நீயென் சொந்தமடி 17 – 2

“சரி சரி வாங்க போவோம். சரியாக பத்துமணிக்கு எல்லாம் ஆரம்பமாகி விடும்.” சொல்லிக் கொண்டே லூகாஸ் எமிலி திருமணம் நடக்கவிருந்த தேவாலயத்துக்கு புறப்பட்டனர்.
இந்த ஐந்து வருடங்களில் லூகாஸ் எமிலி மிகவும் நெருக்கமாகி விட்டனர். சோஃபி இப்போதெல்லாம் தாய் வீடு செல்வதே மிகவும் குறைந்து விட்டது. எமிலியை அந்த இடத்தில் அழகாகப் பொருத்திக் கொண்டாள் அவள். எமிலியும் தாயாக இருந்து அவளைப் பார்த்துக் கொண்டாள். வயதும் வந்து விடவே அதற்குரிய முதிர்ச்சியுடன் புரிந்து நடக்கத் தொடங்கியிருந்தாள் சோஃபி.
அப்படித் தாயைத் தேடிச் செல்லாதவள், வார இறுதி என்றதும் ஏஞ்சலை நாடி வந்து விடுவாள். அவளும் சாதனாவும் மிகவும் நெருங்கிய தோழிகள் என்பதுவும் அதற்கொரு முக்கிய காரணமாகும்.
அப்படி வந்து விட்டால், குழந்தைகளுக்காக வேலையை விட்டு விட்டு வீட்டில் நிற்கும் ஏஞ்சலுடன் சேர்ந்து நால்வரும் குழந்தைகளாகக் கொட்டமடித்து மகிழ்வார்கள். முக்கிய வேலைகள் இல்லாத சமயங்களிலும் ஞாயிறுகளிலும் எழிலும் இவர்களுடன் இணைந்து கொள்வான்.
****
“நோ..நோ..சஜன், குட்டிப் பாப்பாவுக்கு வலிக்குமே! பாவம் இல்லையா உன் தங்காப் பாப்பா தானே!” தன் மடியில் இருந்த குழந்தையின் முகத்தைத் தடவுவது போல வந்து விட்டு நெற்றியில் இறுக்கி அழுத்திய மகனை விலக்கியவள், தன்னருகில் வந்தமர்ந்த கணவனிடம்,
“எழில், சஜனைத் தூக்கி மடியில் வைத்திருங்க. அவனுக்கு நான் பாப்பாவைத் தூக்கியது பிடிக்கவில்லை; பாருங்க முறைக்கிறான்.” மெதுவாகச் சொன்னவள்,
“அப்படியே அப்பாவைப் போல!” தொடர்ந்து முணுமுணுக்க, அவளைத் தாரளமாக இடித்துக் கொண்டு அமர்ந்த எழில்,
“வாடா கண்ணா வாடா…தங்காப் பாப்பாவை என்ன செய்தீங்க?! பார் உன் அம்மா அதற்கும் என்னைத் திட்டுகிறாள்.” மகனைத் தூக்கி மடியில் வைத்துக் கொண்டவன்,
மகனுடன் குனிந்து, மனைவியின் மடியில் கிடந்தது தன் மின்னும் விழிகளை உருட்டி விழித்து மனைவியின் பேச்சுகளிற்கு இதழ் மலர்த்திய ஸ்வேதாவின் இரண்டாவது குழந்தையுடன் கொஞ்சத் தொடங்கினான்.
அப்போது தான் எதிர்வீட்டுச் சிறுமியுடன் கதைத்து விட்டு உள்ளே வந்த சாதனாவும் தாயின் மறுபக்கமாக வந்தமர்ந்து கொண்டவள், அவளைக் கண்டதும் கையில் இருந்த விளையாட்டுப் பொருட்களை அப்பால் போட்டு விட்டு ஓடி வந்து அவள் மடியில் ஏறியமர்ந்த ஸ்வேதாவின் மூத்த மகனை அணைத்துக் கொண்டே, தாயின் மடியில் கிடந்த குட்டிப் பாப்பாவுடன் தன் பங்கிற்குக் கொஞ்சத் தொடங்கினாள்.
