அவர் அப்படித் திட்டத் திட்ட, ஸ்ரீமதிக்கு தன் மாமியார் மீது ஏற்பட்டிருந்த கோபமும் வெறுப்பும் வளர்ந்து கொண்டே சென்றது.
‘அன்று மகனைக் காதலித்த பெண்ணுடன் சேர்த்து வைத்திருந்தால் இந்தப் பிரச்சனைகள் இல்லையே! இப்போ எல்லோரும் தங்கள் தங்கள் பாட்டில் சந்தோஷமாக இருக்க, அநாதரவாக விடப்பட்ட சிறு பெண்ணைத் திட்டுவதால் யாருக்கு என்ன இலாபம்?’ மனதில் வெகுண்டவர் முடிவே செய்து விட்டார்.
அதாவது, தன் மாமியாரின் இந்த ‘தான்’ என்ற கொட்டத்தை அடக்குவதற்காகச் சரி, ஏஞ்சலை எழிலுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று!
நிச்சயம் எழிலின் மனமும் மாறப் போவதில்லை என்பதையும் அறிந்திருந்ததால், தமயனை அணுகிப் பெண் கேட்டார் ஸ்ரீமதி.
“ஆமாம் அண்ணா, ஏஞ்சலும் என் பெண் தான். அவளுக்கு உன் மகனைத் திருமணம் செய்து தருகின்றாயா?” என்று தங்கை கேட்டதை நம்ப முடியாது பார்த்திருந்தார் ராஜசேகர்.
பின்னர் திருமணத்துக்கு சம்மதம் சொன்னாலும், அவர் மனம் மட்டும் என்னவோ இன்னமும் சரி வரவில்லை.
அதனால் ஏஞ்சலைப் பார்க்கப் புறப்பட்ட ஸ்ரீமதி குடும்பத்துடன் மூத்த மகனையும் மருமகளையும் அனுப்பி வைத்தவர், அங்கு போய் ஏஞ்சலின் வளர்ப்புப் பெற்றோர்களுடன் சம்பிரதாயமாகப் பேசி வரும் படியும் கூறியிருந்தார்.
ஸ்ரீமதி மகளையும் ஏஞ்சலையும் பார்த்து நிற்க, இமை தட்டாது தன் விழிகளை, தான் முதன் முதலாகக் காணும் மகளில் பதித்திருந்தார் வேணு.
அவர் மனமோ இவள் விடயம் கேள்விப்பட்ட கணத்திலிருந்து இவளிடம் யாசிப்பது போல இப்போதும் ஓயாது மன்னிப்பு யாசகம் செய்த வண்ணம் இருந்தது.
‘அம்மா நேரில் பார்த்தால், இவள் மீது வளர்த்து வைத்துள்ள பகைமையை தொடர்ந்து பாராட்டுவாரா?’ மகளையே பார்த்துக் கொண்டு நினைத்துக் கொண்டவர் விழிகள் கலங்கின.
“இவள் என் இரத்தம். ஆனால் நான் ஒரு பாவி! என் மகள் என்னை மன்னிப்பாளா?” வாய் விட்டே முணுமுணுத்த கணவரின் கரத்தை ஆதரவாகப் பற்றிக் கொண்டார் ஸ்ரீமதி.
மெல்ல மெல்ல மகள்களை நோக்கி நகர்ந்தவர்களைக் கண்ட ஸ்வேதா, கண்களைத் துடைத்துக் கொண்டே, “அக்கா, இவர் தான் நம்ம அம்மா ஸ்ரீமதி.” புன்னகையும் பாசமுமாக தாயை அறிமுகம் செய்து வைத்தாள்.
ஏஞ்சலும் பாசமே உருவான அப் பெண்மணியை உற்றுப் பார்த்தவள் தன்னை நோக்கி வந்தவரை மெல்ல அணைத்துக் கொண்டாள். “எப்படி இருக்கின்றாய் ஏஞ்சல்? நன்றாக இருக்கிறாயா?” கேட்டவரிடம் மெல்லத் தலையாட்டினாள்.
அவரிடம் வாய் விட்டுப் பேச எதுவுமே அவளுக்கு தோன்றவில்லை. ‘ஸ்வேதாவின் அன்னை இவர் என்றால்??” நினைத்துக் கொண்டே அருகில் நின்ற வேணுவைப் பார்த்த அந்தக் கணம் அவள் உடல் சட்டென்று விறைத்துக் கொண்டது.
