய்ய நாள் குறிக்கச் சொல்லுங்க.” பிடிவாதமாக அதிலேயே நின்றாள்.
பதில் பேசாது தன்னையே பார்க்கும் தாயிடம், “அம்மா, ஏஞ்சல் எனக்கு அக்கா என்றால் உங்களுக்கு பெண் தானேம்மா.” அவள் கேட்ட தொனியில் ஸ்ரீமதியின் விழிகளில் இருந்து குப்புகென்று நீர் வழிந்தது.
ஆனால் அவர் எந்த பதிலும் சொல்லவில்லை. ‘என் மகள் அளவுக்கு தன் மனம் விசாலம் இல்லையோ!’ என்று கூட ஒருகணம் நினைத்துப் பார்த்தவரால், “ஆமாம் ஏஞ்சலும் என் பெண் தான்.” என்று சட்டென்று சொல்ல முடியவில்லை.
மனைவியைத் தவிப்பாக பார்த்த வேணு அமைதியாகவே இருந்து விட்டார். மனைவியின் மனம் அவருக்கு நன்றாகப் புரிந்தது. தான் செய்த காரியத்திற்கு இந்தளவில் மனைவி சமாதானம் அடைந்ததே பெரிய விடயம் என்று எண்ணினாலும், ஏஞ்சலை நினைக்கையில் பரிதாபம் தான் எழுந்தது.
அவருள் ஏஞ்சல் மீதெழுந்த பரிதாப உணர்வை உணர்ந்து கொண்டானோ எழில்!? “ஸ்வேதா, அவள் இங்கு யாரிடமும் தனக்கு அம்மாவோ அப்பாவோ வேண்டும் என்று கெஞ்சவில்லை. அதற்கான தேவையும் அவளுக்கில்லை..” சுள்ளென்று சொன்னான்.
“போதும் அத்தான், நீங்க கொஞ்ச நேரம் பேசாமல் இருங்க. இப்போதைக்கு ஏஞ்சல் எனக்கு அக்கா. உங்களுக்கு ஒரு உறவும்..ம்ம்ம்..இல்லை அப்படியும் சொல்ல முடியாதில்லையா? மச்சாள் தான், ஆனால் எனக்குப் பிறகு தான் உங்களுக்கு உறவு; அதை நினைவில் வைத்திருங்க.” சட்டென்று சிடுசிடுத்தவளை, மெல்லிய புன்சிரிப்புடன் பார்த்தான் எழில்.
“ஆமா என்ன சிரிப்பு வேண்டிக் கிடக்கு?” அதற்கும் சிடு சிடுத்தவள், “சொல்லுங்க மாமா எப்போ கல்யாணம்? அத்தை நீங்க சரி சொல்லுங்க. ஆர்த்திக்கு பெண்ணைத் தெரியுமாமே! ஆர்த்தி உன் அண்ணி எப்படிடி?” பதிலை வரவைக்க முயன்றாள் ஸ்வேதா,
நிதானமாக மருமகளை ஏறிட்ட ராஜசேகர் , “ராஜாத்தி, அந்தப் பிள்ளை உன் அக்காவோ இல்லை யாருக்கும் எதுவாகவும் இருக்கட்டும்மா. ஆனால் இந்தக் கல்யாணம் பற்றிப் பேசுகின்ற மனநிலையில் நான் இப்போ இல்லை. அதனால் இப்போதைக்கு அந்தப் பேச்சை விடு. அதையும் மீறி இந்தத் துரை..” மகனை முறைத்தவர்,
“தன்னிஸ்டத்துக்கு ஏதாவது செய்வதென்றால் எங்களை ஒரேயடியாக மறந்து விட்டு தாராளமாகச் செய்யலாம்…” என்றவரை அவசரமாக இடைமறித்தது எழிலின் குரல்.
“அப்பா, நான் உங்க சம்மதத்துடன் கல்யாணம் செய்து கொள்வேன் என்று தானே முதலிலேயே சொன்னேன்.” என்றவனை நேராகப் பார்த்தவர் ,
“ஓஓஓ! அதிகமாக வியந்தார்.
பின்னர், “அந்த மட்டில் சந்தோஷம்; கொஞ்ச நாட்கள் போட்டும்.” முற்றுப் புள்ளி வைத்தார் ராஜசேகர்.

error: Alert: Content selection is disabled!!