இதையெல்லாம், தொலைக்காட்சியைப் பார்ப்பது போன்ற பாவனையில் சற்றுத் தள்ளி அமர்ந்திருந்து, ஆசையுடனும் ஏக்கத்துடனும் பார்த்துக் கொண்டிருந்தார் வேணு.
ஸ்வேதா தன் கணவருடன் கடைக்குச் சென்றிருக்க, அவள் அம்மா ஸ்ரீமதி சமையலறையில் மும்மரமாக சமையலில் ஈடுபட்டிருந்தார்.
அதுவும் மாதத்தில் இரு தடவைகள் ஏஞ்சல் தன் குடும்பத்துடன் இங்கு வரும் போதெல்லாம், ஸ்ரீமதி தன் கையாலேயே அனைத்தையும் பார்த்துப் பார்த்து சமைத்துப் பரிமாறுவது வழக்கம்.
“எழில், அம்மா அப்பா எப்போது வருகிறார்கள்?” சமையலறையில் இருந்தவாறே கேட்ட அத்தைக்கு,
“இன்னும் இரண்டு கிழமைகள் இருக்கு அத்தை. இங்கு வந்து இரண்டு மாதங்கள் நின்று விட்டு அப்படியே ஆர்த்தியிடம் அமெரிக்கா போக இருக்கிறார்கள். அவள் டெலிவரி டைம் என்பதால் அம்மா அவளுடன் நிற்க அப்பா மட்டும் திரும்பி இந்தியா போவார்.” என்ற எழில் தொடர்ந்து தங்கள் குடும்பக் கதைகளைக் கதைத்துக் கொண்டே, குழந்தைகளுடன் விளையாடியவாறே மனைவியை வம்பிழுத்துக் கொண்டமர்ந்திருந்தான்.
ஐந்து வருடங்களின் முன்னர் தனக்கு ஏஞ்சல் என்றோரு மகள் இருக்கிறாள் என்று அறிந்து கொண்டதும், அவளுக்கு தான் மிகப் பெரிய அநீதி இளைத்து விட்டதாகத் துடித்துத் தன் தவறை உணர்ந்து கொண்ட வேணு, மனைவி, மகளின் முழு ஆதரவுடன் ஏஞ்சலைத் தேடி ஆவலுடன் வந்திறங்கினார்.
ஆனால் அவளோ சிறிதும் இளக்கமின்றி, “இவர் ஸ்வேதாவின் தந்தை டாட்.” என்று அவள் வளர்ப்புத் தந்தைக்கு அவரை அறிமுகம் செய்து வைத்தவள், ‘நான் மிகவும் சாதாரணமானவள். என் மனதில் ஏற்பட்ட இரணமெல்லாம் மறைந்து விட்டது என்று சொல்லி உங்களை என் பாசத்தால் அரவணைத்துக் கொள்ளும் அளவிற்கு பக்குவம் இல்லாதவள்.’ என்ற தொனியில் அன்று நடந்து கொண்டவள், இன்று வரை அதே நிலையில் தான் இருக்கிறாள்.
ஏஞ்சல் எழில் திருமணத்துக்கு முன்பே, “எனக்கு இனி அக்காவை விட்டு விலகியிருக்க விருப்பம் இல்லை. அதனால், ஃப்ரான்சிலேயே மாப்பிள்ளை பார்த்து விட்டு கையைக் காட்டுங்க, நான் அடுத்த நிமிடம் கழுத்தை நீட்டுவேன்.” முடிவாகச் சொல்லி, ஏஞ்சல் எழில் மனதில் ஒட்டிக் கொண்டிருந்த குற்ற உணர்வைப் போக்கிய ஸ்வேதாவுக்கும், அவர்களின் நகைக் கடையை இங்கு பொறுப்பாகப் பார்த்துக் கொண்டவரின் பையனுக்கும், இருபக்கத்தினரின் முழுச் சம்மதத்துடன் நிச்சயம் செய்து வைத்தவர்கள், ஏஞ்சல் எழில் திருமணம் முடிந்து ஒரு வருடத்தில் அவள் திருமணத்தையும் நடத்தி வைத்தனர்.
இப்போதெல்லாம் இடையிடையில் இந்தியா சென்று வந்தாலும் வேணுவும் ஸ்ரீமதியும் ஃப்ரான்ஸிலேயே ஸ்வேதாவுடன் தங்கி விட்டனர்.