மனதில் இதுவரை இருந்த காதல் உணர்வுகளும் சரி, ஸ்வேதா பேசப் பேச மெல்ல மெல்லத் துளிர் விடப் பார்த்த பாசமும், அவள் மீதான பரிதாபமும் என்று அனைத்துமே இருந்த இடம் தெரியாமல் ஓடி ஒளிந்து கொள்ள, அங்கு முழுவதுமாக வெறுப்பு என்பது புகையாகப் படர்ந்து பரவத் தொடங்கியது.
அது அப்படியே அவள் விழிகளில் வெளிப்பட்டதை வேணு மிகவும் துல்லியமாக உணர்ந்து கொண்டார். அடுத்த கணம் அவருள்ளம் அப்படியே வலியுடன் சோர்ந்து போனது .
“அக்கா இவர் தான் நம்ம அப்பா…” சொன்ன ஸ்வேதாவை தீர்மானமாகப் பார்த்தவள் சிறிதாக வெளிப்பட்ட ஒரு கம்பீர முறுவலுடன்,
“உன் அம்மா அப்பாவை நம்ம என்று என்னுடன் பகிர நினைப்பது உன் பெருந்தன்மையைக் காட்டுகின்றது ஸ்வேதா. உன் பக்குவப்பட்ட மனதைக் காட்டுது. ஆனால்…” சொல்லி கணம் நிறுத்தி நிதானித்தவள்,
“நான் அந்தளவுக்கு பக்குவம் ஆனவள் இல்லை. மிகமிக சாதாரணமானவள்.” சொல்லி முடித்தவளின் பார்வை அவர்களை விட்டு அகன்று அப்பால் சுழன்றது.
தன் உள்ளத்தில் கனன்று கொண்டிருக்கும் வெறுப்பையெல்லாம் வெளிப்படுத்தி, ‘யாரிலோ உள்ள வெறுப்பை எல்லோர் மீதும் தூவி விடுவேனோ!’ மனதில் மிகவும் பயந்து போனாள் ஏஞ்சல்.
அவள் மனமறிந்த எழில் மெல்ல அவள் கரத்தைப் பற்றி அழுத்திக் கொடுத்தான். சட்டென்று அவனை ஏறிட்டவள் மிகவும் முயன்று தன் மனதை அடக்கிக் கொண்டே, மெல்லிய நகையுடன் ஸ்வேதாவை நிதானமாகப் பார்த்தாள்.
“என் அப்பா அம்மாவை நீங்க எல்லோரும் நாளை கட்டாயம் சந்திக்கலாம் ஸ்வேதா.” பட்டுத் தெறித்தது போல வந்தது அவள் வார்த்தைகள்.
ஆனால் அதைக் கேட்டதும் ஸ்வேதாவின் முகம் மட்டுமன்றி எழில் தவிர்ந்த மிகுதி அனைவர் முகங்களுமே சட்டென்று கன்றி விட்டது. அதைப் புரிந்து கொண்டாலும் சிறிதும் பொருட்படுத்தாமல் நேராக தன்னைப் பார்த்தவளிடம்,
“ஏஞ்சல், இவர் என் அண்ணா ஆதி, இவர் என் அண்ணி.” அவர்களை அறிமுகம் செய்து வைக்க, புன்னகையுடன் அவர்களை வரவேற்றுக் கதைக்கத் தொடங்கினாள் ஏஞ்சல்.
****
அடுத்த நாள் ஜுவேணியிலிருந்து ஏஞ்சலின் பெற்றோர் வந்திருந்தனர்.
இரவு ஏஞ்சலை வீட்டில் கொண்டு வந்து விட்ட எழில், அவளுடன் தங்கப் போவதாகச் சொல்லி ஸ்வேதா விரும்பவே அவளையும் இறக்கி விட்டு விட்டு, தாம் எப்போதும் இங்கு வந்தால் தங்கும் அப்பார்ட்மென்ட்டுக்கு மாமா, மாமி, அண்ணா, அண்ணியுடன் சென்றவன், இதோ காலையிலேயே எல்லோருமாக இங்கு வந்துள்ளனர்.
நேற்று இறுதியாக, “எப்படி இருக்கிறீங்க?” மிகச் சிக்கனமாக வேணுவை நலம் விசாரித்ததுடன் நிறுத்தி விட்டிருந்தாள் ஏஞ்சல்.