அன்று ராஜசேகர் வீட்டிலிருந்து முறுக்கிக் கொண்டு சென்ற கோமதி, ஏஞ்சல் எழில் திருமணம் நடக்கப் போவதை அறிந்து கொண்டதும், மகன் மருமகளுடன் சண்டை பிடித்துக் கொண்டு அதே வேகத்தில் தன் மகளிடம் அமெரிக்கா சென்றவர், அதன் பின்னர் இந்தியா வரவேயில்லை.
தன் சுய கௌரவத்துக்கு ஏற்பட்ட பலத்த அடியாகவே ஏஞ்சல் எழில் திருமணத்தை எடுத்துக் கொண்டார் அவர். அதை அவரால் கொஞ்சமும் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.
அதோடு, தன் உருவை ஏஞ்சலுக்கு கொடுத்த படைத்தவனின் முட்டாள்த்தனமான செயலையே அவர் பழித்துக் கொண்டிருக்கிறார்.
“நானும் அக்காவும் இனிச் சரி ஒன்றாக இருக்க வேண்டும். அதுமட்டும் தான் என் ஆசை. அக்காவை விட்டுப் பிரிவதெல்லாம் சரி வராது.” என்று பிடிவாதமாகச் சொன்ன ஸ்வேதா, தன் ஆசைப்படியே திருமணமும் செய்து அக்காவின் மனதையும் வென்றுவிட்டதைப் போன்று, இலகுவில் ஏஞ்சலை நெருங்க முடியாது போய் விட்டது வேணுவால்.
அதற்கென்று ஏஞ்சல் ஒருநாள் ஒருகணம் கூட அவரை வெறுப்பாக நடத்தவில்லை. ஒரு மனிதனுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுத்தாள், ஆனால், அதில் அப்பட்டமாக அந்நியத் தன்மையைக் காட்டினாள்.
ஐந்து வருடங்களாக ஒவ்வொரு கணமும் ‘என் மகள் மனம் மாறாதா? அப்பா என்று அழைக்க மாட்டாளா?’ என்று உள்ளத்தில் ஏங்கும் வேணு தன் கோழைத் தனத்தின் பரிசான அவளின் ஒதுக்கத்தை இப்போதெல்லாம் மகிழ்வுடன் ஏற்கப் பழகிக் கொண்டிருக்கிறார்.
அவள் இப்படி இங்கு வரும் போதும், அவள் குழந்தைகளைத் தான் கொஞ்சுவதைப் பார்த்துச் சிறு புன்னகையுடன் நகரும் போதும், சஜன் “டேய் தாத்தா..” என்று தன்னில் ஏறிக் குதித்து விளையாடும் போதெல்லாம்,
“சஜன், டேய் என்று தாத்தாவைச் சொல்லக் கூடாது.” என்று சொல்வதிலுமே இறக்கையின்றிப் பறப்பார் வேணு. ‘என்னை உன் தந்தையாக ஏற்கவில்லை என்றாலும், உன் பிள்ளையின் தாத்தாவாக ஏற்றுக் கொண்டாயேம்மா! அதுவே போதும்.’ மானசீகமாக மகளுடன் உரையாடிக் கொள்வார் அவர்.
ஸ்ரீமதியை ஆசையாக ஆன்ட்டி என்று அழைத்துக் கொஞ்சுவாள் ஏஞ்சல். “என் செல்லம் வாய் நிறைய அம்மா என்று சொல்லேன்.” இப்போதெல்லாம் நன்றாக தமிழ் கதைக்கும் ஏஞ்சலிடம் கெஞ்சலாகச் சொல்லும் ஸ்ரீமதியின் கன்னத்தைப் பிடித்து செல்லமாகக் கிள்ளிவிட்டு நகர்ந்து விடுவாள் அவள்.
காலம் அதன் மாயங்கள் நிறைந்த கைவண்ணங்கள் கொண்டு, மூத்த மகள் மனதிலும் மாற்றங்களை நிகழ்த்தும் என்ற தீராத நம்பிக்கையில், தன் ஒவ்வொரு நாட்களையும் பேரப்பிள்ளைகளின் தயவில் ஓட்டிக் கொண்டிருக்கிறார் வேணு.
****
“நாளைக்கு ஸ்வேதா புடவைக் கடைக்குப் போக வர முடியுமா என்று கேட்டாள் எழில்.” கணவனின் தட்டில் உணவைப் பரிமாறியபடி மனைவி சொல்ல, “போதும் போதும்..” என்று அவள் தொடர்ந்து பரிமாறியதைத் தடுத்தவன், “ஓ.. ஸ்வேதாவின் மச்சாள் கல்யாணம் வருகுதே! நீயும் வாங்க வேண்டும் தானே, சேர்ந்து போய்விட்டு வா ஏஞ்சல்.” உண்பதில் கவனம் செலுத்தினான் அவன்.
அவளோ, “போங்கப்பா, நான் மட்டுமா?” வழமை போல இராகம் இழுத்தாள்.
“எனக்குத் தெரியுமே! என்னைக் கொண்டு சாமான் தூக்க வைப்பதில் உனக்குள்ள சந்தோசம்..” மனைவியைக் கிண்டல் செய்தவன் அவள் முறைப்பைப் பார்த்து விட்டு , “நாளைக்கு நேரம் வாராதுடா…நீ பிள்ளைகளை அத்தையுடன் விட்டு விட்டு..” சொல்லிக் கொண்டு வந்த கணவனை முறைத்தவள்,
“தேவையில்லை, நான் போகவில்லை.” கதை முடிந்தது என்று தானும் உண்பதில் கவனம் செலுத்தத் தொடங்கினாள்.
இரவு படுக்கைக்குச் சென்று விட்ட மகளும் மகனும் இன்னமும் தூங்கவில்லை என்பதன் அடையாளமாக மெல்லிய குசு குசு பேச்சொலியும், இடையிடையில் நகையொலியும் இவர்கள் காதுகளில் வந்து மோதிக் கொண்டிருக்க, அப்போதுதான் கடையிலிருந்து வந்திருந்த கணவனுடன் சேர்ந்து இரவுணவைப் உண்டு கொண்டிருந்தாள் ஏஞ்சல்.
சட்டென்று தலையை உணவுத் தட்டில் கவிழ்த்த மனைவியின் செல்லச் செயலில் மலர்ந்த முறுவலுடன், “எல்லா வேலைகளையும் தனியே சாமாளிக்கும் நீ, எனக்கு சரியே வாராது என்று தெரிந்தும் இந்த புடவைக் கடை உடுப்புக்கடை என்று இழுத்துக் கொண்டு போக நினைக்கும் மர்மம் என்னடா?” கிண்டல் குரலில் கேட்வனை சட்டென்று நிமிர்ந்து முறைத்தாள் அவன் துணைவி.
“அது ஏன் என்று உண்மையாகவே உங்களுக்குத் தெரியாதா எழில்!” அநியாத்துக்கு வியந்தவள்,
“நான் கஷ்டப்பட்டுப் போய் வாங்கிக் கொண்டு வந்த பின்னர், அது சரியில்லை, இது இப்படி இருக்கு! நிறம் நல்லாவேயில்லை! என்று எத்தனை நொட்டை சொல்வீங்க! பிறகு அதை தூக்கிக் கொண்டு நான் திரும்பவும் போக வேண்டும்.” சொல்லிக்கொண்டே உண்டு முடித்தெழுந்தவள் பாத்திரங்களை அப்புறப்படுத்திக் கொண்டே,
“நீங்களும் என்னோடு வந்தால் அந்தக் கஷ்டம் இல்லாமல் இருவரின் விருப்பத்தின் படியும் பார்த்து வாங்கிக் கொள்ளளாம் இல்லையா? அடுத்தது இந்த சேலைகள் வாங்க எனக்கு இன்னும் தெரியவில்லையப்பா! நீங்க வந்து பார்த்து வாங்கித் தாங்களேன்.” என்றவள்,
உண்டு முடித்த பின்னரும் கன்னத்தில் கைவைத்தபடி தன்னையே பார்த்திருப்பவனைப் பார்த்து, “சரி சரி, பார்த்தது போதும் எழும்புங்க, நான் மேசையைத் துடைக்க,” என்றதும்,

error: Alert: Content selection is disabled!!