அதன் பிறகு அவர் பக்கமும் அவள் பார்க்கவில்லை. கொந்தளிக்கும் அவளுள்ளம் ஸ்வேதாவின் முகத்திற்காகவே அடங்கிக் கொண்டதென்றே சொல்லலாம். அந்தச் சின்னப் பெண்ணின் பாசம், கண்ட சிறிது நேரத்திலேயே ஏஞ்சலை அசைத்துப் பார்க்கத் தொடங்கியிருந்தது.
தன் முன்னால் தடுமாறும், குற்றத்தில் குளித்த விழிகளுடன் நிற்கும் வேணுவை அப்படியே எட்டி அவர் சட்டையைக் கொத்தாகப் பிடித்து, “முதுகெலும்பு இல்லாத உனக்கெல்லாம் காதல் ஒரு கேடா? சுயநலம் பிடித்தவனே!” என்றுக் கேட்கத் தோன்றிய மனதை அப்படியே அடக்கிக் கொண்டாள் அவள்.
‘இதெல்லாம் இனிக் கேட்டுத்தான் என்ன பயன்?’ என்று நினைத்துக் கொண்டவளுக்கு, இந்தியாவில் நடந்தவை அனைத்தும் எழில் மூலம் தெரிந்திருந்ததால், ஸ்ரீமதி மீதும் ஸ்வேதா மீதும் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு நட்புணர்வு ஏற்படத் தொடங்கியிருந்தது.
இவள் பெற்றோர் வரும் முன்னே எழில் மற்றவர்களை அழைத்துக் கொண்டு வந்து விட, அவர்களுக்கு காஃப்பி கொடுத்துக் கொண்டிருக்கும் பொழுது ஏஞ்சலின் பெற்றோர் உள்ளே வந்தார்கள்.
வழமை போல கட்டியணைத்து வரவேற்று, அமர்ந்திருந்த எழில் குடும்பத்தினருக்கு, “என் மாம் டாட்..” என்று அறிமுகம் செய்து கொண்டு வந்தவளின் குரலில் மிகவும் ஒரு கர்வம் தொனித்ததை அங்கிருந்த எல்லோருமே நன்றாக உணர்ந்து கொள்ள முடிந்தது.
‘யாரும் கைவிட்டு நான் குறைந்து போகவில்லை.’ என்பதைக் காட்டும் வேகம் அவளில் இருந்ததை உணர்ந்து கொண்ட அவர்கள், அவள் மனம் எந்தளவுக்கு வேதனைப்பட்டிருந்தால் இப்போது இப்படி நடந்து கொள்வாள் என்றே நினைத்துக் கொண்டனர்.
வேணுவின் அருகில் வந்து மிக இயல்பாக அவரைப் பார்த்து, “இவர்கள் என் அப்பா அம்மா..” என்றவள்,
தன் பெற்றோர்களிடம் வேணுவைச் சுட்டிக் காட்டி, “டாடி, இவர் ஸ்வேதாவின் அப்பா.” என்றாள். பின் வேணுவின் அருகில் இருந்த ஸ்ரீமதியைக் காட்டி, “இவர் ஸ்வேதாவின் அம்மா..” மென்னகையுடன் அறிமுகம் செய்து வைத்தவள், “கதைத்துக் கொண்டிருங்க மாம், நான் உங்களுக்குக் குடிக்க எடுத்துக் கொண்டு வருகிறேன்.” என்று சமையலறை நோக்கிச் சென்றாள்.
அவள் தன்னை அறிமுகம் செய்து வைத்ததில் இருந்தே, அவள் மனதில் தனக்கான இடத்தை தெளிவாகப் புரிந்து கொண்ட வேணு, தன் விதியின் வலிமையை வலியுடன் நினைத்துக் கசந்த முறுவலைப் பூசிக் கொண்டார்.
தனக்குத் தெரியாத அவள் பிறப்பை அறிந்த கணத்திலிருந்து அவளிடம் மன்னிப்பு யாசிக்க நினைத்துக் கலங்கிய உள்ளத்துக்கு, ‘அதற்குக் கூட நீ தகுதியில்லாதவன்.’ என்ற வகையிலான ஏஞ்சலின் நடவடிக்கையில் பெரிய மரண அடியே வாங்கினார் அவர்.

